என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 8 May 2020

சலனம்

சலனம் இலக்கிய ஆக்கங்களுள் மிகச் சிறியவை கவிதைகள். இரண்டு வரியிலிருந்து அதிகம் போனால் இருபது வரி இருக்கலாம். இதனாலேயே மிக அதிகமாக எழதப்படுவதும் கவிதைகள் தான். ஒரு பதிப்பாள நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஆண்டொன்றுக்கு சுமார் இருநூறு கவிதைத் தொகுப்புகளாவது வெளியாவதாகச் சொன்னார். இத்தனை கவிதைகளில், மனதில் நிற்குமாறு ஒன்றிரண்டு கவிதைகள் ஒரு கவிஞனுக்கு கிடைத்துவிட்டாலே பெரிய விஷயம் தான். மெளனி மொத்தமாக 24 ஆக்கங்களே எழுதியிருக்கிறார். ஆனால், தமிழ் இலக்கியம் உள்ளவரை அவர் பெயர் நிலைத்திருக்கும். எத்தனை கவிதைகள் எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல. மனதில் நிற்பதான, நாலு நல்ல கவிதைகள் எழுதிவிட்டாலே போதும் தான். பிரபஞ்சன் சொல்வது போல, அந்த நாலு நல்ல கவிதைகளை எழுதிவிடத்தான் நானூறு கவிதைகள் எழுதியும் பார்க்கிறோம். இப்படியான கவிதைகள் தான் மனதில் தேங்கிவிடுகின்றன. முள் போல் நெஞ்சுக்குழியில் தங்கிவிடுகின்றன. சதா நினைவில் வந்து அலைகழிக்கின்றன. அந்தப்படி, கவிஞனை நினைவூட்டுகின்றன. இன்னும் சொல்லப்போனால், கவிதையை எழுதியவன் இரண்டாம் பட்சமாகிப்போகிறான். எழுதியவனை பின்னுக்கு தள்ளிவிட்டு, கவிதை முன் வந்து நின்றுவிடுகிறது. கவிதையின் பொருட்டு தான் கவிஞன் நினைவுகூறப்படுகிறான். "பிழைகளின் முகம்" என்ற கவிதையை எப்போது எழுதினேன் என்று சரியாக நினைவில்லை. கணையாழியில் வெளியாகியிருந்தது. கணையாழி தளத்தில் டிசம்பர் 3, 2011ல் வலையேற்றப்பட்டிருப்பதை வைத்து 2011ம் ஆண்டில் எழுதியதாக கணிக்கிறேன்.

அதன் சுட்டி இங்கே:

நண்பர் லதாமகன் தனக்குப் பிடித்த, தன்னை சலனப்படுத்திய கவிதைகளைத் தேர்வு செய்து தொகுத்து கிண்டிலில் நூலாக வெளியிட்டிருக்கிறார். சுமார் 90 படைப்புகளுடன் இந்த நூல் அமேசான் கிண்டிலில் வாசிக்கக் கிடைக்கிறது. "பிழைகளின் முகம்" கவிதையும் பட்டியலில் இருக்கிறது.

இது போன்ற ஒன்றிரண்டு கவிதைகளே ஆயிரம் கவிதைகளை உருவாக்குகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை.

கிண்டில் அன்லிமிடெட் மூலம் நூலை வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்.