என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday 6 May 2020

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 4

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 4
ஞானப்பால்- சிறுகதை -  நா.பிச்சமூர்த்தி

லிங்கங்கட்டி, தவசிப்பிள்ளை ஆகிய இருவருக்கிடையில்  நடக்கும் கதை தான் ஞானப்பால்.

லிங்கங்கட்டி போக்கிடம் இல்லாதவன். ஒட்டு இல்லை. உறவு இல்லை. எங்கேனும் உணவு கிடைத்தால் போதும் என்றிருப்பவன். தவசிப்பிள்ளைக்கு ஒரு சத்திரத்தைப் பார்த்துக்கொள்ளும் பணி. அங்கே வந்து சேருகிறான் லிங்கங்கட்டி. சத்திரத்தை சுத்தப்படுத்த, சீட் செய்ய, பாத்திரங்கள் கழுவ ஒரு ஆள் தேவைப்படுகிறது தவசிப்பிள்ளை. மற்றவர்கள் காசு கேட்கிறார்கள். லிங்கங்கட்டி ஒரு வேளை உணவிட்டால் போதுமென்கிறான். தவசிப்பிள்ளை தனக்கொரு அடிமை கிடைத்துவிட்டதாய் எண்ணி லிங்கங்கட்டியை சேர்த்துக்கொள்கிறான்.

லிங்கங்கட்டி அந்த வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்கிறான். அவன் மீது பரிதாபப்பட்டு அவனுக்கு பலர் அவ்வப்போது காசு தருகிறார்கள். அதையெல்லாம் ஒரு கிழவியிடம் கொடுத்து வைக்கிறான். அது ஒரு கணிசமான அளவு சேர்ந்தவுடன் அதை தங்கமாக்கி கழுத்தி அணிந்துகொள்கிறான். ஒரு நாள் அது காணாமல் போய்விடுகிறது. அவனுக்கு ஞானம் கிடைத்துவிடுகிறது. இறுதியில் தவசிப்பிள்ளையும், லிங்கங்கட்டியும் என்னானார்கள் என்பது தான் கதை.

ஞானப்பால் சிறுகதையில் தன்னை விட பலவீனமானவர்களை துன்புறுத்த மனிதர்கள் எவ்விதம் இயல்பாகவே தயாராக இருக்கிறார்கள் என்பது காட்சிப்படுத்தப்படுகிறது. எளிமையானவர்களை அவர்களை விட வலுவானவர்கள் 'இவனை நான் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம்' என்று கொள்வதைக் காட்சிப்படுத்துகிறது.

நா.பிச்சமூர்த்தியின் சிறுகதைகளில் ஆழ்ந்த நீதி உணர்வின் குரலை அவதானிக்க முடியும். அதுதான் அவரது எழுத்தின் அடையாளமும் கூட. கு.அழகிரிசாமி, வண்ணநிலவன் என்று  நா.பிச்சமூர்த்தி துவங்கிய எழுத்து நீண்ட மரபைக் கொண்டது. வண்ணநிலவனிடம் கொஞ்சம் தி,ஜா த்தனமும் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை என்றபோதிலும் வண்ண நிலவனின் ஆக்கங்களின் இலக்கு நா.பிச்சமூர்த்தியின் ஆக்கங்களின் இலக்கு தான் என்பதால் நா.பிச்சமூர்த்தியின் மரபில் வண்ண நிலவனை வைத்துப் பார்க்க இயலும் என்று நினைக்கிறேன்.

கொள்கை அளவில் நா.பிச்சமூர்த்தியின் ஆக்கங்கள் தூரத்தே தெரியும் ஒற்றை விளக்கினொளியைக் கழுகொம்பாய்ப் பிடித்து எழுந்து வா என்கிற ஸ்திதியில் இருக்கும். இந்த நீதி உணர்வின் குரல் தான் அவரது படைப்புகளின் பொதுவான அம்சமும் கூட. ஆனால், நா பிச்சமூர்த்தியின் ஆக்கங்களில் கதை மாந்தர்கள் இருளிலிருந்து ஒளியை நோக்கி செல்வதான முன்னெடுப்புகளை மேற்கொள்பவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள். இதில், இருள் எத்தகையது என்பது குறித்து விவரணைகளே பெரும்பான்மைக்கு இருக்கும். இது போன்ற கதைகளில் அதைத் தவிர்க்க முடியாது தான்.  ஞானப்பால் கதையும் கூட அப்படியாக அமைந்த கதையே.

A SMALL TRIBUTE TO THE MOST WONDERFUL WRITERS OF TAMIL LITERATURE continues..................