என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 4 May 2020

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 3

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை- 4
நகரம் சிறுகதை - சுஜாதா  

வள்ளியம்மாளின் மகள் பாப்பாத்திக்கு ஜுரம். வள்ளியம்மாள் மகளை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறாள். ஆனால், நாகரீக மருத்துவனையில் புழங்குதளம் அவளுக்கு அண்ணியமாக இருக்கிறது. நகரத்து மனிதர்களின் லெளகீக உலக சம்பாஷனைகள் மற்றும் வழமைகள் அவளுக்கு பரிச்சயமில்லாது இருக்கிறது. 

இப்படி பரிச்சயமில்லாது வருபவன் கவனத்தை கோர்பவனாகத்தானே கற்றவர் என்று சொல்லப்படும் சமூகத்தில் இருந்திருக்க வேண்டும்? ஆனால் அப்படி இல்லை. அவளின் எளிமை யாருடைய பரிதாபத்தையும், கோருவதில்லை. மாறாக, அவள் தலைவலியாகவே பார்க்கப்படுகிறாள். 

எவ்வித நாகரீகமும் இல்லாமல், இயந்திரத்தனமாக, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பாப்பாத்தியின் உடலை வைத்து மருத்துவ மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார் மருத்துவர். தனது மகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கையில் மருத்துவர் சாவதானமாக மகளின் உடலை வைத்து வகுப்பு எடுப்பதை எந்தத் தாயால் சகித்துக்கொள்ள முடியும்? ஆனால், அதைத்தாண்டி வேறு எதுவும் நடக்க வாய்ப்பில்லை தானே. ஏனென்னில், வள்ளியம்மாளிடம் பணமும் இல்லை, இன்ஷூரண்ஸும் இல்லை. நுனி நாக்கு ஆங்கிலமும் இல்லை. 

கிராமத்திலிருந்து மகளின் நிமித்தம் நகர்ப்புறம் வந்துவிட்டவளுக்கு பெரும் அச்சுருத்தலாக இருப்பது, நகரத்து மனிதர்கள் ஈவு இரக்கமற்ற, எல்லாவற்றுக்கும் ஒரு லெளகீக லாபத்தைக் கோருகிற, லாபமில்லாத இடத்து அலட்சியத்தை தந்துவிடுகிற மலட்டுத்தனம் தான். இயந்திரத்தனம் தான். அறியாமை, அது தரும் தாழ்வு மனப்பான்மை, தெரியாத இடத்தில் பிழைக்கத் தெரியாமல் திண்டாடி முட்டி மோதி ஆதரவற்று  நிற்கும் நிலைப்பாடு என எல்லாமும் உந்த மகளை அழைத்துக்கொண்டு தனக்கு மிக பரிச்சயமாக இருக்கிற 'வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விட்டால், எல்லாம் சரியாகி விடும்' என்று தனக்குத்தானே கற்பித்துக்கொண்டு தன் கிராமத்தை நோக்கி திரும்புகிறாள்.

இந்தக்  கதையை படித்துவிட்டு அடைந்த மனபாரத்துக்கு அளவே இல்லை. பணத்தை, கரன்சியைக் கண்டுபிடித்துவிட்டு மனித இனம் படும் பாட்டை இன்னும் எத்தனையெத்தனை விதங்களில் கேட்பது? மீண்டும் நாமெல்லாரும் பண்டமாற்றுக்கே திரும்பிவிட்டால் என்ன என்றெல்லாம் தோன்றச்செய்துவிட்டது இந்தச் சிறுகதை. இந்த சலனம் தான் சிறுகதையின் வெற்றியும் கூட.

சிறுகதை எழுத்தாளர்களில் சுஜாதா எனக்கு ஆதர்சம் தான். அது பெரும்பான்மையும், அவர் தான் சாந்திருந்த குடும்பத்தை கைவிடாமல், தன்னையும் ஒரு வெற்றி நாயகனாக வைத்துக்கொண்டே, தன் பணியையும் கைவிடாமல் சமூகத்துக்கான தன் கடமைகளை தொடர்ந்து செய்தார் என்பதில் உருக்கொள்வது தானே என்றி வேறில்லை.  

சுஜாதா சிறுகதை வடிவங்களில் நிறைய பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்று தான் பலரும் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, குப்புற விழுந்தான் என்பதில் விழுந்தானை,

வி
ழு
ந்
தா
ன் 
என்று எழுதியிருப்பார். 

இந்த பிரயோகமெல்லாம் 1980களில் தமிழுக்கு மிகவும் புதியது. இந்த பிரயோகங்களைக் கண்டு தமிழ் எழுத்துலகம் உற்சாகப்பீதி அடைந்தது. சுஜாதா மாய வித்தைக்காரர் போல் பார்க்கப்பட்டார். 

ஆனால், உண்மையில் சுஜாதா தமிழுக்கு இவ்விதமான வடிவ விளையாட்டுக்களை அறிமுகப்படுத்த மட்டுமே செய்தார். உருவாக்கியது மேற்குலகம். இதையெல்லாம் சுஜாதா மேற்கத்தைய எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்தே உருவி தன் ஆக்கங்களில்  ஆங்காங்கே பயன்படுத்திக்கொண்டார் என்பதுதான் நிஜம். மேற்குலகில் non-linear writing அப்போது பிரபல்யமடைந்து கொண்டிருந்தது. 

இப்படி சுஜாதாவின் கரிஷ்மாவில் பெரும்பகுதிக்கு ரங்கராஜன் உண்மையிலேயே தகுதியற்றவர் தான். ஆனால் தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு அறிவியல் புனைவுகள், சஸ்பென்ஸ், த்ரில்லர் போன்ற வகைமையில் சுஜாதாவினுடையது மிகப்பெரும் பாய்ச்சல். 

சுஜாதாவின் எழுத்தை நான் இரண்டு விதமாகப் பார்க்கிறேன். இலக்கியமாக அவர் எழுதியது சொற்பமே. பெரும்பகுதி வணிக எழுத்து தான். இதற்கு அவரைக் குற்றம் சொல்ல இயலாது. 1940 களில் கட்டுதிட்டாக எழுதப்பட்டதை உடைக்க வேண்டிய காலம் வந்தபோது அது புதுமைப்பித்தனுக்கு மாபெரும் வாய்ப்பாகிப்போனது. அதை அவர் பயன்படுத்திக்கொண்டார். அதே போல், 1980 களில் பத்திரிக்கைகள் பெரு வளர்ச்சி கண்ட காலம். தன் எழுத்துக்கு எங்கே தேவை ஏற்பட்டதோ அதை நோக்கிப் பாய்ந்தார் சுஜாதா. வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொண்டார். அது அவரை வணிக எழுத்தாளராக்கியது. 

இரண்டாவது, சுஜாதாவின் எழுத்தின் பெரும்பகுதி அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. இன்றைக்கும் புதுமைப்பித்தனுக்கு பிறகு தமிழில் நிற்கும் அறிவியல் புனைக்கதைகள் அவருடையது தான். ஆனால், அவைகளில் பெரும்பாலும் சினிமாவுக்கு பொருந்தக்கூடிய கதைகளாக ஓ ஹென்றித்தனமாக எதிர்பாராத முடிவை நோக்கி விரட்டப்பட்ட கதைகளே. மானுடம் சார்ந்த கேள்விகளை எழுப்புவன அல்ல. பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் போன்றவர்களிடம் இல்லாத ஹாஸ்யம் மற்றும் புத்திசாலித்தனம் சுஜாதாவிடம் இருந்தது. 

சுஜாதா புத்திசாலித்தனமாக எழுத்தை எழுதினார் என்று சொல்லலாம். மற்றபடி, அவரது மொழி சுவாரஸ்யம் கூட்டுவதாக, ஒரு விதமான ஹாஸ்யத்தன்மை கொண்டதாக இருந்தது. அதுகாறும் தமிழில் எழுதியவர்களுக்கு புத்திசாலித்தனம் + ஹாஸ்யம் + நவீனத்துவம் என்கிற காம்போ இல்லை. அதுவே அவரது அடையாளமாகப் பார்க்கிறேன். அவரது எழுத்தின் இலக்கிய இடமும் அதுதான்.


A SMALL TRIBUTE TO THE MOST WONDERFUL WRITERS OF TAMIL LITERATURE continues..................