Zombie Planet (ஜோம்பி கிரகம்)
கிரகம் தெரியும், ஜோம்பியும் தெரியும். அதென்ன ஜோம்பி கிரகம்?
இருக்கிறதே. ஜோம்பி என்பது என்ன? அது இறந்த மனித உடல். ஆனாலும் நகரும். உயிர் குடிக்க அலையும். இல்லையா? அது போல, ஜோம்பி கிரகம் என்பது இறந்த கிரகம்.
நமது சூரியன், பிற்பாடு, ஒரு சூப்பர் ஜெயன்ட் ஆகும்போது, இப்போது மார்ஸ், ஜூபிட்டர் கிரகங்கள் இருக்கும் இடம் வரை கூட பெரிதாகி, நம் கிரகத்தை விழுங்கிவிடலாம். ஆக, நமது சூரியன் சூப்பர் நோவா ஆகும் போது, பூமி இருக்கவே இருக்காது.
அது போல் ஒரு சூப்பர் நோவா வெடிப்பு வெடிக்கையில், அந்த வெடிப்பானது, அருகிலுள்ள கிரகங்களை சுக்கு நூறாக்கிவிடுகிறது. இப்படி சுக்கு நூறாக்கப்படும் கிரகங்களின் பகுதிகளும், தூசியும், இன்ன பிற வஸ்துக்களும் இணைந்து ஒரு கிரகமானால், அதை ஜோம்பி கிரகம் என்கிறார்கள்.
பூமிக்கு மிக அருகில் உள்ள ஜோம்பி கிரகங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் மூன்று இருக்கின்றன: Fobitor, Drogger and Poltergeist. சுமார் 2300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த மூன்றும் இப்போதைக்கு ஒரு பல்சாரைச் சுற்றி வருகிறது.
பொங்கல், உப்புமா, தக்காளி சட்னி, கார சட்னி, கொஞ்சம் கெட்டுப்போன தயிர், மக்கிய குப்பை, மக்காத குப்பை, குலாப் ஜாமூன், பிஸ்கட், பாகற்காய் போன்றவற்றை ஒன்றாகப் போட்டு மிக்ஸியில் அரைத்தால் உண்ணும் படியாகவா இருக்கும்? கேட்கவே கண்றாவியாய் இருக்கிறதல்லவா? ஜோம்பி கிரகங்களும் அப்படித்தான். அதிலிருந்து எதுவும் உருப்படியாய் உருவாக முடியாது. ஆதலால் உயிர்கள் உருவாவதற்கான எந்தத் தகுதியும் அவைகளுக்கு இருக்காது.