என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 25 May 2020

காதல் சோலை - அமேசான் கிண்டில்



காதல் சோலை - அமேசான் கிண்டில்
காதல் கவிதைகளுக்கென்று ஒரு ஈர்ப்பு இருக்கிறது. காதல் கவிதைகளுக்கென்று ஒரு பெரிய இலக்கணம் இருக்கிறது. காதல் தான் அந்த இலக்கணம். 'யாரந்தக் காதலி?' என்காதீர்கள். கிறுக்கியதில் காதல் இருந்துவிட்டாலே அதைக் கவிதை என்று அங்கீகரித்துவிடுகிறது எதிர்தரப்பு. அந்த அங்கீகாரத்துக்கு மேல், இலக்கணங்களுக்கு என்ன வேலை?
வருடம் 2011 என்று நினைக்கிறேன். சென்னையில் தாம்பரத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
அங்கே அந்த நிறுவனத்துக்கென அக இணையம் (intranet) இருந்தது. அதில் கவிதைகளுக்கென இருந்த குழுமத்தில் 'காதல் சோலை' என்ற தலைப்பில் காதல் குறுங்கவிதைகள் (அவைகளைக் கவிதைகள் என்று நீங்கள் ஏற்கும் பட்சத்தில் தான். இல்லாவிட்டால் கிறுக்கல்கள்...அவ்வளவுதான்) விளையாட்டாக எழுதத்துவங்கினேன். ஒரு நாளுக்கு சுமார் பத்து கவிதைகள் என்பதுதான் கணக்கு.
இந்தக் கவிதைகளை வாசிக்கும் யாருமே 'சொந்த அனுபவமா?" என்று தான் இதுகாறும் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் பதில்: மரணம் குறித்து எழுதப்படுவனவற்றுக்கும் சொந்த அனுபவம் தேவையா?
இந்தக் கவிதைகளைக் கிறுக்கிய காலகட்டத்தில், வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த ஈரடிக் கவிதைகள். நிறுவனத்திலிருந்து 2012ல் வெளியேறும் தினம் வரை, சுமார் ஆயிரம் கவிதைகள் எழுதி முடித்துவிட்டிருந்தேன். அந்தத் தொகுப்பிலிருந்து மிகவும் வரவேற்பைப் பெற்ற கவிதைகளில் முதல் நூறு கவிதைகளை ஒரு தொகுப்பாக்கிப் பார்க்க வேண்டும் என்று 2012லேயே தோன்றியது.
ஆனால், தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள், ஆங்கில இலக்கியம் என்று இயங்கியதில் இதுகாறும் அதற்கு வாய்ப்பு அமையப்பெறவில்லை.
இவ்விதம் தொகுப்பு நூலாக்கிப்பார்க்கும் விழைவில் சிக்கி தேங்கிக்கிடக்கும் என் ஆக்கங்கள் ஏராளம். வெகு நாட்களாக பேப்பர்பேக்காக இல்லாமல் இணையம் வாயிலாக வெளியிட யோசித்திருந்தேன். பல காரணிகளை, வசதிகளை ஆராய்ந்ததில் கிண்டில் ஆகச்சிறப்பு என்று தோன்றியது.
பிப்ருவரி 14 காதலர் தினத்திற்கு வெளியிடலாமென்று திட்டமிட்டது. நாவல், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் வேலை இருந்ததால் திட்டமிட்டபடி கொண்டுவர முடியவில்லை. இதோ இப்போது சாத்தியமாகியிருக்கிறது.
'காதல் சோலை' முதல் பகுதி அமேசான் கிண்டிலில். விலை ஒரு டாலர் தான். ஏதாவதொரு விலை வைத்துத்தான் ஆகவேண்டும் என்பதால் இந்த ஒரு டாலர். Kindle unlimited இருப்பின் இலவசமாகவே வாசிக்கலாம்.
இந்திய நண்பர்கள் இந்தியாவிலிருந்து இந்த நூலை வாசிக்க முடிகிறதா என்பதை ஊர்ஜிதம் செய்து சொல்லவும். வாசிக்க முடியவில்லை எனில், ஆவன செய்ய சித்தமாயிருக்கிறேன். முதல் பகுதி என்பதால் சுமார் நூறு கவிதைகளை மட்டுமே தேர்வு செய்திருக்கிறேன்.
கவிதைகளை வாசித்துவிட்டு எழுதுங்கள். உங்கள் ஆதரவுக்கேற்ப இந்த நூலின் அடுத்தடுத்த பாகங்களை வெளியிடலாமென்று திட்டமிட்டிருக்கிறேன். உங்கள் அடையாளம் வெளியிட விருப்பமில்லை எனில் சரஹாவிலும் தெரிவிக்கலாம்.
நூலை அமேசான் கிண்டிலில் வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்.