JCE - கல்லூரி மலர்
கல்லூரி முடித்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு, கல்லூரியின் பத்திரிக்கையில் இடம் பெறுவது பெருமைக்குரிய தருணம். இந்த இருபத்தியிரண்டு ஆண்டுகளில் கல்லூரி தழைத்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். 1998ல் நான் கணினி பொறியியல் வகுப்பில் சேர்ந்தபோது, கல்லூரியில் மொத்தம் மூன்றே பிரிவுகள் தான் இருந்தது.
கணினி, எலக்ட்ரிகல்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்.
இப்போது எம்.டெக், எம்.பி.ஏ, பயோ டெக்னாலஜி, சிவில், மெக்கானிக்கல் என்று ஒரு வெகுவாக விரிந்திருக்கிறது கல்லூரி. கல்லூரியில் படிக்கையில் எந்த கலாச்சார நிகழ்வுகளிலும் பங்கேற்றதில்லை. வெறும் பார்வையாளனாகவே கடந்திருக்கிறேன். நான் படித்த போது, என்னை யாருக்குமே தெரியாது. இத்தனைக்கும், கல்லூரிக்கென்று அப்போதே பத்திரிக்கையும் இருந்தது. அதில் ஒரு Column கூட எழுதியதில்லை.
அப்படியாப்பட்ட என் குறித்துத்தான் 2025ம் ஆண்டில் கல்லூரி மலரில் ஒரு முழுப் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. இயற்கையின் விந்தையை, இறை சக்தியின் ஆளுமையை விளக்க இதை விடவும் ஒரு சான்று இருக்க முடியுமா என்ன?