என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 18 February 2023

இன்றைய உலகம்

 நீங்கள் பெண் பார்க்கப் போன வீட்டில் "உங்கள் பாங்க் பாலன்ஸ் எவ்வளவு?"  என்று கேட்கும் பெண்ணிடம் பதிலுக்கு அதே கேள்வியைக் கேட்க முடியவில்லையா? 

"என் கடந்த காலம் உனக்கு ஏன்?" என்று கேட்டு பெண் அதிர்ச்சியளிக்கிறாளா?

காதலியுடன் சென்ற டேட்டில் ஹோட்டல் பில் முழுவதையும் நீங்களே ஏற்க வேண்டி வருகிறதா? 

நீங்கள் ஒரு Toxic உறவில் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 

உங்களால் இது எதையும் எதிர்த்து ஒரு வார்த்தையும் பேச முடியவில்லையா?    நீங்கள் ஒரு பலவீனமான ஆணாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள். 

"இப்போதைக்கு சமாளிக்கலாம். திருமணமாகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்" என்ற எண்ணம் தோன்றுகிறதா? 

அத்திருமணத்திற்குப் பின் Restraining order நீங்கள் பெற வாய்ப்பிருக்கிறது. 

இதையெல்லாம் கேட்க அதிர்ச்சியாக இருக்கிறதா? இதுதான் இன்றைய உலகம். அது உங்களிடம் கோருவது ஒன்றைத்தான். எதைச்செய்தாலும் எதிர்பாலினத்தை முழுக்கப் புரிந்து செய் என்பதைத்தான். இந்த விதியை மீறுபவர்களுக்கு இவ்வுலகில் எந்தச் சலுகையும் இல்லை. 


Thursday, 2 February 2023

Jerusalem College of Engineering - Distinguished Alumni Award - 2023

 Jerusalem College of Engineering - Distinguished Alumni Award - 2023

சென்ற வார இறுதியில் அவசர மூன்று நாள் விமான பயணமாக சென்னை வந்தது ஒரு விசேஷ அனுபவம். நான் பொறியியல் பயின்ற ஜெருசலேம் பொறியியல் கல்லூரி (Jerusalem Engineering College) 'Distinguished Alumni Award' விருதுக்கு என்னைத் தெரிவு செய்திருந்தார்கள். இத்தருணத்தில் இந்நிகழ்வு குறித்து எனக்குத் தெரியப்படுத்திய Anitha Gokulakrishnan அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
எதிர்காலம் எப்படி இருக்கும், வேலை கிடைக்குமா, கிடைத்தால் அது நல்ல வேலையாக இருக்குமா, வளர்ச்சி இருக்குமா, பெற்றவர்களுக்கு உறுதுணையாக நிற்க வைக்குமா, போராட்டமாக இருந்துவிடுமோ, இந்தப் பேரலையில் கரை ஏறிவிடுவோமா என்கிற குழப்பங்களுடனும், கேள்விகளுடனும் அந்தக் கல்லூரியின் வளாகங்களில் பல நாட்கள் திரிந்தது இன்னமும் நினைவிலிருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி, இப்போது அதே கல்லூரி வளாகத்தில் 'Distinguished Alumni' விருதுடன் நின்றது மெய் சிலிர்க்க வைத்த தருணங்களில் ஒன்று.
அப்போது கற்றுத்தந்த ஆசிரியர்களை இப்போதும் சந்திக்கக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. சுபாஷினி கலைக்கண்ணன், மாயா, பவானி சங்கரி போன்ற நெடுங்கால ஆசிரியர்களும், வனிதா ஷீபா, ஜமுனா போன்ற ஆசிரியர்களும் மாணவர்கள் மீது எடுத்துக்கொள்ளும் கவனமும், அக்கறையுமே இன்றளவும் எனக்கு நல்லாசிரியர்களுக்கான பெஞ்ச்மார்க்காக இருந்திருக்கிறது.
எதிர்காலம் எப்படி இருக்கும், வேலை கிடைக்குமா என்றெல்லாம் கேள்விகளுடன் மயங்கி நின்ற இடங்களையெல்லாம் சென்று பார்க்கலாம் என்றால், மாணவர்கள் வளர ஏது செய்த கல்லூரியே வளர்ந்திருந்ததில், அவ்விடங்கள் பல மறைந்து போயிருந்தன. பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நான் பொறியியல் பயின்ற போது கல்லூரியில் மொத்தமே மூன்று பிரிவுகள் தான்: ECE, EEE மற்றும் CSE.
இப்போதோ Mechanical, IT, MBA, Bio-medical, Cyber security, Artificial intelligence and data science இவற்றில் M.E. மற்றும் Ph.D படிப்புக்களுடன் மாணவர்கள் கல்லூரிக்குள்ளேயே தங்கும் விதமான ஹாஸ்டல்களுடன் கல்லூரி வளர்ந்திருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. இதில் Autonomous அந்தஸ்து வேறு.
கல்லூரி முழுக்க சுற்றித்திரிந்தேன். எதிர்காலம் எப்படி இருக்கும், வேலை கிடைக்குமா என்றெல்லாம் மயங்கி நின்ற இடங்களிலெல்லாம் நின்று விதம் விதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். இன்றளவும் கைகொடுக்கும் Java இந்தக்கல்லூரியில் நான் பயின்றதுதான். உலகை, மனிதர்களை, அவர்களின் ஆதார இயங்கு இயல்பை, இக்கல்லூரியே எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. பார்க்கப்போனால், இந்தக் பாடங்களின் அடித்தளத்தில் தான் நான் இப்போது இயங்கிக்கொண்டிருக்கிறேன் எனலாம்.
ஒரு உண்மையைப் பகிர வேண்டுமானால், கல்லூரி படித்த நான்கு வருடங்களில் கல்ச்சுரல்ஸ், தமிழ் மன்றங்களின் திசையைக் கூட எட்டிப்பார்த்ததில்லை. எனக்குள் ஒரு எழுத்தாளன் ஒளிந்திருப்பதே தெரியாமல், நான்கு ஆண்டுகள் தமிழ் மன்ற செயல்பாடுகளை, கல்லூரியின் பத்திரிக்கை சார்ந்த செயல்பாடுகளை எட்ட நின்று வேடிக்கை பார்த்திருக்கிறேன். இப்போது அதையெல்லாம் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
இந்த இயற்கை எத்தனை ஆச்சர்யம் வாய்ந்தது?!








All

2022 ன் ஜீரோ டிகிரி இலக்கிய விருது

 2022 ன் ஜீரோ டிகிரி இலக்கிய விருது வீடு வந்து சேர்ந்தது...




Wednesday, 1 February 2023

ஐன்ஸ்டனின் சிரிப்பு - கணையாழி (பிப்ருவரி 2023)

 ஐன்ஸ்டனின் சிரிப்பு - கணையாழி (பிப்ருவரி 2023)

கணையாழி (பிப்ருவரி 2023) இதழில் எனது கவிதை பக்கம் 67ல் வெளியாகியிருக்கிறது. கவிதையின் தலைப்பு 'ஐன்ஸ்டனின் சிரிப்பு'.
எனது கவிதையைத் தெரிவு செய்து வெளியிட்ட கணையாழி ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.






All reactions:
Ram Kumar, Mee Manikandan and 12 others

Monday, 16 January 2023

பன்னாட்டு புத்தகத் திருவிழா - சென்னை

சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில்  வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்  விவரங்களுடன் அவர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  இந்தப் பயணம் தொடரும். 

முதன்முறையாக சென்னையில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழா மிகச்சிறப்பாக தொடங்கியுள்ளது. இதில் அமெரிக்கா,கனடா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டன.  அடுத்தடுத்த ஆண்டுகளில் இது மேலும் விரிவு செய்யப்பட்டு தமிழ் நூல்கள் பிற மொழிகளுக்கும்,பிற மொழி நூல்கள் தமிழுக்கும் செல்லும் வாய்ப்பு ஏற்படும் என்று நம்பலாம். 





குவிகம் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பில் எனது 'கண்ணாடிச்சுவர்' சிறுகதை

குவிகம் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பில் எனது 'கண்ணாடிச்சுவர்' சிறுகதை



குவிகம் மற்றும் பிரபாராஜன் அறக்கட்டளை இணைந்து நடத்திய  சிறுகதைப் போட்டியில் தேர்வான சிறுகதைகள் அடங்கிய 'சோளக்காட்டு பொம்மை தேர்ந்தெடுத்த சிறுகதைகள்' தொகுப்பில் எனது 'கண்ணாடிச்சுவர்' சிறுகதை இடம் பெற்றுள்ளது.  இச்சிறுகதையும் அறிவியல் புனைவுச் சிறுகதையே. இத்தொகுப்பைப் பற்றிச் சொல்வதானால், பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது; மொத்தம் முப்பது சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. 

நிகழும் புத்தகத் திருவிழாவில் இந்நூல் தள்ளுபடி விலையில் விற்பனையில் இருக்கிறது. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வாசக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.  தொகுப்பு நூலின் அட்டைப் படத்தை இங்கே இணைத்திருக்கிறேன். 




Thursday, 5 January 2023

46வது சென்னைப் புத்தகக் கண்காட்சி

46வது சென்னைப் புத்தகக் கண்காட்சி


தம் எழுத்தை அச்சில் காண்பதன்றி ஒரு எழுத்தாளனுக்கு வேறெது பேருவகையைத் தந்துவிடப்போகிறது?  ஆனால், அச்சில் கொணர்வது அத்தனை லேசான காரியமா என்ன?. 

இலக்கியம் தெரிந்தவர்கள் ஏற்க வேண்டும்; அங்கீகரிக்க வேண்டும்; அவ்விதம் ஏற்கப்பட்டதிலேயே நம்முடையது சிறப்பு கவனிப்பும் தேர்ச்சியும் பெற வேண்டும்; அதனை 'இலக்கிய வாசகர்களின் தேவை/தேடல்' உணர்ந்த ஒரு பதிப்பாளர் ஏற்கவேண்டும்; அச்சுக்குக் கொண்டுவர முன்வரவேண்டும். சந்தைப்படுத்த வேண்டும்; மக்களைச் சென்றடைய வேண்டும். 

ஒரு தொகுப்பு, இது எல்லாவற்றையும் எளிதில் சாத்தியப்படுத்திவிடக்கூடிய ஒன்று. 

ஜனவரி 6 முதல் 22 வரை, 46வது சென்னைப் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த முறை, என் பங்களிப்பு தொகுதி நூல்களில் தாம் அதிகம்.

1. 'சோஃபி' சிறுகதை 'மாசறு பொன்' தொகுப்பில் இடம் பெறுகிறது.

2. கதம்பம் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 'எப்போதும் பெண்' சிறுகதை, 'புராதன ஏலியன்கள்' தொகுப்பில் இடம் பெறுகிறது.

3. 2022ம் ஆண்டிற்கான ஜீரோ டிகிரி இலக்கிய விருது வென்ற 'சோஃபியா' சிறுகதை '2022- ஜீரோ டிகிரி இலக்கிய விருது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்' தொகுப்பில் இடம்பெறுகிறது.

4. குவிகம் வெளியிடும் சிறுகதைத் தொகுப்பில் எனது 'கண்ணாடிச்சுவர்' சிறுகதை இடம்பெறுகிறது.

இது மட்டுமல்லாமல்,  கணித நாவலான 'உங்கள் எண் என்ன?' சில மாறுதல்களுடன் '220284' என்ற தலைப்பில் கிடைக்கிறது.  'வாவ் சிக்னல்' அறிபுனைச் சிறுகதைத் தொகுதி நூல் படைப்பு ஸ்டாலில் கிடைக்கும்.








Friday, 16 December 2022

தமிழ் இலக்கியத்தைக் கொலை செய்யும் இயக்கங்கள்

தமிழ் இலக்கியத்தைக் கொலை செய்யும் இயக்கங்கள்


தமிழ் வளர்க்கிறேன், தமிழ் எழுத்துக்களை வளர்க்கிறேன் என்று கிளம்பும் ஒரு இயக்கம் எப்படிச் செயல்படவேண்டும் என்பது குறித்து எனக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்ந்து பேசி (வலியுறுத்தி) வந்திருக்கிறேன்.. நான் அங்கொன்றும் , இங்கொன்றுமாகச் சொன்னதை ஒட்டு மொத்தமாக சொன்னது போல் இருந்தது ஜீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருது பரிசளிப்பு விழாவில் ராம்ஜீ  நரசிம்மன் அவர்களது பேச்சு...

இன்று தமிழ் வளர்க்கிறேன், தமிழ் எழுத்துக்களை வளர்க்கிறேன் என்று கிளம்பும் பல இயக்கங்களின் இயக்கம் உண்மையில் அந்த உன்னத நோக்கத்துக்கு நேர் எதிராகத்தான் செயல்படுகிறது.. அவைகளில் பலவற்றில் சில குறிப்பிட்ட பொதுவான தன்மைகளைப் பார்க்க இயலும். அவைகள் :


1. ஒரு நல்ல எழுத்து இவர்களின் இயக்கத்தில் உறுப்பினர் ஆகவில்லை எனில், அந்த எழுத்தைப் பற்றி எங்கும், எந்த இடத்திலும் பேசமாட்டார்கள்.

2. இயக்கத்திற்கு நெருக்கமானவர்களின் எழுத்துக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

3. இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களின் எழுத்துக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

4. எழுத்து, ஒரு வணிகப் பொருளாக மட்டுமே பார்க்கப்படும்; அதன் தரம் குறித்து எவ்வித கேள்வியும் எங்கும் எழாதது போல் இயக்கம் முழுமைக்கும் பார்த்துக்கொள்ளப்படும்.

5. இவர்களின் எழுத்து வேறு எந்தத் தரமான இலக்கிய இதழ்களிலும் வெளியாகாது.

5.அ. இதன் காரணத்தினாலேயே இவர்கள் தங்களுக்கென ஒரு இதழ் துவங்கி, அதிலேயே வெளியிட்டுக்கொள்வார்கள்.

5.ஆ. இவர்களின் வசதிக்கெனவே ஒரு பதிப்பகமும் உள்ளூரில் செயல்படும்.

6. எத்தனை வருடங்கள் ஆனாலும், இது போன்ற அமைப்புகளில் இருப்பவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரவே மாட்டார்கள்.

7. தரமான எழுத்து குறித்து எதுவும் தெரியாத வெகு ஜனமே இவர்களின் இலக்கு; ஏனெனில், இவர்களைத்தான் எளிதில் ஏமாற்றி விட முடியும்.

8. இந்த அமைப்புகள் நடத்தும் இலக்கியப் போட்டிகளில் அமைப்பை நடத்துபவர்களும் சிறுகதைகள் சமர்ப்பிப்பவர்களுமே தேர்வுக்குழுவில் இருப்பார்கள்.

9. அமைப்பின் செயல்பாடுகளில் அதிகம் பங்கெடுப்பவர்களுக்கே போட்டிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.

10. அமைப்பின் வாட்ஸாப் குழுக்களில், அமைப்பின் உறுப்பினர் அல்லாதவர், தமிழுக்கு ஆற்றும் பங்களிப்புகள் எந்த அளவினதாக இருப்பினும் அவை உடனுக்குடன் பார்வையாளர்கள் பார்வையில் விழாதவாறு சாதுர்யமாக மறைக்கப்படும்; தழிழுக்கு உண்மையிலேயே தொண்டாற்றும் ஒருவர் இப்படியாக அமைப்பில் உறுப்பினர் ஆகும்படி மறைமுகமாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவார்.  

எழுத்தில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்தப் பண்புகள் எல்லாம் ஒரு அமைப்பில் தென்பட்டால், அந்த அமைப்பை விட்டு தொலை தூரம் சென்று விடவும்; அதுதான் உங்கள் எழுத்துத் திறனை தக்கவைத்துக்கொள்ளவும், கூர் தீட்டிக்கொள்ளவும் உதவும்.


Wednesday, 14 December 2022

21-12-2022 ஆனந்த விகடனில் எனது கவிதை

 21-12-2022 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் எனது கவிதை வெளியாகியிருக்கிறது. கவிதையின் தலைப்பு 'காற்றின் விளையாட்டு'.

எனது கவிதையைத் தெரிவு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.






ஜீரோ டிகிரி இலக்கிய விருது 2022 - தேர்ந்தெடுக்கட்ட சிறுகதைகள்

ஜீரோ டிகிரி இலக்கிய விருது பெற்ற சிறுகதைகளில் தொகுப்பு நூல் விற்பனைக்கான தளம் தயாராகிவிட்டது. என்னுடைய சிறுகதையான 'சோஃபியா'வும் இடம்பெற்றிருக்கிறது.

நூலை வாங்க பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும்:

http://tinyurl.com/shortstories2022zdp

நூலை அமேசான் மூலமாகவும் பெறலாம். அதற்கான சுட்டி இங்கே:

https://www.amazon.in/dp/9395511249/