என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 4 May 2020

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 2

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 2
கதவு - சிறுகதை - கி.ராஜ நாராயணன்

ரங்கம்மாளின் மூன்று பிள்ளைகளுக்கு அவள் வீட்டின் கதவு தான் பிரதானமான விளையாட்டுப்பொருள். மூன்றாவது ஒரு கைக்குழந்தை. ரங்கம்மாளின் கணவர் பிழைப்பின் நிமித்தம் வெளியூர் சென்று மாதக்கணக்காகிவிடுகிறது. பிழைப்பின் நிமித்தம் ரங்கம்மாள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாதவளாகிறாள். இதனால் தலையாறி ஒரு நாள் அவள் வீட்டின் கதவை பிடுங்கிச் சென்றுவிடுகிறான். கதவு இல்லாததால் அதீத குளிரால், கைக்குழந்தை இறந்துவிடுகிறது.

சில நாட்கள் கழித்து முதலிரண்டு பிள்ளைகள் அந்தக் கதவை அருகிலுள்ள சாவடிக்கருகில் காண நேர்கிறது. இருவரும் ஓடிச்சென்று அந்தக் கதவை வாஞ்சையுடன் வருடி இறுகப்பிடித்துக்கொள்வதுடன் கதை முடிகிறது.

தமிழ் இலக்கியத்தில் கி.ராவின் இடம் மிக மிக ஸ்திரமானதும், முதலானதுமாகும். நாட்டுப்புற அழகியலின் உணர்வு நிலைகளை சிறுகதைகளாக்கி அழகு பார்த்தவர் கி.ரா.

எந்த ஒரு எழுத்தாளனுக்கும் எது உச்சமாக இருக்கிறதோ, அது தவிர்த்த ஏனையவற்றில் அவர் நீச்சமாக இருப்பது இயல்பே. இது எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். எல்லா தளங்களிலும் சோபிக்க இதுகாறும் எந்த ஒரு எழுத்தாளரும் பிறக்கவில்லை, இனி பிறக்கப்போவதுமில்லை.


இந்தப் பின்னணியில், என்னதான் புதுமைப்பித்தன் தமிழ் சிறுகதைகளின் முன்னோடி எனினும், புதுமைப்பித்தனிடம் எது உச்சமாக வெளிப்பட்டதோ அதுவே அவரது  நீச்சமாகவும் ஆனது. அந்த இடம் யதார்த்தவாதத்தில் ஆழ் உணர்வெழுச்சிகள்.

புதுமைப்பித்தனின் ஆக்கங்கள் புறவயமானவை. சிலேடை தொனி கொண்டிருப்பவை. மிகவும் மரபார்ந்த சிறுகதைகளை, சங்க இலக்கிய மொழியிலிருந்தும், நடையிலிருந்தும் கடனாகப் பெற்ற ஒரு நடையில் வைத்து எழுதிக்கொண்டிருந்த வா.வெ.சு மற்றும் சுப்பிரமணிய அய்யரின் நடையிலிருந்து பிரிந்து துடுக்கான நடையில் எழுத முற்பட்டார் புதுமைப்பித்தன். அதுதான் பின்னாளில் அவரது அடையாளமுமாகிப்போனது. இந்த விதமான இயங்குமுறையில் நீச்சம் என்னவெனில், ஆக்கங்கள் மிக இயற்கையாகவே மிகவும் மேலோட்டமான விதிமீறலையே பெரும்பாலும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டவையாகிவிட்டன. இது ஏனெனில் சிறுகதைகள் தரும் வார்த்தை எண்ணிக்கை இடம் தான்.

வார்த்தை எண்ணிக்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் அது குறு நாவலாகிவிடுகிறது. ஆக, விதிமீறலையும், ஆழ்ந்த உணர்வெழுச்சியையும் ஒருங்கே கொண்டு வருவது இரண்டு எதிரெதிர் துருவங்களை ஒன்றிணைப்பது போலாகும். சுஜாதாவின்  எழுத்தின் பாதகமான அம்சமும் இதுதான்.

கி.ரா தனது நாற்பதுகளில் தான் எழுதவே துவங்குகிறார். அடிப்படையில் ஒரு விவசாயி. கிராம வாழ்வை உள்ளும் புறமுமாக உணர்ந்தவராதலினால், அவர் கிராமத்து வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு எழுதியதில் ஆச்சர்யமில்லை. ஆனால் தமிழ் இலக்கியத்தில் அவர் இடம், யதார்த்தவாதத்தில் நாட்டுப்புற அழகியலை புகுத்தியது என்று அடித்துச்சொல்லலாம்.


A SMALL TRIBUTE TO THE MOST WONDERFUL WRITERS OF TAMIL LITERATURE continues..................