என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday 29 October 2024

Halloween Comet

 Halloween comet



வரும் அக்டோபர் 31ம் திகதி அமெரிக்காவில் Halloween. தெருவெங்கும் பேய்கள், பூதங்கள், ஜாம்பிக்கள் குறித்த பொம்மைகள் வைக்கத்துவங்கியிருக்கிறார்கள். நம் சூரியக்குடும்பத்துக்கே Halloween இருப்பது தெரியுமா? பெயர் கூட இருக்கிறது. 


Halloween comet.


வேடிக்கையாக இருக்கிறதல்லவா?


ATLAS என்பது ASTEROID TERRESTRIAL-IMPACT LAST ALERT SYSTEM என்பதாகும். அதாவது பூமி மேல் மோத இருக்கும் விண்கற்களை முன்னரே கண்டுபிடித்துச் சொல்லும் கண்காணிப்பு மையம். இதனை, நாசாவுடன் இணைந்து நடத்துகிறது ஹவாய் பல்கலைகழகம்.


இந்தக் கண்காணிப்பு மையம் ஒரு விண்கல்லைக் கடந்த செப்டம்பரில் கண்டுபிடித்தது. பூமி மீது மோதிவிடுமோ என்ற பயம் தான். வேறென்ன? கண்டுபிடித்ததுமே, இது பூமி மீது மோதிவிடுமோ என்ற பயம் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. அப்போது இதற்கு வைக்கப்பட்ட பெயர் c/2024 s1 என்பதாகும். இதைக் கண்டுபிடித்தபோதே இது ஒரு பெரிய விண்கல் உடைந்ததினால் உருவான சிறு சிறு பாறைகள் என்பது தெரியவந்தது. இது போன்ற பாறைகள் சூரியனைச் சுற்றி வரத்துவங்கிவிடும். அவற்றுள் சிற்சில பூமி மீதும் மோத வாய்ப்பதிகம் தான்.


இதைப் போன்ற இன்னொன்று தான் Tsuchinshan வால் நட்சத்திரம். அது அக்டோபர் மாதம் முழுவதும் வெறும் கண்களுக்கே மங்கலாய்க் காட்சி தந்தது நினைவிருக்கலாம். 



இப்போது செய்தி என்னவென்றால், இந்த C/2024 S1 விண்கல் சூரியனைச் சுற்றி வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூரியனின் ஈர்ப்பு விசையை விட்டு வெளியேற முடியாமல், அதனுள் விழுந்து சுக்கு நூறாகி அப்சர்வேட்டரிக்காரர்கள் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது. இனி இந்த விண்கல்லை track செய்யவேண்டாம் அல்லவா? மாதா மாதம் ஒரு விண்கல் வந்து பீதியைக் கிளப்பினால் வேறு என்னதான் செய்வார்கள் அவர்களும்?


நீங்கள் படத்தில் காண்பது C/2024 S1 விண்கல்லின் core சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் இளகி உடைந்து சுக்கு  நூறாகும் காட்சி தான். இப்படி எல்லா கற்களும் சுக்கு நூறாகிவிட்டால் நல்லதுதான் இல்லையா? ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. இப்போதைக்கு பூமியின் மீது மோத வரும் விண்கற்களைத் தாக்கி அழிக்க நம்மிடம் தொழில் நுட்பம் தேவை. அப்படியே தாக்கி அழிக்க முயற்சி எடுத்தாலும், அந்தத் தாக்குதலில் அந்தக் கல் பல துண்டுகளாகி மீண்டும் பூமியிலேயே வந்து விழுவதற்கும் வாய்ப்பதிகம்.


கோடிக்கணக்கான டாலரை செவ்வாய்கிரக ஆராய்ச்சிக்கு நேர்ந்துவிடத்தான் வேண்டுமா? அதற்கு பதில் பூமியைப் பாதுகாக்கக் செலவிடலாமே என்பவர்களுக்கு இந்தப் பதிவு. எல்லா விண்கற்களும் C/2024 S1 போன்றிருக்காது. இதை உலக நாடுகள் உணர்ந்திருப்பதால் தான் சூரியக்குடும்பத்திலேயே வேறெங்கெல்லாம் பரவலாம் என்கிற தேடல் பரவலாக முக்கியத்துவம் பெறுகிறது. பார்க்கப்போனால் அதில் நியாயம் இருக்கிறது என்று தான் நானும் நினைக்கிறேன்.