என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday, 11 February 2021

💕 காதல் சோலை - 7 💕

 💕 காதல் சோலை - 7 💕


💕
நீ க‌ட‌ந்து செல்கையில் இத‌ய‌ம் அதிர்வ‌து
புதிதில்லையே என்று
அன்றொருநாள் தரை அதிர்ந்ததில் சும்மா
இருந்துவிட்டேன்...
இனிமேல் அப்படி நடந்தால் நீயாவது
சொல்லிவிட்டு போ நில நடுக்கம் என்று...

💕
உன்னைக்
கரை ஒதுங்கிய மீன்
என்று நினைத்து
வாரியெடுத்துக் கடலில் சேர்த்திடவே
வந்து வந்து போகின்றன
அலைகள்...

💕
உன்னைப் பார்க்கும் வரை,
உன் வீட்டில்
ஆளுயர வண்ணத்துப்பூச்சி
இருப்பதாக எல்லோரும் சொன்னபோது
நான் நம்பவில்லை தான்...

💕
நீ பண்டிகைகள் கொண்டாடுகையில்
ஊரெங்கும்
உன்னைத்தான் கொண்டாடுகிறார்கள்...

💕
காதல் நோயை
எனக்குப் பரப்பி
உயிரியல் போரை
முதன் முதலில் துவக்கியது
நீ தான்...

💕
உன் வீட்டில்
வாஸ்து சரியில்லை...
வாசலில்
இருக்கவேண்டிய பூந்தோட்டம்
உன்னறைக்குள் இருக்கிறது...

- ராம்பிரசாத்