என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 27 May 2020

சரியான முன்னுதாரணம்


உரு என்றொரு படம். அதில் கதாநாயகன், கதாநாயகி இருவருமே எழுத்தாளர்கள். நாயகன் காட்டுக்குள் சென்று தான் கதை எழுதுவாராம். படத்தில் கிட்டத்தட்ட பைத்தியம் போல் காட்டியிருக்கிறார்கள். ஒரு சீனில் கதாநாயகி '...start being responsible Jeeva' என்று கத்துகிறார். இறுதியில், கஞ்சா அடிக்கையில் அவருக்கு ஒரு கதையின் கரு கிட்டுகிறது. அதை எழுத காட்டுக்குள் ஒரு வீட்டுக்கு போகிறார். இப்படிப் போகிறது கதை.

Tolet படத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி தனித்திருக்கையிலேயே ஒரு வசனத்தை தனக்குத்தானே சொல்லி அழுகிறான் ஒருவன். கதாசிரியராம். அடுத்த காட்சியில் மூவாயிரம் ரூபாய் வாடகைக்கு வீடு பார்க்க அல்லாடுகிறார். அவருக்கும், அவர் மனைவிக்கும் வீடு விஷயமாக தினம் தினம் சண்டை.

பார்க்கப்போனால் இதில் தான் இப்படி என்றில்லை. திருடா திருடி, சோடாபுட்டி என்று ஒரு டஜன் திரைப்படங்களுக்கு மேல் உதாரணம் சொல்லலாம். எல்லாவற்றிலும் ஒரே டெம்ப்ளேட் இங்கும். தோளில் ஜோல்னாப்பை, வழுக்கைத்தலை, தொந்தி, டி.வி.எஸ் 50, ரோட்டுக்கடையில் கடன் சொல்லி டீ, சிகரெட், குடும்பத்தில் வறுமை.

என்ன சொல்ல வருகிறார்கள்? எழுத்தாளன் என்றால் practicality தெரியாதவன் என்றா? வாழ்வில் தோற்பவன் என்றா?

நிதர்சனம் பேசுவது என்பது வேறு.

ஆனால், நிதர்சனம் பேசுகிறேன் பேர்வழி என்று தவறான ஆட்களை முன்னுதாரணமாகக் காட்டுவது என்பது வேறு. பெரும்பான்மை திரைப்படங்கள் இரண்டாவது வகையில் தான் இருக்கின்றன என்பது என் வாதம்.

என்னைப் பொருத்தவரையில் எங்கே கல்வி அதிகம் சேர்கிறதோ அங்கே அறிவு விருத்தி ஆக வேண்டும். பண்படல் நிகழ வேண்டும். அது மானுட மேன்மைக்கு இட்டுச்செல்ல வேண்டும். அதுவே சரியான பாதை என்று  நினைக்கிறேன். (கவனியுங்கள்.  'மானுட மேன்மை' என்று தான் சொல்லியிருக்கிறேன். அதில் 'வாழ்க்கையில் வெற்றி பெறுவது' என்பது இருக்காது என்றர்த்தமல்ல).

இப்படி வாசிப்பால் வெற்றிப் பாதையில் பயணிப்பவர்கள் மீது போதிய புகழ் வெளிச்சம் படர்வதில்லை. சுருக்கமாகச் சொல்வதானால், 'சரியான முன்னுதாரணங்கள்' முன்னிறுத்தப்படுவதில்லை.

சரியான முன்னுதாரணங்களாய் இருப்பவர்கள் அதீத 'தன்னடக்கத்தால்', விசாலமாகக் கிடைக்கும் அறிவினால் பெற்றுவிடும் 'அமைதி'யால்,  அதிகம் டம்பமடித்துக்கொள்ளாமல் இருப்பதும் காரணம் என்றே தோன்றுகிறது. 

சுஜாதா அப்படிப்பட்ட வெற்றிப்பாதையில் பயணித்தவராகவும், அதே நேரம் புகழ் வெளிச்சம் படர்ந்தவராகவும் இருந்தார்.

எனக்குத்தெரிந்து ஐ.டி, மருத்துவம் போன்ற துறையிலிருந்துகொண்டே வெற்றிகரமாக எழுத்தில் கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். சமூக இயக்கத்தின் பொதுப்புத்தி-எதிர்ப்பு விசை அவர்கள் மீது அபரிமிதமாகப் படிவதே அவர்கள் புகழ் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கக் காரணம் என்பது என் வாதம். இந்த பொதுப்புத்தி-எதிர்ப்புவிசையை சிலர் தங்களில் சுய லாபங்களுக்காகத் திட்டமிட்டே திரைப்படங்கள் வாயிலாகப் பரப்புகிறார்கள். 

"தமிழ் இலக்கிய உலகில் ஒரு நூல் அதிகம் போனால் முன்னூறு பேர்களால் தான் வாசிக்கப்படுகிறது",
"வாசிக்கிறவங்கள்ல பல பேரு எழுத்தாளர்களா ஆயிட்டாங்க"

வெற்றிகரமான முன்னுதாரணங்கள் முன்னிருத்தப்பட வேண்டும். அதில் தான் அடங்கியிருக்கிறது சூட்சுமம் என்பது என் வாதம்.

ஆகவே பெரியோர்களே, தாய்மார்களே, இன்றிலிருந்து என்னை எல்லோறும்

"எழுத்தாளர் ராம்பிரசாத்"

என்று செல்லமாக அழைப்பீர்களாக.

உயிர்மை, கணையாழி, ஆனந்தவிகடன் உள்ளிட்ட பத்திரிக்கைகளிலும், Boston Literary Magazine, Readomania போன்ற பத்திரிக்கைகளிலும், தமிழிலும் ஆங்கிலத்திலும் கணித நாவல்கள் உள்பட பல்லாயிரம் கவிதைகளும், சில நூறு சிறுகதைகளும் எழுதியதில் எனக்கு இந்த அடைமொழிக்கு தகுதி இருப்பதாகவே நினைக்கிறேன். 



Monday, 25 May 2020

காதல் சோலை - அமேசான் கிண்டில்



காதல் சோலை - அமேசான் கிண்டில்
காதல் கவிதைகளுக்கென்று ஒரு ஈர்ப்பு இருக்கிறது. காதல் கவிதைகளுக்கென்று ஒரு பெரிய இலக்கணம் இருக்கிறது. காதல் தான் அந்த இலக்கணம். 'யாரந்தக் காதலி?' என்காதீர்கள். கிறுக்கியதில் காதல் இருந்துவிட்டாலே அதைக் கவிதை என்று அங்கீகரித்துவிடுகிறது எதிர்தரப்பு. அந்த அங்கீகாரத்துக்கு மேல், இலக்கணங்களுக்கு என்ன வேலை?
வருடம் 2011 என்று நினைக்கிறேன். சென்னையில் தாம்பரத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
அங்கே அந்த நிறுவனத்துக்கென அக இணையம் (intranet) இருந்தது. அதில் கவிதைகளுக்கென இருந்த குழுமத்தில் 'காதல் சோலை' என்ற தலைப்பில் காதல் குறுங்கவிதைகள் (அவைகளைக் கவிதைகள் என்று நீங்கள் ஏற்கும் பட்சத்தில் தான். இல்லாவிட்டால் கிறுக்கல்கள்...அவ்வளவுதான்) விளையாட்டாக எழுதத்துவங்கினேன். ஒரு நாளுக்கு சுமார் பத்து கவிதைகள் என்பதுதான் கணக்கு.
இந்தக் கவிதைகளை வாசிக்கும் யாருமே 'சொந்த அனுபவமா?" என்று தான் இதுகாறும் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் பதில்: மரணம் குறித்து எழுதப்படுவனவற்றுக்கும் சொந்த அனுபவம் தேவையா?
இந்தக் கவிதைகளைக் கிறுக்கிய காலகட்டத்தில், வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த ஈரடிக் கவிதைகள். நிறுவனத்திலிருந்து 2012ல் வெளியேறும் தினம் வரை, சுமார் ஆயிரம் கவிதைகள் எழுதி முடித்துவிட்டிருந்தேன். அந்தத் தொகுப்பிலிருந்து மிகவும் வரவேற்பைப் பெற்ற கவிதைகளில் முதல் நூறு கவிதைகளை ஒரு தொகுப்பாக்கிப் பார்க்க வேண்டும் என்று 2012லேயே தோன்றியது.
ஆனால், தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள், ஆங்கில இலக்கியம் என்று இயங்கியதில் இதுகாறும் அதற்கு வாய்ப்பு அமையப்பெறவில்லை.
இவ்விதம் தொகுப்பு நூலாக்கிப்பார்க்கும் விழைவில் சிக்கி தேங்கிக்கிடக்கும் என் ஆக்கங்கள் ஏராளம். வெகு நாட்களாக பேப்பர்பேக்காக இல்லாமல் இணையம் வாயிலாக வெளியிட யோசித்திருந்தேன். பல காரணிகளை, வசதிகளை ஆராய்ந்ததில் கிண்டில் ஆகச்சிறப்பு என்று தோன்றியது.
பிப்ருவரி 14 காதலர் தினத்திற்கு வெளியிடலாமென்று திட்டமிட்டது. நாவல், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் வேலை இருந்ததால் திட்டமிட்டபடி கொண்டுவர முடியவில்லை. இதோ இப்போது சாத்தியமாகியிருக்கிறது.
'காதல் சோலை' முதல் பகுதி அமேசான் கிண்டிலில். விலை ஒரு டாலர் தான். ஏதாவதொரு விலை வைத்துத்தான் ஆகவேண்டும் என்பதால் இந்த ஒரு டாலர். Kindle unlimited இருப்பின் இலவசமாகவே வாசிக்கலாம்.
இந்திய நண்பர்கள் இந்தியாவிலிருந்து இந்த நூலை வாசிக்க முடிகிறதா என்பதை ஊர்ஜிதம் செய்து சொல்லவும். வாசிக்க முடியவில்லை எனில், ஆவன செய்ய சித்தமாயிருக்கிறேன். முதல் பகுதி என்பதால் சுமார் நூறு கவிதைகளை மட்டுமே தேர்வு செய்திருக்கிறேன்.
கவிதைகளை வாசித்துவிட்டு எழுதுங்கள். உங்கள் ஆதரவுக்கேற்ப இந்த நூலின் அடுத்தடுத்த பாகங்களை வெளியிடலாமென்று திட்டமிட்டிருக்கிறேன். உங்கள் அடையாளம் வெளியிட விருப்பமில்லை எனில் சரஹாவிலும் தெரிவிக்கலாம்.
நூலை அமேசான் கிண்டிலில் வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும். 

Sunday, 24 May 2020

ரகசியம் சிறுகதை - சொல்வனம்



சொல்வனம் இதழ் 223ல், 'ரகசியம்' என்ற தலைப்பிலான என் சிறுகதை வெளியாகியிருக்கிறது.
எனது சிறுகதையைத் தேர்வு செய்து வெளியிட்ட சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
சிறுகதையை வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்.



Wednesday, 20 May 2020

வினோதன் டார்வின் - வாசகசாலை

வாசகசாலையில் 'வினோதன் டார்வின்' என்ற தலைப்பிலான என் சிறுகதை வெளியாகியிருக்கிறது.

எனது சிறுகதையைத் தேர்வு செய்து வெளியிட்ட வாசகசாலை ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சிறுகதையை வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்.

http://www.vasagasalai.com/vinoth-darwin/



Tuesday, 19 May 2020

ஹல்க் கவிதைகள் - வாசகசாலை

வாசகசாலையில் எனது இரண்டு கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.

'ஹல்கின் நிர்பந்தங்கள்'
'ஹல்கின் தடுமாற்றங்கள்'

எனது கவிதைகளைத் தேர்வு செய்த வாசகசாலை ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

வாசகசாலையில் கவிதைகளை வாசிக்க பின்வரும் சுட்டுயை சொடுக்கவும்.

http://www.vasagasalai.com/kavithaikal-ramprasath/


Friday, 8 May 2020

சலனம்

சலனம் இலக்கிய ஆக்கங்களுள் மிகச் சிறியவை கவிதைகள். இரண்டு வரியிலிருந்து அதிகம் போனால் இருபது வரி இருக்கலாம். இதனாலேயே மிக அதிகமாக எழதப்படுவதும் கவிதைகள் தான். ஒரு பதிப்பாள நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஆண்டொன்றுக்கு சுமார் இருநூறு கவிதைத் தொகுப்புகளாவது வெளியாவதாகச் சொன்னார். இத்தனை கவிதைகளில், மனதில் நிற்குமாறு ஒன்றிரண்டு கவிதைகள் ஒரு கவிஞனுக்கு கிடைத்துவிட்டாலே பெரிய விஷயம் தான். மெளனி மொத்தமாக 24 ஆக்கங்களே எழுதியிருக்கிறார். ஆனால், தமிழ் இலக்கியம் உள்ளவரை அவர் பெயர் நிலைத்திருக்கும். எத்தனை கவிதைகள் எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல. மனதில் நிற்பதான, நாலு நல்ல கவிதைகள் எழுதிவிட்டாலே போதும் தான். பிரபஞ்சன் சொல்வது போல, அந்த நாலு நல்ல கவிதைகளை எழுதிவிடத்தான் நானூறு கவிதைகள் எழுதியும் பார்க்கிறோம். இப்படியான கவிதைகள் தான் மனதில் தேங்கிவிடுகின்றன. முள் போல் நெஞ்சுக்குழியில் தங்கிவிடுகின்றன. சதா நினைவில் வந்து அலைகழிக்கின்றன. அந்தப்படி, கவிஞனை நினைவூட்டுகின்றன. இன்னும் சொல்லப்போனால், கவிதையை எழுதியவன் இரண்டாம் பட்சமாகிப்போகிறான். எழுதியவனை பின்னுக்கு தள்ளிவிட்டு, கவிதை முன் வந்து நின்றுவிடுகிறது. கவிதையின் பொருட்டு தான் கவிஞன் நினைவுகூறப்படுகிறான். "பிழைகளின் முகம்" என்ற கவிதையை எப்போது எழுதினேன் என்று சரியாக நினைவில்லை. கணையாழியில் வெளியாகியிருந்தது. கணையாழி தளத்தில் டிசம்பர் 3, 2011ல் வலையேற்றப்பட்டிருப்பதை வைத்து 2011ம் ஆண்டில் எழுதியதாக கணிக்கிறேன்.

அதன் சுட்டி இங்கே:

நண்பர் லதாமகன் தனக்குப் பிடித்த, தன்னை சலனப்படுத்திய கவிதைகளைத் தேர்வு செய்து தொகுத்து கிண்டிலில் நூலாக வெளியிட்டிருக்கிறார். சுமார் 90 படைப்புகளுடன் இந்த நூல் அமேசான் கிண்டிலில் வாசிக்கக் கிடைக்கிறது. "பிழைகளின் முகம்" கவிதையும் பட்டியலில் இருக்கிறது.

இது போன்ற ஒன்றிரண்டு கவிதைகளே ஆயிரம் கவிதைகளை உருவாக்குகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை.

கிண்டில் அன்லிமிடெட் மூலம் நூலை வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்.

Wednesday, 6 May 2020

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 4

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 4
ஞானப்பால்- சிறுகதை -  நா.பிச்சமூர்த்தி

லிங்கங்கட்டி, தவசிப்பிள்ளை ஆகிய இருவருக்கிடையில்  நடக்கும் கதை தான் ஞானப்பால்.

லிங்கங்கட்டி போக்கிடம் இல்லாதவன். ஒட்டு இல்லை. உறவு இல்லை. எங்கேனும் உணவு கிடைத்தால் போதும் என்றிருப்பவன். தவசிப்பிள்ளைக்கு ஒரு சத்திரத்தைப் பார்த்துக்கொள்ளும் பணி. அங்கே வந்து சேருகிறான் லிங்கங்கட்டி. சத்திரத்தை சுத்தப்படுத்த, சீட் செய்ய, பாத்திரங்கள் கழுவ ஒரு ஆள் தேவைப்படுகிறது தவசிப்பிள்ளை. மற்றவர்கள் காசு கேட்கிறார்கள். லிங்கங்கட்டி ஒரு வேளை உணவிட்டால் போதுமென்கிறான். தவசிப்பிள்ளை தனக்கொரு அடிமை கிடைத்துவிட்டதாய் எண்ணி லிங்கங்கட்டியை சேர்த்துக்கொள்கிறான்.

லிங்கங்கட்டி அந்த வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்கிறான். அவன் மீது பரிதாபப்பட்டு அவனுக்கு பலர் அவ்வப்போது காசு தருகிறார்கள். அதையெல்லாம் ஒரு கிழவியிடம் கொடுத்து வைக்கிறான். அது ஒரு கணிசமான அளவு சேர்ந்தவுடன் அதை தங்கமாக்கி கழுத்தி அணிந்துகொள்கிறான். ஒரு நாள் அது காணாமல் போய்விடுகிறது. அவனுக்கு ஞானம் கிடைத்துவிடுகிறது. இறுதியில் தவசிப்பிள்ளையும், லிங்கங்கட்டியும் என்னானார்கள் என்பது தான் கதை.

ஞானப்பால் சிறுகதையில் தன்னை விட பலவீனமானவர்களை துன்புறுத்த மனிதர்கள் எவ்விதம் இயல்பாகவே தயாராக இருக்கிறார்கள் என்பது காட்சிப்படுத்தப்படுகிறது. எளிமையானவர்களை அவர்களை விட வலுவானவர்கள் 'இவனை நான் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம்' என்று கொள்வதைக் காட்சிப்படுத்துகிறது.

நா.பிச்சமூர்த்தியின் சிறுகதைகளில் ஆழ்ந்த நீதி உணர்வின் குரலை அவதானிக்க முடியும். அதுதான் அவரது எழுத்தின் அடையாளமும் கூட. கு.அழகிரிசாமி, வண்ணநிலவன் என்று  நா.பிச்சமூர்த்தி துவங்கிய எழுத்து நீண்ட மரபைக் கொண்டது. வண்ணநிலவனிடம் கொஞ்சம் தி,ஜா த்தனமும் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை என்றபோதிலும் வண்ண நிலவனின் ஆக்கங்களின் இலக்கு நா.பிச்சமூர்த்தியின் ஆக்கங்களின் இலக்கு தான் என்பதால் நா.பிச்சமூர்த்தியின் மரபில் வண்ண நிலவனை வைத்துப் பார்க்க இயலும் என்று நினைக்கிறேன்.

கொள்கை அளவில் நா.பிச்சமூர்த்தியின் ஆக்கங்கள் தூரத்தே தெரியும் ஒற்றை விளக்கினொளியைக் கழுகொம்பாய்ப் பிடித்து எழுந்து வா என்கிற ஸ்திதியில் இருக்கும். இந்த நீதி உணர்வின் குரல் தான் அவரது படைப்புகளின் பொதுவான அம்சமும் கூட. ஆனால், நா பிச்சமூர்த்தியின் ஆக்கங்களில் கதை மாந்தர்கள் இருளிலிருந்து ஒளியை நோக்கி செல்வதான முன்னெடுப்புகளை மேற்கொள்பவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள். இதில், இருள் எத்தகையது என்பது குறித்து விவரணைகளே பெரும்பான்மைக்கு இருக்கும். இது போன்ற கதைகளில் அதைத் தவிர்க்க முடியாது தான்.  ஞானப்பால் கதையும் கூட அப்படியாக அமைந்த கதையே.

A SMALL TRIBUTE TO THE MOST WONDERFUL WRITERS OF TAMIL LITERATURE continues..................

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 5

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 5
பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்

கெட்டியான புக்ககக் குடும்பம். ஜகதாவின் கணவன் வேலை விஷயமாக வெளியூர் சென்று நாளாகிவிட்டது. கணவனின் அண்ணியம் அவளை கடிதம் எழுதத்தூண்ட கடிதம் எழுதுகிறாள் ஜகதா.

அதைக் கதை என்று சொல்வாதா? சிறுகதை வடிவில் ஒரு குறுநாவல். நல்ல நாவலுக்கான ஒட்டுமொத்த கதையையும் ஒரு சிறிய சிறுகதையில். ஜகதாவுக்கு புக்ககத்தில் சில பிரச்சனைகள். ஆனால், அந்த பிரச்சனைகளை அவள் அணுகுகிற விதத்தில் ஜகதா வானுயர்ந்து நின்றுவிடுகிறாள். ஒரு சமயம், அந்த புக்ககத்தின் அசலான அசல் காட்சிகளை அவள் புரிந்துகொள்ள அவள் கணவனுடனான அண்ணியம் தான் உதவுகிறதோ என்றும் தோன்றச்செய்கிறது.

"அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? நீங்கள் எல்லாம் இப்படியிருக்கிறதால்தானே நாங்கள் எல்லாம் வெட்கம் கெட்டவர்களாகி விடுகிறோம்?"

கணவன் அதண்டு ஆளுமையாக இல்லாத இடத்தில் பெண்கள் எப்படி தங்களில் நியாயமான கோரிக்கைகளுக்காக கெட்ட பெயர் வாங்குகிறார்கள் என்று ஒரு வரியில் புரிய வைத்துவிடுகிறார் லா.ச. ராமமிர்தம்.

“என் பிள்ளை எப்போ அங்கே வர முடியல்லியோ உங்கள் பெண் இங்கேயே நாலு பேரோடு ஸல்லோபுல்லோன்னு இருந்துட்டுப் போறாள்! இனிமேல் எங்கள் பெண்ணும்தானே! அப்புறம் உங்களிஷ்டம். அவளிஷ்டம். இங்கே ஒருத்தரும் கையைப் பிடிக்கிறதாயில்லே!”

"பெண்ணாய்ப் பிறந்தபின் ஸ்வதந்திரம் ஏது என்கிறது தான்." என்று சொல்லும் ஜகதா அடுத்த இரண்டு வரிகளுக்குப் பிறகு,

"ஆனால் எனக்கே தெரிகிறது; பெண்கள் என்ன, புருஷர்களுக்குத்தான், என்ன சுதந்திரம் இருக்கிறது? எங்களுக்கு வீடு என்றால் உங்களுக்கு உத்தியோகம். பார்க்கப்போனால் யார்தார் விடுதலையாயிருக்கிறார்கள்? எல்லோரும் சேர்ந்து ஒரு பெரும் சிறையிலிருக்கிறோமே, இந்த உலகத்தில்!"

என்று சொல்கிறாள்.

"இந்த வீட்டில் சில விஷயங்கள் வெகு அழகாயிருக்கின்றன. இங்கே நாலு சந்ததிகள் வாழ்கின்றன." என்பது ஜகதாவின் புக்ககத்தின் மீதான விமர்சனமாக இருக்கிறது. அவளெ தான் "ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயே தான்…" என்று முடிக்கிறாள் இறுதியில்.

புதுமைப்பித்தன் தனக்கு முன் தமிழ்ச் சிறுகதைகள் எழுதப்பட்ட கட்டுதிட்டான மொழியை உடைத்துப்போட்டு உருவாக்கிய  நவீனத்துவ மொழியை ஒவ்வொருவரும் தங்கள் திறன்களுக்கேற்ப தங்களுக்கான பார்வையில் சிறுகதைகளாக்கினர். அந்த விதத்தில் உயர்கவித்துவத்தைக் கொண்டு சிறுகதையை விவரணையால் விரிவுசெய்து எழுதியவர் லா.ச.ராமாமிர்தம். பார்க்கப்போனால், மெளனியும் கூட அப்படித்தான் எழுதினார். ஆனால் மெளனியின் எழுத்து ஒரு விதமான, உள்வயமாகத் திரும்பிய எழுத்து. பெரும்பான்மையில் தன்மை நிலையிலிருந்து எழுதப்பட்ட கதைகளாகவே இருக்கும். மெளனியின் எழுத்துக்கும் லா.ச.ராமாமிர்தத்தின் எழுத்துக்கும் உள்ள வேறுபாடு இதுதான் என்று நினைக்கிறேன் அல்லது மெளனியின் இருபத்து நான்கே சிறுகதைகளை வைத்து அப்படித்தான் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சமயத்தில் லா.ச.ராவின் சிறுகதையை சரமாகக் கோர்க்கப்பட்ட கவிதைத் தொடர் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். உரை நடைக்கவிதையைத்தான் சிறுகதையாக இடமிருந்து வலமாக எழுதிவிட்டாரோ என்று கூட தோன்றச்செய்யும் கதைகள் அவருடையது.

ஒவ்வொரு வார்த்தையையும் அழகியலின் நிமித்தம் இழைத்து இழைத்து எழுதுவதில் நம்பிக்கை கொண்டவராகத்தான் அவர் எழுத்தை அணுகியிருப்பதாக அவர் சிறுகதைகளை வாசிக்கையில் தோன்றுகிறது.

A SMALL TRIBUTE TO THE MOST WONDERFUL WRITERS OF TAMIL LITERATURE continues..................

Monday, 4 May 2020

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 3

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை- 4
நகரம் சிறுகதை - சுஜாதா  

வள்ளியம்மாளின் மகள் பாப்பாத்திக்கு ஜுரம். வள்ளியம்மாள் மகளை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறாள். ஆனால், நாகரீக மருத்துவனையில் புழங்குதளம் அவளுக்கு அண்ணியமாக இருக்கிறது. நகரத்து மனிதர்களின் லெளகீக உலக சம்பாஷனைகள் மற்றும் வழமைகள் அவளுக்கு பரிச்சயமில்லாது இருக்கிறது. 

இப்படி பரிச்சயமில்லாது வருபவன் கவனத்தை கோர்பவனாகத்தானே கற்றவர் என்று சொல்லப்படும் சமூகத்தில் இருந்திருக்க வேண்டும்? ஆனால் அப்படி இல்லை. அவளின் எளிமை யாருடைய பரிதாபத்தையும், கோருவதில்லை. மாறாக, அவள் தலைவலியாகவே பார்க்கப்படுகிறாள். 

எவ்வித நாகரீகமும் இல்லாமல், இயந்திரத்தனமாக, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பாப்பாத்தியின் உடலை வைத்து மருத்துவ மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார் மருத்துவர். தனது மகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கையில் மருத்துவர் சாவதானமாக மகளின் உடலை வைத்து வகுப்பு எடுப்பதை எந்தத் தாயால் சகித்துக்கொள்ள முடியும்? ஆனால், அதைத்தாண்டி வேறு எதுவும் நடக்க வாய்ப்பில்லை தானே. ஏனென்னில், வள்ளியம்மாளிடம் பணமும் இல்லை, இன்ஷூரண்ஸும் இல்லை. நுனி நாக்கு ஆங்கிலமும் இல்லை. 

கிராமத்திலிருந்து மகளின் நிமித்தம் நகர்ப்புறம் வந்துவிட்டவளுக்கு பெரும் அச்சுருத்தலாக இருப்பது, நகரத்து மனிதர்கள் ஈவு இரக்கமற்ற, எல்லாவற்றுக்கும் ஒரு லெளகீக லாபத்தைக் கோருகிற, லாபமில்லாத இடத்து அலட்சியத்தை தந்துவிடுகிற மலட்டுத்தனம் தான். இயந்திரத்தனம் தான். அறியாமை, அது தரும் தாழ்வு மனப்பான்மை, தெரியாத இடத்தில் பிழைக்கத் தெரியாமல் திண்டாடி முட்டி மோதி ஆதரவற்று  நிற்கும் நிலைப்பாடு என எல்லாமும் உந்த மகளை அழைத்துக்கொண்டு தனக்கு மிக பரிச்சயமாக இருக்கிற 'வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விட்டால், எல்லாம் சரியாகி விடும்' என்று தனக்குத்தானே கற்பித்துக்கொண்டு தன் கிராமத்தை நோக்கி திரும்புகிறாள்.

இந்தக்  கதையை படித்துவிட்டு அடைந்த மனபாரத்துக்கு அளவே இல்லை. பணத்தை, கரன்சியைக் கண்டுபிடித்துவிட்டு மனித இனம் படும் பாட்டை இன்னும் எத்தனையெத்தனை விதங்களில் கேட்பது? மீண்டும் நாமெல்லாரும் பண்டமாற்றுக்கே திரும்பிவிட்டால் என்ன என்றெல்லாம் தோன்றச்செய்துவிட்டது இந்தச் சிறுகதை. இந்த சலனம் தான் சிறுகதையின் வெற்றியும் கூட.

சிறுகதை எழுத்தாளர்களில் சுஜாதா எனக்கு ஆதர்சம் தான். அது பெரும்பான்மையும், அவர் தான் சாந்திருந்த குடும்பத்தை கைவிடாமல், தன்னையும் ஒரு வெற்றி நாயகனாக வைத்துக்கொண்டே, தன் பணியையும் கைவிடாமல் சமூகத்துக்கான தன் கடமைகளை தொடர்ந்து செய்தார் என்பதில் உருக்கொள்வது தானே என்றி வேறில்லை.  

சுஜாதா சிறுகதை வடிவங்களில் நிறைய பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்று தான் பலரும் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, குப்புற விழுந்தான் என்பதில் விழுந்தானை,

வி
ழு
ந்
தா
ன் 
என்று எழுதியிருப்பார். 

இந்த பிரயோகமெல்லாம் 1980களில் தமிழுக்கு மிகவும் புதியது. இந்த பிரயோகங்களைக் கண்டு தமிழ் எழுத்துலகம் உற்சாகப்பீதி அடைந்தது. சுஜாதா மாய வித்தைக்காரர் போல் பார்க்கப்பட்டார். 

ஆனால், உண்மையில் சுஜாதா தமிழுக்கு இவ்விதமான வடிவ விளையாட்டுக்களை அறிமுகப்படுத்த மட்டுமே செய்தார். உருவாக்கியது மேற்குலகம். இதையெல்லாம் சுஜாதா மேற்கத்தைய எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்தே உருவி தன் ஆக்கங்களில்  ஆங்காங்கே பயன்படுத்திக்கொண்டார் என்பதுதான் நிஜம். மேற்குலகில் non-linear writing அப்போது பிரபல்யமடைந்து கொண்டிருந்தது. 

இப்படி சுஜாதாவின் கரிஷ்மாவில் பெரும்பகுதிக்கு ரங்கராஜன் உண்மையிலேயே தகுதியற்றவர் தான். ஆனால் தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு அறிவியல் புனைவுகள், சஸ்பென்ஸ், த்ரில்லர் போன்ற வகைமையில் சுஜாதாவினுடையது மிகப்பெரும் பாய்ச்சல். 

சுஜாதாவின் எழுத்தை நான் இரண்டு விதமாகப் பார்க்கிறேன். இலக்கியமாக அவர் எழுதியது சொற்பமே. பெரும்பகுதி வணிக எழுத்து தான். இதற்கு அவரைக் குற்றம் சொல்ல இயலாது. 1940 களில் கட்டுதிட்டாக எழுதப்பட்டதை உடைக்க வேண்டிய காலம் வந்தபோது அது புதுமைப்பித்தனுக்கு மாபெரும் வாய்ப்பாகிப்போனது. அதை அவர் பயன்படுத்திக்கொண்டார். அதே போல், 1980 களில் பத்திரிக்கைகள் பெரு வளர்ச்சி கண்ட காலம். தன் எழுத்துக்கு எங்கே தேவை ஏற்பட்டதோ அதை நோக்கிப் பாய்ந்தார் சுஜாதா. வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொண்டார். அது அவரை வணிக எழுத்தாளராக்கியது. 

இரண்டாவது, சுஜாதாவின் எழுத்தின் பெரும்பகுதி அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. இன்றைக்கும் புதுமைப்பித்தனுக்கு பிறகு தமிழில் நிற்கும் அறிவியல் புனைக்கதைகள் அவருடையது தான். ஆனால், அவைகளில் பெரும்பாலும் சினிமாவுக்கு பொருந்தக்கூடிய கதைகளாக ஓ ஹென்றித்தனமாக எதிர்பாராத முடிவை நோக்கி விரட்டப்பட்ட கதைகளே. மானுடம் சார்ந்த கேள்விகளை எழுப்புவன அல்ல. பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் போன்றவர்களிடம் இல்லாத ஹாஸ்யம் மற்றும் புத்திசாலித்தனம் சுஜாதாவிடம் இருந்தது. 

சுஜாதா புத்திசாலித்தனமாக எழுத்தை எழுதினார் என்று சொல்லலாம். மற்றபடி, அவரது மொழி சுவாரஸ்யம் கூட்டுவதாக, ஒரு விதமான ஹாஸ்யத்தன்மை கொண்டதாக இருந்தது. அதுகாறும் தமிழில் எழுதியவர்களுக்கு புத்திசாலித்தனம் + ஹாஸ்யம் + நவீனத்துவம் என்கிற காம்போ இல்லை. அதுவே அவரது அடையாளமாகப் பார்க்கிறேன். அவரது எழுத்தின் இலக்கிய இடமும் அதுதான்.


A SMALL TRIBUTE TO THE MOST WONDERFUL WRITERS OF TAMIL LITERATURE continues..................


தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 2

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 2
கதவு - சிறுகதை - கி.ராஜ நாராயணன்

ரங்கம்மாளின் மூன்று பிள்ளைகளுக்கு அவள் வீட்டின் கதவு தான் பிரதானமான விளையாட்டுப்பொருள். மூன்றாவது ஒரு கைக்குழந்தை. ரங்கம்மாளின் கணவர் பிழைப்பின் நிமித்தம் வெளியூர் சென்று மாதக்கணக்காகிவிடுகிறது. பிழைப்பின் நிமித்தம் ரங்கம்மாள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாதவளாகிறாள். இதனால் தலையாறி ஒரு நாள் அவள் வீட்டின் கதவை பிடுங்கிச் சென்றுவிடுகிறான். கதவு இல்லாததால் அதீத குளிரால், கைக்குழந்தை இறந்துவிடுகிறது.

சில நாட்கள் கழித்து முதலிரண்டு பிள்ளைகள் அந்தக் கதவை அருகிலுள்ள சாவடிக்கருகில் காண நேர்கிறது. இருவரும் ஓடிச்சென்று அந்தக் கதவை வாஞ்சையுடன் வருடி இறுகப்பிடித்துக்கொள்வதுடன் கதை முடிகிறது.

தமிழ் இலக்கியத்தில் கி.ராவின் இடம் மிக மிக ஸ்திரமானதும், முதலானதுமாகும். நாட்டுப்புற அழகியலின் உணர்வு நிலைகளை சிறுகதைகளாக்கி அழகு பார்த்தவர் கி.ரா.

எந்த ஒரு எழுத்தாளனுக்கும் எது உச்சமாக இருக்கிறதோ, அது தவிர்த்த ஏனையவற்றில் அவர் நீச்சமாக இருப்பது இயல்பே. இது எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். எல்லா தளங்களிலும் சோபிக்க இதுகாறும் எந்த ஒரு எழுத்தாளரும் பிறக்கவில்லை, இனி பிறக்கப்போவதுமில்லை.


இந்தப் பின்னணியில், என்னதான் புதுமைப்பித்தன் தமிழ் சிறுகதைகளின் முன்னோடி எனினும், புதுமைப்பித்தனிடம் எது உச்சமாக வெளிப்பட்டதோ அதுவே அவரது  நீச்சமாகவும் ஆனது. அந்த இடம் யதார்த்தவாதத்தில் ஆழ் உணர்வெழுச்சிகள்.

புதுமைப்பித்தனின் ஆக்கங்கள் புறவயமானவை. சிலேடை தொனி கொண்டிருப்பவை. மிகவும் மரபார்ந்த சிறுகதைகளை, சங்க இலக்கிய மொழியிலிருந்தும், நடையிலிருந்தும் கடனாகப் பெற்ற ஒரு நடையில் வைத்து எழுதிக்கொண்டிருந்த வா.வெ.சு மற்றும் சுப்பிரமணிய அய்யரின் நடையிலிருந்து பிரிந்து துடுக்கான நடையில் எழுத முற்பட்டார் புதுமைப்பித்தன். அதுதான் பின்னாளில் அவரது அடையாளமுமாகிப்போனது. இந்த விதமான இயங்குமுறையில் நீச்சம் என்னவெனில், ஆக்கங்கள் மிக இயற்கையாகவே மிகவும் மேலோட்டமான விதிமீறலையே பெரும்பாலும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டவையாகிவிட்டன. இது ஏனெனில் சிறுகதைகள் தரும் வார்த்தை எண்ணிக்கை இடம் தான்.

வார்த்தை எண்ணிக்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் அது குறு நாவலாகிவிடுகிறது. ஆக, விதிமீறலையும், ஆழ்ந்த உணர்வெழுச்சியையும் ஒருங்கே கொண்டு வருவது இரண்டு எதிரெதிர் துருவங்களை ஒன்றிணைப்பது போலாகும். சுஜாதாவின்  எழுத்தின் பாதகமான அம்சமும் இதுதான்.

கி.ரா தனது நாற்பதுகளில் தான் எழுதவே துவங்குகிறார். அடிப்படையில் ஒரு விவசாயி. கிராம வாழ்வை உள்ளும் புறமுமாக உணர்ந்தவராதலினால், அவர் கிராமத்து வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு எழுதியதில் ஆச்சர்யமில்லை. ஆனால் தமிழ் இலக்கியத்தில் அவர் இடம், யதார்த்தவாதத்தில் நாட்டுப்புற அழகியலை புகுத்தியது என்று அடித்துச்சொல்லலாம்.


A SMALL TRIBUTE TO THE MOST WONDERFUL WRITERS OF TAMIL LITERATURE continues..................

எங் கதெ - இமையம்



எங் கதெ - இமையம் Imayam Annamalai
எழுத்தாளர் இமையத்தை இதுவரை சந்தித்ததில்லை.
விபத்தொன்றில் கணவன் இறந்துவிட, அரசின் அனுதாபத்தில் கணவனின் அரசாங்க வேலை மனைவிக்கு கிடைக்க, தன் இரட்டைப் பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன் ஊரிலிருந்து வேறொரு கிராமத்திற்கு அரசுப் பள்ளிக்கு ஆசிரியர் பணிக்கு வருகிறாள் கமலா!
அதே ஊரில் படித்துவிட்டு வேலை கிட்டாமல், முயன்று கொண்டிருக்கும் விநாயகத்துக்கு கமலா மீது ஒரு ஆர்வம் வருகிறது. அதை அவன் காதல் என்று கொண்டுவிடுகிறான். 28 வயதில் துவங்கும் இந்த அவனின் மயக்கம் பத்து வருடம் அவனை ஆட்டிப்படைத்து, அலைகழித்து இறுதியில் என்னவாக்குகிறது என்பதுதான் கதை.
கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் இது போன்ற அலைகழிப்புகளில் சிக்கிக்கொண்ட ஆட்களை கடந்திருக்கிறேன். ஆதலால் இது போன்ற உறவுச் சிக்கல்கள் கிராமங்களில் தான் நடக்கிறது என்றில்லை. நகரங்களிலும் நடக்கும் கதை தான்.
தங்கையின் மகள்கள் வந்து 'மாமா காசு கொடு' என்று கேட்கையில், பையில் பத்து பைசா இல்லாமல் திணரும் போதும், தங்கைகள் விநாயகத்தின் சட்டைப்பையில் பணத்தை வைக்கையிலும் விநாயகம் கமலா மீதான மையலில் என்னவெல்லாம் இழப்பதாக தான் நினைப்பதாக எழுத்தாளர் சிலவற்றை அடையாளங்காட்டுகிறார்.
கதை பெரும்பாலும் கமலா என்கிற பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்தே சுழல்கிறது. அவளும், அவளது பெண்களுக்கும் இடையில் விநாயகம் ஒரு இடைச்செருகலாக மட்டுமே கடந்து போகிறான். அவனுக்கு தரப்படும் சுதந்திரமும் அவ்வளவு தான். அந்த இடைச்செருகல் நிலைப்பாட்டில் தான் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதையே உணராதவனாய் தான் விநாயகம் இருக்கிறான்.
இறுதியில் அவன் 'விழி'க்கிறான். ஆனால், அவனுக்கான காலம் கடந்துவிடுகிறது. காலம் எதற்குமே, யாருக்குமே நிற்பதில்லை.
க்ரியா பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டுள்ளது.

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 1

தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 1
செல்லம்மாள் - சிறுகதை - புதுமைப்பித்தன்
பணம் கண்டுபிடிக்காத காலகட்டத்தில் உணவில் தன்னிறைவு அடைந்து விட்ட காலகட்டத்தில் பண்ட மாற்றாகத்தான் எல்லாமும் இருந்தது. இப்போது போல், குளிர் சாதனப்பெட்டிகள் இல்லை. அன்று பழுத்த பழத்தை அன்றே உண்டுவிட வேண்டும். உண்டது போக எஞ்சியது ஊர் பொதுவில் வைக்கப்படும். வழிப்போக்கர்கள், ஏதுமற்றவர்களுக்கு உணவாகிட. ஆகையால் அக்காலகட்டங்களில் திருட்டு, பிச்சைக்கான தேவைகளெ எழவில்லை இல்லை.
களவையும், வறுமையையும், பிச்சையையும் உருவாக்கியது பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்ட பணமும், தொழில் நுட்பமும் தான்.
கதை செல்லம்மாள் என்கிற கதாபாத்திரத்தின் அந்திமக்காலத்தில் துவங்குகிறது. பிரம்ம நாயகம் பிள்ளை ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கிறார். அந்த வேலைக்கு சொற்ப பணமே சம்பளமாகப் பெறுகிறார். அது எத்தனை என்பது குறிப்பிடவில்லை. 'ஒரு ஜோடி உயிர்கள் கீழே போட்டுவிடாமல் இருக்கக் கூடிய சம்பளம்' என்ற வரி அது எத்தனை என்று சொல்லிவிடுகிறது.
இத்தனாம் தேதி சம்பளம் என்று கூட இல்லை என்பதிலிருந்து தொழிற்சங்கங்கள், பணியாளர் நலச்சங்கங்கள் தோன்றிடாத காலகட்டம் என்று புரிந்துகொள்ளலாம். முதலாளிக்கு தோன்றினால் கிடைக்கும் சம்பளம். அதற்கே பிரம்ம நாயகம் பிள்ளை முதலாளியை மனதளவில் தயார் செய்ய வேண்டும்.
செல்லம்மாளின் மருத்துவத்திற்கே அவரின் பெரும்பகுதி சம்பளம் போய்விடுகிறது. இதனால் கஷ்ட ஜீவனம் தான். இருந்தும் இருக்கும் பருக்கை உணவையும் இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை கதையீனூடே புரிந்துகொள்ள முடிகிறது. தன் மனைவியை அவளின் அந்திமக்காலத்தில் கொஞ்சமேனும் சந்தோஷமாக வைத்திருக்க துணிக்கடையிலிருந்து மூன்று சேலைகள் எடுத்து வருகிறார். ஆனால், அந்த சேலையும் அவளின் சடலத்தின் மீது போர்த்தமட்டுமே பயன்படுகிறது.
இப்படியாக மிக மிக விளிம்பு நிலையில் வாழ நேர்ந்த ஒரு எளிமையான குடும்பத்தின் வாயிலாக அக்காலகட்டத்தின் வாழ்வியலை சொல்லிச்செல்கிறார் புதுமைப்பித்தன்.
புதுமைப்பித்தன் தனக்குப்பின் விட்டுச்சென்ற நவீனச் சிறுகதை மரபு மிக நீளமானது. இன்னும் சொல்லப்போனால், சிறுகதை வடிவத்தை முதல் முதலில் தமிழில் எழுதித்தீர்த்தவர் புதுமைப்பித்தன் தான்.
A SMALL TRIBUTE TO THE MOST WONDERFUL WRITERS OF TAMIL LITERATURE continues..................