என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday 6 February 2020

கேள்விகள் - என் படைப்புகள் மீதான கேள்விகள் - 2

கேள்வி : "ஓரே வார்த்தைகள் நாவலின் பல இடங்களிலும் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறதே!"

பதில் :
ஒரு சினிமா துணை இயக்குனர் ஒருமுறை குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது:

"உங்கள் கதைக்களங்களில் இதுகாறும் எவரும் சொல்லியிராத, எவராலும் அடையாளப்பட்டிராத கணக்குகளின் வழி, பெறப்பட்ட அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமூகப் பிரச்சனையை ஆராய்கிறீர்கள். இதுவே உங்கள் நூல்களை விசேஷமானதாக ஆக்குகிறது. இந்தப் பண்பு பிற ஆக்கங்களில் இல்லை" என்றார்.

ஆகையால், என் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து மீண்டும் மீண்டும் சொல்லவும், அடுத்தடுத்த நாவல்களிலும் ஒரு கோடிட்டு காட்டிடவும் பின் வரும் காரணங்கள் எனக்கிருப்பதாக நான் நினைக்கிறேன்.

1. பொதுப்புத்தியில் ஒரு சமூகப் பிரச்சனையை எல்லோரும் பார்ப்பது போல் நான் பார்க்கவில்லை. எனக்கென்று ஒரு பார்வை இருக்கிறது. அதை வாசகனுக்கு அறிமுகம் செய்தால் மட்டும் போதாது. அதை மீண்டும் மீண்டும் சொல்லி அவன் மனதில் பதிய வைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருப்பதாக ஒரு எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. எளிமையாக சொல்வதானால், ஆயிரம் நூல்களால் கட்டமைக்கப்படும் ஒரு பார்வையை, தலைகீழாகப் புரட்டிப்போட ஒரு இரு நூறு பக்க நூலில் ஒரே ஒரு இடத்தில் சொல்வது போதுமானதாக இருக்குமென்று எனக்கு தோன்றுவதில்லை.

2. (ஜனவரி 2020 வரையிலான இந்த நாள் வரை) நான் 9 நூல்கள் எழுதியிருக்கிறேன். ஆனால், ஒரு வாசகன் என் எல்லா நூல்களையும் ஒரே மூச்சில் வாங்கி வாசித்துவிடுவான் என்னும் பேராசையோ அவநம்பிக்கையோ எனக்கு இல்லை. ஒரே ஒரு வாசகன் என் எழுத்தைப் பார்த்தால் அது பெரிய விஷயம். அவனிடம் என் புதிய கண்டுபிடிப்பை கொண்டு சேர்த்துவிடும் அவசரம் மற்றும் கட்டாயம் எனக்கிருப்பதாகவே நினைக்கிறேன். இந்த என் நினைப்பை வாசகர்கள் தவறு என்று நிரூபித்தால் குறைத்துக்கொள்ளவும் சித்தமாயிருக்கிறேன்.


கேள்வி : "நாம் தினசரி பார்க்கும் மனிதர்களின் கதைகளாக உங்கள் கதைகள் ஏன் இல்லை?"

பதில்:
தினசரி பார்க்க கிடைக்கும் மனிதர்களின் வாழ்வியலில் ஒரு விதமான மலட்டுத்தனம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

உதாரணமாக, ஒரு மனிதன் பத்தாவது படிக்கையில் நன்றாகப்படித்தால் பன்னிரண்டாவதில் அறிவியல், கணிதம் விருப்பப்பாடமாக எடுப்பான். பன்னிரண்டாவதிலும் நன்றாகப்படித்தால் பொறியியல், மருத்துவம் விருப்பப்பாடமாக எடுப்பான். பி.ஏ. தமிழும், சரித்திரமும் படிப்பவர்கள் யாராக இருக்கிறார்கள்? இயல்பிலேயே கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் ஆர்வம் இல்லாதவர்களே.

ஆனால், எந்த ஒரு சமூகப்பிரச்சனைக்குமான தீர்விலும் அறிவியல் மற்றும் கணிதத்தின் பங்கும் இருக்கிறது என்பது என் வாதம். என் கேள்வி என்னவென்றால், அறிவியல், கணிதம் தெரியாதவர்களால் ஒரு சமூகப்பிரச்சனைக்கான முழுமையான தீர்வை எப்படி சொல்ல முடியும் என்பது. ஆனால் வெகு ஜனம் என்பது 'எதுக்கு படிச்சேன்னே தெரியலை' என்று சொல்பவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது. (விதிவிலக்குகளாக தமிழில் படித்துவிட்டு அறிவியல் புனைவு எழுதுபவர்களை நானறிவேன். ஆனால், இங்கே உள்ளடக்கம் வெகு ஜனம் பற்றியதுதானே)

ஆக, என் அவதானிப்பின்படி, வெகு ஜன இயக்கத்தைப் படம் பிடிப்பதன் பொருள், ஒரு முன்தீர்மானிக்கப்பட்ட இயக்கத்தின் பல்வேறு வரிசை மாற்ற மற்றும் சேர்க்கையின் விளைவாக வெளிப்படும் சூழல்களை படம்  பிடிப்பதே என்று பொருள் கொள்கிறேன். இதைப் படம் பிடிப்பது என்பது, வாசகனை ஏமாற்றுவது என்று தோன்றுகிறது.

கிரேக்கத்தில் வருடத்தின் 150 நாட்களுக்கு விளையாட்டுக்கள் விளையாடி மக்களின் கவனத்தை திசை திருப்புவது போலான வேலை. ஒரு சமூகப் பிரச்சனையின் அசலான முகத்தைப் படம் பிடிக்க வெகு ஜன கதைக்களம் போதாது என்பது என் தாழ்மையான கருத்து.

தினசரி பார்க்க கிடைக்கும் மனிதர்களின் வாழ்வியலில் ஒரு விதமான மலட்டுத்தனம் இருப்பதாக சொல்லியிருந்தேன். இதற்கு காரணம் மனிதர்கள் அல்ல.

ஒரு சமூகம் ஒரு கட்டத்துக்கு மேல் அதன் மையக்கொள்கையில் நீர்த்துப் போய்விடும். ஒரு காலத்தில் அடுத்த நாட்டுக்குப் போய் போர் செய்து வீழ்த்தி அடிமை ஆக்குவது ஒரு கலாச்சாரமாக இருந்தது. இப்போது அது இல்லை. பத்தாண்டுகள் முன் வரை தொழில், அது தொடர்பான விளம்பரம், மார்கெட்டிங் போன்றவை கலாச்சாரமாக இருந்தது. இப்போது அதுவும் நீர்த்துப்போய் பொருளாதாரம் பாதாளம் போய்விட்டது. பெரிய பெரிய நிறுவனங்களே மஞ்சள் நோட்டீஸ் அளிக்கின்றன.

இந்தச்சமூகம் அதன் மையக்கொள்கையில், பார்வையில் ஒரு saturated state க்கு வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். இக்காரணத்தாலும் வெகு ஜனம் பற்றி எழுதுவதில் எனக்கு எந்த பலனும் இல்லை என்பது என் வாதம்.