அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்
இந்த விவகாரத்தில் 'மாணவி ஏன் அந்த நேரத்தில் மாணவனுடன்...அதனால் தான் எல்லா பிரச்சனையும்' என்கிற ரீதியில் இணையத்தில் பல விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது.
அது அவருடைய விருப்பமுங்க. அது காதலா இருக்கலாம். காமமாகவே இருந்தாலும், அது அவரது தேர்வு தான் என்றால் அதில் கருத்து சொல்ல நம் யாருக்குமே உரிமை இல்லை. இதற்கெல்லாம் "கர்மா சும்மா விடாது" என்றெல்லாம் பொங்க வேண்டியதில்லை. ஆண்களில் பலர் இளம் வயதில் பல வல்லுறவுகளில் இருந்துவிட்டு, இறுதியில், அதற்கு நேரெதிரான குணாதிசயங்களுடன் கூடிய பெண்ணுடன் செட்டில் ஆகிறவர்கள் இருப்பார்கள். இளம் வயதில் பல்லுறவுகளில் இருந்தவர்கள் ஒருகட்டத்தில் திகட்டிப்போய், எதுவுமே வேண்டாம் என்று சாமியார் போல் சிலர் இருப்பார்கள். போலவே, சிறுவயதிலும் சரி, மத்திம வயதிலும் சரி, பாலைவனமாக எவ்வித உறவுகளும் வாய்க்காமல் காய்ந்து கிடப்பவர்களும் இருப்பார்கள். சிலருக்கு எல்லா வயதுகளிலும் உறவுகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். ஆனால், வைத்து மெயின்டெயின் செய்யததேவையான ஒன்று அவர்களுக்கு எல்லாக் காலத்திலும் வாய்க்காதிருக்கும். இப்படிப் பல permutations and combinations சொல்லலாம்.
மேற்சொன்ன எல்லா சாத்தியங்களிலும் ஆணுக்கு பதிலாக பெண் என்றும் போட்டுக்கொள்ளலாம். அதுவும் தினம் தினம் நடந்துகொண்டு தான் இருக்கிறது.
நெருங்கிச் சென்று பேசிப்பார்த்தால் தான், அவைகளிலிருந்து அவர்களுக்கான take aways என்னென்னவாக இருக்கின்றன என்பது புரியும்.
காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு, அந்த ஏமாற்றம் தந்த கெட்ட அனுபவத்தில் துவண்டு, பின் திருமணத்திற்குப் பிறகு மண வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் பெண்கள் இருக்கிறார்கள். திருமணத்தில் ஏமாற்றப்பட்டு, அந்த ஏமாற்றத்திற்கு பதிலாகப் பல ஆண் துணைகளோடு தரிகெட்டு வாழ்ந்து பழி வாங்கும் பெண்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கை ஒருவருக்கு என்ன வைத்திருக்கிறது என்பது தான் இருப்பதிலேயே ஆகச்சிறந்த சஸ்பென்ஸ்.
'இருட்டில் ஆணும் பெண்ணுமாக...' என்று பொறுமாதீர்கள். அடுத்த முறை அப்படி ஒருவரைப் பார்த்தால், வாழ்க்கை இவர்களுக்கு என்ன வைத்திருக்கும் என்ற கேள்வியோடு கடந்து போகப் பழகிவிடுங்கள். 'இருட்டில் ஆணும் பெண்ணுமாக...' என்று நீங்கள் பார்த்தது நிச்சயமாக அவர்களுக்கு நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், யாருக்குமே நிரந்தரமாக இருப்பதில்லை. பலருக்கு வாழ்க்கையில் நடக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம் அந்த பத்து நிமிஷமாகத்தான் இருக்கும். வாழ்க்கை, அவர்களின் மொத்த வாழ்வுக்குமான ஊக்கத்தை அந்தப் பத்து நிமிஷத்தில் தான் பொதித்து வைத்திருக்கும்.
வாழ்க்கை அவரவர்க்கான அனுபவத்தை, ஏமாற்றத்தை, பாடத்தை, நஷ்டத்தை, அந்தக் கணத்தில் தான் மறைத்தும் வைத்திருக்கிறது. உயிருக்கு உயிராகக் காதலித்து, அக்காதலியுடன் அப்படிப் பல பத்து நிமிஷங்களைச் செலவு செய்திருப்பார் ஒருவர். இறுதியில், கெட்ட நிகழ்வுகளால், அவைகளை மறக்க, முழுக்குடிகாரனாக மாறியிருப்பார். அந்த பத்து நிமிஷம் தான் அவரது வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்திருக்கும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்தப் பத்து நிமிஷம் வரமாகவும் இருக்கலாம், ஆலகால விஷமாகவும் அமையலாம்.
Its their moment- not in a fun way but in a fate-way என்பதைப் புரிந்துகொண்டீர்களானால், அடுத்த முறை அவர்களைப் பார்க்கையில், தொந்திரவு செய்துவிடக்கூடாது என்று மட்டும் தான் தோன்றும் உங்களுக்கு. அப்படித் தோன்றிவிட்டால், நீங்கள் மனித வாழ்வை, அதன் சாபக்கேடுகளை, நிலைத்தன்மையின்மையை, கருணையற்ற தன்மையையெல்லாம் சரியாகப் புரிந்துவைத்திருக்கிறீர்கள் என்று பொருள்.