முகநூலில் திரு.கந்தசாமி அவர்கள் என்னைப் பற்றி சில வார்த்தைகள் எழுதியுள்ளார்...அதை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி...
"திறமைகளும் அப்பாவித்தனமும் இணையக் கூடாது. இணைந்தால் என்போல் ஒரு அப்பாவி மனிதன் உருவாகிறான்" என்கிறார் ராம்பிரசாத்.
எழுத்தாளர் ராம்பிரசாத் கவிஞர், எழுத்தாளர், மென்பொறியாளர்.
இவர் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா என்ற நகரில் வசித்து வருகிறார்.
இவர் இதுவரையில் ஏழு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். குறு நாவல்களும் எழுதியுள்ளார். முகநூலில் கவிதைகள் எழுதி வருகிறார். தன்னுடைய நூல்களைப் பற்றியும் பதிவிடுகிறார். தனது கருத்துகளையும் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.
"தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியலில் பரிச்சயம் இல்லை. அறிவியல் மாணவர்கள் தமிழில் இயங்குவதில்லை. இரண்டும் இரண்டு தண்டவாளங்கள் போல் ஒட்டாமலே பயணிக்கின்றன. கல்வியை உள்வாங்கும் நபர்கள் எங்கோ பிறழ்ந்து போகிறார்கள். எப்பொழுதெல்லாம் மனிதம் மீது நம்பிக்கை பொய்க்கிறதோ அப்போதெல்லாம் இள ரத்தங்கள் மீதுதான் பார்வையைத் திருப்ப வேண்டியுள்ளது" என்கிறார்.
இவரது சிறுகதைகள் வாசகசாலை, சொல்வனம், பதாகை, கனலி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவருடைய முதல் நாவல் "ஒப்பனைகள் கலைவதற்கே" தேவி கண்மணி நாவலிதழில் வெளியானது. இதை 2014 இல் காவ்யா பதிப்பகம் நூலாக வெளியிட்டது. பின்னர் உங்கள் எண் என்ன?, வரதட்சணா, ஏஞ்சலின் மற்றும் சிலர், வதுவை ஆகிய நூல்களை காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. இவரது இரண்டு விரல்கள், அட்சயப்பாத்திரா ஆகிய நூல்களை வாதினி பதிப்பகம் வெளியிட்டது. அதன் பின்னர் இவரது 'வாவ் சிக்னல்' என்ற சிறுகதைத் தொகுப்பை படைப்பு பதிப்பகம் வெளியிட்டது.