என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 15 February 2020

சலனம்

சலனம்


ஒரு நல்ல நூல், தனக்கான சலனத்தை எப்படியேனும் உருவாக்கிவிடும்.

2009லிருந்து எழுதும் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் எட்டு ஆண்டுகள் இங்கிலாந்திலும், ஹாங்காங்கிலும், தற்போது 2014 துவங்கி அமெரிக்காவிலும் கழிந்திருக்கிறது.

பெரிய வாசகர் பரப்போ, பலதரப்பட்ட வாசகர்கள் அடங்கிய நண்பர்கள் குழுவோ எனக்கு இந்தப் பத்து ஆண்டுகளில் அமையப்பெறாமல் போனதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். எழுதத்துவங்கிய போதே இங்கிலாந்தில் தான் முதல் இரண்டு வருடங்கள் இருந்தேன். திரும்பிய பக்கமெல்லாம் இந்திக்காரர்கள் மற்றும் தெலுங்கர்கள். இப்போது 2019 வரை கூட அதுதான் நிலைமை. அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழர்கள் இருந்தாலும், வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மிக மிக சொற்பம்.

நானாக அணுகிய ஒன்றிரண்டு இடங்களிலும், புறக்கணிப்பே பதிலாகக் கிடைத்தது. யாரையும் குறை சொல்வதற்கு இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள். நம்மிடத்தில் நாம் இருந்துகொள்வதே உசிதம் என்று தோன்றிய நாட்கள் அவைகள்.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பார்கள்.

எழுதத்துவங்கிய காலத்தில் ஒன்றிரண்டு பேர் பழக்கமானார்கள். ஆனால், போட்டி மனப்பான்மை எப்பேற்பட்ட நட்பையுமே அடித்துச் சாய்த்துவிடும் எனும்போது, வெறும் அறிமுகமும் இரண்டு மூன்று முறை நீண்ட பேச்சும் எம்மாத்திரம்? இங்கேயும் யாரையும் குறை சொல்வதற்கில்லை.

வெறும் எழுத்து மட்டும் போதாது என்பதை உணர்ந்துகொண்ட தருணங்கள் அவைகள். இருப்பினும் சில செய்திகள் ஜெர்க் அடித்துவிடுகின்றன.

"உங்கள் எண் என்ன?" என்கிற என் கணிதப்புனைவு நாவல் சிங்கப்பூரில் உள்ள மற்றுமொரு நூலகமான Ang Mo Kio Library யிலும் வைக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் வாசகி ஒருவர் மூலம் தெரிந்துகொள்கிறேன்.

கமலஹாசன் ஒரு பேட்டியில் சொன்னது நினைவுக்கு வருகிறது. 'ஓட்டுக்கு இத்தனை என்று பணம் தராமல் பெற்ற வெற்றி' என்றார். அது போல எந்த லாபியும் செய்யாமல் கிடைத்த சலனம் இது.

ஒரு நல்ல நூல், தனக்கான சலனத்தை எப்படியேனும் உருவாக்கிவிடும்.