என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 11 April 2026

மெட் செயலி - குறுநாவல் - அத்தியாயம் - 4

 

அத்தியாயம் - 4

 

 

தியாகராய நகர் உஸ்மான் ரோட் சாலையில் ஜீன்ஸ் டிசர்ட் அணிந்த இரண்டு யுவதிகள் நடந்து வருகையில், கழுத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயலும் ஒரு புகைப்படக்கருவியும், கையில் ஒலிவாங்கியுடனும் ஒருவன் அந்தப் பெண்களின் பாதையில் வந்து நின்றான்.

 

அவனை அந்தக் கோலத்தில் பார்த்துவிட்டு, அந்தப் பெண்கள் லேசாக ஸ்தம்பித்தார்கள்.  புகைப்படக்கருவியை பார்த்தபிறகு ‘என்ன?’ என்பதாய்ப் பார்த்தார்கள். அவர்களின் உடல் மொழியில் லேசான சிலிர்ப்பு அவசரமாய் வந்து ஒட்டிக்கொண்டது. அந்த ஒரு சிலிர்ப்பை தரிசிக்க ஒரு ஆயிரம் முறையாவது பெண்களின் பாதையில் தோன்றலாம் போலிருந்தது.

 

புகைப்படக்கருவியின் நிமித்தம், சற்றேனும் ஒப்பனை செய்துகொள்ள அப்போதைக்கிருந்த அனைத்து வாய்ப்புக்களையும் பரிசீலிக்க எத்தனித்து, எதுவும் சாத்தியமல்ல என்றறிந்து லேசாக ஏமாற்றமானார்கள். அன்னிய ஆடவன் முன் முகத்தை லேசாகவும் செப்பனிட வாய்ப்பின்றி, அந்தச் சூழலுடன் சற்றே வேண்டாவெறுப்பாய் தங்களைப் பொருத்திக்கொள்ள இசைந்தார்கள்.

 

"சூரியன் தொலைக்காட்சியிலிருந்து வர்றேன். ஒரு சின்ன சோஷியல் எக்ஸ்பெரிமென்ட். நாங்க ஒரு கேள்வி கேப்போம். அதுக்கு பதில் சொல்ல முடியுமா?" என்றான்.

 

"..ஷூர்"

 

"முதல்ல உங்களை அறிமுகப்படுத்திக்கிறீங்களா?"

 

"என் பேரு சியாமளா" என்றாள் சியாமளா.

 

"என் பேரு பார்கவி" என்றாள் பார்கவி.

 

"ஓகே..  ஒரு டாக்டர் இன்னொரு டாக்டரைத்தான் கல்யாணம் பண்ணனும், ஒரு பணக்காரர் இன்னொரு பணக்காரரைத்தான் கல்யாணம் பண்ணனும், ஒரு ஏழை இன்னொரு ஏழையைத்தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லப்பட்டா அதை நீங்க எப்படி பாக்கறீங்க? உங்க கருத்தை சொல்ல முடியுமா?"

 

"கேள்வி கேக்கறீங்க.. உங்க பேரை சொல்லவே இல்லையே" என்றாள் சியாமளா.

 

"கேமரா இருக்கு, அழகான பெண்கள் ரெண்டு பேர் இருக்கீங்க.. என் பேர் யாருக்குத் தேவைப்படப்போகுது"

 

"அதுவும் சரிதான்" என்றாள் பார்கவி சியாமளாவைப் பார்த்து களுக்கென்று சிரித்தபடி.

 

"ஆனா நீங்க கேட்ட கேள்வி சரின்னு படலை.. லவ் யார் மேல வேணும்னாலும் வரும். அப்படி இருக்கிறப்போ இன்னாரைத்தான் கல்யாணம் பண்ணனும்ன்னு யாரும் யாரையும் நிர்பந்தப்படுத்த முடியாதுன்னு நினைக்கிறேன்" என்றாள் சியாமளா.

 

"சியாமளி சொன்னதை நான் ஆமோதிக்கிறேன்" என்றாள் பார்கவி.

 

"நீ ஆமோதிக்கலைன்னா உன்னை நான் தூக்கிப் போட்டு மிதிக்கிறேன்" என்றாள் சியாமளா.

 

இருவரும் களுக் களுக்கென்று சிரித்துக்கொண்டார்கள்.

 

காமிரா அணைந்தது.

 

"பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க" என்றான் அவன்.

 

"அப்ப பேர் சொல்ல மாட்டீங்களா?" என்றாள் சியாமளா.

 

"என் பேர் ஷியாம்" என்றான் ஷியாம் காமிராவை அணைத்தபடி.

 

"என்ன அதுக்குள்ள கேமராவை அணைச்சிட்டீங்க" என்றாள் பார்கவி.

 

"ஏன்?"

 

"பார்க்க ஸ்மார்டா இருக்கீங்க.. கொஞ்ச நேரம் இப்படியே பேசிட்டு இருக்கலாம்ன்னு பாத்தோம்.. என்னடீ?" என்றாள் பார்கவி.

 

"..அதுக்கென்ன.. பேசலாமே.. ஆமா, ஏன் அப்படி சொன்னீங்க?"

 

"பதில் சொன்னதை சொல்றீங்களா?"

 

"ஆமா..  ஒரு டாக்டரோட கஷ்டம், வேலைப் பளு, அந்த வேலையில இருக்கிற சங்கடம், தொந்திரவு, இதெல்லாம் இன்னொரு டாக்டருக்கு தானே தெரியும்."

 

"அது கரெக்டு தான். ஆனா, இப்படி யோசிச்சுப் பாருங்க.. ஒரே வேலையில இருக்கிறது கூட பிரச்சனைகளைத் தரலாம்.. ஈகோ பிரச்சனைகள்.. நான் பெரியவனா, நீ பெரியவனான்னு... ஒரே வேலையில இருந்துட்டாப் பிரச்சனையே வராதுன்னு சொல்லிட முடியாதே." என்றாள் சியாமளா.

 

நான் இதை என்னவென்று சொல்ல?

 

விதிவிலக்குகள் எல்லாக்காலத்திலும் உண்டு. ஒரே திறனுள்ள இருவர் ஒன்று சேரும் சேர்க்கையில் தானே அத்திறனுக்கான உச்சபட்ச சாத்தியமும் பிறக்கிறது.

 

இப்படித்தானே மனித குலம் இன்றிருக்கும் நிலை அடைந்திருக்கும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மனிதனைக் காட்டிலும் இப்போதிருக்கும் மனிதன் பல தளங்களில் முன்னேற்றம் கண்டவன்; அப்போதிருந்த மனிதனுக்கு வேட்டையாடுவது, களவியில் ஈடுபடுவது, உறங்குவது ஆகியனவே எளிதான வாழ்வாக இருந்திருக்கும்; இன்றிருக்கும் மனிதன் வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள், மருத்துவ காப்பீடு, கல்வி போன்றவைகளுக்கு பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் உழல்பவன்; அவனுடைய திறன்கள் ஆதிவாசியின் திறனைக்காட்டிலும் பண்பட்டவை. ஆக, தொடர் பண்படுதலின் விளைவாகத்தானே மனித குலம் இன்றிருக்கும் நிலையை எட்டியிருக்கும்?

 

தவிரவும், எனக்கு வேறு சில கேள்விகளும் உண்டு.

 

ஒரு ஆற்றின் ஒரு கரையில், நூறு பேர் நிற்கிறார்கள். அவர்களின் ஐம்பது பேர் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்; எந்தக் குறையும் இல்லை. எஞ்சிய ஐம்பது பேர் பிறவியிலேயே ஊனமுற்றவர்கள். இப்போது ஆற்றைக் கடக்க வேண்டும்?

 

நீங்கள் என்ன சொல்வீர்கள்?

 

ஆரோக்கியமாக இருக்கும் ஐம்பது பேர், தலைக்கு ஒன்றாக, ஊனமுற்ற ஒருவரை காபந்து செய்வதன் மூலம் நூறு பேரும் ஆற்றைக் கடந்துவிடலாம் எனலாம். இப்படிச் சொல்வதன் மூலமாக எல்லோரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துவிடலாம் தான். எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதா நோக்கம்? மனித குலத்தின் மேன்மை அல்லவா நோக்கம்? ஆனால், நாம் நினைப்பது போல் இயற்கை இயங்குவதில்லை.

 

இந்தப் புள்ளியில் நான் இரண்டு விதமாக என் வாதங்களை முன்வைக்க விரும்புகிறேன்.

 

முதலாவது:

 

ஊனமுற்றவர்களுக்கு, ஆரோக்கியமானவர்கள் தங்களுக்கு ஆற்றைக் கடக்க உதவுவார்களா தெரியாது? உதவி கோருவது கீழாகக் காட்டலாம். உதவி கோராமல், காரியம் சாதிக்க என்ன வழி என்று யோசிக்கத் துவங்குவார்கள்.

 

‘ஆற்றைக் கடக்க ஆற்றின் வேகம் என்ன? காற்றின் திசை என்ன? என்ன வேகத்தில் ஆற்றைக் கடக்க வேண்டும்? ஆரோக்கியமானவன் எந்த விதத்தில் ஊனமுற்றவனை ஏந்திக்கொள்வதன் மூலம், ஆற்றில் விழுந்து விடாமல் பாதுகாப்பாக ஆற்றைக் கடக்க முடியும் என்பதையெல்லாம் யோசிக்க வேண்டும். ஆகையால், ஊனமுற்ற நான் யோசிப்பதையும், ஆற்றின் வேகம் காற்றின் வேகம் போன்ற தகவல்களைச் சேகரிப்பதையும் பார்த்துக்கொள்கிறேன். நீ என்னை ஆற்றைக் கடக்கச் செய்யும் உடல் உழைப்பை மட்டும் நல்கு’ என்ற ஆலோசனை முன்வைக்கப்படும். ஆரோக்கியம் கொண்டவன் தொடர்ந்து அவ்வேலைகளையே செய்து உடல் கறுத்துப் போவான். இது, அடுத்த கட்டமாக, ஆரோக்கியம் கொண்டவன் அறிவிளி, முட்டாள், அசுத்தமானவன் எனவும் ஊனமுற்றவனே அறிவாளி என்ற நிலைக்கு இட்டுச் செல்லும். இப்படித்தானே ஜாதி, வர்க்கம், ஆண்ட ஜாதி போன்றவைகள் உருவாகியிருக்க வேண்டும்?

 

இரண்டாவது:

ஐம்பது ஆரோக்கியமானவர்களும் அக்கரை செல்கிறார்கள். அவர்கள் பெண்களைக் கூடி புதிய தலைமுறை உருவாக்குகிறார்கள். இந்த புதிய தலைமுறையில் ஊனம் இருக்காது என்று சொல்லவரவில்லை. அந்த ஊனம், விதிவிலக்காக மட்டுமே இருக்கும் என்கிறேன். இதில், சம நிலை அடைய பெரும் வாய்ப்பு எழுகிறதே?

 

இப்படி யோசித்துப் பாருங்கள். ஒருவருக்கொருவர் உதவி, நூறு பேரும் அக்கரை வந்து பெண்களுடன் கூட, அடுத்த தலைமுறையிலும் ஊனத்தின் எண்ணிக்கை அதிகமாகும். அல்லவா? ஆக சம நிலை என்ற ஒன்று எய்துவதே முடியாத காரியம் என்றல்லவா அர்த்தமாகிறது.

 

சியாமளாவின் கூற்று, அந்த உச்சபட்ச சாத்தியத்துக்கு இட்டுச்செல்லும் வகையினதாக இருக்கவில்லை. அவளின் வாதம், அவளது சார்ந்திருக்கும் நிலப்பரப்பில் கலாச்சாரத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்பது என் அனுமானமாக இருந்தது.

 

‘தமிழர் கலாச்சாரம் ‘வாழ்தல்’ தானே. எல்லோரும் வாழ வேண்டும்; சகல செளபாக்கியமும் பெற்று வாழவேண்டுமெனில், இயற்கையாகவே உச்சபட்ச சாத்தியங்களுக்கு இடம் மறுக்கப்படும் தானே.

 

ஆனால், பாருங்கள் இங்கும் எனக்குள்ளொரு குறுக்குச்சிந்தனை எழுகிறது. வாழ்தல் தான் மையம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். இவ்வுலகில், எல்லோரும் இன்புற்று வாழ இடமிருக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால்,  நான் பிரச்சனையாகப் பார்ப்பது என்னவென்றால், ஒரு ஆரோக்கியமானவனுக்கு என்னவெல்லாம் நிகழுமோ அதுவெல்லாம் தனக்கும் நிகழ்ந்திடவேண்டும் என்று ஒரு ஊனமுற்றவர் எதிர்பார்க்கத்துவங்குதல் தான்.

 

பிரபஞ்சத்தில் எல்லாவற்றுக்கும் ஓர் ஆழமான அர்த்தம் இருக்கிறது என்று நம்புகிறேன் நான். அதன் பிரகாரம், ஊனமுற்ற ஒருவருக்கும், ஆரோக்கியமான ஒருவருக்கும் எல்லா தளங்களிலும் ஒரே வாய்ப்புகள் சாத்தியப்பட பிரபஞ்ச அர்த்தங்களின் படியே வாய்ப்பில்லை என்று நம்புகிறேன் நான். அவரவரின் பிரபஞ்ச அர்த்தங்களின் படி அவரவர் நடந்துகொண்டால் தான் என்ன என்பதே என் கேள்வி.

 

அந்த உச்சபட்ச சாத்தியத்தைக் காணக்கூடிய பார்வை கொண்டவர்கள் இந்த முன் தீர்மானங்களை எவ்விதம் கையாள்வார்கள் என்பதைப் பார்க்க விழைவது எனக்குப் பிடித்தமானது.

 

எல்லா நாடகங்களிலும் பங்கேற்க எல்லோராலும் முடிவதில்லை. பங்கேற்ற நாடகங்களை வசீகரமாக்க முயன்றும், வசீகரமான நாடகங்களில் பங்கேற்க முயன்றும் தான் பூமி மனிதர்கள் தாங்கள் பங்கேற்கும் அசலான நாடகங்களின் வசீகரங்களைத் தொலைத்துவிடுகிறார்கள் என்பது என் அவதானம்.

 

சூர்யாவின் கணித மாதிரியை நான் ஆவலுடன் எதிர் நோக்கியதில் இதை ஒரு பிரதான காரணமாகச் சொல்லலாம்.

 

மெட் செயலி - குறு நாவல் - அத்தியாயம் - 3

 

அத்தியாயம் - 3

 

 

 

எனக்கு சூர்யாவைப் பிடிக்கும்.

 

‘சற்று முன், பெண்களைப் பிடிக்கும் என்றாயே?” என்காதீர்கள். சூர்யாவைப் பெண்களைவிடவும் அதிகம் பிடிக்கக் காரணங்கள் இருந்தது.  நான் முன்பே சொன்னது போல், நான் எல்லோர் கண்களுக்கும் புலப்பட மாட்டேன். ஒரு சிலர் கண்களுக்கு மட்டுமே நான் காணக் கிடைப்பேன். சூர்யாவிடம் அப்படியான கண்கள் இரண்டு இருந்தன. 

 

அந்த சூர்யா, தமிழக மக்களுக்காய் ஒரு பேட்டி தர இருந்தான். எனக்கு அவன் என்ன பேசுகிறான் என்று கவனிக்க வேண்டியிருந்தது. ஆதலால் பேட்டி நிகழும் இடத்தில் நான் ஆஜராகியிருந்தேன்.

 

ராய் தொலைக்காட்சியில், கணிணி மென்பொறியாளர் சூர்யாவைப் பேட்டி எடுக்க ஒரு அழகான பெண் அமர்ந்திருந்தாள். திரையில் காட்சியின் அழகிற்காய் அழகான பெண்களை இவ்விதமான பேட்டிகளுக்கு அமர வைப்பது எல்லாத் தொலைகாட்சிகளிலும் நடக்கிறதுதான். என் கேள்வி என்னவெனில், இது போல் எண்ணற்ற பேட்டிகளில் அமர்ந்தும் அவள் ஏன் இன்னமும் தொகுப்பாளினியாகவே தொடர்கிறாள் என்பதுதான். சில சமயங்களில் சிலரால் நான் தேவைகளற்று உருவாக்கப்படுவதும் உண்டு; தொகுப்பாளினியாகவே பல ஆண்டுகள் தொடர்வது என்பது கூட ஒரு நேர் கோடு வரைவது போலத்தானே.

 

"வணக்கம். நம்ம ராய் தொலைக்காட்சியில ஒவ்வொரு வாரமும் ஒரு முக்கியமானப் பிரமுகரைத் தேர்ந்தெடுத்து அவரைப் பேட்டியெடுக்கிறோம்.  இந்த வாரம் நம்ம கூட பேச வந்திருப்பவர் பத்தி நாம அறிமுகம் செய்தே ஆகணும். இவர் பெயர் சூர்யா. ஒரு காலத்துல சோஷியல் நெட்வொர்கிங்னாலே ஃபேஸ்புக், ட்விட்டர்ன்னு அமேரிக்க நிறுவனங்கள் மட்டுமே நம்ம கிட்ட இருந்துச்சு. அதை உடைச்சு ஒரு தமிழர், தமிழர்களாலும் கணிணி மென்பொருள் உலகத்துல கோலொச்ச முடியும்ன்னு நிரூபிச்சிருக்கார். அவர் நம்ம சமூகத்தை பார்க்கிற பார்வை என்ன, அதுல இருக்கிற சாத்தியங்கள், அசாத்தியங்கள், சாதகங்கள், பாதகங்கள் என்னென்னங்குறதைப் பத்தியெல்லாம் இப்ப அவர்கிட்டவே கேட்டுத் தெரிஞ்சுக்குவோம். வாங்க நிகழ்ச்சிக்குப் போகலாம்." என்ற தொகுப்பாளினி இப்போது சூர்யாவிடம் திரும்பி,

 

"சார் வணக்கம். எப்படி இருக்கீங்க?"

 

"ரொம்ப நல்லா இருக்கேன்"

 

"சார், சோஷியல் நெட்வொர்கிங்னாலே வெளி நாட்டு நிறுவனங்கள் தான்னு ஒரு காலத்துல இருந்தது. அதுல என்ன பிரச்சனைன்னு நீங்க நினைக்கிறீங்க?"

 

"மனித உறவுகளை எப்படி கணித மாதிரியா உருவாக்குறதுங்குறதுல இருந்து இது துவங்கிச்சுன்னு சொல்லலாம். முதல்ல மனித உறவுகளைக் கணித மாதிரியா அமெரிக்க நிறுவனங்களால முழுமையாக உருவாக்க முடியலை. அதனால அவங்க, மனிதர்களோட ஆர்வங்கள், பழக்க வழக்கங்கள், விருப்பங்கள், தேர்வுகள்ன்னு பட்டியலெடுத்து அதை ஒரு மாதிரியா  (model) ஆக்கினாங்க.”

 

இந்த வேலையைச் செய்ய டேட்டா சயிண்டிஸ்ட் (Data Scientist) என்றொரு பிரிவே இருந்துச்சு. ஆனா, இது வர்த்தக ரீயிலான பலன்களை மட்டுமே கொடுத்துச்சு. ஒரு பொருள் யாருக்கெல்லாம் தேவைப்படும், எப்போவெல்லாம் தேவைப்படும், இந்தத் தேவையை துல்லியமா ஊகிச்சி, எப்படியெல்லாம் வர்த்தகம் பண்ணலாம்ங்குற கோணத்துல தான் இருந்துச்சு.

 

ஆனா, இதுல பிரச்சனைகள் அனேகம் இருந்தது. உதாரணமா, நீங்க ஒரு வாடகைக் கார் ஓட்டுறவரா இருந்தா பயணருக்காக பயணர் சொல்ற இடத்துக்கு போவீங்க. நீங்க அந்த இடத்துக்கு போறதை வச்சே அந்த மென்பொருள்கள், உங்களுக்கு அந்த இடம் பிடிச்சிருக்குன்னு எடுத்துக்கும். இது ஒரு உதாரணம் தான். இப்படி நிறைய சொல்லலாம்.   இது தவறான விளைவுகளையே தந்துச்சு. இதனால கணித மாதிரி உருவாக்குறது முதல் சவாலா இருந்துச்சு. அந்த சவாலை கையில எடுத்துக்கிட்டதுக்கு அப்புறம் ஒரு முறையான கணித மாதிரி கிடைச்சது. அதை அடிப்படையா வச்சு மென்பொருள் எழுத முடிஞ்சது."

 

சூர்யா சொல்லி முடிக்க பார்வையாளர்கள் பக்கமிருந்து பலத்த கரகோஷம் கேட்டது.

 

சூர்யா மிகக்குறைவான வார்த்தைகளில், அந்தக் கேள்விக்கான விடைக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு தோதான எடுத்துக்காட்டைப் பயன்படுத்தி விளக்கியிருந்ததாகத்தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்கு சூர்யாவின் பார்வைக்கோணம் பிடித்திருந்தது. எளிமையாகச் சொல்வதானால், மேற்குலகில் என்னை ஒருவிதமாக உருவாக்கினார்கள் எனில் தெற்காசியாவில் வேறு விதமாய் உருவாக்கினார்கள். ஆக, இரண்டிலுமே இறுதியில் உருவானதென்னவோ நான் தான். இலக்கு ஒன்று தான். மார்க்கங்கள் தான் வெவ்வேறு. இன்னும் எளிமையாகச் சொல்வதானால், சூர்யா தன்னை இன்னொரு குட்டிக் கடவுளாக்கியிருந்தான்.

 

தெற்காசியாவில் கலாச்சாரம் வேறு. எந்த நிலப்பரப்பிலும், மனித உறவுகள் அந்தந்த நிலப்பரப்பில் வழக்கிலுள்ள கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாவது தான் ஆரோக்கியமான, நீண்ட காலம் நீள்வதான உறவுமுறைகளுக்கு இட்டுச்செல்லும் பாதை. அந்த ஆரோக்கியத்தை மேற்குலகின் விதிகள் அணுகும் முறை வேறாக இருந்தன. தெற்காசிய நிலப்பரப்பிலுள்ள மனிதர்கள் மேற்குலக விதிகளை உலகமயமாக்கலின் விளைவாக எதிர்கொள்ள நேர்கையில் அவர்களது கலாச்சாரம் மழுங்கடிக்கப்படுகிறது.  புறக்கணிக்கப்படுகிறது.

இப்படி இருக்கையில் மேற்குலகின் கலாச்சாரத்திற்கென உருவாக்கப்பட்ட செயலிகளான டின்டர் போன்ற செயலிகளில், நிலப்பரப்பு சார்ந்த கலாச்சார விழுமியங்களின் முக்கியத்துவங்கள் பாதுகாக்கப்படுவதில்லை.

 

நானறிந்தவரையில் சூர்யாவின் கணித மாதிரி, அந்த எதிர்கொள்ளலை மிகவும் கவனமாகக் கையாண்டது தான் என்னை அதில் ஈர்த்த அம்சமாக இருந்தது.

 

மெட் செயலி - குறு நாவல் - அத்தியாயம்1,2

 அத்தியாயம் - 1

 

 

முதலில் என்னைப்பற்றி.

 

நான் யார்? என் பெயர்........ அது சற்று கடினம். எனக்கு பல பெயர்கள் உண்டு.

 

பிரபஞ்சத்தில் பூமி தவிர வேறெங்கும் நான் இல்லை. பூமியில் கூட மனிதர்கள் தோன்றிய காலத்திற்கு பின்னிருந்தே தான் என் இருப்பு இருக்க முடியும்.  ஏனெனில், கடவுள் என்னைப் படைக்கவில்லை. ஆக, மனிதர்கள் தான் என்னை கண்டுபிடித்திருக்க வேண்டும் என்பது என் அவதானம்.

 

நான் வேறு. முற்றிலும் வேறு.

 

நான் எல்லோர் கண்களுக்கும் புலப்படுவதில்லை. பூமியில் வெகு சிலரே என்னைப் பார்க்கிறார்கள். அவர்கள் பார்வையிலிருந்து நான் தப்புவதில்லை. பல சமயங்களில் நான் இல்லாத இடத்திலும் கூட என்னை உருவாக்கி உலவ விடுபவர்கள் அவர்களே. அவர்கள் இல்லையென்றால் நானே இல்லை. இதில் விசேஷம் என்னவென்றால், என்னை உருவாக்குபவர்கள், கண்டுகொள்பவர்கள் எல்லோரும் பிறந்தொம், மறித்தோம் என்றிருக்க, நான் தொடர்ந்து இருக்கிறேன். எனக்கு அழிவு என்பதே இல்லை. விடுகதை போலிருக்கிறதா நான் சொல்வது?

 

கவிஞர்கள் என்னைக் குறிக்க நேர்கோடு என்கிற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதை என் பெயராக்க முடியுமா தெரியவில்லை. அந்த வார்த்தை ஒரு குறியீட்டளவில் என்னை குறிக்கும் தான். நீங்கள் ஒரு கவிஞர் இல்லையென்றால் இந்த விளக்கம் போதாமையாக இருக்கலாம். சரி. இப்போதைக்கு அப்படியே இருக்கட்டும். நீங்கள் வாதிடலாம். பிரபஞ்சமே வளைந்திருக்கிறதென்று. ஆக நேர் கோடுகள் என்று எதுவும் இல்லை என்று. அப்படி இல்லை. நான் இரண்டு புள்ளிகள் வைத்து இடையே இழுக்கப்படும் கோடு அல்ல.

 

சூழலுக்கேற்ப, அவற்றினூடே உருவாகும் அர்த்தங்களுக்கேற்ப, அவ்வர்த்தங்களைக் கையாளும் உங்கள் தர்க்கத்திற்கேற்ப என் நிலைப்பாடு மாறுமே ஒழிய நான் மாறுவதில்லை. எல்லா நேர் கோடுகளும் நானே. ஒரு பாரிய வளைவை உருவாக்கும் எல்லா சிறு சிறு நேர் கோடுகளும் கூட நானே.

 

என்னைக்கொண்டு தான் நீங்கள் காலத்தின் போக்கில் நிகழ்வுகளில் பல வரிசை மாற்றங்களையும் (permutations), சேர்க்கைகளையும் (combinations) உருவாக்க பற்பல இழைகள் உருவாகி விடுகிறது. நான் இல்லையென்றால் காலம் பிரபஞ்ச அர்த்தங்களின் நிமித்தம் இழைகளை உருவாக்கியிருக்கலாம்.

 

இழை என்றால் காலத்தின் ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு என்று பொருள். எல்லா இழைகளிலும் நான் இருக்கிறேன் என்பதால் காலத்தின் இழைகளினூடே என்னால் ஊடுறுவிப் பார்க்க இயலும். சரி. இப்படி என் பொருட்டு விரியும் இழைகளில் பெரும்பாலும் பிரபஞ்சத்தன்மைகள் இருப்பதில்லை. ஆனால் அது என் கவலை அல்ல. பிரபஞ்சத்தன்மைகள் குறித்து நான் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், நான் எப்படி வளர்வது?

 

எண்களைக் கொண்ட கணிதம் தான் நான் என்று நீங்கள் நினைத்தால், அது ஒன்றும் அப்படி ஒரு குற்றமாகிவிடாது.

 

சரி. என்னைப்பற்றித் தேவைக்கும் அதிகமாகவே பார்த்தாகிவிட்டது.  

சுருங்கச்சொன்னால், நான் தான் கணிதம். இப்போது கதைக்கு மீள்வோம்.

 

 

 


 

அத்தியாயம் - 2

 

 

பவித்ராவின் அலைபேசி சிணுங்கியது. பத்திய உணவில் இருக்கும் நவ நாகரீகப்பெண் போல மிகவும் மெலிந்த அந்த அலைபேசியைக் கையிலேந்தி அழைப்பை ஏற்றாள் பவித்ரா.  அது கொஞ்சம் அசந்தால் நழுவிவிடும் விலாங்கு மீன் போல அவள் கையில் தேங்கியது.

 

"Hello"

 

"......"

 

"Who is this?"

 

"......"

 

"Hello....."

 

"......"

 

"Perverts......" சலிப்புடன் அழைப்பு துண்டிக்கப்பட இருந்த தருணத்தில்,

 

"நான்தான்டீ அஞ்சலி.."

 

"எந்த அஞ்சலி?"

 

".வி.பி ரிசார்ட்ஸ் டீ."

 

இங்கே பவித்ரா பற்றிச் சில குறிப்புகள். பவித்ராவும், அஞ்சலியும் ஒன்றாக ஒரே கல்லூரியில் படித்தவர்கள். படிப்பை முடித்த புதிதில், ஒரு தனியார் உணவகத்தில் வரவேற்பாளினிகளாகப் பணியாற்றியிருக்கிறார்கள். சுமார் ஓராண்டுக்கு அந்த உணவகத்தின் எல்லாமுமாக இருந்திருக்கிறார்கள்.  அதன் பிறகு அஞ்சலி திருமணமாகி வேலையை விட வேண்டியதாகிவிட்டது. அதன் பிறகு தொடர்பில் இல்லை. அந்த நட்பின் காரணமாய் அஞ்சலியிடம் பவித்ராவின் அலைபேசி எண் இன்னமும் மிச்சமிருந்தது.

 

"..அஞ்சலி.. எப்படி இருக்க? எவ்ளோ நாளாச்சுடீ"

 

" ஆம் குட். நீ?"

 

"எனக்கென்ன? சூப்பர்ப். அது இருக்கட்டும். என்ன திடீர்னு என்னோட நியாபகம்?"

 

"....ஓண்ணும் இல்லை... சும்மாத்தான்.."

 

"யாரு நீயா? ஹ்ம்ம்ம்... நீ எதுக்கு எனக்கு கால் பண்ணினன்னு நான் சொல்லட்டா?"

 

"எதுக்கு?"

 

"நம்ம கிட்ட வழிஞ்சிட்டு இருப்பானே.. அந்த மூர்த்தி.. அவன் நம்பர் கேக்க தானே?"

 

ஒன்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எனக்குப் பெண்களை மிகவும் பிடிக்கிறது. ஏனெனில், பெண்களுக்கு என்ன பிடிக்கிறது என்பது எவருக்கும் தெரிவதில்லை. காலங்கள் கடந்திருக்கின்றன. ஆனால், பெண்களின் தேர்வுகளுக்குத் தரப்படும் விளக்கங்கள் மாறாமல் இருந்ததே இல்லை.

 

காலமாற்றத்துக்கேற்பப் பெண்களின் தேர்வுகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றனவே ஒழிய அந்த நாளும் ஊகிக்கக்கூடியதாக இருந்ததில்லை.  ஒவ்வொரு பெண் எடுக்கும் முடிவிலும் நான் புதிதாக உருவாக்கப்படுகிறேன். நாற்பது ஐம்பது வருடங்களுக்கு நீடிக்கப்படும் ஒரு நீளமான நான். சாகசமாக இருப்பதாகத் தோன்றுகிறதல்லவா? ஆனால் சூர்யா இதற்கெல்லாம் மகுடம். அது பற்றிப் பிற்பாடு சொல்கிறேன்.

 

"அவன் கூட இன்னுமா டச்ல இருக்க?"

 

"நான் எங்க இருக்கேன்..அவன் தான் என்னை விட மாட்டேங்குறான்.. எப்படியோ என் புருஷனோட வேற தோஸ்த் ஆயிட்டான்.. ரெண்டு பேரும் சேர்ந்து ஊத்தி ஊத்திக் குடிக்கிறாங்க.. "

 

"அப்புறம்?"

 

"அப்புறம் என்ன? என் ஹஸ்பண்ட் தான் சீக்கிரம் மட்டையாயிடறாரு.. விடிய விடிய என் வீட்டுலயே இவன் எனக்கு பூஜை பண்றான்."

 

"அடிப்பாவி.. அவனோடயா? எனக்கு அவனை அப்பவே புடிக்காது."

 

"நான் மட்டுமென்ன புடிச்சா இருக்கேன். நாம எதிர்பார்க்கிறதுதான் கிடைக்கணும்னா நாம காத்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான். வாழ்க்கையை வாழ முடியாது. வாழக் கிடைச்ச வாழ்க்கையிலயும் கொஞ்சமாச்சும் சுவாரஸ்யம் இருக்கணும்ல.. சரி...  நீ வேற எதுக்கு பண்ணியாம்?"

 

"ஒண்ணும் இல்லை.. போரடிக்குது..."

 

"ஏன்? ஹஸ்பண்ட் இருக்காருல்ல"

 

"அவரு இருக்காரு தான்...  இருக்க வேண்டியதுதான் இல்லை"

 

"... காட்... இல்லவே இல்லையா?"

 

"அடச்சீ.... லவ் இல்லைன்னு சொன்னேன்"

 

"அதானே பார்த்தேன்.. லவ் இல்லையா? அது இப்பல்லாம் எந்த கல்யாணத்துலயும் இல்லை. கள்ள உறவுல மட்டுமே கிடைக்கிற நல்ல சரக்கா ஆயிடுச்சு. "

 

"வாழ்க்கையே ஒரே போரா  இருக்கு..   நீ தான் இதுக்கெல்லாம் ரெடிமேடா ஏதாச்சும் வச்சிருப்பியே... "

 

"அது என்னமோடி.. சின்ன வயசுல ரொம்ப கட்டுப்பாடா இருக்கிற பொம்பளைங்க எல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல இந்த இடத்துக்கு வந்துடறீங்க... "

 

".. வேற யாரு வந்தா?"

 

"அது உனக்கு தேவை இல்லாத சமாச்சாரம்"

 

"ம்ம்ம்ம்ம்"

 

"நான் ஒண்ணு தரேன்.. ட்ரை பண்ணிப் பாரு... ஆன்ட்ராய்டு மொபைல் எடு. ப்ளே ஸ்டோர் போ. மெட்ன்னு (MeT) ஒரு ஆப் இருக்கு. டவுன்லோட் பண்ணு... "

 

"ஆப்பா? ஆதான் ஏகப்பட்டது இருக்கே.. டிண்டர், தில்மில் அது இதுன்னு"

 

"அதெல்லாம் வேற. இது இப்போ ஹாட்...  கிட்டத்தட்ட சொல்லி வச்சா மாதிரி நடக்குதாம்.. கள்ள உறவு கண்டிப்பா கியாரண்டி"

 

"ஓகே.. ட்ரை பண்றேன்.. சரி.. அப்புறம் பேசறேன்டீ"

 

"கேட்டது கிடைச்சதும் கழட்டி விடறியேடீ"

 

"அதில்லைடீ.. அவன் வந்துடுவான்"

 

"அவன்னா?"

 

"வேற யாரு.. ஹஸ்பண்டு தான்"

 

"..அந்த 'அவனா?'... ஓகே..ஓகே அப்புறம் ஃப்ரீயா இருக்கிறப்போ கால் பண்ணு..பை"

 

"பைடீ"

 

அஞ்சலி அலைபேசி அழைப்பைத் துண்டித்தாள். பின் மெட் செயலியைத் தேடி தரவிறக்கம் செய்தாள். பின் அதில் ஒரு கணக்கு துவங்கினாள். அது, அவள் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொள்ள அவளிடமிருந்து அனுமதி பெற்றுக்கொண்டு அவளுடைய அலைபேசியில் அமர்ந்துகொண்டது.

 

பின் தகுதியுள்ள ஆண்களின் பட்டியலைக் காட்டுமாறு செயலியைப் பணித்தாள். அது சற்று நேரம் சுற்றிச்சுற்றி யோசித்துவிட்டு யாரும் இல்லை என்றது. 

 

அதை அவள் எதிர்பார்க்கவில்லை. மற்ற செயலிக்கள் எடுத்ததுமே நூறு நூற்றைம்பது கணக்குகள் காட்டும் போது ஒன்றைக்கூடக் காட்டாமல் அந்த செயலி மெளனித்ததை ஜீரணிக்க முடிந்திருக்கவில்லை. இந்த செயலிக்கா பவித்ரா அத்தனை வக்காலத்து வாங்கினாள் என்று தோன்றியது. அலைபேசியில் அந்த செயலி சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டாள். எல்லாம் சரியாகத்தான் இருந்தது. இணையத்துடனான இணைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள். அது இரண்டு புள்ளிகள் காட்டியது. அலைபேசியில் இணைய வசதிக்கான அளவு குறைவாக இருந்திருக்கலாமென்று தோன்ற, பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி அலைபேசியை படுக்கையின் மீது வீசினாள் பவித்ரா.

 

அவளின் படுக்கை, அவளது அலைபேசியை குழந்தையென பாவித்து இரண்டு முறை தூக்கிப்போட்டுப் பிடித்துக்கொண்டது.

 

நான் அவளது இழையில் சென்று பார்த்தேன். உண்மையில் அவள் அலைபேசியில் இணைய வசதி இல்லாமல் எல்லாம் இல்லை. சராசரி இணைய வசதி இருக்கவே செய்தது. ஆனால், அது நேரம் எடுத்துக்கொண்டது.

 

'ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ குலோத்துங்க.....' என்றெல்லாம் அறைகூவல் விடுப்பது பழங்கால அரசர்களுக்கு வேண்டுமானால் நடந்திருக்கலாம்.

 

எனக்கான அறைகூவல்கள் இந்தக் கால இடைவெளிதான். என் வாலைத்தொட சில நேரங்களில் சற்று காத்திருக்க வேண்டும். சில நேரங்களில் உங்கள் கைக்கு அகப்பட்டது எனது வாலாக இருக்காது. என் தலையாகவே கூட இருக்கக்கூடும். எல்லாமும், என்னை அண்டுகையில், காலத்தின் எந்த புள்ளியில் நீங்கள் நிற்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.

 

 

 

 

Sunday, 5 April 2026

அறிவியல் புனைவுகள் குறித்த கட்டுரைகள்

"அறிவியல் புனைவுகள்" என்று கூகிளில் தட்டினாலே தமிழில் அறிவியல் புனைவுகள் குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் பட்டியலாக வந்துவிடுகின்றன.

பலர் எழுதியிருக்கிறார்கள்.

எல்லா கட்டுரைகளிலும் சில பொதுவான அம்சங்களைப் பார்க்க முடிகிறது.

1. கிட்டத்தட்ட எல்லா கட்டுரைகளும், ஏதோவொரு அமெரிக்க அறிவியல் புனைவு எழுத்தாளரிடமிருந்து தான் துவங்குகிறது. அது ஹெச்.ஜி.வெல்ஸ் ஆக இருக்கலாம். அல்லது ஜூல்ஸ் வெர்ன் ஆக இருக்கலாம். அல்லது  ஐசக் அசிமோவ் ஆக இருக்கலாம்.

2. பிறகு தமிழில் முதல் முயற்சிகள் என்று அது நீள்கிறது. இந்தப் பகுதியில் பிற்பகுதி எழுத்தாளர் சுஜாதா, ராஜேஷ்குமார் என்று முடிகிறது.

3. அதன் பிறகு, தற்காலத்தில் அதை யார் யார் செய்கிறார்கள், அரூ, அறிவியல் சிறப்பிதழ்கள் என நீள்கிறது. (இது பெரும்பாலும், கட்டுரை எழுதியவருக்கு 'வேண்டியவர்கள்' என்கிற ரீதியில் தான் இருப்பதாகத் தெரிகிறது).

4. அமெரிக்க எழுத்தில் துவங்கும் கட்டுரை, அதற்கு மேல், "தமிழில் அறிவியல் புனைவு முயற்சிகள்" என்று ஒரு தனி ட்ராக் ஆக சென்று விடுகிறது. முதல் பத்திக்கு பிறகு அது மீண்டும் உலகளாவிய அறிபுனை எழுத்தில் வந்து நிற்பதில்லை. SFWA, HWA என்று எதைப்பற்றிய குறிப்பும் இல்லை. ஒரு கட்டுரையில், டெட் சியாங் பற்றியெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், கணிதப் புனைவுகள் பற்றி மறந்தும் கூட அவர் தன் கட்டுரையில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இந்த இல்லாமைகளை ஒரு பொது அம்சமாக, எல்லா "தமிழில் அறிவியல் புனைவுகள்" கட்டுரைகளிலும் தென்படுவது தற்செயல் என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை. 

அறிவியல் புனைவில் ஏன் பாரபட்சம்? இந்திய ஞான மரபு என்று ஒன்று இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே போல ஒவ்வொரு நாட்டில் உள்ள பெருங்கூட்டங்களுக்கும் இருக்கும் இல்லையா? அவரவர் அவரவர் ஞான மரபுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்தால், அறிவு ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி விடாதா? அப்படியானால், உலகம் எப்போது அறிவு ரீதியில் ஒன்று படுவது? அறிவுக்கு என்ன வேலி? ஞானத்திற்கு ஏன் வேலி?

பிற தொழில்கள் கலாச்சாரம், நாடு மொழி இன உணர்வுகளால் பிளவுபட்டு இருக்கலாம். அறிவு சார் சமூகம் அப்படி இருக்கத்தான் வேண்டுமா? உலகம் பிளவுபட்டிருந்த காலத்தில் கூட பல்வேறு இன, மற்றும் கலாச்சாரங்கள் தங்களுக்குள் அறிவைப் பகிர்ந்துகொண்டதற்கான ஆதாரங்கள் இன்று கூட கிடைக்கின்றன. இதன் பொருள் என்ன? அறிவு என்பது உலகில் உள்ள இனங்கள், மொழிகள், மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். அல்லவா?

கட்டுரைகளை எழுதும் எழுத்தாளர்கள், தங்களுக்கு எதில் பரிச்சயம் இருக்கிறதோ, தங்களுக்கு எந்தளவிற்கு புரிதல் இருக்கிறதோ அந்த மதிப்பில் தான் தங்கள் கட்டுரைகளை எழுதுவார்கள். அவர்கள் பயணிக்காத பாதைகளைப் பற்றி அவர்கள் எழுத மாட்டார்கள் தாம்.

 அதைப் புரிந்துகொள்கிறேன். 

ஆனால், அது வாசகர்களை ஒரு வட்டத்திற்குள் சுருக்கி விடக்கூடாது என்றும் விரும்புகிறேன். வாசகர்களாகப் பார்த்தேனும் அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து அறிவியல் புனைவுகளை வாசிக்குமாறு வாசக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 

We can all do better than this!