என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday 6 May 2020

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 5

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 5
பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்

கெட்டியான புக்ககக் குடும்பம். ஜகதாவின் கணவன் வேலை விஷயமாக வெளியூர் சென்று நாளாகிவிட்டது. கணவனின் அண்ணியம் அவளை கடிதம் எழுதத்தூண்ட கடிதம் எழுதுகிறாள் ஜகதா.

அதைக் கதை என்று சொல்வாதா? சிறுகதை வடிவில் ஒரு குறுநாவல். நல்ல நாவலுக்கான ஒட்டுமொத்த கதையையும் ஒரு சிறிய சிறுகதையில். ஜகதாவுக்கு புக்ககத்தில் சில பிரச்சனைகள். ஆனால், அந்த பிரச்சனைகளை அவள் அணுகுகிற விதத்தில் ஜகதா வானுயர்ந்து நின்றுவிடுகிறாள். ஒரு சமயம், அந்த புக்ககத்தின் அசலான அசல் காட்சிகளை அவள் புரிந்துகொள்ள அவள் கணவனுடனான அண்ணியம் தான் உதவுகிறதோ என்றும் தோன்றச்செய்கிறது.

"அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? நீங்கள் எல்லாம் இப்படியிருக்கிறதால்தானே நாங்கள் எல்லாம் வெட்கம் கெட்டவர்களாகி விடுகிறோம்?"

கணவன் அதண்டு ஆளுமையாக இல்லாத இடத்தில் பெண்கள் எப்படி தங்களில் நியாயமான கோரிக்கைகளுக்காக கெட்ட பெயர் வாங்குகிறார்கள் என்று ஒரு வரியில் புரிய வைத்துவிடுகிறார் லா.ச. ராமமிர்தம்.

“என் பிள்ளை எப்போ அங்கே வர முடியல்லியோ உங்கள் பெண் இங்கேயே நாலு பேரோடு ஸல்லோபுல்லோன்னு இருந்துட்டுப் போறாள்! இனிமேல் எங்கள் பெண்ணும்தானே! அப்புறம் உங்களிஷ்டம். அவளிஷ்டம். இங்கே ஒருத்தரும் கையைப் பிடிக்கிறதாயில்லே!”

"பெண்ணாய்ப் பிறந்தபின் ஸ்வதந்திரம் ஏது என்கிறது தான்." என்று சொல்லும் ஜகதா அடுத்த இரண்டு வரிகளுக்குப் பிறகு,

"ஆனால் எனக்கே தெரிகிறது; பெண்கள் என்ன, புருஷர்களுக்குத்தான், என்ன சுதந்திரம் இருக்கிறது? எங்களுக்கு வீடு என்றால் உங்களுக்கு உத்தியோகம். பார்க்கப்போனால் யார்தார் விடுதலையாயிருக்கிறார்கள்? எல்லோரும் சேர்ந்து ஒரு பெரும் சிறையிலிருக்கிறோமே, இந்த உலகத்தில்!"

என்று சொல்கிறாள்.

"இந்த வீட்டில் சில விஷயங்கள் வெகு அழகாயிருக்கின்றன. இங்கே நாலு சந்ததிகள் வாழ்கின்றன." என்பது ஜகதாவின் புக்ககத்தின் மீதான விமர்சனமாக இருக்கிறது. அவளெ தான் "ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயே தான்…" என்று முடிக்கிறாள் இறுதியில்.

புதுமைப்பித்தன் தனக்கு முன் தமிழ்ச் சிறுகதைகள் எழுதப்பட்ட கட்டுதிட்டான மொழியை உடைத்துப்போட்டு உருவாக்கிய  நவீனத்துவ மொழியை ஒவ்வொருவரும் தங்கள் திறன்களுக்கேற்ப தங்களுக்கான பார்வையில் சிறுகதைகளாக்கினர். அந்த விதத்தில் உயர்கவித்துவத்தைக் கொண்டு சிறுகதையை விவரணையால் விரிவுசெய்து எழுதியவர் லா.ச.ராமாமிர்தம். பார்க்கப்போனால், மெளனியும் கூட அப்படித்தான் எழுதினார். ஆனால் மெளனியின் எழுத்து ஒரு விதமான, உள்வயமாகத் திரும்பிய எழுத்து. பெரும்பான்மையில் தன்மை நிலையிலிருந்து எழுதப்பட்ட கதைகளாகவே இருக்கும். மெளனியின் எழுத்துக்கும் லா.ச.ராமாமிர்தத்தின் எழுத்துக்கும் உள்ள வேறுபாடு இதுதான் என்று நினைக்கிறேன் அல்லது மெளனியின் இருபத்து நான்கே சிறுகதைகளை வைத்து அப்படித்தான் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சமயத்தில் லா.ச.ராவின் சிறுகதையை சரமாகக் கோர்க்கப்பட்ட கவிதைத் தொடர் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். உரை நடைக்கவிதையைத்தான் சிறுகதையாக இடமிருந்து வலமாக எழுதிவிட்டாரோ என்று கூட தோன்றச்செய்யும் கதைகள் அவருடையது.

ஒவ்வொரு வார்த்தையையும் அழகியலின் நிமித்தம் இழைத்து இழைத்து எழுதுவதில் நம்பிக்கை கொண்டவராகத்தான் அவர் எழுத்தை அணுகியிருப்பதாக அவர் சிறுகதைகளை வாசிக்கையில் தோன்றுகிறது.

A SMALL TRIBUTE TO THE MOST WONDERFUL WRITERS OF TAMIL LITERATURE continues..................