என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 16 December 2022

தமிழ் இலக்கியத்தைக் கொலை செய்யும் இயக்கங்கள்

தமிழ் இலக்கியத்தைக் கொலை செய்யும் இயக்கங்கள்


தமிழ் வளர்க்கிறேன், தமிழ் எழுத்துக்களை வளர்க்கிறேன் என்று கிளம்பும் ஒரு இயக்கம் எப்படிச் செயல்படவேண்டும் என்பது குறித்து எனக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்ந்து பேசி (வலியுறுத்தி) வந்திருக்கிறேன்.. நான் அங்கொன்றும் , இங்கொன்றுமாகச் சொன்னதை ஒட்டு மொத்தமாக சொன்னது போல் இருந்தது ஜீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருது பரிசளிப்பு விழாவில் ராம்ஜீ  நரசிம்மன் அவர்களது பேச்சு...

இன்று தமிழ் வளர்க்கிறேன், தமிழ் எழுத்துக்களை வளர்க்கிறேன் என்று கிளம்பும் பல இயக்கங்களின் இயக்கம் உண்மையில் அந்த உன்னத நோக்கத்துக்கு நேர் எதிராகத்தான் செயல்படுகிறது.. அவைகளில் பலவற்றில் சில குறிப்பிட்ட பொதுவான தன்மைகளைப் பார்க்க இயலும். அவைகள் :


1. ஒரு நல்ல எழுத்து இவர்களின் இயக்கத்தில் உறுப்பினர் ஆகவில்லை எனில், அந்த எழுத்தைப் பற்றி எங்கும், எந்த இடத்திலும் பேசமாட்டார்கள்.

2. இயக்கத்திற்கு நெருக்கமானவர்களின் எழுத்துக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

3. இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களின் எழுத்துக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

4. எழுத்து, ஒரு வணிகப் பொருளாக மட்டுமே பார்க்கப்படும்; அதன் தரம் குறித்து எவ்வித கேள்வியும் எங்கும் எழாதது போல் இயக்கம் முழுமைக்கும் பார்த்துக்கொள்ளப்படும்.

5. இவர்களின் எழுத்து வேறு எந்தத் தரமான இலக்கிய இதழ்களிலும் வெளியாகாது.

5.அ. இதன் காரணத்தினாலேயே இவர்கள் தங்களுக்கென ஒரு இதழ் துவங்கி, அதிலேயே வெளியிட்டுக்கொள்வார்கள்.

5.ஆ. இவர்களின் வசதிக்கெனவே ஒரு பதிப்பகமும் உள்ளூரில் செயல்படும்.

6. எத்தனை வருடங்கள் ஆனாலும், இது போன்ற அமைப்புகளில் இருப்பவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரவே மாட்டார்கள்.

7. தரமான எழுத்து குறித்து எதுவும் தெரியாத வெகு ஜனமே இவர்களின் இலக்கு; ஏனெனில், இவர்களைத்தான் எளிதில் ஏமாற்றி விட முடியும்.

8. இந்த அமைப்புகள் நடத்தும் இலக்கியப் போட்டிகளில் அமைப்பை நடத்துபவர்களும் சிறுகதைகள் சமர்ப்பிப்பவர்களுமே தேர்வுக்குழுவில் இருப்பார்கள்.

9. அமைப்பின் செயல்பாடுகளில் அதிகம் பங்கெடுப்பவர்களுக்கே போட்டிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.

10. அமைப்பின் வாட்ஸாப் குழுக்களில், அமைப்பின் உறுப்பினர் அல்லாதவர், தமிழுக்கு ஆற்றும் பங்களிப்புகள் எந்த அளவினதாக இருப்பினும் அவை உடனுக்குடன் பார்வையாளர்கள் பார்வையில் விழாதவாறு சாதுர்யமாக மறைக்கப்படும்; தழிழுக்கு உண்மையிலேயே தொண்டாற்றும் ஒருவர் இப்படியாக அமைப்பில் உறுப்பினர் ஆகும்படி மறைமுகமாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவார்.  

எழுத்தில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்தப் பண்புகள் எல்லாம் ஒரு அமைப்பில் தென்பட்டால், அந்த அமைப்பை விட்டு தொலை தூரம் சென்று விடவும்; அதுதான் உங்கள் எழுத்துத் திறனை தக்கவைத்துக்கொள்ளவும், கூர் தீட்டிக்கொள்ளவும் உதவும்.