11வது நூல் - வாவ் சிக்னல் - விஞ்ஞானச்சிறுகதைகள் தொகுப்பு
பொதுவாக, எழுத்து பழகுபவர்கள் முதலில் பழகுவது கவிதைகளைத்தான். ஏனெனில் அது மிக எளிமையான வடிவம். ஆதலால் கவிதைத்தொகுதிதான் எழுத்தாளனது முதல் படைப்பாக இருக்கும். பின் சிறுகதைத்தொகுதிக்கு விரிவடைந்து, அதன் பின்னரே நாவல் வெளிவரும்.
என் விஷயத்தில் இந்த வரிசை தலைகீழாகியிருக்கிறது.
ஆங்கிலத்திலும், தமிழிலுமாக பத்து நாவல் நூல்கள் வெளியிட்ட பிறகு இப்போது முதல் முறையாக சிறுகதைத்தொகுப்பு வெளியாக இருக்கிறது.
நூலின் பெயர்: வாவ் சிக்னல், விஞ்ஞானச் சிறுகதைகள்.
பதிப்பகம்: படைப்பு பதிப்பகம்.
தமிழில் கடந்த 12 மாதங்களில் சுமார் இருபத்தியைந்து விஞஞானச் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்(Excluding short stories translated in English). சொல்வனம், வாசகசாலை, பதாகை, கனலி போன்ற தளங்களில் வெளியாகியிருக்கின்றன. அவைகளில் பன்னிரண்டைத் தெரிவு செய்து முதல் தொகுதி நூலாக உருவாகியிருக்கிறது 'வாவ் சிக்னல்' தொகுப்பு.
நூல் குறித்து விமர்சிக்கையில் "இயற்கை விதிகளை மாற்றிப்போட்டு..." என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறார் பதிப்பாளர் ஜின்னா அஸ்மி அவர்கள்.
பார்க்கப்போனால் இதே விமர்சனப் பார்வை பலருக்கும் இருப்பதாக அறிகிறேன்.
வாவ் சிக்னல் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் குறித்த என் விமர்சனத்தைப் பின் வருமாறு ஒற்றை வரியில் தரலாம்.
There Are No Laws of Physics. There’s Only the Landscape.
இந்த ஒற்றை வரியே எல்லாவற்றையும் விளக்கி விடும் என்று எண்ணுகிறேன்.
(இது குறித்து விளக்கம் வேண்டுமானால் தனியாக ஒரு கட்டுரையில் தருகிறேன்.)
இந்தத் தொகுதி ஏன் உங்கள் புத்தக அடுக்குக்கு முக்கியமானது என்கிற கேள்வியை பின்வருமாறு அணுகலாம்.
1. இன்னும் இருபது, முப்பது ஆண்டுகளுக்குப்பின் எடுத்து வாசித்தாலும், அன்றைய காலகட்டத்திற்கும் பொருந்துவதான சிறுகதைகளைக் கொண்டிருப்பது 'வாவ் சிக்னல்' தொகுதியின் சிறப்பம்சம் எனலாம். இன்னும் சொல்லப்போனால், இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள், இப்போதுள்ள உலகிற்கு பொருந்துவதைவிடவும், அறிவியல் வளர்ச்சி கண்டுவிட்ட, வேற்று கிரக உயிர்களைக் கண்டுபிடித்து அவர்களோடு தகவல் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளப்போகும் இருபது முப்பது வருடங்களுக்குப்பிறகான உலகிற்கே மேலதிக பொருத்தமாக இருக்குமென்பது என் கணிப்பு.
(இக்காரணங்களுக்காகவே, இப்போதிருக்கும் உலகம் இச்சிறுகதைகளை 'அதீத கற்பனை' என்றோ, 'வித்தியாசமான' கதைகள் என்றோ, வினோதமான இயற்கையின் விதிகள் என்றோ கடந்து போய்விடலாம்).
3. எல்லாவற்றையும் விட மிகவும் பிரதானமான காரணம்: மானுட வாழ்வியலின் இயங்கு இயல்பைத் தீர்மானிக்கும் பண்புகளை ஒவ்வொன்றாக, அவற்றின் அசலான 'பிரபஞ்ச' அர்த்தங்களோடு தர்க்க மற்றும் தத்துவார்த்த பார்வைகளைக் கொண்டு அலசுவதான இயல்பைக் கொண்டிருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு 'வாவ் சிக்னல்'.
இத்தொகுப்பு நூலை சாத்தியமாக்கியிருக்கும் படைப்பு பதிப்பகத்தின் பதிப்பாளர் திரு,ஜின்னா அஸ்மிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்..