என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday 18 February 2020

தமிழும், ஒடுக்கப்படுதலும்

தமிழும், ஒடுக்கப்படுதலும்


நம் எல்லோருக்கும் தமிழ் மீது ஒரு வாஞ்சை இருக்கிறது.

அது இல்லாமல், தமிழில் இயங்க ஆரம்பிப்போமா? நம் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லித் தருவோமா? கண்ணதாசன் வாலி என்று தேடித்தேடிப் படிப்போமா? இளையராஜா பாடல்களுக்கு அடித்துக்கொள்வோமா?

தாய் மொழி என்பதால் மட்டும் வந்ததல்ல அந்த வாஞ்சை. தமிழ் மொழியானது தன் தனிச்சிறப்பால், நம் சிந்தனைகளுக்கு ஒரு உரம் அளிப்பதாய் இருக்கிறது. ஒரு ஆசிரியர் முன் மாணவன் மரியாதை நிமித்தம் ஒடுங்குவது போல, ஒரு அப்பாவின் முன் ஒரு மகன் ஒண்டுவது போல. அதில் மரியாதை மட்டும் அல்ல. மதிப்பு, மரபு, பரிசுத்தம், புத்துணர்வு என்று எல்லாமும் இருக்கிறது.

சுத்தமானத் தமிழைப் பேசுங்கால், உள்ளுக்குள்ளே மனம் புனிதமடைவதைப்போல ஒரு பிரஞை வருகிறதே. தமிழுக்கும், புனிதத்துக்கும் என்ன தொடர்பு? தொடர்பு உண்மையில் நாம் தான். தமிழ் மீது நமக்கிருக்கும் பற்று தான்.

நம் மொழி, நம் மக்கள், நம் கலாச்சாரம் இதுவே நம்மை ஒன்று சேர்க்கும் ஒரு பாலமாக இருக்கிறது. எங்கேனும் வேலை நிமித்தம் வெளி நாடு செல்ல நேர்ந்தால் , முதலில் ஒரு தமிழ்க்குடும்பத்தைத் தேட மனம் அலைபாய்கிறது. பர்கரும், பீட்ஸாவும் தின்று செத்துப்போன நாக்கில் ஒரு கவளம் சாம்பார் சாதம், பூண்டு ஊறுகாய் கிடைக்குமென்றால்  முப்பது மைல் தள்ளி உள்ள சாய்பாபா கோவிலுக்குப் போவதற்கு லிஃப்ட் யாரிடம் கேட்பது என்று நம் மனம் அலைபாய்கிறது.

தமிழ் நம் எல்லொருக்கும் வேண்டும்.
தமிழ் நம் பிள்ளைகளுக்கும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வேண்டும்.

தமிழ் வேண்டும் என்பதில் நம் எல்லோருக்கும் ஒரே பார்வை இருக்கிறது. அதில் கிஞ்சித்தும் மறு இல்லை.
தமிழை தலைமுறை தாண்டி நீட்டிக்க வைப்பதில் தான் நம் எல்லோருக்கும் ஒரே பார்வை இல்லை.  தமிழை நீட்டிக்க நம் ஒவ்வொருவரிடமும் கற்பனையில் ஒரு மார்க்கம் இருக்கிறது.

இளரத்தங்கள் தமிழைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதோர் மார்க்கம்.
கலாச்சார விழாக்களில் சங்க இலக்கியப் பாடல் ஒலிக்க வேண்டும் என்பதோர் மார்க்கம்.
தமிழ்க் கலாச்சாரத்தை முன் நிறுத்தும் ஒரு அரசியலமைப்பு வேண்டும் என்பதோர் மார்க்கம்.

இப்படி பலர் பல மார்க்கங்களைக் கொண்டிருப்பதால் தான்  இந்தி புறக்கணிப்பு என்று தமிழ்நாடே கொந்தளித்தாலும், ஒரு சாரார் தத்தம் பிள்ளைகளை இந்தி ட்யூஷனுக்கு அனுப்புகிறார்கள். இந்தி கற்றுக்கொள்ள அனுப்புவதால் அவர்களைத் தமிழின துரோகிகள் என்று புரிந்துகொள்ளலாகாது.

தமிழ்ப்பற்று என்பது வேறு. பிழைத்திருத்தல் என்பது வேறு.

தமிழ் நம் எல்லோருக்கும் வேண்டும் தான். அதற்காக நம்  பிள்ளைகளைத் தமிழ் மீடியத்திலா சேர்க்கிறோம்? இல்லை. நம் பிள்ளைகள் ஆங்கில வழியில் தான் கல்வி கற்கிறார்கள். தமிழ் வழிக்கல்வி என்பது பொருளாதாரம் சார்ந்த பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. தமிழ் வழியில் படித்து பொறியியல் வரை வந்துவிட்ட ஒருவரை, ஆங்கிலமின்றி பன்னாட்டி கணிணி  நிருவனங்களில் நாம் வேலைக்கு எடுத்துக்கொள்கிறோமா? இல்லை.,

தமிழ் நம் எல்லோருக்கும் வேண்டும் தான். ஆனால், நிதர்சன உலகம் என்றும் ஒன்று இருக்கிறது.

சங்க காலத்தில் தமிழர்கள் இந்தியா முழுமைக்குமட்டுமல்லாமல், இன்றிருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தாண்டியும் அந்தப்பக்கம் கம்போடியா, சீனா வரை கூட பரவி இருந்தார்கள். தமிழ் , இன்றிருக்கும் அங்கிலம் போல் ஒரு உலகளாவிய மொழியாக இருந்திருக்க வேண்டும். அப்போது தமிழிலேயே புழங்குவது சாத்தியமாயிற்று. இன்று தமிழ், தமிழ் நாடு என்கிற மாநிலத்துக்குள் சுருங்கிவிட்டது துரதிருஷ்டவசமானதுதான்.

கிட்டத்தட்ட ஒடுக்கப்பட்டவன் போல.
ஒரு ஒடுக்கப்பட்டவனை தமிழாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒடுக்குபவர்களை ஆங்கிலமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒடுக்கப்பட்டவன் தனக்குள்ளே புழங்குவது மென்மேலும் ஒடுக்கப்படவே வழிவகுக்கும் என்று கருதுகிறேன்.  ஏனெனில், நாம் தமிழ் மட்டுமே பேசப்பேச ஏனையோர்களிடமிருந்து அன்னியப்பட்டுப் போகவே வாய்ப்பிருக்கிறது.

ஒரு பேட்டியில் இயக்குனர் பாரதிராஜாவிடம் இப்படிக் கேட்கப்பட்டது.
"ஆஷா போஸ்லே முதற்கொண்டு பத்ம ஷீ வாங்கியாகிவிட்டது. தமிழில் பாடுபவர்கள் ஏன் அப்படி வாங்கவில்லை?" என்பது கேள்வி.
"தேர்வுக்குழுவில் இந்தி பேசக்கூடிய தமிழர்கள் இல்லை. அதனால் நம் தமிழ்க் கலைஞர்கள் குறித்துப் பேசத் தேர்வுக்குழுவில் யாருமில்லை. இது நமக்குத்தான் இழப்பாகிறது." என்றார்.

ஒரு ஒடுக்கப்படுபவன், மென்மேலும் தான், தன்னுடைய, தன் என்று புகழ்பாடிப் பேசிக்கொண்டிருப்பது மென்மேலும் ஒடுக்கப்படவே காரணமாகும் என்றெண்ணுகிறேன்.

ஒரு ஒடுக்கப்படுபவன் எப்போது முன்னேறுவானென்றால், 'எங்களாலும் முடியும்' என்று காட்ட முயலும் போது தான் சுற்றி உள்ளவர்களால் கவனிக்கப்படுவான் என்பது என் வாதம். எங்களலும் முடியும் என்று காட்ட பிற சமூகங்களுக்குச் சமமாய் அவனும் படித்து, வேலைவாய்ப்பை நேர்மையாகப் பெற்று , பொருள் சேர்த்து முன்னேறுகையில், 'என் ஜாதிதான் உசந்தது' என்று சொல்லிக்கொண்ட வாய்கள் நரம்பிழந்து போகின்றன.

சங்கத்தமிழ் இன்றும் தமிழர்க்கு பயனுள்ளதாக இருக்கிறதா இல்லையா என்பது கேள்வி அல்ல.

சங்கத்தமிழின் பெயரால் நாம் இன்னமும் தான், தன்னுடைய, தன் என்று புகழ்பாடிக் கொண்டிருக்கிறோமா என்பதுதான் கேள்வி.

நிதர்சனம் என்னவெனில், தமிழ் நாட்டுக்குள் மேல்ஜாதி , கீழ்ஜாதி என்ற பாகுபாடிருக்கலாம். தமிழர்கள் அல்லது தமிழ் பேசுபவர்கள் என்ற புரிதலில், தமிழும், தமிழர்களும் ஒட்டுமொத்தமான உலகின் பார்வையில் 'கீழ் ஜாதி' ஆகி இருக்கிறோம். இப்போது நம் முன்னிருக்கும் சவால், நாம் பிற எந்த ஜாதிகளுக்கும் குறைந்தவர்களல்ல என்று காட்டுவதே.

நாம் மென்மேலும் தமிழுக்குள்ளாகவே இயங்கிக்கொள்வதில், எந்த வகையிலும்  நாம் பிற (உலக மொழிகள்) ஜாதிகளைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்று காட்ட இயலாது. தமிழ் தான் ஆகச்சிறந்த மொழி என்று தமிழர்கள், தமிழர்களுக்குள்ளேயே முழங்கிக்கொள்வது, 'ஒரு ஒடுக்கப்பட்டவன், தன் இனம் தான் மாபெறும் இனம்' என்று தன் இனத்துக்குள்ளேயே முழங்கிக்கொள்வது போன்றது.

பிற (உலக மொழிகள்) ஜாதிகள் மேற்கொள்ளும் சவால்களை, நாம் நம் தமிழ் கொண்டு வெற்றி கொள்வதில் தான் தமிழின் முன்னேற்றம் இருக்கிறது என்பது என் ஸ்திரமான வாதம்.

இந்தப் பின்னணியில் தான், தமிழ் நடப்புலக அறிவியலும், கணிதமும் பேசவேண்டும் என்கிறேன். இதுவும் ஒரு மார்க்கம் தான். நம்மிடையே இருக்கும் பல மார்க்கங்களில் இதுவும் ஒன்று தான் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மார்க்கங்கள் எதுவானாலும், வளர்வது தமிழாகட்டும் என்பதுவும் எனது வாதமே.