என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 7 June 2026

அமெரிக்காவில் தமிழ் இலக்கியம் ஏன் வளர்க்க முடிவதில்லை? - 2

 அமெரிக்காவில் தமிழ் இலக்கியம் ஏன் வளர்க்க முடிவதில்லை? - 2


அமெரிக்காவில் ஒரு நிகழ்வை நடத்த யார் தேவையோ இல்லையோ தன்னார்வலர்கள் தேவை. பின்னே? ஒரு நிகழ்வை நடத்துவது எளிதான காரியமா என்ன? எத்தனை வேலைகள் இருக்கின்றன. காசு கொடுத்து வேலை வாங்க, காசு யாரிடம் இருக்கிறது? ஆக, தன்னார்வலர்கள் தான். ஆனால், லாபம் இல்லாமல் தன்னார்வலர் வேலை எப்படி இயங்கும்? காரணம் இல்லை என்றில்லை.

அதைப் புரிந்துகொள்ள, சில அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதலில் ஒரு நல்ல எழுத்தாளர் எப்படி யோசிப்பார் என்பதைப் பார்த்துவிடலாம். ஒரு நல்ல எழுத்தாளர், எழுத்தில் வல்லவராக இருப்பார். அவரால் சும்மா இருக்கவே முடியாது. எதையேனும் எழுத அவருக்கு தோன்றிக்கொண்டே இருக்கும். அதன் விளைவாக கவிதைகள், சிறுகதைகள் என்று அனைத்து இலக்கிய வடிவத்திலும் முயன்று பார்க்க அவருக்கு ஏதேனும் இருந்துகொண்டே இருக்கும். அவருக்கு, இலக்கியம் தெரிந்த வாசகர்களைச் சென்றடையும் இலக்கிய இதழ்கள் தேவை? ஏன்? வாசகர்களை, அவைகளின் ஆக்கங்கள் வெளியிடுவதன் மூலம் சென்று சேரலாம். நல்ல ஆக்கங்கள் எழுதினால் போதும். இலக்கிய இதழ்கள் வாசகர்களிடம் சென்று சேர்த்துவிடும். ஆக்கங்கள் நூலாக மாறுகையில், நூலாசிரியருக்கு சந்தை ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும்.

நேர் எதிராக, ஒரு போலி எழுத்தாளருக்கு படைப்பூக்கமே இருக்காது. ஒரே ஒரு டெம்ப்லேட் வைத்துக்கொண்டு இயங்குவார். அவரது எல்லா ஆக்கமும் எவ்வித புதுமையோ தனித்துவ அடையாளமோ இல்லாமல் பத்தோடு பதினொன்றாக இருக்கும். கவிதை என்றால் டி.ராஜேந்தர் டைப்பிலும், சிறுகதை என்றால் வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ என இவரது அவுட்புட் இருக்கும்.

இருவருக்கும் வேறென்ன வித்தியாசம்?

நல்ல படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளர், எழுதும் ஆக்கம் இயல்பிலேயே இலக்கிய இதழ்களை சென்றடைந்து விடும். இலக்கிய இதழ்கள் தொடர்ந்து வெளியிடுவதால், எழுத்தாளர் குறித்து ஆழ்ந்து வாசிக்கும் வாசகனுக்கு பரிச்சயம் இருக்கும். இலக்கிய இதழ்களில் வழியிலேயே அவர் தனக்கான வாசகர் கூட்டத்தை அடைந்துவிடுவார்.

மாறாக, படைப்பூக்கமே அற்ற எழுத்தாளர் ஆண்டுக்கே இரண்டே இரண்டு எழுதுவதால், இலக்கிய இதழ்கள் பக்கமெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார். விளைவு, தன் எழுத்தை வெளியிட அவராக ஒரு இதழைத் துவங்க வேண்டி இருக்கும். அமெரிக்காவில் இயங்கும் பல இதழ்களில் உள்ள 'இலக்கிய பகுதி' இந்தக் காரணத்துக்காகவே உருவாக்கப்படுவது தான் என்றால் மிகையில்லை. பிறகு நூல்? அதையெல்லாம் சொந்தக் காசை செலவு செய்து தான் வெளியிட்டுக்கொள்ள வேண்டும். சரி. இப்படி எத்தனை வெளியிட முடியும்? ஒன்றிரண்டு நூல் வெளியிட்டுவிட்டால், பதிப்பாளர், 'இனி உன் விதி' என்று சொல்லி ஒரு இருநூறு பிரதியை தலையில் கட்டிவிடுவார். அது வீடு முழுவதும் இரைந்து கிடக்கும். மேற்கொண்டு நூல் வெளியிட்டால், வீட்டில் துணிமணி வைக்கக் கூட இடமிருக்காது என்ற சூழல் வரும்போது காசு கொடுத்து நூல் வெளியிடுவதை சம்மந்தப்பட்டவர் நிறுத்திக்கொள்ள வேண்டி இருக்கும்.

பார்க்கப்போனால், திறமை வாய்ந்த எழுத்தாளர் யார் என்பதைக் கண்டுபிடிக்க இதையே ஒரு மார்க்கமாகவும் கொள்ளலாம் என்பது என் வாதம். திறமையான எழுத்தாளர் பல இலக்கிய இதழ்களில் தன் ஆக்கங்களை வெளியிடுவதை நோக்கி இயங்குவார். போலி எழுத்தாளர்களுக்கு அயலக இதழ்களைத்தாண்டி வேறு போக்கிடம் இருக்காது. சரி, அதான் எழுத வரவில்லையே பிறகு ஏன் வம்படியாக காசு போட்டு நூல் வெளியிட்டு..... என்று கேட்பவர்களுக்கு..... நேரம் நம்முடையது தான். அதை நாம் எப்படி வேண்டுமானாலும் வீணாக்கலாம் தான் என்னும்போது இப்படி வீணானால் தான் என்ன? இல்லையா?

இவ்விதழ்களில் படைப்புக்களை வெளியிட்டுக்கொள்வதில் போலிகளுக்கு வரும் சிக்கல் என்னவென்றால், போலிகள் ஏகத்துக்கும் இருப்பார்கள். போட்டி பலமாக இருக்கும். அதை கையாள, தன்னார்வலர்களாக இதழில் இணைந்துகொள்வது ஒரு நல்ல மார்க்கம். நன்றாக எழுதுபவர்களுக்கு தன்னார்வலர் பணி என்பது நேரத்தைத் திண்ணும் ஒன்று. அதில் இயங்கத் துவங்கினால், எழுத்தை எழுத முடியாது. நன்றாக எழுதுபவர்கள் இது போன்ற தமிழ் அமைப்புகளிலிருந்தும், இதழ்களிலிருந்தும் விலகி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகிவிடுகிறது என்பதை கவனிக்கவேண்டும்.

'தன்னார்வலர்' என்பது இப்படி உருவாவதும் கூட. அமைப்பின் வேலையை, இதழின் வேலையை தங்கள் நேரத்தை செலவிட்டு இழுத்துப் போட்டுக்கொண்டு செய்பவர்களின் ஆக்கங்களை நிராகரிக்கவா முடியும்? தன்னார்வலராக வந்தவன் போய்விட்டால், இதழை, அமைப்பை எப்படி நடத்துவது? ஆக அவர்களுக்கு இடமளித்தே ஆகவேண்டிய சூழலுக்கு இதழின்/அமைப்பின் தோற்றுனர்கள் ஆளாவார்கள். ஆனால், பயிற்சியற்ற எழுத்தைத் தொடர்ந்து வெளியிட்டால், இதழின் தரம் என்னாகும்?

அது கவலையே இல்லை. அதற்கு ஒரு வழி இருக்கிறது. "குறை சொல்லும் வாய்"களைக் கண்டறிந்து நீக்கிவிட்டால், அல்லது அவர்களுக்கு வேறு பிரச்சனைகள் தரத்துவங்கிவிட்டால், அது நின்றுவிடும். அல்லது நிறுத்தப்படும். அந்த யுக்தியை வைத்து அதை மட்டுப்படுத்திவிடலாம் என்பது தான் ஐடியா.

அமெரிக்காவில் இயங்கும் எல்லா இதழ்களும் இப்படித்தான் என்று சொல்லவில்லை. ஆனால், கூறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலானவை இப்படித்தான் இயங்குகின்றன. இவ்விதழ்களில் வெளியாகும் பெரும்பாலான ஆக்கங்களை வாசித்தாலே, பயிற்சியற்ற, படைப்பூக்கமே இல்லாத எழுத்து என்பதை தேர்ந்த வாசகர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். பரபரவென விளம்பரம் செய்யப்பட்டு துவங்கப்படும் இதழ்கள் பின்னாளில் ஏன் ஈ ஓட்டத் துவங்கிவிடுகின்றன என்றால், இதுதான் காரணம்.

அப்படியெனில் இதழ் எப்படி தொடர்ந்து இயங்குகின்றன?

முதலில் இது போன்ற இதழ்கள் இயங்குவது இலக்கியம் வளர்க்க அல்ல. ஆனால், அப்படி எண்ணித்தான் இதழ்கள் உருவாக்குகிறார்கள். ஆனால், காலம் செல்லச் செல்ல , மேற்சொன்ன சிக்கல்கள் புரிந்துவிடும் போது, துவங்கிவிட்ட இதழை இழுத்து மூடவா முடியும்? வேறு என்னதான் செய்ய? விளம்பரங்கள் வெளியிடுவது, திருமண தகவல்கள் வெளியிடுவது போன்ற ஒரு டஜன் சேவைகளில் கணிசமான வரவு பார்க்க முடியும். ஆக, இலக்கியம் வளர்க்கவென துவங்கப்பட்ட இதழ் சில மாதங்களிலேயே, "வர்த்தக நோக்கோடு" திசை மாறிவிடுவது சோகம் தான். ஆனால், இதில் தோற்றுனர்களை குறை சொல்வதற்கில்லை. உன்னத நோக்கோடுதான் அவர்கள் இதழ்கள் துவங்குகிறார்கள். பங்குபெற வருவோர் நோக்கமும் அதுவாகவே இருக்க வேண்டுமே? தோற்றுனர்கள் எதிர்பார்த்த அற்பணிப்பு, கடின உழைப்பு, படைப்பூக்கம், கனவு, வைராக்கியம் அவர்களிடமும் இருக்க வேண்டுமே? அது இல்லாத இடத்து, வெறும் ஆர்வக்கோளாறை வைத்து என்ன செய்துவிட முடியும்?

முன்பே சொன்னது போல அமெரிக்காவில் உள்ள அத்தனை இதழ்களும் இப்படி இல்லை. ஆனால், கணிசமான இதழ்கள் இப்படி இயங்குவன தான். நான் அவதானித்த ஒன்றை இங்கே பகிர்வது பொறுத்தமாக இருக்கும். இதில் ஆர்வமாக தன்னார்வலர்களாக இணைந்து வேறெங்கும் செல்லுபடியாகாத எழுத்தை இங்கே வெளியிட்டு "எழுத்தாளராக" வலம் வருபவர்கள் நேரம் செல்லச்செல்ல நிதர்சனம் புரிந்துகொள்கிறார்கள் என்பதை விட, வீடு முழுவதும் இரைந்து கிடக்கும் "விற்காத" நூல்கள் நிதர்சனத்தைப் புரிய வைத்துவிடுகின்றன எனலாம். ஒரு ஐந்து வருடத்தில் இவர்கள் 'ஆடி அடங்கி' 'ஓய்ந்து' விடுகிறார்கள். ஓய்ந்த பிறகு, 'எனக்கு வராத ஒன்று வேறு எவனுக்கு வந்தால் எனக்கென்ன?' என்கிற ரீதியில் இவர்கள் இயங்குவதை வைத்து, இவர்களுக்கு இருந்தது 'சுயநலமும், தன்னை முன்னிருத்திக்கொள்ளும் அற்ப நோக்கமும்' மட்டுமே என்பதைப் புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.

இலக்கியம் பழகுவதுதான் நோக்கமென்றால், இலக்கிய இதழ்களை நோக்கி நகர்வதைத்தானே இலக்காகக் கொள்ள வேண்டும்? அப்படி நகரவில்லை என்றால், அது இலக்கியமே இல்லை என்று எடுத்துக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? தேர்வெழுதினால் தானே பாஸா ஃபெயிலா என்று தெரிந்துகொள்ள முடியும்? தேர்வே எழுதாமல், தன்னைத்தானே 'பட்டதாரி' என்று அறிவித்துக்கொள்பவர்களை எப்படி ஏற்க முடியும்?


அடுத்த ஐந்து வருடங்களுக்கு புதிதாக வேறொரு கும்பல் இதையே செய்யத் துவங்கும். இது ஒரு சுழற்சியாக அமெரிக்காவில் இயங்கிக்கொண்டே இருக்கிறது.

என்னளவில், அமெரிக்காவில் இயங்கும் இது போன்ற இதழ்களில் மட்டுமே ஆக்கங்கள் வெளியிடுவதை நான் ஊக்குவிப்பதில்லை. மேற்சொன்ன காரணங்களால், எழுத்து பழக இலக்கிய இதழ்களையே பரிந்துரைத்திருக்கிறேன். ஆனால், அந்தப் பாதையில் நான் சொல்லி பயணித்தவர்கள் யாரும் இல்லை.