என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 28 February 2020

ஐடியா திருட்டும் சினிமாவும்

ஐடியா திருட்டும் சினிமாவும்


"பிரபல இயக்குனர் தனது கதையை திருடிவிட்டதால், மனநலம் பாதிக்கப்பட்டு பிச்சைக்காரர் போல் இருக்கும் உதவி இயக்குனர் !"

இப்படித்தான் அறிமுகமானது அந்தச் செய்தி. "பார்வை ஒன்றே போதுமே" சிம்ரன் - குணால் நடித்த படத்தின் உதவி இயக்குனர் குருநாதன் தான் வாய்ப்பு தேடி பலமுறை அலைந்த போது எதுவும் கிடைக்காமல் சாப்பிட வழியில்லாமல் பிச்சைக்காரர் போல கிடந்து பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

அவரிடம் அருகில் சென்று விசாரித்த போது அவர் தன்னுடைய கதைகளை பிரபல இயக்குனர்கள் திருடிவிட்டனர் என கூறியுள்ளார். மேலும் அவர் கவிதைகள் பல எழுதி வைத்திருந்தாராம். அவரை பார்த்து பரிதாபப்பட்டு, பக்கத்தில் இருக்கும் டீக்கடை காரர் டீ தந்திருக்கிறார். அதன் பிறகு அவருக்கு சாப்பாடு பக்கத்து ஓட்டல்காரர் தந்திருக்கிறார். இவரால் இதுவரை யாருக்கும் எந்த தொந்தரவும், தொல்லையும் இல்லையாம்.

எனக்கென்னவோ குருநாதன் சொல்வதில் உண்மையின் சதவிகிதம் அதிகமிருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.

அறிவுத் திருட்டு என்பது மிக மிக மலிவாகிவிட்ட ஒன்று. ஐடியாவை உருவிக்கொண்டு பெயர் ஊர் மாற்றி தங்கள் பெயரில் வெளியிட்டுக்கொள்வார்கள். எனக்குத் தனிப்பட்ட முறையில் அனுபவம் இருந்திருக்கிறது.

அப்போதெல்லாம் சிறுகதைகள் கிறுக்கத் துவங்கியிருந்த காலம்.
படுக்கையறைக் கொலை என்ற தலைப்பில் மூன்று சிறுகதை எழுதினேன். அதில் மூன்றாவது இது.

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/1934-333

சிறுகதை வெளியான திகதியை கவனியுங்கள். ஜனவரி 2010.

நீங்கள்  முரண் திரைப்படம் பார்த்திருக்கலாம். அதன் கதை உங்களுக்கு பரிச்சயமாகியிருக்கலாம். சேரன், பிரசன்னா நடித்திருந்த 'முரண்' திரைப்படம் செப்டம்பர் 2011ல் வெளியானது.

என் சிறுகதைக்கும், முரண் திரைப்படம் திரைப்படமாக வெளியான காலத்திற்கும் இடைப்பட்ட காலம் சுமார் ஒன்றரை ஆண்டுகள்.

இந்த இரண்டுக்கும் ஒப்பீட்டளவில் ஒரு ஒற்றுமை கூடவா இல்லை என்கிறீர்கள்?

ஒரு குரூப் முரணை 'Strangers on a Train' பார்த்துக் காப்பி பாஸ் என்றது. 'Strangers on a Train' ல் சென்னை - பங்களூரு நெடுஞ்சாலை இல்லை.


******************************************************************

இதுதான் இப்படி என்றால் இன்னுமொன்றை சமீபமாகப் பார்த்தேன்.

'தர்பார்' படத்தில் ரஜினி சிறைக்கைதிகளுக்கு மத்தியில் வில்லனின் கார் அடையாளம் சொல்லி விசாரிக்கும் காட்சி வருகிறது.

"டயரோட அகலம் 10.4இன்சஸ். முன் டயருக்கும் பின் டயருக்கும் உள்ள இடைவெளி மூவாயிரத்து நூத்தி பத்தொன்பது மிமீ...." என்று போகிறது வசனம்.  (அமேசான் ப்ரைமில் உள்ள தர்பார் பிரதியில் இந்த வசனம் 2:19க்கு வருகிறது).

எனது 'இரண்டு விரல்கள்'  நாவலின் ஒரு பக்கத்தை இங்கே இணைத்திருக்கிறேன். எனது நாவலில் இந்தத் தகவலைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறேன்.




திரைப்படத்தில் இந்தத் தகவல் இருந்தாலும் வில்லனின் கார் கண்டுபிடிக்கப்படுவதற்கு இந்தத் தகவல் பயன்படுவதாகக் காட்டப்படுவதில்லை. பிறகு ஏன் இந்தத் தகவல்? திருடப்பட்டு சேர்க்கப்பட்டிருந்து பிற்பாடு அப்படியே விடப்பட்டிருக்கலாம்.

******************************************************************


இதையெல்லாம் பார்த்த பிறகும், 'இதெல்லாம் அக்மார்க் தற்செயல் தான் பாஸ்' என்று நீங்கள் சொன்னால், குருநாதன் போன்றோர் தெருவோரம் பிச்சை எடுக்கத்தான் வேண்டும். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

இந்த உலகில் குருநாதன் போன்றோர் கதை சொல்லும் ஒற்றைத் திறனுடன் எப்படியாவது நேர்மையாக உழைத்து சினிமாவில் முன்னேறிவிடலாம் என்று நினைத்துவிடக் கூடாது.

எப்படியாவது பொறியியல்/மருத்துவம் என்று காசு பார்க்கும் படிப்பைப்  படித்துவிட்டு கை நிறைய சமபாதிக்கும் இடத்துக்கு வந்துவிட்ட பிறகு "கலை ஆர்வத்தை" மேற்கொள்ளலாம். அதுதான் பாதுகாப்பும் கூட. இந்த உலகில் திறமைக்கு எவ்வித மரியாதையும் இல்லை.