The Great Indian Kitchen - விமர்சனம்
நீங்கள் விவசாயம் செய்யப் போகிறீர்கள். என்னென்ன வேண்டும்?
நிலம்.
ஆரோக்கியமான மண்.
நீர் வளம்.
சூரிய சக்தி.
பிறகு, விவசாயம் செய்ய செய்முறை இருக்கிறது.
விவசாயம் யார் செய்வார்?
எல்லோரும் செய்வதில்லை. அதற்கென ஒரு சமூக, பொருளாதார இடம் இருக்கிறது. விவசாயத்தைத் தொழிலாக செய்யத்தெரிதல் இருக்கிறது. இப்படி நிறைய காரணங்கள் சொல்லலாம். ஆக ஒரு மா நிலத்தில் மொத்த மக்கள் தொகை 8 கோடி எனில் எட்டு கோடி ஜனமும் விவசாயம் செய்வதற்கில்லை.
விவசாயம் செய்ய முன்வருபவர்களிலேயே கூட, அவர்களின் அணுகுமுறையை வைத்து வர்க்கங்கள் இருக்கிறது. லாப நோக்கோடு வருபவர், விவசாயத்தை கடவுளாக வரித்தவர், வேறு வக்கின்றி செய்பவர், கூலிக்கு வந்தவர் என்று.
இதையெல்லாம் தாண்டி, விவசாயத்தை வெற்றிகரமானதாக, ஆரோக்கியத்திலும், தரத்திலும் சிறிதும் குறைவின்றி மேற்கொண்டு லாபம் ஈட்ட வேண்டுமென்றால், இது அத்தனையும், அதனதன் துல்லியத்தில் நிகழவேண்டும்.
சரி, எல்லா நேரமும் எல்லாமும் துல்லியமாக யாருக்குத்தான் நடக்கிறது, கிடைக்கிறது. ஆக, இவற்றில் ஆங்காங்கே குறைகள் இருக்கலாம். ஒன்றில் சரியான அளவில் நிலம் இல்லாமல் இருக்கலாம்.
மற்றொன்றில் மண் வளம் குன்றி இருக்கலாம்.
இன்னொன்றில் நீர் வளம் இல்லாமல் இருக்கலாம்.
இன்னுமொன்றில், சூரிய ஒளியே இல்லாமல் இருக்கலாம்
இந்த இல்லாமைகளுக்கேற்ப, விவசாயத்தின் விளைவாக உற்பத்தி செய்யப்படும் தானியத்தின் தரம் பாதிக்கப்படும்.
வாழ்க்கை என்பது அந்த தானிய உற்பத்தி தான். அதற்கு தரம் வேண்டுமானால், மேற்சொன்ன எல்லாமும் அதனதன் துல்லியத்தில் அமைய வேண்டும்.
- சில இடங்களில் நிலம் குன்றியிருந்தாலும், சத்துள்ள விதை உற்பத்தியை இருமடங்காக்கி, நிலத்தின் குறையை சமன் செய்துவிடலாம்.
- சில இடங்களில் மண் வளம் குன்றியிருந்தாலும், விவசாயியின் புத்திசாலித்தனத்தால், மண்ணுக்கேற்ற தானியம் உற்பத்தியில் இறங்கி, குறையைச் சமன் செய்துவிடலாம்.
- சில இடங்களில் நீர் வளம் குன்றியிருந்தாலும், நீர் அதிகம் தேவைப்படாத தாவரங்கள், மரங்கள் வளர்த்து சமன் செய்யலாம்.
வாழ்க்கையைப் பொருத்த மட்டில் சமன் செய்வதுதான் இலக்கு. ஏனெனில், எல்லாமும் துல்லியமாக, மிகச்சரியாக, அப்பழுக்கின்றி யாருக்கும் அமைந்துவிடுவதில்லை. இதுதான் நிதர்சனமும் கூட. இதற்கு உங்கள் சமூக, பொருளாதார இடமும், உங்கள் தேர்வுகளும், நிராகரிப்புகளுமே பெரும்பான்மை காரணங்கள். ஆக, எல்லாமே உங்கள் சூழல்களுக்கும், அதற்கு உங்கள் எதிர்வினைகளுக்குமே உதயமாகிறது.
உங்களிடம் நீர் இல்லை என்றால் அதிகம் நீர் கோராத ஒன்றை தெரிவு செய்து விவசாயத்தில் இறங்குவது உங்கள் புத்திசாலித்தனத்தையும், மதி நுட்பத்தையும் காட்டுவதாக அமையும். பிறருக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருப்பீர்கள்.
உங்களால் எது முடியும், எது முடியாது, மண் வளம் என்ன, நீர் வளம் என்ன என்பதையே தெரிந்துகொள்ளாமல், கண்ணைக் கட்டிக்கொண்டு மண்ணில் கால்வைத்தால், அடுத்தவர்க்கு நீங்கள் பாடமாக மட்டும் தான் ஆவீர்கள்.
அடுத்தவர்க்கு உங்கள் வாழ்க்கையை பாடமாக்கிக்கொள்வதும், அல்லது முன்மாதிரி ஆக்கிக்கொள்வதும் உங்கள் புத்திசாலித்தனத்திலும், அணுகுமுறையிலும், முதிர்ச்சியிலும் இருக்கிறது. நீங்கள் யார் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
மற்றபடி, முன்மாதிரிகளைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, The Great Indian Kitchen பெரிதாக ஈர்க்காது.