என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 29 February 2020

ஐடியா திருட்டும் சினிமாவும் - 2

ஐடியா திருட்டும் சினிமாவும் - 2


கட்டுரையின் முதல் பகுதி:
https://ramprasathkavithaigal.blogspot.com/2020/02/blog-post_28.html


விஜய் சேதுபதி, மாதவன் நடித்த 2017ல் வெளியான 'விக்ரம் வேதா'வின் ஒரு காட்சி.

வேதா ஒரு சரக்கை போலீஸ் செக்போஸ்டைத் தாண்டி கொண்டு செல்ல வேண்டும். அதை வேதா ஒரு சவாலாக எடுத்துக்கொள்கிறான். அதற்கென அவன் ஒரு காரியம் செய்கிறான். 'விக்ரம் வேதா' திரைப்படம் நீங்கள் பார்த்திருந்தால், இந்தக் காட்சி உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போது நீங்கள் இந்த ஆகஸ்டு 2010ல் வெளியான சிறுகதையை வாசித்துப் பாருங்கள்...

http://old.thinnai.com/?p=11008013

சிறுகதை வெளியான திகதியை கவனியுங்கள். ஆகஸ்ட் 2010.

இந்தச் சிறுகதை அப்போதிருந்த திண்ணை இணைய இதழில் வெளியானது.

வேதா பாத்திரம், இந்தச் சிறுகதையில் சொன்னது போலவே ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கும்.

ஒற்றுமைகள்: ஒரு போலீஸ் செக்போஸ்ட், ஒரு பழுதடைந்த கார், அதில் சரக்கு... அதை tow செய்வது போல் நடித்து வேதா கதாபாத்திரம் அந்த சரக்கை கடத்தும் விதம்.

"விக்ரம் வேதா"  திரைப்படத்தில் இந்தக் காட்சிகளைப் பார்த்த கணங்கள் தன்னம்பிக்கை தருபவைகளாக இருந்தன, சினிமாவின் தரத்துக்கு என்னாலும் யோசிக்க, காட்சிகளை அமைக்க, ட்விஸ்ட் அமைக்க முடிகிறது என்று தன்னம்பிக்கை அடைந்த கணங்களாக இருந்தன இவைகள். வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதற்குக் காலம் கனியவில்லையோ என்னவோ? கடவுளுக்கே வெளிச்சம். இறைவனின் படைப்பில் எல்லாவற்றுக்கும் ஓர் அர்த்தம் இருக்கிறது என்பார்கள். காரணம் இல்லாமல் யாருக்கும் எதையும் இறைவன் தருவதில்லை என்பார்கள். நடக்கும் போது நடக்கட்டும் என்றிருப்பதையன்றி வேறெதுவும் பன்னிரண்டாயிரம் மைல்கள் அப்பால் இருந்து கொண்டு செய்வதற்கில்லை.

ஒன்று மட்டும் திண்ணம். என் ஆக்கங்களை யார் யாரோ வாசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலிருந்து பெறப்படும் ஐடியாக்கள் எங்கோ யாருக்கோ பயனுள்ளதாக இருக்கிறது.

இந்த என் படைப்புக்களை தங்கள் திரைப்படங்களில் பயன்படுத்திக்கொள்ளவென என்னை யாரேனும் அணுகியிருந்தாலும் தாராளமாக என் படைப்புக்களை பயன்படுத்திக்கொள்ளுமாறும் பதிலுக்கு திரைப்படத்தின் ஓர் ஓரத்திலேனும் என் பெயரைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கேட்டிருப்பேன். பணம் எனக்கு ஒரு பொருட்டல்ல.

பொறியியல் துறை எனக்குத் தேவையான சம்பளத்தை வழங்குகிறது.

ஆனால், குருநாதனின் நிலை அப்படி அல்ல. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேனும் அவருடைய நியாயமான உழைப்புக்கு ஊதியம் தந்திருக்கலாம் என்பது என் கருத்து. சினிமாவில் சாதிக்கிறேன் என்று வீட்டை விட்டு ஓடி வந்தவர் என்று எங்கோ படித்தேன். இருமாப்பு அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்திருக்கலாம்.

சாதிக்காமல் வீடு திரும்புவதைக் காட்டிலும் தெருவில் வாழ்ந்துவிடலாம் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ?

"எது பிடிக்கிறதோ அதைச் செய்" என்று சொல்வது தவறோ என்று சில நேரம் யோசிக்க வைத்துவிடுகிறார்கள்.  "முதலில் குடும்பமும், சோறும். பிறகு தான் மற்றதெல்லாம்" என்பதையும் கருத்தில்  கொள்ள வேண்டும் என்று அழுத்தமாய்ச் சொல்ல வைத்துவிடுகிறார்கள். குரு நாதனின் நிலை மாற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். 

Friday, 28 February 2020

ஐடியா திருட்டும் சினிமாவும்

ஐடியா திருட்டும் சினிமாவும்


"பிரபல இயக்குனர் தனது கதையை திருடிவிட்டதால், மனநலம் பாதிக்கப்பட்டு பிச்சைக்காரர் போல் இருக்கும் உதவி இயக்குனர் !"

இப்படித்தான் அறிமுகமானது அந்தச் செய்தி. "பார்வை ஒன்றே போதுமே" சிம்ரன் - குணால் நடித்த படத்தின் உதவி இயக்குனர் குருநாதன் தான் வாய்ப்பு தேடி பலமுறை அலைந்த போது எதுவும் கிடைக்காமல் சாப்பிட வழியில்லாமல் பிச்சைக்காரர் போல கிடந்து பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

அவரிடம் அருகில் சென்று விசாரித்த போது அவர் தன்னுடைய கதைகளை பிரபல இயக்குனர்கள் திருடிவிட்டனர் என கூறியுள்ளார். மேலும் அவர் கவிதைகள் பல எழுதி வைத்திருந்தாராம். அவரை பார்த்து பரிதாபப்பட்டு, பக்கத்தில் இருக்கும் டீக்கடை காரர் டீ தந்திருக்கிறார். அதன் பிறகு அவருக்கு சாப்பாடு பக்கத்து ஓட்டல்காரர் தந்திருக்கிறார். இவரால் இதுவரை யாருக்கும் எந்த தொந்தரவும், தொல்லையும் இல்லையாம்.

எனக்கென்னவோ குருநாதன் சொல்வதில் உண்மையின் சதவிகிதம் அதிகமிருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.

அறிவுத் திருட்டு என்பது மிக மிக மலிவாகிவிட்ட ஒன்று. ஐடியாவை உருவிக்கொண்டு பெயர் ஊர் மாற்றி தங்கள் பெயரில் வெளியிட்டுக்கொள்வார்கள். எனக்குத் தனிப்பட்ட முறையில் அனுபவம் இருந்திருக்கிறது.

அப்போதெல்லாம் சிறுகதைகள் கிறுக்கத் துவங்கியிருந்த காலம்.
படுக்கையறைக் கொலை என்ற தலைப்பில் மூன்று சிறுகதை எழுதினேன். அதில் மூன்றாவது இது.

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/1934-333

சிறுகதை வெளியான திகதியை கவனியுங்கள். ஜனவரி 2010.

நீங்கள்  முரண் திரைப்படம் பார்த்திருக்கலாம். அதன் கதை உங்களுக்கு பரிச்சயமாகியிருக்கலாம். சேரன், பிரசன்னா நடித்திருந்த 'முரண்' திரைப்படம் செப்டம்பர் 2011ல் வெளியானது.

என் சிறுகதைக்கும், முரண் திரைப்படம் திரைப்படமாக வெளியான காலத்திற்கும் இடைப்பட்ட காலம் சுமார் ஒன்றரை ஆண்டுகள்.

இந்த இரண்டுக்கும் ஒப்பீட்டளவில் ஒரு ஒற்றுமை கூடவா இல்லை என்கிறீர்கள்?

ஒரு குரூப் முரணை 'Strangers on a Train' பார்த்துக் காப்பி பாஸ் என்றது. 'Strangers on a Train' ல் சென்னை - பங்களூரு நெடுஞ்சாலை இல்லை.


******************************************************************

இதுதான் இப்படி என்றால் இன்னுமொன்றை சமீபமாகப் பார்த்தேன்.

'தர்பார்' படத்தில் ரஜினி சிறைக்கைதிகளுக்கு மத்தியில் வில்லனின் கார் அடையாளம் சொல்லி விசாரிக்கும் காட்சி வருகிறது.

"டயரோட அகலம் 10.4இன்சஸ். முன் டயருக்கும் பின் டயருக்கும் உள்ள இடைவெளி மூவாயிரத்து நூத்தி பத்தொன்பது மிமீ...." என்று போகிறது வசனம்.  (அமேசான் ப்ரைமில் உள்ள தர்பார் பிரதியில் இந்த வசனம் 2:19க்கு வருகிறது).

எனது 'இரண்டு விரல்கள்'  நாவலின் ஒரு பக்கத்தை இங்கே இணைத்திருக்கிறேன். எனது நாவலில் இந்தத் தகவலைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறேன்.




திரைப்படத்தில் இந்தத் தகவல் இருந்தாலும் வில்லனின் கார் கண்டுபிடிக்கப்படுவதற்கு இந்தத் தகவல் பயன்படுவதாகக் காட்டப்படுவதில்லை. பிறகு ஏன் இந்தத் தகவல்? திருடப்பட்டு சேர்க்கப்பட்டிருந்து பிற்பாடு அப்படியே விடப்பட்டிருக்கலாம்.

******************************************************************


இதையெல்லாம் பார்த்த பிறகும், 'இதெல்லாம் அக்மார்க் தற்செயல் தான் பாஸ்' என்று நீங்கள் சொன்னால், குருநாதன் போன்றோர் தெருவோரம் பிச்சை எடுக்கத்தான் வேண்டும். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

இந்த உலகில் குருநாதன் போன்றோர் கதை சொல்லும் ஒற்றைத் திறனுடன் எப்படியாவது நேர்மையாக உழைத்து சினிமாவில் முன்னேறிவிடலாம் என்று நினைத்துவிடக் கூடாது.

எப்படியாவது பொறியியல்/மருத்துவம் என்று காசு பார்க்கும் படிப்பைப்  படித்துவிட்டு கை நிறைய சமபாதிக்கும் இடத்துக்கு வந்துவிட்ட பிறகு "கலை ஆர்வத்தை" மேற்கொள்ளலாம். அதுதான் பாதுகாப்பும் கூட. இந்த உலகில் திறமைக்கு எவ்வித மரியாதையும் இல்லை.





Wednesday, 26 February 2020

நீ இன்னும் உழைக்கணும் ராம்பிரசாத்.....

"நீ இன்னும் உழைக்கணும் ராம்பிரசாத்து..." என்று சொல்லாமல் சொல்வதற்காகவே ஒன்பது நூல்களில் ஒன்றை மட்டும் ஜெர்மனி பல்கலைக்கழக நூலகத்தில் வைத்திருக்கிறார்கள்....

தகவல் பகிர்ந்த ஜெர்மனி வாசகிக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...





ஒப்பனைகள் கலைவதற்கே - ஒரு பின்னூட்டம்/விமர்சனம்

ஒப்பனைகள் கலைவதற்கே - ஒரு பின்னூட்டம்/விமர்சனம்
Hi this is Arthi, dentist. We met in book fair during novel release. I think u remember me.. novel is so good. I think this novel has to read by all women.. I enjoyed. Ur view towards society is nice but changing it is very difficult. Ur view towards girl's choosing a guy is perfect but sorry to ask u, had any experience? Excellent keep on writing. Please do make many people to read this novel. Thank u.

Wednesday, 19 February 2020

சில கவிதைகள்

நாடகங்களின் தேவைகள் - கவிதை


ஏதோவோர் நாடகத்தின் பாதையில்
ஒருமுறையேனும்,
எப்போதேனும்
குறுக்கிட்டே விடுகிறோம்...

அது ஒரு தேர்வு என்று
நாம் அறிவதில்லை...

நம்மைத் தேர்ந்தெடுக்க‌ நம்
இருப்பும்,
இயல்புகளும் மட்டுமே
அவைகளுக்கு போதுமென்பதை
நாம் உணர
அவைகள் எப்போதுமே அனுமதிப்பதுமில்லை...

- ராம்ப்ரசாத்















காட்டுப் பாதைகள் -  கவிதை 


நம்மையும் அறியாமல்
தவறுதலாக என்றேனும்
காடுகளுக்குள் நுழைந்துவிடுகையில்
நாம்
குழம்பித்தான் போகிறோம்...

காடுகளுக்கு எவ்வாறு
ஒரு துவக்கம் இருக்கிறதோ,
அவ்வாறே
ஒரு முடிவும் இருக்கிறது...

காட்டை விட்டு
வெளியேறும் பாதையில் தான்
பயணிக்கிறோம் என்றெண்ணியவாறேதான்
நாம் கிடைத்த பாதைகளிலெல்லாம்
பயணிக்கிறோம்...

இறுதியாக
நமக்குக் கிடைத்த பாதைகளை வைத்தே
காடு
நம்மில் உருக்கொள்கிறது...


 - ராம்ப்ரசாத்

Tuesday, 18 February 2020

தமிழும், ஒடுக்கப்படுதலும் - 2

தமிழும், ஒடுக்கப்படுதலும் - 2



எனக்கு நினைவு தெரிந்தே தமிழ் மெல்ல மெல்ல சாகிறது என்ற கூக்குரல் கேட்டபடி இருக்கிறது.

அப்படியானால், தமிழை, உலகை ஆளும் மொழிகளோடும், இந்தியாவுக்குள்ளேயே மட்டம் தட்டும் மொழிகளோடும் ஒப்பீடு செய்தால் தமிழும், தமிழரும் ஒடுக்கப்படுகிறார்கள் என்றே அர்த்தமாகிறது. (ஈழத்தமிழரின் இனவழிப்பையும், அதற்கு மத்திய அரசு காட்டிய மெத்தனத்தையும் கணக்கில் கொண்டால் இந்த கணிப்பு மேலும் மோசமாகக்கூடிய வாய்ப்புக்கள் பிரகாசம்).

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கீடு (reservation) இருக்கிறது.
ஆனால் ஒதுக்கீடுக்கெதிரான பிற ஜாதியினரின் வாதம் என்னவென்றால் ஐயாயிரம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மூத்த சந்ததியினரின் தகுதிக்காக , தாழ்த்தப்பட்டவர்களுக்கு நடப்புலகில் ஏன் ஒதுக்கீடு தரவேண்டும் என்பது. உழைப்பவருக்கே பலனும் கிடைக்க வேண்டும் என்பதே சரியான அணுகுமுறையாக பிற ஜாதியினர் முன் வைக்கிறார்கள்.

ஆனால், தமிழின் பெருமை பேச நாம் இன்னும் சங்க இலக்கியங்களையே கையிலெடுக்கிறோம். என் கேள்வி என்னவெனில், ஒரு மொழிக்கான மரியாதை, அந்த மொழியில் ஐயாயிரம் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் இயங்கிய ஆன்றோர்களின் தகுதிக்கா, அல்லது நடப்புலகின் தமிழ் மற்றும் தமிழரின் தகுதிக்கா என்பதுதான்?

'சங்கத்தமிழ் இன்றும் தமிழர்க்கு பயனுள்ளதாக இருக்கிறதா இல்லையா'  என்கிற கேள்வியின் பின் இருக்கும் முரணாக நான் நினைப்பது என்னவென்றால், ஒப்பீட்டளவில் சமமான இரண்டு பிரச்சனைகளுக்கு இருவேறு விதமாக எதிர்வினைகள் ஆற்றப்படுகிறது என்பதே.

தமிழ் நடப்புலகை அதிகம் பேசவேண்டும் என்று நான் கருதுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

உழைப்பவருக்கே அதற்குண்டான பலனும் கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படைப் புரிதலைக் கொண்டு இயங்கவே  நான் விரும்புகிறேன். ஏனெனில் அதுதான் அறமும் கூட.

தமிழும், ஒடுக்கப்படுதலும்

தமிழும், ஒடுக்கப்படுதலும்


நம் எல்லோருக்கும் தமிழ் மீது ஒரு வாஞ்சை இருக்கிறது.

அது இல்லாமல், தமிழில் இயங்க ஆரம்பிப்போமா? நம் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லித் தருவோமா? கண்ணதாசன் வாலி என்று தேடித்தேடிப் படிப்போமா? இளையராஜா பாடல்களுக்கு அடித்துக்கொள்வோமா?

தாய் மொழி என்பதால் மட்டும் வந்ததல்ல அந்த வாஞ்சை. தமிழ் மொழியானது தன் தனிச்சிறப்பால், நம் சிந்தனைகளுக்கு ஒரு உரம் அளிப்பதாய் இருக்கிறது. ஒரு ஆசிரியர் முன் மாணவன் மரியாதை நிமித்தம் ஒடுங்குவது போல, ஒரு அப்பாவின் முன் ஒரு மகன் ஒண்டுவது போல. அதில் மரியாதை மட்டும் அல்ல. மதிப்பு, மரபு, பரிசுத்தம், புத்துணர்வு என்று எல்லாமும் இருக்கிறது.

சுத்தமானத் தமிழைப் பேசுங்கால், உள்ளுக்குள்ளே மனம் புனிதமடைவதைப்போல ஒரு பிரஞை வருகிறதே. தமிழுக்கும், புனிதத்துக்கும் என்ன தொடர்பு? தொடர்பு உண்மையில் நாம் தான். தமிழ் மீது நமக்கிருக்கும் பற்று தான்.

நம் மொழி, நம் மக்கள், நம் கலாச்சாரம் இதுவே நம்மை ஒன்று சேர்க்கும் ஒரு பாலமாக இருக்கிறது. எங்கேனும் வேலை நிமித்தம் வெளி நாடு செல்ல நேர்ந்தால் , முதலில் ஒரு தமிழ்க்குடும்பத்தைத் தேட மனம் அலைபாய்கிறது. பர்கரும், பீட்ஸாவும் தின்று செத்துப்போன நாக்கில் ஒரு கவளம் சாம்பார் சாதம், பூண்டு ஊறுகாய் கிடைக்குமென்றால்  முப்பது மைல் தள்ளி உள்ள சாய்பாபா கோவிலுக்குப் போவதற்கு லிஃப்ட் யாரிடம் கேட்பது என்று நம் மனம் அலைபாய்கிறது.

தமிழ் நம் எல்லொருக்கும் வேண்டும்.
தமிழ் நம் பிள்ளைகளுக்கும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வேண்டும்.

தமிழ் வேண்டும் என்பதில் நம் எல்லோருக்கும் ஒரே பார்வை இருக்கிறது. அதில் கிஞ்சித்தும் மறு இல்லை.
தமிழை தலைமுறை தாண்டி நீட்டிக்க வைப்பதில் தான் நம் எல்லோருக்கும் ஒரே பார்வை இல்லை.  தமிழை நீட்டிக்க நம் ஒவ்வொருவரிடமும் கற்பனையில் ஒரு மார்க்கம் இருக்கிறது.

இளரத்தங்கள் தமிழைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதோர் மார்க்கம்.
கலாச்சார விழாக்களில் சங்க இலக்கியப் பாடல் ஒலிக்க வேண்டும் என்பதோர் மார்க்கம்.
தமிழ்க் கலாச்சாரத்தை முன் நிறுத்தும் ஒரு அரசியலமைப்பு வேண்டும் என்பதோர் மார்க்கம்.

இப்படி பலர் பல மார்க்கங்களைக் கொண்டிருப்பதால் தான்  இந்தி புறக்கணிப்பு என்று தமிழ்நாடே கொந்தளித்தாலும், ஒரு சாரார் தத்தம் பிள்ளைகளை இந்தி ட்யூஷனுக்கு அனுப்புகிறார்கள். இந்தி கற்றுக்கொள்ள அனுப்புவதால் அவர்களைத் தமிழின துரோகிகள் என்று புரிந்துகொள்ளலாகாது.

தமிழ்ப்பற்று என்பது வேறு. பிழைத்திருத்தல் என்பது வேறு.

தமிழ் நம் எல்லோருக்கும் வேண்டும் தான். அதற்காக நம்  பிள்ளைகளைத் தமிழ் மீடியத்திலா சேர்க்கிறோம்? இல்லை. நம் பிள்ளைகள் ஆங்கில வழியில் தான் கல்வி கற்கிறார்கள். தமிழ் வழிக்கல்வி என்பது பொருளாதாரம் சார்ந்த பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. தமிழ் வழியில் படித்து பொறியியல் வரை வந்துவிட்ட ஒருவரை, ஆங்கிலமின்றி பன்னாட்டி கணிணி  நிருவனங்களில் நாம் வேலைக்கு எடுத்துக்கொள்கிறோமா? இல்லை.,

தமிழ் நம் எல்லோருக்கும் வேண்டும் தான். ஆனால், நிதர்சன உலகம் என்றும் ஒன்று இருக்கிறது.

சங்க காலத்தில் தமிழர்கள் இந்தியா முழுமைக்குமட்டுமல்லாமல், இன்றிருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தாண்டியும் அந்தப்பக்கம் கம்போடியா, சீனா வரை கூட பரவி இருந்தார்கள். தமிழ் , இன்றிருக்கும் அங்கிலம் போல் ஒரு உலகளாவிய மொழியாக இருந்திருக்க வேண்டும். அப்போது தமிழிலேயே புழங்குவது சாத்தியமாயிற்று. இன்று தமிழ், தமிழ் நாடு என்கிற மாநிலத்துக்குள் சுருங்கிவிட்டது துரதிருஷ்டவசமானதுதான்.

கிட்டத்தட்ட ஒடுக்கப்பட்டவன் போல.
ஒரு ஒடுக்கப்பட்டவனை தமிழாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒடுக்குபவர்களை ஆங்கிலமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒடுக்கப்பட்டவன் தனக்குள்ளே புழங்குவது மென்மேலும் ஒடுக்கப்படவே வழிவகுக்கும் என்று கருதுகிறேன்.  ஏனெனில், நாம் தமிழ் மட்டுமே பேசப்பேச ஏனையோர்களிடமிருந்து அன்னியப்பட்டுப் போகவே வாய்ப்பிருக்கிறது.

ஒரு பேட்டியில் இயக்குனர் பாரதிராஜாவிடம் இப்படிக் கேட்கப்பட்டது.
"ஆஷா போஸ்லே முதற்கொண்டு பத்ம ஷீ வாங்கியாகிவிட்டது. தமிழில் பாடுபவர்கள் ஏன் அப்படி வாங்கவில்லை?" என்பது கேள்வி.
"தேர்வுக்குழுவில் இந்தி பேசக்கூடிய தமிழர்கள் இல்லை. அதனால் நம் தமிழ்க் கலைஞர்கள் குறித்துப் பேசத் தேர்வுக்குழுவில் யாருமில்லை. இது நமக்குத்தான் இழப்பாகிறது." என்றார்.

ஒரு ஒடுக்கப்படுபவன், மென்மேலும் தான், தன்னுடைய, தன் என்று புகழ்பாடிப் பேசிக்கொண்டிருப்பது மென்மேலும் ஒடுக்கப்படவே காரணமாகும் என்றெண்ணுகிறேன்.

ஒரு ஒடுக்கப்படுபவன் எப்போது முன்னேறுவானென்றால், 'எங்களாலும் முடியும்' என்று காட்ட முயலும் போது தான் சுற்றி உள்ளவர்களால் கவனிக்கப்படுவான் என்பது என் வாதம். எங்களலும் முடியும் என்று காட்ட பிற சமூகங்களுக்குச் சமமாய் அவனும் படித்து, வேலைவாய்ப்பை நேர்மையாகப் பெற்று , பொருள் சேர்த்து முன்னேறுகையில், 'என் ஜாதிதான் உசந்தது' என்று சொல்லிக்கொண்ட வாய்கள் நரம்பிழந்து போகின்றன.

சங்கத்தமிழ் இன்றும் தமிழர்க்கு பயனுள்ளதாக இருக்கிறதா இல்லையா என்பது கேள்வி அல்ல.

சங்கத்தமிழின் பெயரால் நாம் இன்னமும் தான், தன்னுடைய, தன் என்று புகழ்பாடிக் கொண்டிருக்கிறோமா என்பதுதான் கேள்வி.

நிதர்சனம் என்னவெனில், தமிழ் நாட்டுக்குள் மேல்ஜாதி , கீழ்ஜாதி என்ற பாகுபாடிருக்கலாம். தமிழர்கள் அல்லது தமிழ் பேசுபவர்கள் என்ற புரிதலில், தமிழும், தமிழர்களும் ஒட்டுமொத்தமான உலகின் பார்வையில் 'கீழ் ஜாதி' ஆகி இருக்கிறோம். இப்போது நம் முன்னிருக்கும் சவால், நாம் பிற எந்த ஜாதிகளுக்கும் குறைந்தவர்களல்ல என்று காட்டுவதே.

நாம் மென்மேலும் தமிழுக்குள்ளாகவே இயங்கிக்கொள்வதில், எந்த வகையிலும்  நாம் பிற (உலக மொழிகள்) ஜாதிகளைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்று காட்ட இயலாது. தமிழ் தான் ஆகச்சிறந்த மொழி என்று தமிழர்கள், தமிழர்களுக்குள்ளேயே முழங்கிக்கொள்வது, 'ஒரு ஒடுக்கப்பட்டவன், தன் இனம் தான் மாபெறும் இனம்' என்று தன் இனத்துக்குள்ளேயே முழங்கிக்கொள்வது போன்றது.

பிற (உலக மொழிகள்) ஜாதிகள் மேற்கொள்ளும் சவால்களை, நாம் நம் தமிழ் கொண்டு வெற்றி கொள்வதில் தான் தமிழின் முன்னேற்றம் இருக்கிறது என்பது என் ஸ்திரமான வாதம்.

இந்தப் பின்னணியில் தான், தமிழ் நடப்புலக அறிவியலும், கணிதமும் பேசவேண்டும் என்கிறேன். இதுவும் ஒரு மார்க்கம் தான். நம்மிடையே இருக்கும் பல மார்க்கங்களில் இதுவும் ஒன்று தான் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மார்க்கங்கள் எதுவானாலும், வளர்வது தமிழாகட்டும் என்பதுவும் எனது வாதமே.

Saturday, 15 February 2020

சலனம்

சலனம்


ஒரு நல்ல நூல், தனக்கான சலனத்தை எப்படியேனும் உருவாக்கிவிடும்.

2009லிருந்து எழுதும் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் எட்டு ஆண்டுகள் இங்கிலாந்திலும், ஹாங்காங்கிலும், தற்போது 2014 துவங்கி அமெரிக்காவிலும் கழிந்திருக்கிறது.

பெரிய வாசகர் பரப்போ, பலதரப்பட்ட வாசகர்கள் அடங்கிய நண்பர்கள் குழுவோ எனக்கு இந்தப் பத்து ஆண்டுகளில் அமையப்பெறாமல் போனதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். எழுதத்துவங்கிய போதே இங்கிலாந்தில் தான் முதல் இரண்டு வருடங்கள் இருந்தேன். திரும்பிய பக்கமெல்லாம் இந்திக்காரர்கள் மற்றும் தெலுங்கர்கள். இப்போது 2019 வரை கூட அதுதான் நிலைமை. அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழர்கள் இருந்தாலும், வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மிக மிக சொற்பம்.

நானாக அணுகிய ஒன்றிரண்டு இடங்களிலும், புறக்கணிப்பே பதிலாகக் கிடைத்தது. யாரையும் குறை சொல்வதற்கு இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள். நம்மிடத்தில் நாம் இருந்துகொள்வதே உசிதம் என்று தோன்றிய நாட்கள் அவைகள்.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பார்கள்.

எழுதத்துவங்கிய காலத்தில் ஒன்றிரண்டு பேர் பழக்கமானார்கள். ஆனால், போட்டி மனப்பான்மை எப்பேற்பட்ட நட்பையுமே அடித்துச் சாய்த்துவிடும் எனும்போது, வெறும் அறிமுகமும் இரண்டு மூன்று முறை நீண்ட பேச்சும் எம்மாத்திரம்? இங்கேயும் யாரையும் குறை சொல்வதற்கில்லை.

வெறும் எழுத்து மட்டும் போதாது என்பதை உணர்ந்துகொண்ட தருணங்கள் அவைகள். இருப்பினும் சில செய்திகள் ஜெர்க் அடித்துவிடுகின்றன.

"உங்கள் எண் என்ன?" என்கிற என் கணிதப்புனைவு நாவல் சிங்கப்பூரில் உள்ள மற்றுமொரு நூலகமான Ang Mo Kio Library யிலும் வைக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் வாசகி ஒருவர் மூலம் தெரிந்துகொள்கிறேன்.

கமலஹாசன் ஒரு பேட்டியில் சொன்னது நினைவுக்கு வருகிறது. 'ஓட்டுக்கு இத்தனை என்று பணம் தராமல் பெற்ற வெற்றி' என்றார். அது போல எந்த லாபியும் செய்யாமல் கிடைத்த சலனம் இது.

ஒரு நல்ல நூல், தனக்கான சலனத்தை எப்படியேனும் உருவாக்கிவிடும்.





Monday, 10 February 2020

பெரிய ஆளும், சிறிய ஆளும்

பெரிய ஆளும், சிறிய ஆளும்


The prestige என்றொரு படம். மேஜிக் பற்றியது. ஆனால், interludeல் எடிசன்/டெஸ்லா குறித்தும் வருகிறது.

எடிசன் காலத்தில் எடிசனை விடவும் டெஸ்லா தொழில் நுட்பத்தில் வல்லவராக இருந்தார். அதனால் எடிசனே டெஸ்லாவை வேலைக்கு வைத்துக்கொண்டார். எடிசனுக்கு தன் கண்டுபிடிப்பை வியாபாரம் செய்வதில் தான் ஆர்வம் இருந்தது. டெஸ்லாவுக்கோ கண்டுபிடிப்புகளில் மட்டுமே ஆர்வம் இருந்தது.

எடிசனுடன் பொருத்திப் பார்க்கின் டெஸ்லா அதிபுத்திசாலி மற்றும் பண்பாளர். டெஸ்லாவிடமிருந்த ஒரே ஒரு எதிர்மறைப் பண்பு, டெஸ்லா கொஞ்சம் introvert. அவருக்கு தொழில் நுட்பங்கள் மீது அபாரமான ஆழமான புரிதல் இருந்தது. இப்படி இருப்பவர்கள் பெரும்பாலும் introvert ஆகத்தான் இருப்பார்கள். ஐன்ஸ்டைன் முதல் ராமானுஜன் வரை பெரும்பாலான நேர்மையான அதிபுத்திசாலிகள் introvert களாகத்தான் இருப்பார்கள்.

ஆனால் எடிசனிடம் அறிவு ஜீவித்தனத்தை விடவும் வியாபார மூளையே அதிகம் இருந்தது. எடிசன் DC current கண்டுபிடிக்கிறார். டெஸ்லா கண்டுபிடித்தது ACஐ.  அதுமட்டுமல்லாமல், வயர் இல்லாமலேயே மின்சாரத்தைக் கடத்தவும், டெலிபோர்டெஷன் செய்யவும் கூட வழிமுறைகள் அவரிடம் இருந்தன. ஆனால் டெஸ்லா தன் புத்தியை பணமாக்க முயற்சிக்கவில்லை.

எடிசன் வியாபாரம் செய்ய மனிதர்களின் ஆதரவு தேவை என்பதை அறிந்துவைத்திருந்தார். விளைவு: தன் ஆதரவாளர்களை வைத்து டெஸ்லா எங்கு சென்றாலும் தொடர்ந்து சென்று அவரது  ஆராய்ச்சிக்கூடத்தை கொளுத்தினார். தொடர்ந்து இடையூறுகள் செய்தார்.

காலம் டெஸ்லா யார் என்று நிரூபித்தது. ஆயினும் எடிசன் ஃபார்முலா இன்னமும் அழியவில்லை.

எடிசன் ஃபார்முலாவைப் பின்பற்றி இன்னமும் ஜல்லி அடிப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடமிருந்தெல்லாம் சில பொதுவான குணாதிசயத்தைப் பார்க்கலாம்.

1.  என்ன செய்தாலும் அதற்கு ஜால்ரா தட்ட ஒரு கூட்டத்தை வைத்திருப்பார்கள். அந்த கூட்டத்தின் பசி அறிந்து தொடர்ந்து அதற்கு தீனி தந்துகொண்டே இருப்பார்கள். கூட்டமும் வளராது. இவர்களும் வளர மாட்டார்கள்.

2. பேசுவது புழங்குவது எல்லாமே தான் உருவாக்கி வைத்திருக்கும் குழுவுடன் மட்டுமே என்றிருப்பார்கள். புதியவர்களிடம் பேசுவதில்லை. பேசினால் உருவாக்கிவைத்திருக்கும் 'பெரிய ஆள்' பிம்பம் உடைந்துவிடும் அல்லவா?

3. பொதுவான, திறன்களை சோதிக்கும் தளங்களை இவர்களாகவே ' நான் அதையெல்லாம் தாண்டி ரொம்ப நாளாச்சு. அதெல்லாம் வளர்றவங்களுக்குத்தான் தேவை. எனக்கில்லை' என்று தவிர்த்துவிடுவார்கள். உண்மையில், அங்கெல்லாம் இவர்களுக்கு மரியாதை இருக்காது என்பது இவர்களுக்கே தெரியும். அங்கெல்லாம் போனால் வளர்த்துவைத்திருக்கும் பெரிய ஆள் பிம்பம் உடைந்துவிடுமே என்ற கவலை இவர்களுக்கு.

நிஜமாகவே திறமைசாலிகளை கண்டுகொள்ள நான் சில வழிகள் வைத்திருக்கிறேன்.

1. எத்தனை உயரம் வளர்ந்தாலும், ஜால்ரா தட்டும் கூட்டத்துக்கிடையே என்று மட்டும் ஓய்ந்துவிடாமல் தொடர்ந்து எவரையும் எதிர்கொள்ளும் திறன்களுடன் இருப்பது.  இவர்கள் யாரையும் கண்டு பயப்பட மாட்டார்கள். ஆதலால், குழுவைத்தாண்டி வெளி ஆள் அண்டினாலும் கவலை இல்லை இவர்களுக்கு.

2. எத்தனை உயரம் வளர்ந்தாலும், திறன்களை சோதிக்கும் தளங்களின் மூலம் தன் திறன்களை கூர் தீட்டிக்கொள்ள தன்னிடத்திலிருந்தும் கூட  இறங்கி வர தயங்க மாட்டார்கள்.   இதுதான் உண்மையான திறமை.  நிஜமாகவே திறமைசாலியாக இருப்பவன் எந்த தளத்தைக் கண்டும் அஞ்சமாட்டான்.

3. உண்மையில் குழு என்பது நம்மை நம் திறன்களை வளர்க்காது. மழுங்கடிக்கவே செய்யும். ஆதலால் நிஜமான திறமைகள் கொண்டிருப்பவன் முதலில் குழு மனப்பான்மையை ஊக்குவிக்க மாட்டான்.

எனக்குத் தெரிந்து இவைகள் தான் 'உண்மையான பெரிய ஆட்கள்' என்பவர்களின் பண்புகளாகப் பார்க்கிறேன். ஆதலால், ஒரு குழுவுக்குள்ளேயே அதிகம் புழங்குபவர்கள், திறன்களை சோதிக்கும் தளங்களை புறக்கணிப்பவர்கள் என் பார்வையில் கள்ள மெளனிகளே. அவர்கள் எடிசன் போல. தான் வாழும் காலம் வரைக்கும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே புழங்கி செத்து மடிவார்கள். காலம் அவர்களை மிக எளிதாகப் புறக்கணித்துவிடும்.

The Prestige திரைப்படத்தில் இதை ரொம்பவும் subtle ஆகக் காட்டியிருக்கிறார்கள். Tesla is true genius.

Sunday, 9 February 2020

தமிழும் ஃபெயிலியர் மாடலும்

தமிழும் ஃபெயிலியர் மாடலும்


உலகின் மூத்த மொழி, ஆதித்தமிழர் மொழி என்றெல்லாம் தமிழுக்கு பெருமைகள் பல இருப்பினும், தமிழ்ச்சமூகங்களுக்குள்ளேயே தமிழில் எழுதப் படிக்க தெரியாதவர்களின் தலைமுறையாக இன்றைய தலைமுறை இருக்கிறது.  போகப்போக இது எப்படி உருமாறும் என்று கொஞ்சமே கொஞ்சம் கணித்தாலும் பகீரென்று இருக்கிறது.

நம்மூரில் சில வழமைகள் இருக்கின்றன. தமிழ்க் கவிஞர் என்றால் ஜோல்னா பை சகிதம், ஆல மரத்தடியிலோ அல்லது ரயில் நிலைய பிளாட்பாரங்களிலோ அமர்ந்து பேனாவும், காகிதமுமாய் காணப்படும் ஒருவர் என்ற பிம்பம் முன்னர் இருந்தது. அந்த பிம்பம் இப்போதும் அதிகம் மாற்றத்துக்குள்ளாகவில்லை. இப்போதும் தமிழ் எழுத்தாளர் தமிழில் எழுதிவிட்டு அரசு பேருந்துக்கு வெய்யிலில் காத்திருப்பவராக, மாதத்தின் முதல் பாதி தாண்டிவிட்டால் கையைப் பிசைபவராக தான் இருக்கிறார். தமிழில் இயங்குபவர்களுக்கு யாரும் பெண் தரவோ, பெண் எடுக்கவோ கூட முன்வருவதில்லை. சமூகத்தில் பெரிய அங்கீகாரமோ, மரியாதையோ இல்லை.

இந்த பிம்பம் தமிழுக்கும், 'தமிழால்' என்ற கருத்தாக்கத்துக்கும், 'ஒரு ஃபெயிலியர் மாடல்' என்ற பட்டத்தை மட்டுமே அளிக்கிறது. தமிழில் படிப்பதை, எழுதுவதை பலர் உயர்வான ஒன்றாகக் கருதுவதில்லை. பொது இடங்களில் அது தானாகவே ஒரு தாழ்வு மனப்பான்மையை அளித்துவிடுகிறது.

ஆனால் இந்த நிலை மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் கனவுகளில் தமிழ் எழுத்தாளனும், கவிஞனும் ஒரு அமெரிக்க, ஐரோப்பிய எழுத்தாளர், கவிஞருக்கு நிகரான பிரபல்யமும், வாழ்க்கையும் பெறுபவனாக இருக்கிறான்.

ஐ.டி. துறை அடைந்திருக்கும் வரவேற்பை தமிழ் மொழி  அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தமிழ் மொழி, ஆங்கில மொழி இப்போது அடைந்திருக்கும் வரவேற்பையும் மதிப்பையும் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆங்கிலம் நடப்பு உலகின் அறிவியலையும் கணிதத்தையும் வெளிப்படுத்துவது அந்த மொழியை இளம் தலைமுறையினரிடையே தொடர்ந்து உயிர்ப்பில் இருக்குமாறு செய்கிறது. இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்பில் இருக்கும் ஒரு மொழி, குறைந்தது நாற்பது-ஐம்பது ஆண்டுகளுக்கு உயிர்ப்பில் இருக்குமென்று கணிக்கப்படுகிறது.

இந்த நிலையை தமிழ் அடைய வேண்டுமானால், தமிழும் நடப்பு உலகின் அறிவியலையும், கணிதத்தையும் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சரி. அறிவியலையும் கணிதத்தையும் பேசுகிறது என்று வைத்துக்கொள்வோம். அடுத்து என்ன? அதைச் சந்தைப்படுத்தி தமிழால் ஒரு வெற்றிகரமான சமூகம் உருவாகும் என்ற பிரஞையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்தக் கனவு பகுதியாக ஐ.டி. துறையில் இருந்துகொண்டே தமிழில் இயங்கும் எழுத்தாளர்களால் சாத்தியப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். தமிழில் எழுதும் ஐ.டி துறை சார்ந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கை கணிசமானது. இவர்கள் முன்னிருத்தப்பட வேண்டும்.

இப்படிச்செய்வதால் 'தமிழால்' என்ற கருத்தாக்கம், ஒரு சக்ஸஸ் மாடலாகப் பார்க்கப்படும் என்று நம்புகிறேன். எது சக்ஸஸ் மாடலாக இருக்கிறதோ அது மக்களால் தன்னாலேயே விரும்பி ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவாகும்.
இது கிட்டத்தட்ட அமெரிக்க அரசு திவாலான வங்கிகளுக்கு பண உதவி செய்வதன் மூலம், உலகளாவிய வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் வாயிலாக பொருளாதார சுழற்சியை மேம்படுத்துவது போலத்தான்.

இவை யாவும் என்னுடைய  நம்பிக்கைகள் மட்டுமே. நான் தமிழில் கணித நாவல் எழுதியதன் பின்னால் இருக்கும் பல காரணங்களுள் இதுவும் ஒன்று. தமிழை எப்படியேனும் ஒரு சக்ஸஸ் மாடலாக்க வேண்டும். அதற்கு தமிழ் நடப்பு உலகின் அறிவியலையும், கணிதத்தையும் பேசவேண்டும்.

எப்படி ஆங்கிலத்தில் ஹாரி பாட்டரும், அவெஞ்சர்ஸ் மற்றும் மார்ஷியன் போன்ற நாவல்கள் நடப்பு உலகின் அறிவியல் மற்றும் கணிதம் பேசுகிறதோ அது போல.

ஒரு தமிழ்ப் புத்தகத்தையாவது வாங்குங்கள் என்று கெஞ்சக்கூடாது. மாறாக, தமிழ் நூல்கள் செருக்குடன் புத்தகச் சந்தையை எதிர்கொள்ள வேண்டும். தமிழ் நூல்களை நோக்கி மக்கள் தாமாகவே வருமாறு செய்ய வேண்டும். தமிழுக்கு ஒரு dignified பிம்பம் உருவாக வேண்டும். அதற்கு தமிழின் எல்லைகளை விஸ்தரிக்க வேண்டும்.

எப்படி ஆங்கிலம் நடப்பு உலகின் அறிவியலையும், கணிதத்தையும் பேசுகிறதோ அப்படி தமிழும் பேச வேண்டும். செயற்கைக் கை பற்றி பாண்டிய மன்னரும், மின்சாரம் பற்றி அகத்தியரும் எழுதியிருக்கிறார் என்று இன்னமும் சங்க இலக்கியப் புகழையே நாம் பாடிக்கொண்டிருப்பதே தமிழை பின்னுக்குத் தள்ளும் முயற்சி என்று நான் நினைக்கிறேன்.

தமிழில் நடப்புலக கணிதமும் அறிவியலுமே சாத்தியம் என்று பேச வேண்டும். அதுதான் நம்மை நம் தமிழ் மொழியை நாம் விரும்பும் இடத்துக்கு கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன்.

இந்தச் சிறிய தமிழ்க் கட்டுரையிலும் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தியிருக்கிறேன். ஆங்கிலம் தனக்கு வேண்டிய இடத்தில் ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மன் மொழிகளை கடன் வாங்கிக்கொள்வது போல. ஏனெனில் ஆங்கிலம் என்பது ஒரு  idea சார்ந்த மொழி. ஒரு ஸ்பானிய அல்லது ஜெர்மானிய ஐடியாவை அமெரிக்க ஆங்கிலமானது, ஸ்பானிய அல்லது ஜெர்மானிய மொழியின் வார்த்தைகளை வைத்தே கையாள்கிறது. அதாவது ஒரு ஐடியாவை அதன் அசலான மூலத்துடனே கையாள்கிறது. அங்கே அந்த ஐடியாவுக்கு நிகரான ஆங்கில வார்த்தை என்ன என்று தேடுவதில்லை.  ஒரு ஐடியா மனதில் உருவாகையில் அங்கே ஆங்கிலத்துக்கு மாற்றிக்கொண்டிருந்தால், அதில் கவனம் செலுத்தினால், ஐடியா பின் தங்கிவிடும் என்பதுதான் காரணம்.

இங்கே மொழி முக்கியமல்ல. ஐடியா தான் பிரதானம். மொழியே ஐடியாவின் விளைவாகத்தான் உருவாகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அது போல தமிழாலும் idea சார்ந்த மொழியாக வேண்டியது காலத்தின் போக்கில் உருவாகும் தேவை என்றே கருதுகிறேன்.

Thursday, 6 February 2020

கேள்விகள் - என் படைப்புகள் மீதான கேள்விகள் - 2

கேள்வி : "ஓரே வார்த்தைகள் நாவலின் பல இடங்களிலும் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறதே!"

பதில் :
ஒரு சினிமா துணை இயக்குனர் ஒருமுறை குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது:

"உங்கள் கதைக்களங்களில் இதுகாறும் எவரும் சொல்லியிராத, எவராலும் அடையாளப்பட்டிராத கணக்குகளின் வழி, பெறப்பட்ட அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமூகப் பிரச்சனையை ஆராய்கிறீர்கள். இதுவே உங்கள் நூல்களை விசேஷமானதாக ஆக்குகிறது. இந்தப் பண்பு பிற ஆக்கங்களில் இல்லை" என்றார்.

ஆகையால், என் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து மீண்டும் மீண்டும் சொல்லவும், அடுத்தடுத்த நாவல்களிலும் ஒரு கோடிட்டு காட்டிடவும் பின் வரும் காரணங்கள் எனக்கிருப்பதாக நான் நினைக்கிறேன்.

1. பொதுப்புத்தியில் ஒரு சமூகப் பிரச்சனையை எல்லோரும் பார்ப்பது போல் நான் பார்க்கவில்லை. எனக்கென்று ஒரு பார்வை இருக்கிறது. அதை வாசகனுக்கு அறிமுகம் செய்தால் மட்டும் போதாது. அதை மீண்டும் மீண்டும் சொல்லி அவன் மனதில் பதிய வைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருப்பதாக ஒரு எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. எளிமையாக சொல்வதானால், ஆயிரம் நூல்களால் கட்டமைக்கப்படும் ஒரு பார்வையை, தலைகீழாகப் புரட்டிப்போட ஒரு இரு நூறு பக்க நூலில் ஒரே ஒரு இடத்தில் சொல்வது போதுமானதாக இருக்குமென்று எனக்கு தோன்றுவதில்லை.

2. (ஜனவரி 2020 வரையிலான இந்த நாள் வரை) நான் 9 நூல்கள் எழுதியிருக்கிறேன். ஆனால், ஒரு வாசகன் என் எல்லா நூல்களையும் ஒரே மூச்சில் வாங்கி வாசித்துவிடுவான் என்னும் பேராசையோ அவநம்பிக்கையோ எனக்கு இல்லை. ஒரே ஒரு வாசகன் என் எழுத்தைப் பார்த்தால் அது பெரிய விஷயம். அவனிடம் என் புதிய கண்டுபிடிப்பை கொண்டு சேர்த்துவிடும் அவசரம் மற்றும் கட்டாயம் எனக்கிருப்பதாகவே நினைக்கிறேன். இந்த என் நினைப்பை வாசகர்கள் தவறு என்று நிரூபித்தால் குறைத்துக்கொள்ளவும் சித்தமாயிருக்கிறேன்.


கேள்வி : "நாம் தினசரி பார்க்கும் மனிதர்களின் கதைகளாக உங்கள் கதைகள் ஏன் இல்லை?"

பதில்:
தினசரி பார்க்க கிடைக்கும் மனிதர்களின் வாழ்வியலில் ஒரு விதமான மலட்டுத்தனம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

உதாரணமாக, ஒரு மனிதன் பத்தாவது படிக்கையில் நன்றாகப்படித்தால் பன்னிரண்டாவதில் அறிவியல், கணிதம் விருப்பப்பாடமாக எடுப்பான். பன்னிரண்டாவதிலும் நன்றாகப்படித்தால் பொறியியல், மருத்துவம் விருப்பப்பாடமாக எடுப்பான். பி.ஏ. தமிழும், சரித்திரமும் படிப்பவர்கள் யாராக இருக்கிறார்கள்? இயல்பிலேயே கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் ஆர்வம் இல்லாதவர்களே.

ஆனால், எந்த ஒரு சமூகப்பிரச்சனைக்குமான தீர்விலும் அறிவியல் மற்றும் கணிதத்தின் பங்கும் இருக்கிறது என்பது என் வாதம். என் கேள்வி என்னவென்றால், அறிவியல், கணிதம் தெரியாதவர்களால் ஒரு சமூகப்பிரச்சனைக்கான முழுமையான தீர்வை எப்படி சொல்ல முடியும் என்பது. ஆனால் வெகு ஜனம் என்பது 'எதுக்கு படிச்சேன்னே தெரியலை' என்று சொல்பவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது. (விதிவிலக்குகளாக தமிழில் படித்துவிட்டு அறிவியல் புனைவு எழுதுபவர்களை நானறிவேன். ஆனால், இங்கே உள்ளடக்கம் வெகு ஜனம் பற்றியதுதானே)

ஆக, என் அவதானிப்பின்படி, வெகு ஜன இயக்கத்தைப் படம் பிடிப்பதன் பொருள், ஒரு முன்தீர்மானிக்கப்பட்ட இயக்கத்தின் பல்வேறு வரிசை மாற்ற மற்றும் சேர்க்கையின் விளைவாக வெளிப்படும் சூழல்களை படம்  பிடிப்பதே என்று பொருள் கொள்கிறேன். இதைப் படம் பிடிப்பது என்பது, வாசகனை ஏமாற்றுவது என்று தோன்றுகிறது.

கிரேக்கத்தில் வருடத்தின் 150 நாட்களுக்கு விளையாட்டுக்கள் விளையாடி மக்களின் கவனத்தை திசை திருப்புவது போலான வேலை. ஒரு சமூகப் பிரச்சனையின் அசலான முகத்தைப் படம் பிடிக்க வெகு ஜன கதைக்களம் போதாது என்பது என் தாழ்மையான கருத்து.

தினசரி பார்க்க கிடைக்கும் மனிதர்களின் வாழ்வியலில் ஒரு விதமான மலட்டுத்தனம் இருப்பதாக சொல்லியிருந்தேன். இதற்கு காரணம் மனிதர்கள் அல்ல.

ஒரு சமூகம் ஒரு கட்டத்துக்கு மேல் அதன் மையக்கொள்கையில் நீர்த்துப் போய்விடும். ஒரு காலத்தில் அடுத்த நாட்டுக்குப் போய் போர் செய்து வீழ்த்தி அடிமை ஆக்குவது ஒரு கலாச்சாரமாக இருந்தது. இப்போது அது இல்லை. பத்தாண்டுகள் முன் வரை தொழில், அது தொடர்பான விளம்பரம், மார்கெட்டிங் போன்றவை கலாச்சாரமாக இருந்தது. இப்போது அதுவும் நீர்த்துப்போய் பொருளாதாரம் பாதாளம் போய்விட்டது. பெரிய பெரிய நிறுவனங்களே மஞ்சள் நோட்டீஸ் அளிக்கின்றன.

இந்தச்சமூகம் அதன் மையக்கொள்கையில், பார்வையில் ஒரு saturated state க்கு வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். இக்காரணத்தாலும் வெகு ஜனம் பற்றி எழுதுவதில் எனக்கு எந்த பலனும் இல்லை என்பது என் வாதம். 

கேள்விகள் - என் படைப்புகள் மீதான கேள்விகள் - 1

கேள்விகள் - என் படைப்புகள் மீதான கேள்விகள் - 1

நம் நாவலை வாசித்துவிட்டு, நாவலில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எந்த அசலான எண்ணத்தில் நாம் எழுதினோம் என்று யாராவது கண்டுபிடித்து சொல்ல மாட்டார்களா என்ற ஏக்கம் ஒவ்வொரு எழுத்தாளனுக்கு இருப்பதுதான்.

என் நாவல்களை வாசித்தவர்களிடமிருந்து சில கேள்விகளை தொடர்ச்சியாக எதிர்கொண்டிருக்கிறேன். அந்த கேள்விகளுக்கு ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பதிலளிப்பதைவிடவும் பொதுவில் பதிலளிக்கின், எல்லோருக்கும் பயணுள்ளதாக இருக்குமென்று சில தொடர் பதிவுகளில் அந்தக் கேள்விகளை எதிர்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.


கேள்வி: "உங்க எல்லா நாவல்கள்ல வர்ற ஹீரோ ஏன் எப்பவும் ஒரே மாதிரி இருக்கான்?"

பதில் :
மற்ற நாவலாசிரியர்கள் உருவாக்கும் கதா நாயகர்களுக்கும், என் படைப்புக்களில் நான் உருவாக்கும் கதா நாயகர்களுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.

மற்ற நாவல்களின் கதை மாந்தர்கள், இன்றைய சமூகத்து மனிதர்களை பிரதிபலிக்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டியதில்லை. இக்கதைகளில் ஒழுங்கீனம் என்பது எதார்த்தமாகிறது. social drinking & smoking அனுமதிக்கப்படுகிறது. அதன் பின் விளைவுகளை அறிவியல் கொண்டு சமாளிப்பது சமூக ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டிய கட்டாயங்களுடன் இந்த நாவல்கள் எழுதப்படுவதைப் பார்க்கலாம். இப்படி கட்டமைக்கப்படும் ஆண், சம காலத்தில் பெண்களுடன் ஒப்பீட்டளவில் சற்று முழுமை குன்றி இருக்கிறான். இதனால் தான் வரதட்சணை போன்ற சமூக பிரச்சனைகளுக்கு முன்வைக்கப்படும் தீர்வுகள் பெரும்பாலும் Stereotypical ஆக இந்த நாவல்களில் தோன்றுகின்றன.

என் கதைகளின் நாயகர்கள் இந்தப் பிரச்சனைகளை மிகவும் தெளிவாக உள்வாங்கியவர்களாக  நான் கட்டமைக்கிறேன். ஆதலால் என் கதை மாந்தர்களை நான் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக அதாவது கொஞ்சம் Advanced breeds ஆக என் படைப்புக்களில் முன்வைக்கிறேன்.

இதனாலேயே என் கதைகளின் நாயகர்கள் பெரும்பாலும் ஒரு futuristic society ஐ நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். இந்த எதிர்கால சமூகத்தில், ஒவ்வொருவரும் சமூக பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தங்களின் இயல்பு வாழ்க்கையிலேயே செயல்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, உடற்பயிற்சி செய்தல் என்பது early diabetes, heart diseases, இளம் வயதிலேயே முதுமை அடைவது போன்றவைகளுக்கு தீர்வாகிறது. அதே போல் உணவக உணவுகளால் உருவாகும் குடல் பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு போன்றவைகளுக்கு தரமான உணவுகள் தீர்வாகிறது. செழுமையான மன வளத்துக்கு அதிகாலையிலேயே எழுதல், யோகா போன்றவைகள் தீர்வாகிறது. எப்போதும் கற்றுக்கொண்டே இருப்பது, நிச்சயமற்ற வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார மந்த நிலை போன்றவற்றுக்கு தீர்வாகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இவ்விதமாக உருவாகும் கதா நாயகனின் பார்வையில் நான் சமூகப் பிரச்சனைகளை ஆராய்கிறேன் அல்லது ஆராய்வதாகக் காட்டுகிறேன். இந்த விதத்தில் எனக்கு வேறொரு புதிய திறப்பு கிடைக்கிறது. இந்தப் பார்வையே என் நாவல்களை தனித்துவமான நாவல்களாக மாற்றுகிறது என்பது என் அவதானம்.

ஏனெனில், இந்த விதமான கதா நாயகர்கள் futuristic society ஐ நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். இந்த futuristic society என்பது என் கணித நாவல் (உங்கள் எண் என்ன?)  மூலம் விளக்கப்படும் ஒரு futuristic society தான். இது ஏனெனில், உங்கள் எண் என்ன நாவலில் பின் வரும் பண்புகள் தான் முன்னிருத்தப்படுகின்றன...

ஆக என் நாவல்களின் வரும் நாயகனுக்கு முக்கியமான மூன்று பண்புகள் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

1. சுய ஒழுக்கத்தை அதிகம் பேணுகிறான்.
1.அ. இதனாலேயே என் நாயகன் உடற்பயிற்சி செய்கிறான்.
1.ஆ. மது, புகை பழக்கம் இருப்பதில்லை.
1.இ. அதிகாலையிலேயே எழுகிறான்.
2. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறான்.
3. அறம் சார்ந்த வாழ்க்கை வாழ தன்னளவில் பெருமுயற்சி செய்பவனாக இருக்கிறான்.

Tuesday, 4 February 2020

வதுவை (குறுநாவல்) - விமர்சனம் - சீனிவாசன் பாலகிருஷ்ணன்

வதுவை (குறுநாவல்) - விமர்சனம் - சீனிவாசன் பாலகிருஷ்ணன்






வேலை தேடி அலையும் இளைஞன் ஒருவனுக்கு திருமண தகவல் மையத்தில் வேலை கிடைக்கிறது. திருமண தகவல் மையம் என்றால் கொஞ்சம் மொக்கையாகத் தோன்றுகிறது இல்லையா? இந்தியாவின் தலைசிறந்த மேட்ரிமோனி நிறுவனமான முக்தி மேட்ரிமொனியில் வேலை. அவனை வேலைக்கு எடுக்கும் நிறுவன அதிபர் அவனிடம் ஒரு கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விக்கான பதிலில் இருந்து நாமும் கதைக்குள் பயணிக்கத் தொடங்குகிறோம். அந்த பதிலைப் பற்றி கூறும் முன் நாவலாசிரியர் குறித்து ஒரு தகவல். ராம் பிரசாத் கணிதவியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதை அறிந்த போது கொஞ்சம் ஆச்சரியமாகவும், கணிதவியல் சார்ந்து எழுதப்பட்ட ஒருசில புனைவுகளில் ராம் பிரசாத்தின் புனைவும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்ற தகவலும் அவர் உழைப்பின் மீது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

திருமண தகவல் மையத்தில் வேலையில் சேர்ந்த கையேடு அவனுடைய வாழ்க்கையிலும் சில மாற்றங்களை மேற்கொள்கிறான். அதில் முதலாவது அவன் அதுவரைக்கும் தங்கியிருந்த அறையை மாற்றுவது. திருமண தகவல் மையத்தில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுடன் அறைத்தோழர்களாக மாறுகிறான். வினீத், கௌரவ், ப்ரியா, பாயல் என அர்ஜூனும் அவர்களுடன் சேர்ந்துகொள்வதன் வாயிலாக சில சுவாரசியமான தருணங்களை எதிர்கொள்கிறான். ஒரு வீட்டை இளவயது ஆண் மற்றும் பெண் தோழர்கள் பங்குகொள்வது என்பதை நினைக்கும் போதே சற்றே குறுகுறுப்பு ஏற்படுகிறது என்றாலும் அதே போன்ற மனநிலைக்குத்தான் அர்ஜுனும் தள்ளப்படுகிறான். அதன் சாதக பாதகங்கள் ஒவ்வொன்றாக அவனுக்குப் புரிபடுகிறது.

இடையே பணி நிமித்தமாக அர்ஜூன் சந்திக்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறார்கள். திருமண பந்தம் ஏற்படுத்துவதற்காக அர்ஜுன் சந்திக்கும் அவன் வாடிக்கையாளர்களும் சரி அர்ஜுனும் சரி இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் சூழ்நிலையே வித்தியாசமாக கட்டமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அர்ஜுனின் வாடிக்கையாளர்களாக வந்து சேரும் நபர்கள் கிருஷ்ணா மற்றும் ஆர்த்தி.

கிருஷ்ணா சற்றே வித்தியாசமான மனிதன். படைப்பு சார்ந்து இயங்கும் கலைஞன். அழகன். கட்டுமஸ்தான உடற்கட்டமைப்பைக் கொண்டவன். புறவயத் தோற்றங்களின் படி எல்லாவித்ததிலும் ஒரு திருமணத்திற்கு தகுதியானவன். ஒரேயொரு குறையைத் தவிர. கிருஷ்ணா ஒரேயொருமுறை திருமணமாகி விவாகரத்து பெற்றவன் என்பதைத் தவிர. அவனுடன் நெருங்கிப் பழகும் அர்ஜுன், கிருஷ்ணாவுடன் ஒருவித தோழமை உணர்வு ஏற்படுத்தை கவனிக்கிறேன். அவனுக்கு எப்படியேனும் நல்லதொரு வரன் அமைத்துக்கொடுத்துவிட வேண்டும் தீவிர தேடலில் இறங்குகிறான். கிருஷ்ணாவிற்காக அவன் ஒப்பீடு செய்யும் வரங்கள் அனைவரும் கிருஷ்ணாவைப் பின்தொடரும் விவாகரத்து என்கிற ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்கள். கிருஷ்ணாவிற்கு எந்தப் பெண்கள் எல்லாம் பொருத்தமாக இருக்கும் என நினைத்தானோ அந்தப் பெண்கள் அனைவரும் அவர்களுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத கனவான்களை கணவர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த குழப்பமான விந்தை அர்ஜுன் அதுவரைக்கும் கட்டமைத்திருந்த உலகை வேறு கோணத்தில் பார்க்கச் செய்கிறது. இடையே அவன் அறைக்குள் நிகழும் காதல் மற்றும் கள்ளக் காதல் களியாட்டங்கள், அறை தோழி ப்ரியாவுடன் மலரும் காதல், ஊடல் என அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்த உலகை மிகத்தீவிரமாக புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும் நாயகனின் பார்வையில் விரிகிறது.

தனுஜா என்கிற நவநாகரிக மாடல் உடனான தொடர்பு அவனுக்கு சற்றும் தொடர்பு இல்லாத வேறோர் உலகை அறிமுகம் செய்கிறது. நாவல் முழுக்க அர்ஜுன் சந்திக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் ஏதோ ஒரு விதத்தில் அவனுள் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். அவனும் அவர்கள் உலகில் சிறு அசைவையேனும் நிகழ்த்துகிறான். இந்த வேலை அவனுக்கு பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் பல்வேறு அனுபவங்களையும் ஒருசேர கற்றுக்கொடுக்கிறது. ஒருசமயம் சந்தோஷத்தையும் ஒரு தருணம் மனப் பிறழ்வையும் உண்டு செய்கிறது. மனம் பிறழ்ந்த தருணங்களில் அவன் செய்யும் காரியங்கள் சில அதிர்சிகரமான தேடலில் சென்று சேர்க்கின்றன. அதன் மூலம் வேறோர் நிழல் உலக பரிட்சியம் ஏற்படுகிறது. கண்ணுக்கும் முன் அவன் கணக்கும் போட்டு கட்டமைத்த சில கணங்கள் அவன் எதிர்பார்த்தது போலவே நிகழ்கின்றன, சில புதிராக தலைகீழ் மாற்றம் பெற்றுள்ளன.

அர்ஜுன் எதிர்பார்த்தது போல கிருஷ்ணாவிற்கு திருமணம் செய்து வைத்தானா? ப்ரியா என்னவானாள்? வினீத்தின் கள்ளக் காதல் என்னவாயிற்று? நிழல் உலக குற்றவாளிகள் என்னவானார்கள் என புதிர்போட்டு அந்தப் புதிரை சுவாரசியமாக அவிழ்த்திருக்கிறார் நாவலாசிரியர் ராம் பிரசாத். வதுவை என்கிற இந்த குறுநாவல், தற்கால இளைஞர்களின் மனவோட்டத்தையும், நவீன திருமண தகவல் மையங்கள் இயங்கும் முறையை கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.  

 நன்றி
சீனிவாசன் பாலகிருஷ்ணன்