என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday 14 September 2021

நாளை என்பது இன்றில் துவங்குகிறது

நாளை என்பது இன்றில் துவங்குகிறது


ஷிகர் தவன் விவாகரத்து செய்திருக்கிறார். நல்ல செய்தி.


"குழந்தைகளுக்காக வாழ்கிறோம்" என்றெல்லாம் பிதற்றாமல், அர்த்தமில்லாத வாழ்வில் செயற்கையாக ஒன்றியிருக்காமல்,  நேர்மையாக கருத்தொருமித்து பிரிவதாக முடிவெடுத்து அவரவர் பாதையில் பிரிந்திருக்கிறார்கள். 


அமீர் கான் - கிரண் ராவ் பிரிவும் அவ்விதமே. 


Yes. Divorce is the way to progress. விவாகரத்துக்களை normalize செய்ய வேண்டும்.   அதுவும் super normalize செய்ய வேண்டும். ஒரு கணக்குடன்.


எனது கணித நாவலான "உங்கள் எண் என்ன" நாவலில், 14 (ஆண்-பெண்) ஐ 41 (ஆண்-பெண்) சேர்ப்பது சிறப்பு என்று சொல்லியிருந்தேன். ஏனெனில், இரண்டு சாத்தியங்கள் உள்ளன. முதலாவதாக, 11 என்கிற சாத்தியமும், இரண்டாவதாக 44 என்ற சாத்தியமும்.  நேர்-நேர் தேமா என்பது போல், சம வலுவுள்ளவர்கள் ஒன்றாக இணையலாம். அல்லது சம இடைவெளி, அதாவது 1-4ம், 4-1ம் இருப்பவர் இணைந்தால் பிற்பாடு ஒரு கருத்து வேறுபாட்டில் அவர்கள் பிரிய  நேர்கையில், 1ம்-1ம், 4ம்-4ம் இணைய வாய்ப்பாகும். 


திட்டம் இதுதான். ஒரு குறிப்பிட்ட குணாதிசயம் அடுத்த தலைமுறைக்குப் பரவ வேண்டுமானால், அந்த குணாதிசயம் பிழைக்கத் தேவையான சாத்தியங்களை மிகுவிக்க வேண்டும். இதில் இரண்டு வகை attack உண்டு. உதாரணமாக, நீங்கள் நன்கு படிப்பவர் என்றால் அதற்கான ஜீன் ஒரு Autosomal dominant inheritance வகையாக இருப்பின் உங்கள் துணைக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தால் கூட, மகனுக்கோ, மகளுக்கோ கடத்தப்பட்டுவிடும். அவர்கள் செம்மையாகப் படித்து அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோ இடம்பெயர்ந்து உங்கள் ரிட்டையர்மென்ட் காலத்தில் நாடு நாடாகப் பறக்க வைப்பார்கள். இதில் ஒரே குறை என்னவென்றால் இது விளிம்பு நிலையில் வராது என்பதால் நீங்கள் எந்த நாவலிலும் இடம்பெற மாட்டீர்கள்.(ஹிஹிஹி.. சும்மா ஹாஸ்யத்துக்காக சொல்கிறேன்... சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்).


ஒருவேளை Autosomal dominant inheritance ஜீனாக இல்லாமல் போய்விட்டால், அடுத்த தலைமுறையும் படிப்பாளியாக்க இருக்கும் வாய்ப்பு ஒன்றே ஒன்று தான். படித்த பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்தல். இந்த முறையில் படிப்புக்கான ஜீனை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சாத்தியம் , படிப்பு வராத பெண்ணைச் சேர்வதன் மூலம் உருவாகும் சாத்தியத்தை விடவும் அதிகம் தான்.  ஓருவேளை பாதகமாக அடுத்த சந்ததிக்கு படிப்பு கடத்தப்படாமல், பிள்ளை மக்கானால், "வாத்தியான் பிள்ளை மக்கு" என்ற சொற்றொடர் உண்மையாகி, வாழ்க்கை என்றால் இப்படித்தான் என்று ஓஷோ தத்துவம் சொல்லி, அமைதியாவீர்கள். இந்தக் கேஸில் நீங்கள் விளிம்பு நிலையை எட்ட சாத்தியம் உள்ளதால், ஏதேனும் நாவலில் இடம் பெறுவீர்கள். (ஹிஹிஹி... இதுவும் ஹாஸ்யத்துக்குத்தான்... ஒரு கண்டினியூட்டி வேண்டுமல்லவா?! ஹிஹிஹி)

சாத்தியத்தை உயர்த்துவதைத்தானே அதிகபட்சம் நாம் செய்ய முடியும். இந்தப் புரிதலின் அடிப்படையில் தான் எனது நாவலில் உள்ள எண் கட்டுமானம்.

ஒரு இணைப்பு, அது எப்படியிருந்தால், சம்பந்தப்பட்டவர்களின் சிறப்பான குணாதிசயங்களின் உச்சத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வெளிப்படுத்தும் வகையினதாக அமையும் என்கிற அர்த்தத்தில் தான் கணித மாடல் உருவாக்கியிருந்தேன். அதையே சொல்லியுமிருந்தேன். 


நாவலை வரிக்கு வரி வாசித்துவிட்டு Alex Kasman ஒரு விவாதத்தில் இப்படிச் சொன்னார்.


"அதெப்படி இன்னாருக்கு இன்னார் என்று ஒரு வாய்ப்பாட்டைப் போல கூட இயலும்? இது நம்பும்படியாக இல்லை. " என்றார். இதை அவர் தனது கணித நாவல்களின் பட்டியலில் சேர்க்கையில் கூட குறிப்பிட்டிருந்தார். நாலு வரியில் கவிதை எழுதினாலேயே நாலு பேருக்குக் கூட ஒருமித்த கருத்து எழாத சூழலில் அவர் என்ன நினைத்தால் என்ன? எனக்கு வேண்டியது நான் எழுதியது ஒரு கணித நாவலுக்கான இலக்கணத்தின் படி அமைந்திருக்கிறது என்பதற்கான சான்றிதழ் தான். அதை அவர் தனது பட்டியலில் சேர்த்ததிலேயே கிடைத்துவிட்டது என்று விட்டுவிட்டேன்.


சீனாவின் கூடைப்பந்து வீரரான Yao Ming 229 cm ஐ ஒரு national breeding program மூலமாக இரண்டு உயரமான விளையாட்டு வீரர்களை நிஜ வாழ்வில் துணையாக்குவதன் மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். Yao Zhiyuan 205cm உயரம். இவரை பெண்கள் அணியின் கேப்டன் ஆக இருந்த  Fang Fengdi 182cm உடன் திருமணம் செய்ய வைத்து, சீனா  நாட்டின் தலைசிறந்த கூடைப்பந்து வீரரை உருவாக்கியுள்ளது.


மீண்டும் முதல் வரிக்கு வரலாம். ஷிகர் தவன் விவாகரத்து செய்திருக்கிறார். ஆயிஷா முகர்ஜி ஒரு விளையாட்டு வீரர் அல்ல. அடுத்த தலைமுறையில் ஷிகர் தவனை விட வீர்யமான கிரிக்கெட் வீரரை நாம் உருவாக்க வேண்டுமென்றால், நமக்கு இரண்டு வாய்ப்புகள். 


1. ஷிகர் தவனின் கிரிக்கெட்டுக்கான ஜீன் ஒரு Autosomal dominant inheritance ஆக இருக்க வேண்டும்.

2. இரண்டாவது திருமணமாவது ஷிகர் தவன் இன்னொரு விளையாட்டு வீராங்கனையாகப் பார்த்து திருமணம் முடிக்க வேண்டும். இந்த இணைப்பின் மூலம், கிரிக்கெட் ஜீன் தொடர்வதற்கான சாத்தியத்தைத்தான் அதிகப்படுத்த முடியுமே ஒழிய 100% தீர்மானமாக்க முடியாதுதான். 


ஒரு குறுக்குக் கேள்வி: இந்த இரண்டாவது ரூட்டை ஷிகர் முதல் திருமணத்திலேயே செய்திருக்கலாம் அல்லவா? செய்திருக்கலாம் தான்.. ம்ம்ம்.. விதி யாரை விட்டது..


ஆக, விவாகரத்துக்களை நார்மலைஸ் செய்வது மட்டுமல்ல. அந்த நார்மலைசேஷனிலும் கூட ஒரு கணக்கு இருக்கிறது என்பதுதான் பாயின்ட். 


இதனால் நண்பர்களுக்கு நான் சொல்ல வருவதெல்லாம், பிள்ளைகளைக் காரணம் காட்டி, பழமைகளைக் காரணம் காட்டி toxic marriageலேயே தேங்கி உழன்று கொண்டிருக்காதீர்கள். தைரியமாக விவாகரத்து செய்யுங்கள். விவாகரத்துக்களை, அதன் சாதகங்களுக்காக நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  விவாகரத்துக்குப்பின் என்ன என்றொரு கேள்வி இருக்கிறதல்லவா? அதற்குத்தான் இந்தக் கட்டுரை.