என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 19 February 2025

மரபணுக்கள் - சிறுகதைத் தொகுப்பு - விமர்சனம் - யாழ் துறைவன்





 நூல் திறனாய்வு :

நூலின் பெயர் : மரபணுக்கள்
ஆசிரியர் : ராம் பிரசாத் — with Ram Prasath and Mohamed Ali Jinna.
பதிப்பகம் : படைப்பு
விலை :190 ரூபாய
நான் சமீபத்தில் வாசித்த மிக வித்தியாசமான நூல் "மரபணுக்கள் "
இந்த நூலின் ஆசிரியர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் விருது பெற்ற எழுத்தாளர் ராம்பிரசாத். ஒரு
கணினியாளர், கதையாளர் ஆனால் என்னவாகும்?, இப்படித்தான் அறிவின் குழந்தைகளும், அறிவியல் குழந்தைகளும், கதை வழியே,கற்பனை வழியே ஓடித் திரிவார்கள்.
எதிர்காலத்தின் உலகின் போக்கும், உணர்வின் போக்கும் எப்படியிருக்கும் என்பதை..அச்சுறுத்தலாக இல்லாமல்,
நம்மை அதற்கு ஏற்ப மனதளவில் தயார் செய்யும் நோக்கில் படைத்திருக்கும் படைப்பை... நம் படைப்பு குழுமம் வெளியிட்டிருப்பது இன்னும் சிறப்பு...
விஞ்ஞானம், அறிவியல், மரபணு, இப்படி இலக்கியத்தோடு, அறிவியல் கலந்த கதைகளும், கட்டுரைகளும்,புனைவுகளும் தமிழில் மிக, மிகக் குறைவு. அதற்கு தமிழின் மரபணு குறைபாடாகக் கூட இருக்கலாம்..."மரபணுக்கள் ".. 10 விஞ்ஞான சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.
"பிரதி எடுக்காதே"
முதல் சிறுகதை.
ஆறு ஆண்டுகளாக காதலிக்கும் மிலி,மற்றும் கரீம் எனும் இரண்டு கதாபாத்திரங்களிடயே இடையே நிகழும் உணர்வு போராட்டமே இந்த கதை..
இன்றே வாழ்ந்து விட வேண்டும் என்பவன் கரீம்..
"நாளையும் வாழ்வு இருக்கிறது " என்பவள் "மிலி"..
"மிலி" யின் எண்ணத்தை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை, புரிந்து கொள்ளாத முடியாத கரீம், மிலியை திருப்திபடுத்த தன்னைப்போலவே பல பிரதிகள் எடுக்கும் எந்திரத்தை கொண்டு, தன்னையே பல பிரதிகள் எடுக்கத் தொடங்க, உடனே மறுக்கும் மிலி, தான் இதனை முன்னரே முயற்சித்து பார்த்து விட்டதாகவும், அது இன்னும் ஆபத்தானது என்றும், தானே அப்படியான பிரதிகளில் ஒருத்தி தான் எனும் இடம், கதையில் திருப்பம்...
"ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றிற்கு , உடல்
மொழியில் உருவம் தந்தான்..
"பிரதிகள்" மரபணுக்களை மாற்றுவதில்லை..
இப்படி கதையின் சில இடங்களில் கவித்துவமும் கலந்தோடி இருப்பதை ரசிக்கலாம்..
நிறைவாக "மனமுவந்து முயன்றால் மட்டுமே,ஒருவருக்கு மற்றவரின் உணர்வுகள் புரியும்..
மாற்று பிரபஞ்சத்தால், மாற்று பிரதியால் அல்ல, என்று முடிகிறது முதல் கதை...
"சேஷம்"
அடுத்ததாக ஒரு வித்தியாச கதை இது,மனிதர்கள்
தற்காலிகமாக பச்சை குத்துவதற்கு பதிலாக, ஒரு கரு வயிற்றில் உருவாகும் போதே, அந்த கருவுக்குள்
ஒரு பச்சோந்தியின் நிறம் மாறுதலுக்கான மரபணுவையோ, அல்லது ஒரு மயில் தோகையின் மரபணுவையோ கருவுக்குள் செலுத்திக் கொள்வது. செலுத்திய மரபணுக்கள் உடலில் உறக்க நிலையிலேயே இருக்கும், குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் மூலம் அவற்றை உசுப்பவோ, மீண்டும் உறங்க வைக்கவோ முடியும் எனும் அதீத வித்தியாச களத்தில் இந்த கதை நீள்கிறது..
தன் காதலன், "ஸ்டுவர்ட்" க்கு சார்ப்பத்தின் மரபணு இருப்பதால், அரசாங்கம் அவரை தனிமைப்படுத்த,
அவருக்காக அவரின் காதலி, நீதிமன்றத்தில், வாதடுவதாக விரிகிறது கதை..ஆனாலும் ஏற்காத, நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க,
காதலன் "ஸ்டுவர்ட் " பாம்பின் மரபணு இருப்பதால், முழு சர்ப்பமாக உருவம் கொண்டு,இவளை கானகத்திற்கு கடத்தி வர,என விரியும் கதையில்
"அடாவிசம்", பாம்புக்கு இதயத்தில் இதயத்தின் மூன்று அறைகள் இருக்கும் - இப்படியான அரிய தகவல்களுடன் நீளும் இந்த கதையின் கடைசியில், ஸ்டுவர்ட் என்னவாக மாறுகிறான் எனும் அதீத ஆச்சர்யத்தோடு முடிகிறது கதை..
"ஊரும் மனிதன்"
முதலை போல உருவம் கொண்ட மகன்,அவனை சரி செய்ய முயலும் தந்தை, கடவுள் போல, ஞானி போல, மருத்துவன் போல வித்தியாசமான உடல் அமைப்பில் காட்டில் வாழும் ஒரு அமானுஷ்யன், இப்படி மூவருக்குள் நடக்கும் உரையாடலோடு தொடரும் இந்த கதையில், நிறைய இடங்களில்
"ஜென்" தத்துவங்களையும்,
பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு மைல்கல்லிலும் எதனையோ இழந்து தான், எதையோ பெற்றிருப்போம் " என "டார்வினிசமும்" கலந்து கதை சொல்கிறார் எழுத்தாளர்.பருந்து, எலி, சிட்டுக்குருவி, புழு, பூரான், முதலை இவைகளை வைத்து ஒரு முழு பத்தி எழுதியிருக்கும் இடம், ஓரிரு முறை படித்தால் மட்டுமே புரியும் வகையில் சொல்லப்பட்டிருக்கும் ஆழமான தகவல்.
"உங்கள் வாழ்வை இனிமேலாவது வாழுங்கள் " என முடியும் வரிகள்..
எனக்கானதாக, நமக்கானதாகப் பட்டது...
"சரோஜா தேவி புத்தகம் "
ஒரு விடுதி, அதன் உரிமையாளர் விஸ்வநாதன்,பதின்ம வயதிலிருக்கும் அவரின் பேரனுக்கு, மல்லிகா எனும் வயதில் மூத்த ஒரு பெண்ணை முதன் முறை பார்த்ததும் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டதை பார்த்து,ஒரு மனநல மருத்துவரை அழைத்து வருகிறார் தாத்தா.சம்பந்த பட்டவர்களின் மரபணுக்களை ஆராயத் தொடங்கும் மருத்துவர், முடிவு குறித்தும், பேரனின் மரபணு குறித்தும், அந்த வயதில் மூத்த பெண் குறித்தும் அதிர்ச்சி தரும் விஷயங்களை, விஸ்வநாதனோடு பகிர்வதாக நீளும் இந்த கதையில், "மான்" ஒரு குறியீடாக கதையெங்கும் துள்ளி ஓடுகிறது.மேலும் "GENE METHYLATION", "UNI PARENTAL DISOMY" எனும் அதீத மருத்துவ வார்த்தைகள் குறித்த புரிதலும், புதிரும் வாசிப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும்.கடைசியில், தலைமுறைகளுக்கிடையே,ஒருவரின் குணங்கள், செயல்பாடுகள் மரபணுக்கூறுகள் வழியே அடுத்த சில தலைமுறையிலும், "எட்டிபார்த்தல்", "உயிர்த்தெழுதல்" நிகழும் என்கிறது இந்த கதை.
"பச்சிலை "
காட்டில் ட்ரெக்கிங் செல்லும் போது, காணாமல் போன தன் கணவன் ஜோஸ் ஐ,தன் நண்பர் ஞானனுடன் (இந்த பெயரே சூப்பர் )சேர்ந்து மீண்டும் காட்டுக்குள் தேடுகிறாள் வானதி.
ஒரு வித்தியாசமான மரத்தில், ஜோசின் சட்டை தெரிய, "மரங்களும், இலைகளும் எப்படி மனிதர்களுக்கு மூலிகையாக, மருந்தாக இருக்கிறார்களோ, இங்கிருக்கும் சில குறிப்பிட்ட மரங்களுக்கு, மனிதர்கள், மருந்தாக மாறுகிறார்கள்" எனும் வித்தியாசமான கோணத்தில் பயணிக்கிறது இந்த கதை.
இலையின் பிரபஞ்ச வெளி, வயிற்றிற்குள் வளரும் செடி,
தாவரங்களும்,மரங்களும் தான் கல், தோன்றி, மண் தோன்றும் முன் பூமியில் தோன்றியது எனில், மனிதனும், விலங்குகளும், அவைகளின் முன், சிறுபான்மையினம்... இப்படி நிறைய நிறைய சொல்லிப்போகிறது "பச்சிலை"..
"எப்போதும் பெண் "
சூரியனின் "வெஞ்சினம்"(நான் ரசித்த வார்த்தை) காரணமாக பூமியில் மொத்தமே 3000 உயிர்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதிலும் பெரும்பான்மை பெண்கள் மட்டுமே.அதில் அஞ்சலி, அவளின் அம்மா மருத்துவர் அபி,அவரின் தோழி மரியம், இவர்களின் மூவரை கொண்ட இந்த கதை, பெண்ணியம் பேசுகிறது.. இல்லையல்லை, பெண்ணின் மென்மை குணத்திற்கான மரபணுவை மரணிக்க வைக்க முயல்கிறது. ஆண்களுக்கு "பலாத்காரம் செய்தல்", ஆசிட் வீசுவது, கொலை செய்தல், இவைகளை செய்யத் தூண்டும் மரபணுக்களை நீக்க முயல்கிறது..
"காதல்" என்பது ஆணைப் பொறுத்த வரையில் கலவிக்கான ஏற்பாடு " என்ற வரியைப் படித்ததும்,ஒரு ஆணாக "சுருக்"கென சுட்டது. ஆனால் யோசித்துப் பார்த்தால் அது உண்மையும் கூட. மேலும் இதை எழுதியதும் ஒரு ஆண் என்றதும், உண்மையை உடனே மனம் ஏற்றுக்கொண்டது..
"பாவனை நிரல்" (Simulation) மூலம் இவர்கள் சோதனை செய்து நிறை, குறைகளை கலைந்து, 1500 ஆண், 1500 பெண் என உருவாக்கும் இணைகளோடு, இவர்களின் உரையாடலும் நிறைய, நிறைய பேசிப்போகும் விஷயங்களை விஞ்ஞான பார்வையோடு ரசிக்கலாம்..
"தழுவு கருவி"
விண்மீன் மண்டலத்தின் பாதுகாவல் சிறைச்சாலை,
அங்கிருந்து தப்பித்த ஒரு கைதி,
"கால்பாட்" எனும் விண்மீன் ரோந்துக் குழு, இப்படி "ஸ்டார் வார்ஸ்" படத்திற்கு சற்றும் குறைவில்லாத கதை இது..
நாயகன் சிறை சென்ற காரணம்,வாசிப்பவர்களுக்கு,
நிகழ்கால அரசியலில், எதை, எதையோ நியாபகம் படுத்தும் என்பதில் சந்தேகமில்லை..
கதை நாயகனின் சாயல், பழக்க வழக்கங்கள் எல்லாமே, அவரின் பாட்டியை உணர்த்தும்படியிருக்க,அவர் பாட்டி குறித்த தகவல்களை திரட்ட,பாட்டி சேகரித்து வைத்த இரண்டு அறிவியல் புனைவிதழில் உள்ள அறிவியல் கட்டுரைகள், அது தரும் அதிர்ச்சி தகவல்கள்,அதைத் தொடரும் நிகழ்வுகளும், நினைவுகளும் ஒரு அருமையான திரில்லர் வெப்சீரியஸ் போன்ற உணர்வைத் தரும் கதை..
"கண்ணாடிச் சுவர்"
பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்தால், ஏன் இந்த உலகம் ஏற்றுக்கொள்வதில்லை எனும் கேள்வியோடு தொடங்கும் கதை, க்ளாரா, நான்சி எனும் இரு பெண்கள், அவர்களுக்குள் திருமணம்,
பரிணாம வளர்ச்சி குறித்த அவர்களின் அறிவியல் சோதனை, கண்ணாடி கூண்டு, அதற்குள் உருவான தன்னைத் தானே பிரசவிக்கும் சோதனை உயிர்,
பின் அதற்குள் ஆண், பெண் உயிர்களின் நடுவே உண்டாக்கப்பட்ட கண்ணாடிச்சுவர் என நம் எண்ணக்கூட்டுக்குள் அடங்காத கற்பனையில் விரியும் இந்த சிறுகதை...
பெண் ஏன் அடிமையானால்? எனும் கேள்விக்கு விடைதேடி.. முடிகிறது....
"மாற்றுத்தீர்வு "
சாகா வரத்திற்கான மருந்து தேடும் முயற்சியில் இருக்கும்,
உதிரா, எழில். இவ்விரு பெண்களிடையேயான உணர்வுகள், ஊராய்வுகள், எனத் தொடங்கும் கதை,
பைரவர் கோவில், கோவிலிலுள்ள சிற்பங்களில் இருக்கும், குழந்தை பிறப்பு சிற்பங்கள், முன்னோர்களின் "மரபணு திருத்தங்கள் " குறித்த அறிவு என வித்தியாசமாக பயணிக்க வைக்கிறது...
இருவரும் சேர்ந்து 173 ஆண்டுகளாக உயிர் வாழும் காட்டுவாசிப்பெண்ணை தேடி காட்டுக்குள் போக, அவளோ..
இவர்கள் கோவிலுக்கு போனதும், காட்டுக்குள் வந்ததும் தற்செயல் இல்லை எனக்கூறி, தொடர்ச்சியாக கூறும் செய்திகள், உதிரா, எழிலுக்கு மட்டுமல்ல வாசிப்பவர்களுக்கும் ஆச்சர்யமும்,அதிர்ச்சியாய் இருக்கலாம்.
"சோஃபி"
மத்திம வயதுடைய ஒரு ஆராய்ச்சியாளர்,
ஒரு தனித்தீவு, அதில் அவரின் இந்திரியம் கொண்டு, சுரைக்காய் கூட்டிலும்,குதிரையின் கருப்பையிலும் வைத்து வளர்க்கும் ஒரு உயிர். அதன்
பெயர் "ஹோமோ அகந்துரஸ் " எனும் அறிவியல் பெயரும்,"சோஃபி" என்ற அழைக்கும் பெயரும் கொண்டு,கனவிலோ, கற்பனையிலோ சாதாரண மனிதனுக்கு வராத, கற்பனையோடு பயணிக்கிறது கதை..
இப்படி உருவான "சோஃபி".உணவாக சூரியனின் ஒளியை உட்கொள்வதும், இரவில் நட்சத்திரங்களை
பிரதிபலிப்பதுமாக,இருக்கL்..
"சோஃபி" குறித்த தகவல்கள்,அவளுக்கான ஆபத்துகள்,வருத்தங்கள், எதிர்கால வாய்ப்புகள் என் பலவற்றை எழுதி, ஒரு பாட்டிலுக்குள் அடைத்து,கடலுக்குள் எறிவதாய் கதை முடிகிறது...
"மரபணுக்கள்" வழக்கமான பாதையில் பயணிக்காத ஒரு மாற்று முயற்சி. ஆங்கிலத்தில் இப்படியான எழுத்துகளும் , திரைப்படங்களும் நிறைய உண்டு.தமிழில் இதுவே எனக்கு தெரிந்து முதன் முறை. வித்தியாசமான முயற்சி என்று ஒற்றை வார்த்தையில் கடந்து விட முடியாத சிறுகதை தொகுப்பு
கற்பனை எல்லோருக்கும் வரும்,
ஆனால் இவரின் கற்பனை
அதீதத்தின் அதீதம்.
சில இடங்களின் ஆச்சர்யமும், சில இடங்களில் அதிர்ச்சியும், இப்படி மாறிப்போனால் எப்படி இருக்கும் என பல இடங்களில் பயமும், பதட்டமும்,
கூட உண்டானது. பாம்பாக மாறும் சேஷம் கதை,என் தூக்கத்தை தடுத்தது
இப்படி "மரபணுக்கள்" நூலை வாசித்து வெளியில் வந்தும், வராமலும், என் மனமும், மரபணுவும் நிறைய கேள்விகளை சுமந்து,நிறையவே மாற்றம் கொண்டிருப்பதை உணர்கிறேன்.....
மாச்சீனி(Glucose ), பாவனை நிரல் (simulation ), பகிரி (watsapp ), இப்படி நூல் நெடுக, நல்ல பல தமிழ்ச்சொற்களை பயன்படுத்தியிருப்பதற்காக, படைப்பாளருக்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள்...
நிறைவாக, எழுத்தாளரின் மரபணுக்களில் இன்னும் இது போல நிறைய மாற்று சிந்தனைகள் ஏற்படட்டும்..அவைகளை எங்களுக்கு வரிகளாக்கி தரட்டும்...
எழுத்தாளர் "ராம் பிரசாத்" - அவர்களை
"wow"- சொல்லி வாழ்த்துகிறேன்...
வாசிப்பின் மகிழ்வில்
- வினோத் பரமானந்தன்
கூடலூர் (தேனி )
All reacti

Sunday, 16 February 2025

Galactic Arm

 1977ல் அமெரிக்காவில் நியூ யார்க் மாகாணத்தில், ஒரு சக்தி வாய்ந்த மின்னலால் சுமார் இருபத்தி ஐந்து மணி நேரம், மின்சாரத் தடை ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க மின் தடை வரலாற்றில் மிக அதிக நேரம் நீடித்த இந்த மின் தடையால், பல கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சூறையாடப்பட்டன. நகரெங்கும் ஏகத்துக்கும் திருட்டுகள், கொள்ளைகள் அரங்கேறியது. 

ஆனால், கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பார்களே? அது போல, அந்த நீண்ட நெடிய மின் தடையில் தான், நியூ யார்க் வாசிகள் வானத்தில் அந்தக் காட்சியை முதன் முதலாகக் கண்டார்கள்.

அது வேறொண்றுமில்லை. நீங்கள் படத்தில் காணும் Galactic Arm தான். மின்சார விளக்கு கண்டுபிடித்து பல ஆண்டுகளில், பல தலைமுறைகள் இந்தக் காட்சியைக் காணவே இல்லை. இதனால், பழங்குடிகளுக்கும், எல்லா விலங்குகளுக்கும், ஆதி மனிதர்களுக்கும், அவ்வளவு ஏன், மின்சார விளக்கு கண்டுபிடிக்கப்படும் முன் வாழ்ந்த பல தலைமுறைக்கும் கூடப் பரிச்சயமாகியிருந்த இந்தக் காட்சி, அந்த நகர மக்களுக்குப் புதிதாக இருந்திருக்கிறது.  

பார்க்க எத்தனை ரம்மியமான இருக்கிறது பாருங்கள்? மின்சார விளக்கு என்கிற மாயைக்கு எதையெல்லாம் பலி கொடுத்திருக்கிறோம் பாருங்கள்? 





Saturday, 15 February 2025

புகைப்படங்களின் பின்னே உள்ளே கதை

 புகைப்படங்களின் பின்னே உள்ளே கதை

*********************************************



சில புகைப்படங்களுக்குப் பின்னே ஒரு கதை இருக்கும்.


உதாரணமாக இந்தப் புகைப்படம். பில்லியன் ஆண்டுகளுக்குப் பின், Andromeda நம்  காலாக்ஸிக்கு அருகாமையில் வந்திருக்கும். அப்படி வந்திருந்தால் இரவு வானத்தில் அது பார்க்க இப்படித்தான் தெரியும். 


எல்லாம் சரிதான். இதிலென்ன கதை என்று தானே கேட்கிறீர்கள்?


ஏற்கனவே இதற்கு முன்னான பதிவுகளில் எப்படி நட்சத்திரங்களின் lifecycle அடிப்படையில் பில்லியன் ஆண்டுகளில் சூரியன் Super Giant Star ஆகிவிடும் என்று பார்த்திருக்கிறோம். அப்படியானால், இந்த புகைப்படம் பூமியிலிருந்து தெரியும்  Andromeda அல்ல. 


பூமிக்கு அடுத்தபடியாக, நமது சூரியன் super giant ஆகிவிடும் பட்சத்தில், ஜூபிடரின் நிலவான IO தான் அப்போதைய சூரியனின் goldilocks zoneல் இருக்கும். அப்போது சாதகமான தட்ப வெப்ப சூழலில், IO பூமி போல் ஆக நிறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ஆக, இந்தப் புகைப்படம் IOன் வானில் தெரியும் காட்சி என்றாகிறது.


இப்போது புரிகிறதா, நாம் ஏன் இருக்கும் பூமியை சரி செய்வதை விட்டுவிட்டு தொலைதூர கிரகங்களுக்கு இடம் பெயர்வதில் அதிக கவனம் செலுத்துகிறோம் என்பது?  




JCE - கல்லூரி மலர்

JCE - கல்லூரி மலர்


கல்லூரி முடித்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு, கல்லூரியின் பத்திரிக்கையில் இடம் பெறுவது பெருமைக்குரிய தருணம். இந்த இருபத்தியிரண்டு ஆண்டுகளில் கல்லூரி தழைத்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். 1998ல் நான் கணினி பொறியியல் வகுப்பில் சேர்ந்தபோது, கல்லூரியில் மொத்தம் மூன்றே பிரிவுகள் தான் இருந்தது.

கணினி, எலக்ட்ரிகல்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்.

இப்போது எம்.டெக், எம்.பி.ஏ, பயோ டெக்னாலஜி, சிவில், மெக்கானிக்கல் என்று ஒரு வெகுவாக விரிந்திருக்கிறது கல்லூரி. கல்லூரியில் படிக்கையில் எந்த கலாச்சார நிகழ்வுகளிலும் பங்கேற்றதில்லை. வெறும் பார்வையாளனாகவே கடந்திருக்கிறேன்.  நான் படித்த போது, என்னை யாருக்குமே தெரியாது. இத்தனைக்கும், கல்லூரிக்கென்று அப்போதே பத்திரிக்கையும் இருந்தது. அதில் ஒரு Column கூட எழுதியதில்லை. 

அப்படியாப்பட்ட என் குறித்துத்தான் 2025ம் ஆண்டில் கல்லூரி மலரில் ஒரு முழுப் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. இயற்கையின் விந்தையை, இறை சக்தியின் ஆளுமையை விளக்க இதை விடவும் ஒரு சான்று இருக்க முடியுமா என்ன?






 

Thursday, 13 February 2025

Rough Planets!

 Orphan Planets அனாதை கிரகங்கள்!



ஆம். இப்படி உண்மையாகவே இருக்கிறதுதான்.

சில கிரகங்கள் நல்ல பிள்ளைகள் போல தனது நட்சத்திரத்தினை சிவனே என்று சுற்றிக்கொண்டிருக்கும். அப்படியே போய்க் கொண்டிருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை தான்.

பள்ளிக்கூடங்களில் ஒன்றை கவனிக்கலாம். ஒரு பையன் ஓரிடத்தில் நின்றுகொண்டிருப்பான். அவனை விட பலுவான இன்னொரு பையன் வந்து , நின்று கொண்டிருக்கும் பையனைத் தள்ளி விட்டுவிட்டு அந்த இடத்தில் வந்து நின்றுகொள்வான். இப்படி விண்வெளியிலும் நடக்கும்.

தனது நட்சத்திரத்தைச் சிவனே என்று சுற்றிக்கொண்டிருக்கும் கிரகத்தை, நெட்டித் தள்ளும் இன்னொரு கிரகம் அந்தச் சூரியக் குடும்பத்தில் அந்த கிரகத்தின் இடத்தை எடுத்துக்கொள்ளும். விளைவாக, சிவனே என்று தன் நட்சத்திரத்தைச் சுற்றிக்கொண்டிருந்த கிரகம், இடம் மாறி, விண்வெளிக்குள் தள்ளப்பட்டு அனாதை ஆகிவிடும். இது போன்ற கிரகங்களை Rough Planets என்பார்கள்.

இர்ண்டு சூரியன்களுக்கிடையே சிக்கிக்கொள்ள நேர்வதாலும், சூப்பர் நோவா வெடிப்பு காரணமாகவும் கூட இப்படிப்பட்ட அனாதைக் கிரகங்கள் உருவாகலாம்.

இவைகள் கிரகங்கள் தாம். நட்சத்திரங்களைச் சுற்றா கிரகங்கள். இவைகள் சும்மா வெறுமனே காலாக்ஸிக்குள் இலக்கின்றி அலைந்து கொண்டே இருக்கும்.

ஒரு சூரியக்குடும்பத்தில், முறையாக இருந்ததின் பலனாய் இவைகளுக்குக் கிடைக்கும் எதுவுமே இறுதியில் பயனற்று, ஒரு கிரகமான இருப்பதினாலேயே வேறு எதற்கும் பயனின்றி, உயிர்கள் உருவாக்கத் திராணி இல்லாமல், விண்வெளியில் சுற்றிக்கொண்டிருப்பவைகள் இவைகள்.



Tuesday, 11 February 2025

IC 1101

 நாமறிந்ததிலேயே மிகப்பெரிய காலாக்ஸி, IC 1101 தானாம். அதன் விட்டத்தைப் புரிந்துகொள்ளவே இந்தப் புகைப்படம். நமது காலாக்ஸி அதன் அருகில் ஒரு சிறிய கறை போல் தெரியவதைப் பாருங்கள். 

இத்தோ பெரிய காலாக்ஸியில் எங்கேனும் நிச்சயம் அதிஉயர் வேற்றுகிரக வாசிகள் இருக்கலாம் தான். ஆனால், பிரச்சனை வேறு. 

இந்தப் பெரிய காலாக்ஸி சுமார் பில்லியன் கணக்கிலான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. அங்கிருந்து ஒரு ஏலியன் நம் காலாக்ஸிக்குப்  பயணப்பட்டு வருவதாக எடுத்துக்கொண்டாலும் அதிக பட்சம் ஒளியின் வேகத்தில் தான் பயணப்பட்டு வரவேண்டும். அப்படியே வந்தாலும் அதற்கு பில்லியன் ஆண்டுகள் ஆகும். அதற்குள் நமது சூரியன், இப்போதிருக்கும் Mintaka, Alnitak,Alnilam போல் சூப்பர் ஜெயன்டாக ஆகிவிடும். அப்படி அது ஆகும் பட்சத்தில் அது, மார்ஸ், ஜூபிடர் வரையிலான கிரகங்களை விழுங்கிவிட்டிருக்கும். அப்போது சூரியனுக்கு மிக அருகாமை கிரகம், வாயு கிரகமான சனிக்கிரகமாகவும் ஆகிவிடலாம். 

பார்த்தீர்களா? உண்மையில் நம்மையும் வேற்று கிரகவாசிகளையும் பிரிப்பது தூரம் அல்ல. காலம் தான். தொழில்  நுட்பம் இணைக்கலாம் என்று யாருக்கேனும் தோன்றலாம். இன்னமும் பறக்கும் கார்கள் கூட வரவில்லை. அதற்குள் பூமி இருமத்துவங்கிவிட்டது. பறக்கும் கார் வரையெல்லாம் தாங்கும் என்றா நினைக்கிறீர்கள்? 




Sunday, 9 February 2025

Orion's Belt

 நீங்கள் படத்தில் பார்ப்பது, பிரபல்யமாக வழங்கப்படும் Orion's belt. இது மூன்று நட்சத்திரங்களைக் கொண்டது: Alnitak, Alnilam, and Mintaka. 


அதற்கென்ன என்கிறீர்களா? இந்த மூன்று நட்சத்திரங்களும் சுமார் தொள்ளாயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கின்றன. அதாவது, இப்போது நாம் பார்ப்பது தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த நட்சத்திரங்கள் எப்படி இருந்ததோ அந்தக் காட்சிகளைத்தான். 

அதுவும் Mintaka இருப்பது இரண்டாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில். 

அதாவது, இந்த மூன்றில் Alnitak,Alnilam ஆகியன தொள்ளாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவிலும், Mintaka இரண்டாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவிலும் இருக்கின்றன.

அதாவது, ஒரே காட்சிதான். ஆனால், அதில் நீங்கள் பார்க்கும் இரண்டு நட்சத்திரங்கள் தொள்ளாயிரம் ஒளி ஆண்டுகளுக்கு முந்தையவை. மூன்றாவது, இரண்டாயிரம் ஒளி ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அது எப்படி இருந்ததோ அதைத்தான் இப்போது நாம் பார்க்கிறோம்.

ஒரே காட்சி, வெவ்வேறு காலகட்டத்தைக் குறிக்கலாம் என்பதற்கு இதை விடவும் வேறு உதாரணம் சொல்ல முடியுமா? இதை வைத்துத்தான் வானம் முக்காலத்தையும் காட்டக்கூடியது என்கிறார்கள்.




Tuesday, 4 February 2025

Blanets

Blanets

சூரியனைச் சுற்றி வருவது planet என்றால், ஒரு கருந்துளையை அதாவது Black Holeஐ சுற்றி வருவது Blanet எனப்படும்.

நமக்கெல்லாம் பரிச்சயமான Blanet ஒன்று இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் அதனைப் பார்த்திருப்போம். ஹிஹிஹி. அது வேறொன்றுமில்லை. 

நாம் எல்லாருமே Christopher Nolanன் Interstellar திரைப்படம் பார்த்திருப்போம். அதில் Miller கிரகம் என்று ஒன்று வருமல்லவா? அதுதான் Blanet.  நீரால் நிரம்பிய அந்த கிரகத்தில், மலை அளவு  அலைகள் வரும். அப்படி ஒரு அலையில் கூப்பரும் மற்றவர்களும் சிக்கித்தான் சுமார் இருபத்து ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் விண்களனுக்குத் திரும்புவார்கள்.

கருந்துளைகளைச் சுற்றி ஈர்ப்பு விசை அளப்பரியதாக இருக்கும். கருந்துளையின் ஈர்ப்பு விசையிலிருந்து எதுவுமே மிஞ்சாது. அதுதான் மிஞ்சாதே. பிறகெப்படி Blanet என்று நீங்கள் கேட்கலாம். பொதுவாகக் கருந்துளையைச் சுற்றி, Event Horizon என்றொரு புள்ளி இருக்கும். அதைத் தாண்டினால் தான் அதன் ஈர்ப்பு விசைக்குள் விழுந்துவிடுவோம். அந்தப் புள்ளியைத் தாண்டாத வரை, எதையும் கருந்துளையால் ஈர்க்க முடியாது. திரைப்படத்தில் வரும் Miller கிரகம், அப்படி கருந்துளைக்குள் விழாமல் நீளும் கிரகம் தான். பொதுவில் ஒரு Blanet கிரகத்திற்கு இந்தப் பண்பு இருக்க வேண்டும்.

இப்படி ஒரு கிரகத்தில் நடக்கும் கதை என்று  நானொரு கதை எழுதியிருந்தேன். கொஞ்சம் நீளமான கதை. சிறிய கதைகளை மட்டுமே வாசிக்க விருப்பப்படுபவர்கள் கடந்து விடலாம்...


https://solvanam.com/2024/11/10/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5/




Monday, 3 February 2025

Zombie Planet (ஜோம்பி கிரகம்)

Zombie Planet (ஜோம்பி கிரகம்)


கிரகம் தெரியும், ஜோம்பியும் தெரியும். அதென்ன ஜோம்பி கிரகம்?

இருக்கிறதே. ஜோம்பி என்பது என்ன? அது இறந்த மனித உடல். ஆனாலும் நகரும். உயிர் குடிக்க அலையும். இல்லையா? அது போல, ஜோம்பி கிரகம் என்பது இறந்த கிரகம். 

நமது சூரியன், பிற்பாடு, ஒரு சூப்பர் ஜெயன்ட் ஆகும்போது, இப்போது மார்ஸ், ஜூபிட்டர் கிரகங்கள் இருக்கும் இடம் வரை கூட பெரிதாகி, நம் கிரகத்தை விழுங்கிவிடலாம். ஆக, நமது சூரியன் சூப்பர் நோவா ஆகும் போது, பூமி இருக்கவே இருக்காது.

அது போல் ஒரு சூப்பர் நோவா வெடிப்பு வெடிக்கையில், அந்த வெடிப்பானது, அருகிலுள்ள கிரகங்களை சுக்கு நூறாக்கிவிடுகிறது. இப்படி சுக்கு நூறாக்கப்படும் கிரகங்களின் பகுதிகளும், தூசியும், இன்ன பிற வஸ்துக்களும் இணைந்து ஒரு கிரகமானால், அதை ஜோம்பி கிரகம் என்கிறார்கள். 

பூமிக்கு மிக அருகில் உள்ள ஜோம்பி கிரகங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் மூன்று இருக்கின்றன: Fobitor, Drogger and Poltergeist. சுமார் 2300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த மூன்றும் இப்போதைக்கு ஒரு பல்சாரைச் சுற்றி வருகிறது.

பொங்கல், உப்புமா, தக்காளி சட்னி, கார சட்னி, கொஞ்சம் கெட்டுப்போன தயிர், மக்கிய குப்பை, மக்காத குப்பை, குலாப் ஜாமூன், பிஸ்கட், பாகற்காய் போன்றவற்றை ஒன்றாகப் போட்டு மிக்ஸியில் அரைத்தால் உண்ணும் படியாகவா இருக்கும்? கேட்கவே கண்றாவியாய் இருக்கிறதல்லவா? ஜோம்பி கிரகங்களும் அப்படித்தான். அதிலிருந்து எதுவும் உருப்படியாய் உருவாக முடியாது. ஆதலால் உயிர்கள் உருவாவதற்கான எந்தத் தகுதியும் அவைகளுக்கு இருக்காது. 




Saturday, 1 February 2025

பூமிக்கு நெருக்கமான கிரகம்

 பூமிக்கு நெருக்கமான கிரகம்




பூமிக்கு நெருக்கமான கிரகம் எது என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? வீனஸ் அல்லது மார்ஸ். இல்லையா? கொஞ்சம் மெனக்கெட்டால் வீனஸ் தான் என்று கூடச் சொல்லிவிட முடியும். சரி தானே.

ஆனால், பூமிக்கு நெருக்கமான கிரகம் வீனஸ் இல்லையாம். மெர்க்குரி கிரகம் தானாம்.

இது என்னடா புதுக்கதை என்று தானே தோன்றுகிறது?

ஆமாம். பூமி, வீனஸ், மெர்க்குரி, மார்ஸ் ஆகிய கிரகங்களின் சுற்றுவட்டப்பாதையை பத்தாயிரம் வருடங்கள் இடைவெளியில் அவதானித்திருக்கிறார்கள். அதில் பூமிக்கு நெருக்கமாக, அதிகமான நேரம், மெர்க்குரி கிரகம் தான் இருக்கிறதாம்.அதனால், பூமிக்கு நெருக்கமான கிரகம், மெர்க்குரி என்று சொல்லிவிட்டார்கள். இந்த விதமான கணக்கிடலுக்குப் பெயர் Point circle method (PCM) ஆம்.

இதன் பொருள் என்னவென்றால், உங்களுக்கு நெருக்கமானவர் பக்கத்துத் தெருவில் இருந்தால், பக்கத்துத் தெரு தான் பக்கத்து வீடாகும். பக்கத்து வீடு, பக்கத்துத் தெருவாகிவிடும். அவ்வளவுதான். நினைவில் வையுங்கள். பக்கத்து வீடு, கிரகம் எல்லாமும், அதிக நேரம் எதில் செலவு செய்யப்படுகிறது என்பதை வைத்துத் தான் தீர்மானிக்கப்படுகிறது.

அடுத்த முறை, பூமிக்கு நெருக்கமான கிரகம் எது என்று யாரேனும் கேட்டால், இடத்தை வைத்துச் சொல்ல வேண்டுமா, அதிக நேரம் நெருக்கமாக இருப்பதை வைத்துச் சொல்லவேண்டுமா என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

எனக்கு வேலை தான் ஐடி. ஆனால், நான் அதிக நேரம், அதாவது சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களைக் கணக்கில் கொண்டால், செலவழிப்பது தமிழ் அறிவியல் புனைவுகளில். இப்போது, நான் என் பணியை என்னவென்று சொல்ல வேண்டும்?