இளையராஜா VS ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.ரகுமான் பிறந்த நாளில் முகநூல் எங்கும் இளையராஜாவைத் தூக்கி வைத்தும் , ஏ.ஆர்.ரகுமானை சற்றே (சற்றே என்பது குறைவான மதிப்பீடாக இருக்கலாம். மிகையாகவே தாழ்த்தி) தாழ்த்தியும் பதிவுகள் காணப்பட்டன. 6/70, 600/1000 என்றெல்லாம் பார்த்தேன். பெரும்பாலான போஸ்ட்களில், இளையராஜாவே தமிழர்களின் மரபான இசையை வளர்த்தவர் என்றும், அவரே தமிழர்களின் இசைக்கலைஞர் என்றும், ஏ.ஆர்.ரகுமான், மேற்கத்திய இசையின் பால் ஈர்ப்பு கொண்டு பயணிப்பவர் என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதிலுள்ள பார்வை முரணைத்தான் பதிவு செய்ய விரும்புகிறேன். அதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமும் கூட.
என் வரையில் நான் இருவருக்கும் பொதுவானவன். எனக்கு இருக்கும் moodற்கு எந்த இசை பொருந்துகிறதே அதையே கேட்கும் வழக்கம் எனக்கு. சமயத்தில் இளையராஜா, சமயத்தில் ஏ.ஆர்.ரகுமான், சமயத்தில் கமல் கான், DJ Akeel, DJ Sukethu, சமயத்தில் pit bull என்றெல்லாம் நீளும். அது பிரச்சனை இல்லை.
இளையராஜா ஆயிரம் பாடல்களுக்கேனும் இசையமைத்திருக்கிறார் என்பது இளையராஜா ரசிகர்களின் வாதம். பாடல்களின் எண் கணக்கு வீதம் வைத்து எடைபோடுவது சச்சின் பெரிதா, விராத் கோலி பெரிதா என்கிற கேள்விக்கு ஒப்பாகும் என்று எண்ணுகிறேன். சச்சின் சாதனைகள் நிகழ்த்தியபோது மற்ற அணிகளில் இருந்த ஜாம்பவான்களின் தரம் என்ன, இப்போதிருக்கும் அடுத்த தலைமுறை வீரர்களில் தரம் என்ன என்பதையெல்லாம் வைத்துத்தான் பேச முடியும். ஆக இது ஒரு சரியான வாதமாக எனக்குப் படவில்லை.
ஆனால், ஒரு விஷயம் உறுத்துகிறது. மிகப்பெரிய நகை முரணாகவும் தோன்றுகிறது. அதைப் பொட்டில் அடித்தாற்போல் விளக்க, எளிமையான ஒரு கேள்வியிலிருந்து துவங்கலாம்.
இந்த தேசத்தில், அவ்வளவு ஏன், இந்த சமூகத்தில் யார் வாழ்வாங்கு வாழ வேண்டும்? பணம் வைத்திருப்பவன் மட்டும் வாழ்ந்தால் போதுமா? அதிகாரம் செலுத்துபவன் மட்டும் வாழ்ந்தால் போதுமா? ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரன் மட்டும் வாழ்ந்தால் போதுமா?
அப்படி இல்லை அல்லவா? எல்லோரும் வாழ வேண்டும். அதற்கு கல்வி எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும். வேலை வாய்ப்பு எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும். இதுதான் அடிப்படை அல்லவா?
ஆனால், இங்கே ஒரு கேள்வி.
எல்லோரையும் முந்திக்கொண்டு அதிகாரத்தாலும், செல்வாக்காலும் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் ஒரு சமூகத்தின் உயர் இடத்துக்கு சென்றுவிட்டு, அங்கே செல்வதற்கான வழியை தனக்கும், தனக்குப்பின் தன் சந்ததிக்கும் மட்டும் என்று நிறுத்தி, வேறு எவனையும் அந்த இடம் வர முடியாதவாறு செய்து தாழ்த்தி, கீழ் நிலை வேலைகளைச் செய்ய ஒரு கூட்டத்தை உருவாக்கினால் அதற்கு என்ன பொருள்?
இப்போது கேள்விக்கு வரலாம்.
ஓசைகள்.
ஓசைகளே இசைக்கு அடித்தளம். இசை என்பது, செவிக்கு இனிமை தரக்கூடிய ஓசைகளை ஒன்றுடன் ஒன்றாகப் பிணைத்து, ஒரு சரடாக்கி அளிப்பது அல்லவா? சரடாக்குவதற்குத்தான் இலக்கணம் வைத்திருக்கிறோம். ஓசை வரிசை, ராகம் தாளம் பல்லவி என்று.
இப்போது, என் கேள்வி இதுதான்.
மிகவும் அரூபமான ஒரு ஓசை நாம் வாழும் இதே உலகில் இருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக, அதை மனிதர்கள் அறிந்த எந்த விதமான வாத்தியக்கருவிகள் கொண்டும் உருவாக்கிவிட முடியாது எனில், இந்த அரூபமான ஓசை, இசையின் ஓர் அங்கமாக வேண்டிய அவசியம் இல்லையா? மனிதர்களின் செவிகளுக்குக் கேட்க வேண்டியதில்லையா? அதன் மதிப்பை யார் நிர்ணயம் செய்வது? அதிலுள்ள நியாயப்பாடு என்ன?
நாற்பதாண்டுகளாக, பல தரப்பட்ட சூழல்களுக்கும், உணர்வுகளுக்கும் அது காதலாக இருந்தாலும் , சோகமாக இருந்தாலும், அதிர்ச்சியாக இருந்தாலும், வேதனையாக இருந்தாலும் வார்த்தைகளுக்கிடையில் கொஞ்சி விளையாடி செவிகளை நனைத்துச்செல்லும் இசையை உருவாக்க சில குறிப்பிட்ட வாத்தியக்கருவிகளையே தேர்வு செய்திருக்கிறார் இளையராஜா.
அதாவது, மனிதப்பதர்கள் உருவாக்கி வைத்திருக்கும் சிற்சில வாத்தியக்கருவிகளால் உருவாக்கிவிடக்கூடிய, ஓசைகள் என்னும் மாபெரும் கடலிலிருந்து உள்ளங்கைகளால் மட்டுமே ஏந்திக்கொள்ளக்கூடிய ஓசைகளையே மக்களுக்கு வெவ்வேறு விதமாக திரும்பத்திரும்பப் படைப்பது. இதன்படி பார்க்கின், நல்ல இசை, சிற்சில கருவிகளால் உருவாகும் உள்ளங்கை அளவு ஒசைகளை ஒரு குறிப்பிட்ட வரிசையில் அடுக்கி வைப்பதனால் மட்டுமே சாத்தியம் என்பதாகிறது.
ஒப்பீட்டளவில், இந்த வாதம், ஜாதிப்பாகுபாட்டை ஒத்திருக்கிறது என்பது என் வாதம்.
ஜாதிகளில் தான், சில மனித ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் பிறப்பதே அனாவசியம் என்பதாகிறது. அப்படியே பிறந்தாலும் அவர்கள் கீழ் நிலை வேலைகளைச் செய்ய மட்டுமே என்று நிர்பந்திப்பதாகிறது. சிறந்த பணிகளை இவர்களால் செய்ய முடியாது என்று கருதுவதாகிறது. பிறப்பாலேயே ஒருவன் உயர்ந்தவனாகவோ, தாழ்ந்தவனாகவோ ஆகிறான். ஆக, இளையராஜா மட்டுமல்லாமல் கர்நாடக சங்கீத இசை மரபைச் சேர்ந்த எல்லோரின் இசையுமே இந்த அடிப்படையில் அமைந்தவைகள் தான் என்பது என் வாதம்.
ஆனால், ஏ.ஆர்.ரகுமானின் பாணி வேறு. அவர் 'there is so much to listen'என்பதை தாரக மந்திரமாகக் கொள்கிறார். அவருடைய சவுண்ட் எஞ்சினியர்கள் வித்தியாசமான, அரூபமான ஓசைகளைத் தேடி காடுகள், மலைகள் என்று போகிறார்கள். காட்டுக்குள் ஒரு மரத்தில் ஒரு மைக்ரோ ஃபோனை வைத்துவிட்டு எல்லா ஓசைகளையும் பதிவு செய்து, அதில் ஏதும் அரூபமான ஓசைகள் இருக்கிறதா என்று தேடுகிறார்கள். அப்படி ஒன்று சிக்கினால், அதை அப்படியே உருவி, ஓசை வரிசைக்கு மாற்றித் தருகிறார்கள். அதை வைத்து ரகுமான் மெட்டமைக்கிறார். இதை விடவும் ஓசைகளுக்கு முக்கியத்துவத்தை ஒருவர் எப்படித்தர முடியும்? இதை விடவும், எல்லா உயிர்களும் இயற்கையின் பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்தவைகளே என்பதை இசையின் மூலமாக ஒருவர் எப்படி உணர்த்த முடியும்?
சரி. பிரச்சனையின் அடிப்படையைப் பார்த்தாகிவிட்டது. இனி இளையராஜா, தமிழர்களின் இசைக்கலைஞர் என்று சொல்லப்படுவதில் உள்ள முரணைப் பார்க்கலாம்.
தமிழர்களின் வாழ்வியல் பார்வை என்பது, பிறக்கும் எல்லா உயிரும் இயற்கையின் முன் சமமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும் என்பதுதான். பொதுவாகவே, இந்த வாதமே மனித வாழ்வின் உச்சகட்ட மாண்பாகவும், அறம் சார்ந்த பார்வையாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால், அந்த வகையில் பார்க்கின், இசைத்துறையில் ஒசைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஏ.ஆர்.ரகுமானின் இயங்குமுறையே இந்த அறம் சார்ந்த பார்வையை ஒத்திருக்கிறது என்பது என் வாதம்.. ஆனால் முரணாக, இளையராஜாவின் இசைத்துறையிலான இயங்குமுறை என்பது கட்டுத்திட்டான ஒரு ஜாதிக்கட்சியின் இயங்குமுறையை ஒத்திருக்கும்.
அவருடைய நாற்பதாண்டுகால இசை வாழ்வின் முதல் முப்பதாண்டுகளில், ஒரு குறிப்பிட்ட சூழலை அவரிடம் ஒருவர் விவரிக்கையிலேயே அவர் மனம் உடனேயே அதற்கான வாத்தியக்கருவிகளைத் தெரிவு செய்து மெட்டமைத்துவிடுகிறது. அதாவது, துவக்கத்திலேயே, பாடலில் இடம்பெற வேண்டிய ஓசைகளை , வாத்தியங்களைத் தீர்மானித்துவிடுவதன் வாயிலாகவே தீர்மானித்துவிடுவார். அதாவது, ஓசைகளில் பெரும்பான்மை, இயற்கையிலேயே அவருடைய இசைக்கோர்வைகளில் இடம் பெறத் தகுதியற்றதாகிவிடுகிறது. அரூபமான ஓசைகளுக்கு அவருடைய இசைக்கோர்வையில் எவ்வித முக்கியத்துவமும் இல்லை. முதல் முப்பதாண்டுகளில் அவர் பெரும்பாலும் அரூபமான ஓசைகளைத் தேடிச்சென்றதே இல்லை. பாடகர்கள் என்று வந்தாலும் கூட எஸ்.பி.பிக்கு மட்டுமே வாய்ப்பு. இந்த முப்பதாண்டுகளில் அவரால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய குரல்கள் சொற்பம்.
இந்த இயங்குமுறை ஒரு கட்டுதிட்டான ஜாதிக்கட்சியின் இயங்குமுறையே அப்படியே ஒத்திருப்பதை நாம் அவதானிக்கலாம்.
ஆனால், நாம், ஏ.ஆர்.ரகுமானின் இசையை conceptual ஆக எப்போதுமே அணுகுவதில்லை. மாறாக அவர் இசையை உருவாக்கும் வாத்தியங்களை வைத்தே அவரை மேறகத்திய இசை மரபைச் சேர்ந்தவர் என்று பாகுபடுத்தி , அந்தப்படியே அவரை எட்டவே நிறுத்தியும் வைத்துவிடுகிறோம். ஆனால், தமிழரின் வாழ்வியல் மாண்புக்கு முற்றிலும் எதிராக இயங்கும் ஒரு இயங்குமுறையை அந்த இயங்குமுறையில் பங்குபெரும் மரபார்ந்த கருவிகளை மட்டும் வைத்து, தமிழர்கள் தங்களுடையதாக, தங்களுக்கு மிகவும் நெருக்கமானதாக ஏற்றுக்கொள்வதே இதில் நான் காணும் நகை முரண் என்பது என் வாதம்.
ஜாதிக்கட்டுமானம், இசை
இந்த இரண்டுமே அடிப்படையாக இருக்கும், ஒப்பீட்டளவில் சமமான ஒரு பிரச்சனையை முன்வைத்தாலும், மக்களின் அணுகுமுறை என்னவோ இவ்விரண்டுக்கும் வெவ்வேறாகத்தான் இருக்கிறது என்பது என் பார்வை. இதுவே நான் சுட்ட விரும்பும் முரண் என்கிறேன்.
இறுதியாக, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இருவருமே எனக்கும் பிடித்தமாக இசைக்கலைஞர்கள் என்பதொடு மட்டுமல்லாது, இருவருமே ஒப்பிடவே முடியாத அளவிலான சாதனைகளைத் தங்கள் இசையால் செய்திருக்கிறார்கள் என்பதே என் அவதானிப்பும் கூட. இருப்பினும், இருவரும் அணுகப்படும் விதத்தில் உள்ள, அதிகம் பதிவு செய்யப்படாத ஒரு பார்வை முரணைப் பதிவு செய்வது மட்டுமே இந்தக் கட்டுரையின் நோக்கம் என்பதை இங்கே குறிப்பிட்டு இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.
- ராம்பிரசாத்