என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday, 21 October 2024

ஐந்நூறு மீட்டர் அகல தொலைநோக்கி

ஐந்நூறு மீட்டர் அகல தொலைநோக்கி


சீனாவின் FAST தான் உலகின் மிகப்பெரிய தொலை நோக்கி. செல்லமாக 'வானத்தின் கண்' அதாவது 'Sky eye telescope'. இதன் துளை அதாவது aperture சுமார் ஐந்நூறு மீட்டர். (போதுமா!?) இந்தப் படத்தில் பாருங்கள். எத்தனை பிரம்மாண்டமாய் இருக்கிறது? ("இன்னுமா இதையெல்லாம் ப்ளாட்டு போட்டு விக்காம இருக்காய்ங்க?" என்று தானே தோன்றுகிறது?

ஜூன் 14 அன்று சீன ஆராய்ச்சியாளர்கள், இந்தத் தொலை நோக்கியில் வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து சமிஞைகளைப் பெற்றதாகத் அறிவித்திருந்தார்கள். 2019ல் ஒன்றும், 2022ல் இரண்டும்.

குறுகிய கட்டு சமிஞைகள் அதாவது narrow-band signals இயற்கையாக உருவாகுவன அல்ல. அவற்றைச் செயற்கையாக யாரேனும்  உருவாக்க வேண்டும். கிடைத்த சமிஞை அப்படிப்பட்டன என்றதும் சீன ஆராய்ச்சியாளர்கள் குழு துள்ளிக் குதித்தது. சமிஞை கிடைத்த அந்தப் பகுதியையே தொடர்ந்து ஆராய்ந்தது. இரண்டு வருடங்கள் ஆராய்ச்சிக்குப் பின்னர் தெரிய வந்திருப்பது moey moey ரகம்.



அந்த சமிஞைகள் வெறும் Radio signal interference தானாம்.

எல்லா குழப்பமும் தொலை நோக்கியின் அளவிலிருந்து தான் துவங்குகிறதாம். இது போன்ற பாரிய தொலை நோக்கிகள் மிகவும் உணர்திறன் மிக்கதாக இருக்குமாம். அதனால் இவைகள் பூமியிலிருந்து வெளிப்படும் சமிஞைகளையே வேற்று கிரகத்திலிருந்து வந்த சமிஞைகள் போல் கண்டுபிடித்து நம்மை ஏமாற்றுகின்றன என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. 2022ல் கிடைத்த சமிஞைகளை ஆராய்ந்ததில் இந்தக் கூற்றுடன் ஒத்துப்போவதாகத் தெரிய வந்திருக்கிறது. 

என்னடா வேற்று கிரக உயிர்கள் ஆராய்ச்சியை பிடிச்ச சோதனை என்று தானே நினைக்கிறீர்கள்?

சரி. இந்தத் தொலை நோக்கியை சிறிதாக வைத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் நினைப்பதற்கில்லை. விண்வெளியிலிருந்து வரும் சமிஞை அளவு மிகவும் குறைவு. விண்வெளியிளேயே மிகவும் வடிகட்டப்பட்டுத்தான் நம்மை வந்தடைகின்றன. அதிக அளவிலான சமிஞைகள் கிடைத்தால், விஸ்தீரணமாக ஆராய முடியும் என்பதற்காகத்தான் தொலை நோக்கியின் அளவைப் பெரிது படுத்த வேண்டி இருக்கிறது. இப்போது அதிலும் சிக்கல். சிக்கல் என்னவென்றால், நாம் உருவாக்கும் சமிஞைகளையே நாம் முதலில் வடிகட்ட வேண்டும். இதைச் செய்வது எப்படி என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இத்தோல்விகள் மறைமுகமாக உணர்த்தும், fermi paradoxக்கு சொல்லப்படும் விளக்கங்களுள் ஒன்று: ஒரு இனம் வேற்று கிரக உயிர்களைக் கண்டுபிடிக்கும் முன்னரே அழிவை சந்தித்துவிடுவது.

இப்போதைக்கு, ஒன்றை ஆணித்தரமாகச் சொல்ல வேண்டுமானால், இப்படிச் சொல்லலாம். 

"எல்லோரும் இன்புற்று வாழ மட்டுமே இந்த உலகம். எல்லோரிடமும் அன்பு செய்யுங்கள்."