என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday, 30 January 2025

வேற்று கிரகத்தில் மனிதப் பரவல் தொடர்பான ஆராய்ச்சிகள்

வேற்று கிரகத்தில் மனிதப் பரவல் தொடர்பான ஆராய்ச்சிகள்

*******************************************************************


வேற்று கிரகத்தில் மனிதப் பரவல் தொடர்பான ஆராய்ச்சிகள்  நமக்குத் தேவையா? உலகத்தில் பசியில் இருப்பவர்கள் எத்தனை கோடி பேர்? இருக்க இடம் இல்லாமல், சாலையில் உறங்குபவர்கள் எத்தனை கோடி பேர்? அவர்களுக்காவது அந்தப் பணத்தைச் செலவு செய்யலாம். அதை விடுத்து, உயிரற்ற கிரகங்களுக்குப் பரவ இத்தனை கோடிகள் செலவு செய்யத்தான் வேண்டுமா?




இப்படியெல்லாம் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன விண்வெளி ஆராய்ச்சிகள்.

'ஆன்ட்ரோமிடாவுடன் நமது காலாக்ஸி மோதப்போகிறது' என்றால், அதுக்கு ஐந்து மில்லியன் வருடங்கள் இருக்கிறதே இப்போதென்ன அவசரம் என்று எதிர்கேள்வி வரும் தான். இந்த எதிர் கேல்வி அர்த்தமற்றது என்று நான் சொல்லவரவில்லை. நியாயமான கேள்வி தான்.

ஆனால், பயம் அதையும் விடப் பெரியது அல்லவா? அச்சம், மனிதன் வெற்றி கொள்ள இயலாத உணர்வு அல்லவா?

உண்மையில், நமது காலாக்ஸி மீது ஏற்கனவே மூன்று முறை வேறு வேறு காலாக்ஸிக்கள் மோதிவிட்டன என்றால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்? உண்மையும் அதுதான். ஏற்கனவே மூன்று முறை, சிறிய காலாக்ஸிகள், நம் காலாக்ஸி மீது மோதியிருக்கின்றன. ஆக, சின்னஞ்சிறிய காலாக்ஸிக்களை மூன்று முறை விழுங்கிச் செரித்திருக்கிறது நமது காலாக்ஸி.

அந்தச் சின்னஞ்சிறிய காலாக்ஸியின் பெயர் Sagittarius Dwarf Spheroidal Galaxy. நீங்கள் படத்தில் காண்பது, அந்த மோதல் எப்படி நடந்திருக்கும் என்பது குறித்தான ஒரு ஓவியப்படமே. ஆக, பலத்தில் சிறியவைகளைக் பெரியவைகள் கபளீகரம் செய்வது வெறும் விலங்கினங்களிடம் காணப்படும் பண்பு மட்டும் அல்ல. அது, பிரபஞ்ச நியதி தான். அந்தப் பிரபஞ்ச நியதியைத்தான் உயிர்கள் அனைத்தும் பிரதிபலிக்கின்றன. துரதிருஷ்டவசமாக, பிரபஞ்ச நியதிக்கு வேறு வக்கில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


Wednesday, 29 January 2025

UFO Galaxy

 UFO Galaxy


UFO நமக்கெல்லாம் தெரியும். பறக்கும் தட்டுகள் குறித்து நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம். அதில் எத்தனை சதம் நிஜம், எத்தனை சதம் ஏமாற்று வேலை என்பது முதற்கொண்டு பேசசொன்னால் பேசிக்கொண்டே இருப்போம்.

ஆனால், UFO Galaxy என்று ஒன்று இருக்கிறது. தெரியுமா?

இவையெல்லாம் காலாக்ஸிக்கள் தாம். ஆனால், கண்களுக்குத் தெரியாது. கண்களுக்குத் தெரியாதென்றால், நம் கண்களுக்கு அல்ல. தொலை நோக்கிகளின் கண்களுக்கே தெரியாது. அப்படித்தான் வெகு நாட்களாக, Hubble கண்களில் படாமல் இருந்தன.  நாமெல்லாம் Hubble பார்த்த் காலாக்ஸிக்களைப் பட்டியலிட்டுவிட்டு, 'குறைந்தபட்சம் நம்மைச் சுற்றி உள்ள காலாக்ஸிக்களையாவது கண்டுபிடித்துவிட்டோமே' என்று அமர்ந்தால், கற்றது கைமண் அளவுதான் என்கிற ரீதியில் தலையில் கொட்டு வைக்கிறது, ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி.

அது கண்டுபிடித்துச் சொன்ன காலாக்ஸிகள் அதற்கு முன் Hubble கண்டுபிடிக்காதது. எப்படி Hubble ஏமாந்தது? அதை எப்படி ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்தது?

எல்லாம் Infra red தான். ஜேம்ஸ் வெப், ஒரு Infra red தொலை நோக்கி. நீங்கள் படத்தில் பார்ப்பது அப்படி ஜேம்ஸ் வெப் பார்த்துச் சொன்ன காலாக்ஸிக்கள் தான். இவைகள் வெளிவிடும் வெளிச்சம் மிக மிக சன்னமானதுடன், Infra red ல் மட்டுமே தெரியக்கூடியது. சாதாரண காலாக்சிக்களைவிட அதிக தூசிகளைக் கொண்டது. 

இந்த காலாக்ஸிக்களிலும் உயிர்கள் இருக்கலாம். அவைகள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம். ஆனால், இத்தனை காலமும் மனிதக் கண்களுக்குக் காட்டாமல் இருந்திருக்கிறது பிரபஞ்சம். 

இன்னும் எவ்வெவற்றை, எந்தெந்த அலைவரிசைகளுக்கென பிரபஞ்சம் மறைத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை. ஐயய்யோ, இது தெரியாமல் வாயேஜரை வேறு விண்வெளியில் உலவ விட்டிருக்கிறோமே என்று புலம்பத்தேவையில்லை. வாயேஜர் நம்  காலாக்ஸியின் ஈர்ப்பு விசையை விட்டு வெளியே போய்விடும் அளவுக்கு சக்தி வாய்ந்ததல்ல. ஆதலால், மூச்சிருக்கும் வரை மட்டுமல்ல, அது மூச்சை விட்டுவிட்டாலும், நம் காலாக்ஸிக்குள் தான் சுற்றிக்கொண்டிருக்கும். 




Tuesday, 28 January 2025

Andromeda

 Andromeda




இது, இரவு வானம், ஒருக்கால் தெளிவாக இருக்கையிலும், Andromeda காலாக்ஸி வானில் இன்னும் இன்னும் பிரகாசமாகத் தெரியும் பட்சத்திலும்,  பூமியிலிருந்து பார்க்கையில் அந்த காலாக்ஸி இப்படித்தான் தெரியும் என்பதற்கான புகைப்படம். நான் எடுக்கவில்லை. யாரோ எடுத்தது. 

துவக்கத்தில் ஒரு வேளை இது ஃப்ராடு வேலையாக இருக்குமோ என்று தான் தோன்றியது.

நிலவு - தூரம் மூன்று லட்சம் கிலோ மீட்டர். விட்டம் மூன்றாயிரத்து நானூறு கிலோமீட்டர். ஆக, 300000/3400 = 88.

Andromeda - 2500000 ஓளி ஆண்டுகள். விட்டம் - 150000 ஒளி ஆண்டுகள். ஆக, 2500000/150000 = 16.

அதாவது, Andromeda காலாக்ஸி,  நிலவினையுடையதைப் போல் ஐந்து மடங்கு இருக்க வேண்டும்.

இந்தப் படத்தில் பார்த்தாலும் அப்படித்தான் தெரிகிறது அல்லவா? போகட்டும்.

Andromedaவை இப்போதைக்கு இரவு வானில் பார்த்தால், அதன் மத்தி மட்டும் தான் ஒரு புள்ளி வெளிச்சமாகத் தெரிகிறது. அதனால், தானோ என்னவோ நமக்கு அது அத்தனை ஆபத்தானதாய்த் தெரியவில்லை. உண்மையில், Andromedaவை நோக்கி,  நமது காலாக்ஸியும், நமது காலாக்ஸியை  நோக்கி Andromedaவும் அண்மித்துக்கொண்டிருக்கின்றன. 

நாம் ஒன்றொரொன்று மோத இருக்கிறோம். ஒரே ஆறுதல்,அதற்கு சில மில்லியன் ஆண்டுகள் காலம் இருக்கிறது என்பதுதான். 

That means the expiry dates for Andromeda and the Milky Way are already sketched out. இந்தப் புகைப்படமே அதைக் குறிப்புணர்த்துவதாகத்தான் தெரிகிறது இல்லையா? பாருங்கள். உண்மையைக் கண்டறிய, நிஜத்தைக் கிட்டத்தில் தான் பார்க்க வேண்டுமென்பதில்லை. நிஜத்தைப் பிரகாசிக்கச்செய்தும் கண்டு கொள்ளலாம்.


Sunday, 26 January 2025

கிரகங்களின் parade...

 இதுதான் கிரகங்களின் parade...




இதுதான் கிரகங்களின் parade...

நான் எடுக்கலைங்க.. அடிக்கிற குளிர்ல இதை யார் எடுப்பா? யாரோ எடுத்தது.. ஆனா, பார்க்க அழகா இருக்குல்ல?

இது எதுலயுமே புத்திசாலி உயிர்கள் இல்லை.. அவ்வளவு ஏன், பின்னால் இருளில் மறைஞ்சிருக்குற எண்ணற்ற கிரகங்கள்ல, உயிர்கள் இருந்தாலும், நாம அவங்களையோ, அவங்க நம்மளையோ சந்திக்கவே முடியாம கூட இருக்கும்.. நாம எல்லாருமே காலத்தால பிரிக்கப்பட்டவங்க...

இந்தப் பிரபஞ்சத்துல காலத்தால ஒண்ணு சேர்றதுங்கறதே எவ்ளோ அரிதினும் அரிதா நிகழ்கிற விஷயம் தெரியுமா? நாம எல்லாரும் அவ்ளோ அதிர்ஷ்டம் பண்ணவங்க...

ஆனா, நாம என்னடான்னா...........ம்ஹும்

Starting from the Sun: Saturn, Venus, Neptune, Uranus, Jupiter, and Mars.
https://starwalk.space/en/news/what-is-planet-parade

Wednesday, 22 January 2025

பணி - மலையாளம்

பணி

பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் நாயகியின் மாமியார் நாயகிக்கு வழங்கும் ஆலோசனைக்கெனவே பார்க்கவேண்டிய படமாகிறது பணி.

இருப்பினும் வேறொரு கோணத்தையும் பதிவு செய்யத்தவறவில்லை. 

"இதையெல்லாம் நினைவுல வச்சிருக்கக்கூடாது. மறந்துடனும். ஏதோவொரு வசனத்துல வரா மாதிரி, தலைமுழுகிடனும்" 

ஆம். மிகச்சரியான ஆலோசனை. ஆனால், வந்த பின்னான ஆக்ஷ்டன் ஐடம் தான் அது. அப்படியானால், 

Prevention என்ன? 

குற்றவாளிக்கு இருக்கும் காதலி. சினிமாவில், குற்றவாளியை கன்னத்தில் அறைவதாகக் காட்டிவிட்டாலும் , நிஜத்தில் இது போன்ற பெண்களால் தான், மனித குலத்திலிருந்து முற்றிலுமாக அழிந்திருக்க வேண்டிய ஜீன்கள் பல்கிப்பெறுகி, சமயம் சாதகமாக அமைகையிலெல்லாம் தன் சுய ரூபத்தைக் காட்டிவிடுகின்றன. கொல்கட்டா பெண் மருத்துவர் கொலை வழக்கில் துவங்கி இப்படி நிறைய உதாரணம் காட்டலாம். 

தவறான ஜீன்களுக்கு இனவிருத்திக்கான வாய்ப்பை வழங்குதல். அதுதான் மிக முக்கியமான ஏரியா. முளையிலேயே கிள்ளி எரிந்துவிடுவதில் தான், நிரந்தரத் தீர்வு.

எனது நாவலான 'உங்கள் எண் என்ன? அல்லது 220284 - நாவல்' இந்தப் புள்ளியை நோக்கிப் படிப்படியாக நகர்த்தும் கட்டமைப்பு தான் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்துகொண்டு........

 



Friday, 17 January 2025

பெண்கள் பாதுகாப்பு

 பெண்கள் பாதுகாப்பு

*****************************


பெண்களுக்கெதிராக குற்றங்கள் நடக்கையிலெல்லாம் எல்லோரும் அவரவர் இடத்தில் இருந்து உச்சு கொட்டிவிட்டு அவரவர் தினசரிக்குத் திரும்பி விடுகிறோம். அந்த தினசரிகளில், காமிராவுக்கு முன் தான் பெருவாரியான நேரம் செலவு செய்கிறோம். அது ரீல்ஸாக இருக்கலாம், இன்ஸ்டாகிராம் ஆக இருக்கலாம், ஃபேஸ்புக்காக இருக்கலாம், டிக்டாக்காக இருக்கலாம்.. முனுக்கென்றால் லைவ் போய் விடுகிறோம். ஆக, நமக்கு, அலைபேசியோ, ரீல்ஸோ, இன்ஸ்டா ரீல்ஸோ, டிக்டாக்கோ எதுவுமே புதிதில்லை. நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்டதுதான்.


பெண்களுக்கெதிராக குற்றங்கள் நடக்கையிலெல்லாம் எல்லோரும் ஒன்றாகக் கூடி உச்சு கொட்டுவதில் காட்டும் ஒற்றுமையை, குற்றவாளிகளைப் போட்டுக்கொடுக்க நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் காட்டலாம் என்பது என் பரிந்துரை. இதற்குத் தேவை, இந்தப் பொது நல நோக்கமும், அதற்கென இயங்க நமது கொஞ்சமே கொஞ்சம் நேரம் தான்.




உதாரணமாக,

தமிழகத்தில் ஹாசினி கேஸ் நினைவிருக்கலாம். அப்பா, அம்மா இருவரும் கடைத்தெருவுக்குச் சென்றுவிட, விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஹாசினி. பிறகு நடந்தது தமிழகம் அறிந்ததே.

இதை அப்படியே ரிக்ரியேட் செய்யலாம். ஒரு குடியிருப்பில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், வசிக்கும் குடியிருப்பிலும், எதிர்க்குடியிருப்பிலும் நான்கைந்து குடும்பங்கள் பேசி வைத்து ஒரு திட்டம் போட்டுக்கொள்ளலாம். சிறுமிகளை விளையாட விட்டுவிட்டு பெற்றோர்கள் கடைத்தெருவுக்குச் சென்றுவிட்டதாக சீன் க்ரியேட் செய்யலாம். ஆனால், முன்பே பேசிக்கொண்டபடி, சிறுமியை மற்ற வீட்டினர் தொடர்ந்து அலைபேசி காமிரா மூலம் தொடர்ந்து கண்காணிக்கலாம். தஸ்வந்த் போல் யாரேனும் சிறுமியை அணுகினால், வீடியோ எவிடென்ஸ் தயார்.

ஒரு ஐடி நிறுவனத்திலிருந்து, பின் மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் கொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அது போன்றதொரு சூழலை, வேண்டுமென்றே ரிக்ரியேட் பண்ணலாம். ஒரு பெண்ணை, அவ்வழியே நடந்து செல்ல வைப்பதற்கு முன், முன் கூட்டியே நான்கு ஐந்து பேர் பேசி வைத்துக்கொண்டு,strategical ஆக நின்று கொள்ளலாம். சிலர் அக்கம் பக்கத்து கட்டிடங்களின் மாடியிலிருந்து அலைபேசி காமிரா வைத்து ரெக்கார்டு செய்யலாம். இதை அவ்வப்போது Randomஆக செய்யலாம். இப்படி ஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை இணையத்தில் பகிரலாம். இப்படி ஒரு awareness உண்டாகிவிட்டால், எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் ரெக்கார்டு செய்து கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் விதைக்கப்பட்டால், குற்றத்திற்கு முகாந்திரம் இல்லாமல் போய்விடும்.

ஆந்திராவில், ஸ்கூட்டியில் தனியே வந்த பெண்ணை நான்கு லாரி ஓட்டினர்கள் கடத்திப்போய் கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்தது நினைவிருக்கலாம். அது ஒரு Toll booth அருகே நடந்த, இருளில் நடந்த நிகழ்வு. அதனை அப்படியே ரிக்ரியேட் செய்யலாம். Toll booth அருகே முன்பே ஆட்களை நிற்க வைத்துவிட்டு, ஒரு பெண்ணை ஸ்கூட்டியில் அனுப்பிப் பார்க்கலாம். அதாவது ஒரு நிகழ்வைத் தொடர்ந்து ரிக்ரியேட் செய்யும் போது,எது எதார்த்தமாக நடக்கிறது , எது திட்டமிட்டு நடக்கிறது என்பதையே விளங்க வைக்க விடாமல் குற்றவாளிகளைக் குழப்புவது.

பின்னிரவுகளில் தனியே பெண்களை நடக்க விட்டு, ஆங்காங்கே ஒரு பத்து பேர் காமிராவும் கையுமாக மறைந்துகொண்டால், அப்படிச் சிக்குவதைப் படமெடுத்து இணையத்தில் பகிர்ந்தால், யார் பின்னிரவுகளில் தனியே நடக்கும் பெண்களைத் தொடரப் போகிறார்கள்? யாருக்கு வலிந்து பொறியில் விழத் தோன்றும்?

இன்ஸ்டா ரீல்ஸிலும், டிக்டாக்கிலும் வகை வகையாக தங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறோம். இப்படியும் கூட நடித்துப் பார்க்கலாம். பொறியில் ஏதாவது விழுகிறதா பார்க்கலாம். விழுந்தால், ஒரு குற்றத்தை தடுத்த கதையாகும். விழாவிட்டால், குற்றவாளியைக் குழப்பிய கதையாகும், நாம் நடிப்பு பழகிய, திறமையை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகும்.

பெண்கள் ஏன் Trap செய்யப்பட வேண்டும். பதிலுக்கு, குற்றம் செய்யத் துணிபவர்களை trap செய்யலாம் என்பதே என் பரிந்துரை.

இப்படித் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த அத்தனைக் குற்றங்களும் நடந்த விதத்தை அப்படியெ ரிக்ரியேட் செய்து பார்க்கலாம். Mock every such scneario possible. Let us all make the hidden culprits amongst us dysfunctional. இப்படி குடியிருப்பில் நான்கு பேர், தெருவுக்கு பத்து பேர், ஏரியாவுக்கு ஐம்பது பேர், என்று கிளம்பினால், குற்றம் செய்ய யாருக்குமே தைரியம் வராது.

நமக்கு இருக்க வேண்டியதெல்லாம், 'பெண்களின் பாதுகாப்பு' என்கிற பொதுப் புரிதலின் அடிப்படையில், இணைந்தியங்க , ஒன்று கூட நான்கைந்து பேர். இதற்குப் பெரிதாக செலவும் ஆகாது. அவ்வப்போது ஒரு அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ செலவழித்தால் போதும். முதல் முறை செய்யும் போது நேரமெடுப்பது, அடுத்தடுத்த முறைகளில் மிகவும் குறைய வாய்ப்பாகும். நம் எல்லோரிடமும் அலைபெசி இருக்கிறது. நிறைய நேரமும் இருக்கிறது. சினிமா மோகமும் இருக்கிறது. இந்த சமூகத்தின் மீது, குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பு மீது அக்கறை இருக்கிறது என்றால், அதை இப்படியும் நாம் வெளிப்படுத்தலாம்.

Monday, 13 January 2025

நிமிஷா ப்ரியா

நிமிஷா ப்ரியா 


இந்த உலகம் ஆண்-பெண் ஆகிய இரு பாலரால் நிறைந்தது. இதுவே ஒரு ஆண், ஏமன் சென்று ஒரு ஏமன் பெண் பிரஜை உதவியுடன் வியாபாரம் முனைந்தால், அந்த இடத்தில், அந்த ஏமன் பெண் பிரஜையால் அந்த ஆணுக்கு எந்த நெருக்கடியும் நேரப்போவதில்லை(ஆங்.. உங்களுக்குத் தெரியுமா? அதுல் சுபாஷ்ன்னு ஒருத்தர்... என்று துவங்கி யாரேனும் இடைமறிக்கலாம் ..பெரும்பான்மை இப்படி இல்லை என்று தான் சொல்கிறேன்). ஆனால், இதே சூழலை அப்படியே மாற்றிப் பார்க்கலாம். ஒரு பெண். உதவி கேட்டு வருகிறார். ஆண் மனம் அதை, அந்தப் பெண்ணை நெருக்கடிக்கு உள்ளாக்க ஒரு வாய்ப்பாகக் கருதத் துவங்குகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை, அந்தப் பெண்ணிடம் 'யோக்கிய' வேடம் தரித்து நம்பிக்கை பெறுகிறது. ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், சுய ரூபத்தைக் காட்டுகிறது.





நிமிஷா ப்ரியாவின் இடத்தில் நிமிஷா ப்ரியா மட்டும் தான் என்று நம்மில் யாரும் நினைக்க முடியாது. 


திருமணங்கள், வியாபாரம், கல்விக்கூடங்கள், சினிமா என்று ஒரு சமூக அரங்கில் இருபாலர் கூடும் எல்லா இடங்களிலும் இந்த 'trapping' நடக்கிறது அல்லது நடத்திப் பார்க்க எல்லா ஓட்டைகளையும் தாங்கித்தான் இந்த சமூகக் கட்டமைப்பு மிக மிக கவனமாக வடிவமைக்கப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு, அவளாக முன்னேறி வர, அடுத்தகட்டம் நகர, சுயமாக இயங்க, இந்தச் சமூகம் என்ன வைத்திருக்கிறது? இருப்பதெல்லாமே சூழ்ச்சி வலை தான். 


ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண், தன் குடும்ப மேன்மைக்காக ஒரு வேலைக்குப் போகலாம் என்று பரிந்துரை வைத்தால், அதில் முதல் சிக்கல், எப்படி அலுவலகம் செல்வது என்பதுதான்? பேருந்து, ஆட்டோ ரயில் என்று எல்லாவற்றிலும் தடவல் மன்னர்கள் ராஜ்ஜியம். அதையெல்லாம் தாண்டி அலுவலகம் சென்றால், அங்கே சக ஊழியர்கள், மேனேஜர் என்று அங்கும் அதே கதை. பால்காரனின் துவங்கி, காஸ்காரன், தபால்காரன், பெட்டிக்கடைக் காரன், வாடகை வீட்டின் ஓனர், குழாய் ரிப்பேர் செய்ய வருபவன் என்று எல்லோருக்குமே ஒரே ஒரு நோக்கம் தான். 


என்னதான் தீர்வு?  நிமிஷா ப்ரியா போல் பெண்கள் தொழில் துவங்க, பெண் ஏமன் பிரஜைகள் இருத்தலாம் என்றா? அப்படியானால், என்ன சொல்கிறோம்? இருபாலார் படிக்கும் கல்லூரிகளில் ஆண்களுக்கென்று ஒரு பேருந்தும், பெண்களுக்கென்று ஒரு பேருந்தும் வைப்பதற்கும் இந்தத் தீர்வுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? Why can't people just behave?


என்ன தீர்வு வைத்திருக்கிறோம். நிமிஷா ப்ரியா முதன் முதலாக நெருக்கடிக்கு உள்ளானபோதே, பொதுவில் வந்து புகார் தந்திருக்கலாம் என்றா? அப்படிப் புகார் செய்தால், முதலில் அவர் பெயர் தான் character assassinate செய்யப்படும். இல்லையா? யாரிடம் புகார் தருவது? ஒரு ஆணிடம் தானே? அங்கேயும், அவர் manipulate செய்யப்பட்டால்? ஆக, எதையெல்லாம் 'தீர்வு' என்று முன்வைக்க எண்ணுகிறோமோ அது எல்லாமுமே இன்னொரு கோணத்தில் இன்னொரு 'trap' தான் இல்லையா?


அமெரிக்காவில், சமூகத்தில் நல்லவன் போர்வையில் மறைந்திருக்கும் pedophile களை வெளிப்படுத்த ஒரு தந்திரம் பயன்படுத்துவார்கள். ஒரு பதினான்கு வயதுப்பெண்ணை ஒரு பொது இடத்தில் நிறுத்திவிட்டு, சுற்றிலும் காமிராக்களோடு நான்கைந்து பேர் தொலைவில் மறைந்துகொள்வார்கள். pedophileகள் மெதுவாக அந்தப் பெண்ணை அண்டி பேச்சுக் கொடுத்து, விருப்பத்தை வெளிப்படுத்துவதை, அந்தப் பெண் கழுத்தில் இருக்கும்  மிகச்சிறிய காமிரா மூலம் ரிக்கார்டு செய்துவிட்டு போலீஸுக்குத் தகவல் சொல்லிவிடுவார்கள். இதை ஒரு நல்ல தந்திரமாகப் பார்க்கிறேன். 


இப்படி யோசித்துப் பார்க்கலாம். ஒரு போலீஸ் பெண்ணை வைத்தே ஏமன் நாட்டில் தொழில் துவங்க உதவி கேட்பது போல் கேட்க வைத்து, ஒப்பந்தமிட்ட பிறகு சம்பந்தபட்ட நபர் வாலாட்டினால், அப்படியே வீடியோ, ஆடியோ எவிடென்ஸோடு போலீஸில் போட்டுக்கொடுக்கலாம். அதே போல், சிறு வயதுப் பெண் பிள்ளைகள் வீட்டில் தனியாக இருப்பது போல் செட்டப் செய்துவிட்டு, அக்கம் பக்கத்தில் எவன் வாலாட்ட தைரியப்படுகிறான் என்பதை ஆடியோ, வீடியோ எவிடென்ஸோடு போட்டுக்கொடுக்கலாம்.


அமெரிக்காவில் இந்தியாவுக்கு செல்ல நேர்கையில், அப்பா அம்மாக்கள் பதின் பருவத்தில் உள்ள தங்கள் பிள்ளைகளுக்கென தாங்கள் பயணிக்கும் அதே விமானத்தில் வேறொரு மூலையில் சீட் பதிந்து தந்துவிடுவார்கள். உண்மையில் , அதே விமானத்தில் யாரோ போல் பெற்றவர்களும் பயணிப்பார்கள். இது அந்தப் பிள்ளைகளுக்கு ஒரு ப்ராக்டீஸ் தான். தனியாகப் பயணிக்கும் பதின் பருவப் பிள்ளைகள் என்று யாரேனும் நெருங்கினால் வசமாக மாட்டிக்கொள்ள வேண்டி வரும். 

தப்பு செய்ய பயப்பட வைக்கணும். தப்பு செய்ய இருக்கிற நேரம், வாய்ப்பை விட, தன்னை யாரோ கண்காணிக்கிறார்களோன்னு குற்றவாளியை பல மடங்கு நேரம் யோசிக்க விடணும், சுத்தல்ல விடணும்..அதுலயே அவனை சோர்ந்து போக வைக்கணும்.. இது வொர்க் அவுட் ஆகும்ன்னு தான் தோணுது..எல்லோரும் அவங்கவங்க capacity க்கு இதை செய்ய முடியும்ங்குறதுதான் இதுல இருக்குற கன்வீனியன்ஸ். நம்மளோட leisureல இதை பண்லாம்.. நமக்கு பெரிய செலாவணி இல்லை.. ஆனால் தப்பு செய்யணும்ன்னு நினைக்கிற கயவர்களுக்கு, இது மிகப்பெரிய பிரச்சனையாகும்..


ஆடியோ, வீடியோ எடுப்பதற்க்கான கருவிகள் கூட சல்லிசான விலையில் கிடைக்கின்றன. யோசித்துப் பார்த்தால் செய்ய முடியும் என்று தான் தோன்றுகிறது. அப்படியொன்று செய்யக் கடினமான வேலை போல் தோன்றவில்லை. என்னைக்கேட்டால், இதை ஆங்காங்கே செய்யத்துவங்கலாம். என்ன செய்தாலும் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற நிலை தான் பற்பல குற்றங்களுக்கு அஸ்திவாரமாகிறது. அதை, தூக்கிப்போட்டு உடைத்தாலே போதும்.

Sunday, 12 January 2025

கேள்வி - பதில்

கேள்வி: உங்கள் "வாவ் சிக்னல்" நூலுக்கு ஏன் இணையத்தில் விமர்சனமே இல்லை.

பதில்:

இந்தக் கேள்வியை பலரிடமிருந்து எதிர்கொண்டிருக்கிறேன். எல்லோருக்குமாக, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பதில் சொல்கிறேன்.

1. பள்ளிப் பிராயத்தில் அமையும் நண்பர்களுடனான நட்பு தான் பலமாக இருக்கும் என்பார்கள். பள்ளி, கல்லூரிகளில் மிதமிஞ்சிய Bullying ஐ எதிர்கொண்டிருக்கிறேன். பல காரணங்கள் இருந்திருக்கின்றன.

1.அ.பள்ளிப்பிராயத்தில் உடலளவில் பலவீனமாக இருந்தது ஒரு காரணமானது.

  ஆ.படிக்கும் மாணவனாக இருந்தது மற்றொரு காரணம். (இது எப்படி காரணமாகும் என்று நீங்கள் கேட்கலாம். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் படிக்காமல், நீங்கள் மட்டும் படித்தால், இது காரணமாகும் தான்)

  இ. கல்லூரிக் காலங்களில் என் உடன் படித்த பெரும்பான்மையோர் மெட்ரிக்-சிபிஎஸ்சி பள்ளிகளிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து வந்த என்னைப் போன்றவர்கள் இளப்பமாகத் தெரிந்ததில் ஆச்சர்யமொன்றும் இல்லை. 

  ஈ. பல எழுத்தாளர்களுக்கு பள்ளி கல்லூரியிடங்களில் கிடைக்கும் நண்பர்களோடு, உறவுச்சொந்தங்களில் கூட வாசகர்கள் அமைவார்கள். எனக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை. ஆக, எனக்கு, பள்ளி, கல்லூரி, உறவுச்சொந்தம் என்று எந்த இடத்திலும் எவரும் இல்லை. சுருங்கச்சொன்னால், வரண்ட பாலையில் சுடு மணலுக்கு நடுவே தன்முனைப்போடு ஒரு சின்ன செடி முளைத்து மேலெழும்பி வரும். அதுதான் நான்.

2. பணி இடங்களில் நட்பு என்று பார்த்தால், 2008 துவங்கி தற்போது வரையிலான 16 வருடங்களில் சுமார் 13 வருடங்கள் இங்கிலாந்து, ஹாங்காங், அமெரிக்கா ஆகிய அயல் நாடுகளில் கழித்திருக்கிறேன். என் நண்பர்களாக பெரும்பாலும் குஜராத்திகளும், பீகாரிக்களும், படேல்களுமாகத்தான் இருந்திருக்கிறார்கள். அவர்கள் என்னை இந்திக்கு இழுத்தது தான் அதிகம். அதையெல்லாம் மீறி நான் தமிழில் இயங்குவதே தமிழ்த் தீவிரம் எனலாம். ஐடி நிறுவனங்களில், தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டவர்களை என் வாழ்க்கைப் பாதையில் நான் கடக்கவில்லை என்பது மற்றொரு துரதிருஷ்டம்.

3. 13 ஆண்டுகள் வெளி நாடுகளில் வசிக்க நேர்வதால், தமிழ் நூல்கள் வாசிப்பு என்பது சொற்பம் தான். காரணம், வேறென்ன, 12000 மைல் தூரம் தான். தவிரவும், வாசிக்க நேரத்தையும் தர மறுக்கிறது ஐ.டி. பணிகளும், மொழிபெயர்ப்புப் பணிகளும்.  மற்ற தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் எழுத்துக்களை சிலாகிக்கத் தோன்றும். ஆனால் எதையும் நான் உளப்பூர்வமாக உணராமல், அதில் ஒரு ஒருமைத்தன்மையை உணராமல், பெயருக்கு சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதுகாறும் அப்படிச் சிலாகிக்க, எனக்குத் தமிழ்த் திரைப்படங்களே வாய்த்திருக்கின்றன. அதில் எவ்வித தயக்கமும் இன்றி எனக்குப் பிடித்த திரைப்படங்களை சிலாகிக்கத் தவறியதில்லை நான்.

4. எல்லாவற்றிற்கும் மேல், நான் எழுதுவது அறிவியல் புனைவுகள். இந்த இலக்கிய வகைமைக்கு வாசகர்கள் பெரிதாக இருக்க மாட்டார்கள். இருக்கும் சிலரும், சிறுகதையாக இணையத்தில் வெளியாகிவிடும்போதே படித்துவிட்டு உள்பெட்டியில் பின்னூட்டம் சொல்லிவிடுவார்கள். அதனை நான் ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்துப் போடுவது வழக்கம். பல சமயங்களில் அதனையே விமர்சனமாக ஏற்றும் இருக்கிறேன்.

எத்தனையோ முறை இது குறித்து யோசித்தும், நண்பர்களிடத்தே விவாதித்தும் பார்த்ததில் கிடைத்தது இதுதான். இன்றைக்கு எழுத்துலகில், ஓரளவு நல்ல நட்பு வட்டத்தை அடைய பரிச்சயம், அவர்களுடனான நேர்முக அறிமுகம், பொதுவான கருத்துக்கள், பொதுவான நண்பர்கள், பொதுவான கருத்தியல், 'ongoing trendல் இவரும் இருக்கிறார்' என்று உணர்தல் ஆகியன தேவைப்படுகிறது. இவை இல்லாமல் ஒரு நெருக்கம் வாய்ப்பதில்லை. அயல்நாட்டு வாசம் இவை எதையுமே சாத்தியப்படுத்துவதில்லை. இதற்கு நான் மற்ற வாசகர்களையோ, எழுத்தாளர்களையோ குறை சொல்வதற்கில்லை. அன்மையோ, நேர்முக அறிமுகமோ, பொது நட்புகளோ இல்லாததால், பெரும்பாலும் அவர்களுக்கும் என் குறித்து எவ்வித ஐடியாவும் ஏற்படாமல் தான் இருக்கும். அவர்கள் தங்கள் வழமைகளில் என்னைத் தவற விடத்தான் வாய்ப்பதிகம். அந்த நிதர்சனத்தை நான் உணர்ந்தே இருக்கிறேன். அதனாலும் கூட என் விஷயத்தில் அவர்கள் எட்ட நிற்பதையே விரும்பலாம்.

இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். நேருக்கு நேர் முகம் பார்த்து அமையும் அறிமுகம் எனக்கு work out ஆனதே இல்லை. ஆக்கம்  தொடர்பான மின்னஞ்சல் அறிமுகங்கள், நன்றாக work out ஆகியிருக்கின்றன. ஆதலால், 12000 தொலைவில் அமர்ந்திருப்பது எந்த வகையிலும் ஒரு நட்பை உருவாக்கிக்கொள்ள எனக்கு இடையூறாக இருந்ததில்லை. ஆனால், எதிர்தரப்பும் அப்படி நினைக்க வேண்டுமே? 'என்னடா! இவனை முகம் பார்த்து சந்திக்கவே இல்லையே.. சந்திக்க  நேர்ந்தால் பார்த்துக்கொள்ளலாம்' என்று அவர்கள் நினைக்கலாம். இல்லையா? 

இந்த இடத்தில், "அதெப்படி பாஸ், அயல் நாட்டில் இருந்துகொண்டு எழுதும் எழுத்தாளர்களே இல்லையா?" என்று யாரேனும் கேள்வி எழுப்பலாம். இங்கே தான் நான் எழுதுவது அறிவியல் புனைவுகள் என்பது பொருட்டாகிறது. சமூக நாவலோ, சிறார் கதைகளோ, அரசியல் கதைகளம் கொண்ட எழுத்தோ, காதல், விளையாட்டு, சினிமா, நிலப்பரப்பு அல்லது விவசாயம் சார்ந்த நூல்களில் வாசகன்-எழுத்தாளன், எழுத்தாளன்-எழுத்தாளன் இணைப்பு எளிதில் சாத்தியப்பட்டு நான் பார்த்திருக்கிறேன்.  அறிவியல் எழுத்து அப்படி அல்ல. இல்லையா? தவிரவும், ஆன்மீகத்தில் எப்படி ஈடுபாடு இல்லையோ அதே போல அரசியல் குறித்த விவாதங்களிலும்.

என்னாலும் பிறர் ஆக்கங்களைத் தொடர்ந்து சென்று ஒரு உரையாடலைத் துவங்க முடிந்ததில்லை. மோசமான அனுபவங்களைக் காரணமாகச் சொல்லலாம். 

ஒருவரை 2020ல், அவரின் எண் வாங்கி, இங்கிருந்து அழைத்துப் பேசினேன். பேச்சுவாக்கில் ஆங்கிலத்தில் எழுதுவதைத் தெரிந்து கொண்ட அவர், தனது ஆக்கமொன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச்சொன்னார். இயல்பிலேயே அடுத்தவர் ஆக்கங்களை மொழிபெயர்ப்பதில்லை. காரணம், அவர்கள் எதிர்பார்க்கும் தரம் என்ன என்று நமக்கு எப்படித் தெரியும்? நம் மொழிபெயர்ப்பு அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால்? ஆதலால், தவிர்த்தேன். அதன் பிறகு அவர் பேசவே இல்லை. இது, உரையாடலைத் துண்டிக்க  ஒரு காரணமா என்று எத்தனை யோசித்தும் விளங்கவில்லை. பிறகு வேறொருவருடன் ஒரு உரையாடல் சாத்தியப்பட்டது. தொடர்ந்து, அவர் கடன் கேட்க, கடன் அன்பை முறிக்கும் என்று நான் மறுக்க, அதுவும் துண்டிக்கப்பட்டது. கூட்டிக்கழித்து யோசித்துப் பார்த்தால், தங்களுக்கு உள்ளூரிலேயே நட்புகள் அதிகம் இருப்பதால், நட்பு நாடி வருபவனைக் கண்டமேனிக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்களோ என்று எனக்கும் தோன்றாமல் இல்லைதான். நட்புக்கான என்னவேண்டுமானாலும் செய்யலாம். நட்பென்ற போர்வையில், காரியம் சாதிக்க நினைப்பவர்களைவிட்டு விலகுவதுதானே சரியாக இருக்க முடியும்? ஒவ்வொருமுறை இப்படி மோசமான அனுபவங்கள்  நேரும்போதும், மீண்டும் புதிய நட்புகளுக்காக முயற்சி எடுப்பதில் தானாகவே ஒரு தயக்கம் வந்துவிடுகிறது.

இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் மோசமான Bullying களால் அலைகழிந்திருக்கிறேன். பல நேரம், தனிமையை, படிப்பாலும், ஜிம்மாலும் விரட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். மட்டுமல்லாமல், என்னை யாரேனும் ஏளனமாகப் பேசினாலோ, பரிகாசம் செய்தாலோ, தனிமையை நாடுவது மட்டும் தான் பல சமயங்களில் பழக நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன். எதிர்த்துப் பேசவோ, வாதிடவோ சிறுவயதிலிருந்தே பழகவில்லை. இன்றைக்கு இருக்கும் தலைமுறைகள் இணையத்தில் பேசிக்கொள்வதை, பரிமாறிக்கொள்வதைப் பார்த்தால், எனக்கு அவ்வகையான சம்பாஷனைகள் மேற்கொள்வதில் பயிற்சியின்மை இருக்கிறதோ என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது. இது போன்ற விடயங்களிலெல்லாம், நான் 2000 kid போல் இயங்க வேண்டும் என்பது புரிகிறது. ஆனால், நான் 1980ல் பிறந்தவன்.

ஆதலால், எனக்கு ஒருவருடன் பழக, நெருக்கமாக உணர சற்று அல்ல ரொம்பவே நேரமெடுக்கும். ஆக்கங்கள் வழி, அவற்றின் அடிப்படையிலான விவாதங்கள் வழி, மெல்ல மெல்ல இறுகிய நட்புகளே இப்போதும் ஆத்மார்த்தமான நட்புகளாக இருக்கிறார்கள். தொடர்கிறார்கள். மற்றவர்களுக்கு, நான் outdated ஆகவோ, wierd ஆகவோ, அல்லது cringe ஆகவோ தெரிய வாய்ப்பிருக்கிறது என்பதால் அது போன்ற சூழல்களை நானே தவிர்த்துவிடுவது வழக்கம். மற்றவர்களின் பார்வையில், இது, நானாக விலகிச்செல்வதாகப் பார்வைக்குத் தெரியலாம். 'அவரே விலகிச் செல்கையில், நாம் ஏன் பொருட்படுத்தவேண்டும்?' என்று அவர்களும் நினைக்கத்தான் வாய்ப்பிருக்கிறது. இந்த எல்லா புரிதல் பிரச்சனைகளையும் தீர்க்க 12000 மைல் இடைவெளி, உதவுவதில்லை. மாறாக மென்மேலும் சிக்கலாக்குகிறது.

இந்தக் கேள்விக்கு விரிவாக பதிலளித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இது போன்ற் காரணிகளால்,  நான் என் எதிர்பார்ப்புகளை மிகவும் குறைவாகவே வைத்திருக்கிறேன்.

கடந்த கால, கசப்பான bullying, ghosting,gaslighting அனுபவங்களால் என் மன அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய செயல்பாடுகளைக் கண்டறிந்து, அந்தப் பக்கமே செல்வதில்லை. இதுவும் கூட, நட்பு வட்டத்தை தன் பங்கிற்குக் காலியாக்குகிறது தான். என்ன செய்வது? என் அனுபவம், கடந்த காலம் அப்படி. என்றேனும் ஒரு நாள் எல்லாமும் மாறும், வாழ்க்கை நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு வந்து நிற்கும் என்ற நம்பிக்கையில் மட்டுமே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

இத்தனையையும் மீறி,  நான் இதுகாறும் 14 நூல்கள் எழுதியிருக்கிறேன், அதில் ஒன்று, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறுகதை நூல் விருது பெற்றிருக்கிறது என்றால், அதற்கு "இறைவனின் அருள்" மட்டுமே ஒரே ஒரு காரணம் என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது?.

பிக் பாஸில் நேற்று ஒரு நல்ல பஞ்சாயத்து.

 பிக் பாஸில் நேற்று ஒரு நல்ல பஞ்சாயத்து.


பார்வையாளர்களிலிருந்து ஒருவர், PR டீமை வைத்து வெல்வது சரியா என்று கேட்டார். PR டீம் மட்டும் போதாது என்றார் விஜய் சேதுபதி. இந்த இடத்தில் சற்று குழப்பம் வருகிறது. உண்மையில் PR டீம் வைத்து சில நேரங்களில் potential போட்டியாளர்களைப் போட்டியிலிருந்து வெளியேற்றுவது கடந்த காலங்களில் நடந்திருக்கிறது. அதைத்தான் குறிப்பிட்டு, பார்வையாளர்களிலிருந்து எழுந்தவர் கேட்டிருக்கிறார். 


கிரிக்கெட்டை எடுத்துக்கொள்வோம். சச்சினை துவக்கத்திலேயே PR டீம் வைத்து தூக்கிவிட்டால் என்னாகியிருக்கும்? சச்சின் , மீண்டும் மீண்டும் முயன்று தனக்கான இடத்தைப் பிடித்திருப்பாரா? வெளிப்படுத்த வாய்ப்பே வழங்கப்படாமல் போனால்? அந்த இடைப்பட்ட இடைவெளியில், அவர் தோல்வியைத் தாங்க முடியாமல், மது, புகை என்று தன்னைத்தானே அழித்துக்கொண்டால்? ஆம். இந்தப் புள்ளியில் அவர் அதற்கெல்லாம் இடமளிக்காமல் இருக்க வேண்டும். அப்படியானால், அதற்கெல்லாம் இடமளிக்காதவர்கள் நம்மிடையே இல்லையா? இருக்கிறார்களே? அவர்கள் ஏன் மேலே வர முடியவில்லை? 





இதற்கு பல விளக்கங்களைத் தரமுடியும்.


1. விதி என்று விளக்கலாம். முதலிடம் ஒருவருக்குத்தான் என்னும் போது, அந்த இடம் யாருக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ, அவர் விதியால் தேர்வுச் செய்யப்படுகிறார், மற்றவர்களை இந்த பிரபஞ்ச இயக்கம் கலைத்துப் போட்டுவிடுகிறது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இல்லையா?


2. சூழ்ச்சி என்று விளக்கலாம். இதற்கு ஒரு குழு தேவைப்படுகிறது. ஆனால், அக்குழுவுக்கும் consistency ஒரு பிரச்சனையாக இருக்கும். என்னதான் குழுவாகக் கூடினாலும், காலத்தின் வழி, குழுவின் சக்தியும் சிதிலமடையும். அப்படி சிதிலமடைகையில், சச்சின் தொடர்ந்து தளராமல், செயலாற்றினால், வெற்றி நிச்சயம். இல்லையா? சிலருக்குத் தாமதமாகக் கிடைக்கும் வெற்றியை இப்படி புரிந்துகொள்ள முடியும். இதில் ஒரு விதிவிலக்கு உண்டு. தனி நபர் திறமைகளை இவ்விதம் ஒரு குழு கட்டுப்படுத்த முடியாது. உதாரணமாக, கிரிக்கெட் என்ற விளையாட்டிற்கு பல்லாயிரம் பேரின்  சேர்க்கை தேவை. பாடல் பாடுவது என்பது தனி நபர் திறனாகிவிடுகிறது. அதற்கு ஒரு மைக், ஒரு யூட்யூப் சானல் போதும் என்றாகிவிடுகிறது. இல்லையா?


3. துரதிருஷ்டம் என்று விளக்கலாம். வெற்றிக்கான காரணங்கள் தொடர்ந்து அமையாமல், கலைந்து போய்விடுவது. ஆனால், இதற்கும் குழு, பல காரணங்களுள் ஒன்றாகிறது. குழிவின் நோக்கமே, தங்களது கூட்டியக்கத்தை, 'விதியாக' தோன்ற வைப்பதுதானே?



ஆக, எனக்கும் விஜய் சேதுபதியின் விளக்கத்தில் திருப்தி இல்லை. ஒருக்கால், கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திற்குள் அவரது வார்த்தைகள் வழி, அர்த்தங்கள் அப்படி வெளிப்பட்டிருக்கலாம் அல்லது அவரது பதிலை, மைக் மூலம் வேறு யாரேனும் கன்ட்ரோல் செய்திருக்கலாம். 


ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டுமானால், ஆம். இது எல்லா இடங்களிலும் நடக்கிறது, எல்லா துறைகளிலும் நடக்கிறது. இன்றைக்கு ட்ரெண்ட் புத்தகக் கண்காட்சி. அதை வைத்தே விளக்க வேண்டுமானால், இப்படிச் சொல்லலாம். நீங்கள் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றீர்களானால் அங்கே லட்சோபலட்சம் புத்தகங்கள் கிடைக்கின்றன. அவற்றில் சரிக்குச் சமமான புத்தகங்கள், எழுதவே தெரியாதவர்களின் புத்தகங்கள் என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும். ஆனால், அது உண்மை தான். எழுத்துலகில் இயங்கும் பலருக்கு இது தெரியும். எல்லோருக்கும் தெரிந்து தான் இது நடக்கிறது.


இந்த நிலையில், புதிதாகத் திறமையாக எழுத வருபவருக்கு இருக்கும் சிக்கல், இப்படிப் போலிகள் உருவாக்கும் சந்தையில் தாக்குப்பிடிக்க, நிலைத்து நிற்க  நேரமெடுப்பது தான். போலிகளின் தந்திரங்கள் அனேகம். எனக்குத் தெரிந்ததை இங்கே பகிர்கிறேன்.


1. ஏற்கனவே பிரபலமாக இருக்கும் எழுத்தாளரின் அறிமுகத்தோடு வந்தால் வேலை சுலபம் என்று வருபவர்கள் இருக்கிறார்கள். அதற்கு, அவர் சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் வாசகர் வட்டத்தில் பங்கேற்க வேண்டும். 'விசுவாசத்தைக்' காட்ட வேண்டும். இதில் mutual benefit இருப்பதாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள். (பி.கு.: இப்படி வரும் எல்லோரும் இந்த ரகம் என்று நான் சொல்லவில்லை.)


2. ஏற்கனவே பிரபலமாக இருக்கும் எழுத்தாளரின் ஆக்கத்தை மொழிபெயர்ப்பது. (பி.கு.: மொழிபெயர்ப்பு முயற்சிகள் எல்லாமும் இப்படி என்று சொல்லவில்லை.)


3. ஒரு குழுவாக இயங்குவது. குழுவில் உள்ள பெரும்பாலானோர் பதிப்புத்துறையில் இருப்பார்கள். இவர்கள் குறித்து இவர்களே உயர்வாகப் பேசிக்கொள்வார்கள். இதுவும் ஒரு லாபி தான். தமிழில், இப்படிப் பல குழுக்கள் இயங்குகிறது. இதில் பங்குபெற வேண்டுமானால், (அந்தந்த நாடுகளில்) உள் நாட்டில் இருக்க வேண்டும். குழுவுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயனளிக்கக்கூடிய இடத்தில் இருக்க வேண்டும். மிகமுக்கியமாக, தங்கள் கூட்டு நோக்கத்திற்கு பயனளிக்காத புதியவர்களை ஒதுக்குவதிலும், அவர்கள் மேல் கவனம் விழாமல் தடுப்பதில் முனைப்பாய் இணைந்து இயங்க வேண்டும்.


4. ஒரு வாசகக் குழுவின் ஆசீர்வாதம் இயல்பாகவே அமையப்பெறுவது. இவர்களும் தங்கள் கூட்டு நோக்கத்திற்கு பயனளிக்காத புதியவர்களை ஒதுக்குவதிலும், அவர்கள் மேல் கவனம் விழாமல் தடுப்பதில் முனைப்பாய் இயங்குவார்கள்.


5. சமூகத்தின் அதிகாரப் பின்னணியிலிருந்து வருவது.


6. இன்னொரு தந்திரம் இருக்கிறது. அதைச் சொன்னால், பிரச்சனையாகிவிடும் என்பதால் தவிர்க்கிறேன்.


7. ஒரு குழுவாக இயங்குவது. எழுதத் தெரியாதவர்களேல்லாம் ஒன்று கூடி இவர்களுக்கு இவர்களே முடிசூடிக்கொள்வார்கள். இவ்விடங்களில் அயல் நாட்டுப் பணம் நன்றாக வேலை செய்யும்.இவர்களும் தங்கள் கூட்டு நோக்கத்திற்கு பயனளிக்காத புதியவர்களை ஒதுக்குவதிலும், அவர்கள் மேல் கவனம் விழாமல் தடுப்பதில் முனைப்பாய் இயங்குவார்கள்.


சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், மேற்சொன்ன எதிலுமே இல்லாதவர்களின் நிலை பல மடங்கு கஷ்டம் தான். சவால்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகம். ஆனாலும் வேறு வழியில்லை. எதிர்த்துப் போராடித்தான் ஆகவேண்டும்.  


காலத்தின் போக்கில், கவனச்சிதறல் இன்றி, தொடர்ந்து தன் உழைப்பை நல்கும் ஒரு உண்மையான திறமைசாலியை, இந்த எதாலும் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. ஒருக்கால், விஜய் சேதுபது, இதைத்தான் குறிப்பிட்டிருந்தால், சந்தோஷம் தான். 


Saturday, 11 January 2025

நூல் விமர்சனப்போட்டி - 2025

 புத்தகக் கண்காட்சிகள் வந்தாலே பெஸ்ட் செல்லர்ஸ் என்றொரு பட்டியல் வெளியாகும். திரும்பும் பக்கமெல்லாம், அந்த நூல் விற்பதாக இணையமே அதகளப்படும். அதையெல்லாம் பார்த்தால், அந்த நூல் போலவே நாமும் ஒரு பெஸ்ட் செல்லர் நூல் எழுதவேண்டும் என்றொரு எண்ணம் வரும். அந்த எண்ணத்தில் எதை எதையோ செய்து பார்த்துவிட்டு, கடைசியில், நமக்கு என்ன வருகிறதோ அதையே எழுதி வைப்போம். 

இதை எதற்கு சொல்கிறேன் என்றால், இப்படியாக நான் எழுதியது வாவ் சிக்னல், மரபணுக்கள், தீசஸின் கப்பல் தான்..

என்ன செய்வது? நமக்கென்ன வருகிறதோ அதைத்தானே செய்ய முடியும்?

இதையெல்லாம் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால்......ஹ்ம்ம்ம்...விமர்சனப் போட்டி வைத்திருக்கிறோம்.. 

எழுதியது அறிவியல் புனைவு.. அதை யார் சார் படிப்பது என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.. அதனால் தான், நல்ல ரெஸ்பான்ஸ் வந்தால் தொடர்வது, இல்லையெனில், போட்டியை ரத்து செய்துவிடுவது..இதுதான் ஐடியா... என்ன செய்வது..

எப்படியாவது கஷ்டப்பட்டு பங்குபெற்றுவிடுமாறு நண்பர்களை அழைக்கிறேன்...

https://padaippu.com/announcement/48





Friday, 3 January 2025

முனைவர், தமிழ் ஆய்வாளர் க. திலகவதி அவர்கள் அடியேனைப் பற்றி



முனைவர், தமிழ் ஆய்வாளர் க. திலகவதி அவர்களின் உரை:

https://www.youtube.com/watch?v=RV3sZgEwJFQ


கேள்வி: 
வடஅமெரிக்க வரவேற்பறை நேர்காணலில் முனைவர், தமிழ் ஆய்வாளர் க. திலகவதி, அவர்கள் 'மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் வட அமெரிக்காவில் தமிழ் எந்தளவிற்கு வளர்ந்திருக்கிறது?' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் உங்களைப் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். அவரது வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், "அறிவியல் எழுத்தாளர் சுஜாதா போல இங்கு ஒருத்தர் ராம்பிரசாத் என்பவர் அறிவியல் புனைவு எழுத்தாளராக  இக்கால இலக்கியத்தில் முத்திரை பதித்து வருகிறார். அவருடைய எழுத்தை வாசிக்கின்ற பொழுது 'ஆகா இன்னொரு சுஜாதா நமக்குக் கிடைத்துவிட்டார்' என்று என் மனம் மகிழ்ந்தது. அவரை எனக்குத் தெரியாது. ஆனால், அவரைப் பற்றி நான் வாசித்தபோது  சுஜாதா போல அமெரிக்காவில் ஒரு அறிவியல் புனைவெழுத்தாளர் உருவாகியிருக்கிறார் என்று என் மனது சந்தோசப்பட்டது." என்று குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து உங்கள் பார்வை என்ன?

பதில்: 

தமிழ் இலக்கியத்தினுள் நுழைய பெரும்பான்மையோர்க்கு நுழைவாயிலாக இருப்பது வணிக எழுத்துக்கள் தாம் என்பதே நிதர்சனம். பள்ளிக்காலங்களில் அம்புலிமாமா, சிறுவர் மலர் என்று இருந்த எனது வாசிப்பு, பொறியியல் முடித்து, கணினித்துறையில் வேலை என்று விரிந்த பிறகு சுஜாதா, பாலகுமாரன் வழியாக இலக்கிய வெளிக்குள் நுழைந்தது எனலாம். 

எத்துறையிலும், அனுபவஸ்தர்களை வழித்தடங்களாகக் கொள்வது வழக்கமே. சுஜாதா ஒரு பொறியியல் வல்லுனராகப் பணியில் இருந்துகொண்டே, ஒரு குடும்பத்தலைவனுக்கான சகல கடமைகளையும் ஆற்றிக்கொண்டே தான், தான் எழுதியதை எழுதினார். சுஜாதா மீதான எனது ஏற்புக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, பொதுவாழ்வை வெற்றிகரமாக நடத்திக்கொண்டே இலக்கியத்துறையிலும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக அவர் இயங்கியதுதான் என்றால் அது மிகையில்லை.

மதிப்பிற்குரிய தமிழ் ஆய்வாளர், முனைவர் க.திலகவதி அவர்கள் ஒப்பிட்டதைப் போலவே இணைய நண்பர்கள் பலரும் என் எழுத்தை, எழுத்தாளர் சுஜாதாவினுடையதுடன் ஒப்பிட்டிருக்கிறார்கள். ஒப்பிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். ஒரு புனைவை எழுதுவதற்கான இலக்கணங்களான முதல் பத்தியிலேயே துவங்கிவிடுவது, சிறுகதையின் வடிவத்தை வளைப்பது,  எதிர்பாராத திருப்பத்தைத் தருவது போன்ற பண்புகளை வெகு துல்லியமாக எழுதியவர் சுஜாதா. புனைவுகளிலேயே அரிதாக முயலப்படும் புனைவு வகையான அறிவியல் புனைவுகளில் அவர் இதையெல்லாம் செய்து பார்த்து அசத்தினார். அதே பண்புகள் எனது ஆக்கங்களிலும் வெளிப்படுவதால், அதையெல்லாம் கூட்டாக உணர்த்த, அவர் பெயரையே வாசகர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றே நான் புரிந்துகொள்கிறேன். அந்த வகையில்,  எழுத்தாளர் சுஜாதாவின் வழியில் அடுத்ததாக நான் பார்க்கப்படுவதில் மகிழ்ச்சியே. 

நான் பல காலமாக எனக்கு நெருங்கிய நண்பர்களிடம் அவ்வப்போது பகிர்வதையே முனைவர் க.திலகவதி அவர்களும் குறிப்பிட்டது ஆச்சர்யமான நிகழ்வு. 2014 முதல் நான் வசிப்பது அமெரிக்கா. அறிவியல் புனைவுகள் பெருமளவு நான் எழுதத்துவங்கியது அமெரிக்காவிலிருந்துதான்.

எழுதத் துவங்கியபோது எதை எழுதுவது என்பது குறித்தான என் அனுமானம் இப்படியாக இருந்தது. கடல், கடல் சார்ந்த இடத்தில் வசிக்க நேரும் எழுத்தாளர், அம்மக்களின் வாழ்வைக் கதைகளாக்குவார். போர்ச் சூழலில் மக்கள் பட்ட கஷ்டங்களை அருகில் இருந்து பார்த்த எழுத்தாளர் அம்மக்களின் வலிகளைக் கதைகளாக்குவார். தோல் தொழிற்சாலையில் பணி செய்பவர்களை உறவினர்களாகக் கொண்ட எழுத்தாளர், அம்மக்களின் வாழ்வைக் கதைகளாக்குவார். இதே போல் மருத்துவம், வடசென்னை வாழ்வு, விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வு என்று ஒரு எழுத்தாளர் தான் சார்ந்திருக்கும் நிலப்பரப்பின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் எழுத்தை எழுதுவார். அப்படி எழுதுவது தான் சரியும் கூட.

பத்து இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்த ஒருவர், அமெரிக்காவிலிருந்து உலகின் பிற இடங்களுக்குச் செல்ல நேர்கையில் அவரிடமிருந்து போரில் மக்கள் படும் வலிகளோ, தமிழகக் கடல் கிராமங்களின் கதைகளோ, வட்டார வழக்கோ, வடசென்னைக் கதைகளோ, மதுரை வாழ் தொல் குடி ஒன்றில் உள்ள வினோதமான பழக்கவழக்கங்களோ, விவசாய மக்களின் இன்னல்களோ, பழங்குடிகளின் பிர்ச்சனைகளோ, மலைவாழ் மக்களின் துயர்களோ, தமிழக கிராமங்களின் கதைகளோ, சங்க இலக்கியம் குறித்த விசாரமோ எதிர்பார்க்கப்படப்போவதில்லை.

இன்றைக்கு தமிழ் எழுத்துச் சூழலில் அறிவியல் புனைவுகள் எழுதுபவர்களில் பலர் பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் கணிதம் விருப்பப்பாடமாக எடுத்துப் படித்தவராக இல்லாமலும், சாதாரண நகர வாழ்வின் பின்னணியிலிருந்து வருபவராகவும் இருக்கலாம். பள்ளிக்காலத்தில் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை விருப்பப் பாடமாக எடுத்து  நூற்றுக்கு நூறு வாங்கி பொறியியல் படித்து, அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் அறிவியல் எழுத்தின் வாசகராகக் கூட இல்லாமல் இருப்பதும் பரவலாக நடந்து நாம் காண்கிறோம். 

சுருங்கச்சொன்னால், அறிவியலைத் தன் இயங்கு ஆதாரமாகக் கொண்ட நாட்டிலிருந்து அறிவியல் தமிழின் உச்சம் வெளிப்படுவதே சரியாக இருக்க முடியும் என்றாகிறது.  ஏனெனில், அப்படி அது வெளிப்படவில்லை எனில் எங்கோ எதிலோ தவறு நடக்கிறது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது இல்லையா? (இதற்கு அர்த்தம், அமெரிக்காவிலிருந்து வெளிப்படுவது யாவும் அறிவியல் தமிழின் உச்சம் என்பதல்ல. தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்).

அந்தப்படி, அறிவியல் தமிழ், அமெரிக்கத் தமிழர்களின் வாழ்வியல், அமெரிக்காவில் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், அறிவியல் புனைவுகள், அதிபுனைவுகள், என்று அமெரிக்க தமிழ் இலக்கியம் விரிவடையவேண்டும் என்று நான் பலமுறை, என்  நெருங்கிய நண்பர்களிடம் வலியுறுத்தியிருக்கிறேன். அதை நண்பர்கள் அறிவார்கள். இதையே முனைவர் க. திலகவதி அவர்கள் வெவ்வேறு வார்த்தைகளில் சுட்டினார் என்றே கொள்கிறேன். 

நான் பலமுறை வலியுறுத்திய ஒன்று முனைவர், ஆய்வாளரிடமிருந்தும் வெளிப்பட்டிருப்பது, அமெரிக்க தமிழ் இலக்கியத்திடமிருந்து எதிர்பார்க்கப்படுவது என்ன என்பதில் ஓர் ஒருமித்த கருத்து கல்வியாளர்களிமும் இலக்கிய ஆன்றோர்களிடமும் இருப்பதையே சுட்டுகிறது என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.