கேள்வி:
பெரிய பரபரப்போ, ஆர்பாட்டமோ, லைக், கமென்ட் போன்ற கவனக்குவிப்போ இல்லாமல் தனித்து எப்படி இயங்க முடிகிறது?
பதில்:
That's the whole point. பலரால் கூட்டம் இல்லாமல், கூட்டத்தின் ஆலோசனை, ஆதரவு இல்லாமல் இயங்கவே முடியாது. தனித்து இயங்குவதும் ஒரு விதமான ஆளுமை என்பது என் பார்வை. இந்த விதமான இயங்குமுறைக்கு எல்லோரும் பழகிக்கொள்வது நல்லது. ஏனெனில், வாழ்க்கை நம்மை எப்போது, எவ்விதம் தனிமைப்படுத்தும் என்பது தெரியாது. ஆனால், அந்தப் புள்ளியில் தான் நாம் எழுந்தும் நிற்கவேண்டும். எல்லாமும் நன்றாகப் போய்க்கொண்டிருப்பதாகத் தோன்றினால், அப்போது தனித்து இயங்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்பது என் பொதுவான பரிந்துரையாக எப்போதும் இருந்திருக்கிறது.
நண்பர்களுக்கும் அதையே பரிந்துரைக்கிறேன். தனிமை பழகிக்கொள்ளுங்கள். அதற்குப் பழகிவிட்டால் வேறு எதாலும் நம்மை எளிதில் வீழ்த்த முடியாத அளவிற்கு வலுப்பெற்றுவிடுவோம்.
தவிர, இன்னுமொரு காரணமும் உண்டு.
பொதுவாக, கூட்டம் எளிமையானவைகளுக்குத்தான் கூடும். புரிந்துகொள்ள சிக்கலானவைகளைச்சுற்றி, பின் தொடர முடியாதவைகளைச்சுற்றி கூட்டம் கூடுவது இயல்பாகவே நடவாததுதான். பாகற்காய் கசக்கும் தான். அதற்காக, அது வளர்வதே இல்லையா என்ன? இயற்கை, அதற்கும் சேர்த்துத்தான் கணக்கிடுகிறது. நாம் புழங்கும் இயற்கையின் அதே கணக்கில் அதற்கும் ஒரு பங்கிருக்கிறது. நமக்கு அது பிடித்தாலும் , பிடிக்காவிட்டாலும். நாம் என்ன நினைத்தாலும்.
அப்படி ஒரு கணக்கு இருப்பது தெரிந்து, கணக்கின் அந்தப் பகுதி இன்றி பிரபஞ்சக்கணக்கு முழுமையடையாது என்பது தெரிந்துவிட்ட பிறகு நான் குழம்ப, பேதலிக்க என்ன இருக்கிறது. இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு நம் வேலையைத் தொடர்ந்து பார்க்க வேண்டியதுதானே.
