இன்னொரு பூமி
'பூமி போன்ற கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்று துவங்கி Kepler இதைக் கண்டுபிடித்தது, நாளைக்கு அங்கே போய் இறங்கப்போகிறது என்றெல்லாம் செய்திகள் வருகிறதே!
எப்படி பூமி போன்ற கிரகங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் தெரியுமா? உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு இப்பத்தி.
சூரிய கிரகணம் பற்றி நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலா வருவதால், சூரியனை முழுமையாகவோ, பகுதியாகவோ மறைக்கும். இதே கதை தான். தொலைதூர நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியை, பிரகாசத்தை அளவிடுவார்கள். அப்போது, அதன் கிரகம் ஒன்று கெப்லருக்கும் நட்சத்திரத்திற்கும் இடையில் வருகையில், ஓரளவு நட்சத்திரத்தின் ஒளியை மறைக்கும்.
அதை அளவிடுவார்கள். தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இது நடந்தால், அந்த பாரிய விண்வெளிப் பாறை நட்சத்திரத்தின் கிரகம் என்றாகிறது. எந்த அளவிற்கு இந்த நிகழ்வு நட்சத்திரத்தின் ஒளியை மறைக்கிறது, கிடைக்கும் ஒளியின் அலைவரிசை என்ன என்பதையெல்லாம் வைத்துத்தான் நட்சத்திரத்தின் தூரம், கிரகம் நட்சத்திரத்தைச் சுற்றி எத்தனை தூரத்தில் இருக்கிறது போன்ற தகவல்களைக் கண்டுபிடிக்கிறார்கள். இதற்கு TRANSIT METHOD என்று பெயர்.
அப்படியானால் வெறும் ஒளியை வைத்தா தினம் தினம் பூமி போன்ற கிரகம், இணை கிரகங்கள் என்றெல்லாம் கதை விடுகிறார்கள் என்று கேட்டால், ஆம். ஒளி தான் தொலைதூர உலகங்கள் குறித்த தகவலை பிரபஞ்சமெங்கும் கடத்தும் தண்டோராக்கள் என்றால் மிகையில்லை.
ஒளி தண்டோரா போடுவதில் ஒரே ஒரு பிரச்சனை தான்: அந்த ஒளி எத்தனை பழையது என்பதுதான். உதாரணமாக, நட்சத்திரம் 200ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கிறது என்றால், நாம் பார்ப்பது, 200 ஆண்டுகளுக்கு முந்தைய நட்சத்திரத்தை. தற்போது, அங்கே அந்த நட்சத்திரம் இல்லாமல் கூட இருக்கலாம். அப்படிப் பார்த்தால், இல்லாத நட்சத்திரத்தைப் பார்த்துவிட்டு, இரண்டாம் பூமி என்று துள்ளிக்குதிக்கும் லூசு இனம் நாமாகத்தான் இருப்போம் என்பதையும் கூறிக்கொண்டு.............