விடுதலை-2
******************
விடுதலை-2 திரைப்படம் குறித்த விமர்சனங்கள் இணையம் முழுவதும் பெரும்பான்மைக்கு நேர்மறையாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு சில வாதங்கள், கம்யூனிசம் பற்றி எடுத்த வெற்றிமாறன், தன் சம்பளத்தைத் தன் உதவியாளர்களுடன் பகிர்ந்து கொள்வாறா என்கிற ரீதியில் இருப்பதையும் கவனிக்க முடிந்தது.
விடுதலை-1,2 இரண்டுமே 1980, 1990 களின் காலகட்டத்தில் எந்தெந்த சூழல்களில் தமிழ் நாட்டில் கம்யூனிசக் கோட்பாடுகள் புகுந்தன? அவை புகுவதற்கான அடிப்படைக் காரணிகளாக அமைந்த நிகழ்வுகள் யாது? சமூகத்தின் எந்தப் படி நிலையில் இருப்பவர்களால் அது முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது? ஏன் ஏற்கப்பட்டது? அதனால், அவர்களுக்கு நடந்த நன்மை தீமைகள் என்னென்ன? அது குறித்த அவர்களது விமர்சனம்/பார்வை என்னவாக பின்னாளில் உருப்பெற்றது? என்பது குறித்தெல்லாம் விரிவாக, ஒரு மாணவன் இது குறித்த சரித்திரம் பூகோளம் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பல்லாயிரம் பேர் எழுதிய நூல்களை மணிக்கணக்கில் அயர்ந்து அயர்ந்து வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளாமல், காட்சி வாயிலாக, உரையாடல் வாயிலாக, பாடம் புகட்டும் நோக்கில், மிக மிக விரிவாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இன்றிருக்கும் சமூகம் வெற்றிமாறனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
வெற்றிமாறன் என்றொரு திரைப் படைப்பாளி இல்லாவிட்டால் வேறு எவரும் இந்த ஏரியாவை கையாண்டு திரைப்படம் எடுத்து லாபம் பார்க்க மாட்டார்கள். மாறாக, நடிகைகளின் இடுப்பையும், பிருஷ்டத்தையும் மார்பையும் கிட்டத்தில் காட்டி காசு பார்க்கும் கூட்டமே இங்கு அதிகம். திரைத்துறை அத்தகையது.
தமிழகம் உடைமைத் தத்துவத்தின் அடிப்படையிலமைந்தது. அதன் அடிப்படையிலேயே அதன் பண்பாட்டுக்கூறுகள், கட்டமைப்புகள், பொருளாதாரம், கலாசாரம் ஆகியன கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றன. கேரளாவில் கம்யூனிசம் இருக்கிறதே என்று யாரேனும் சொல்லக்கூடும். தன் குப்பையை அடுத்த மாநிலத்தில் கொட்டு என்று எந்தக் கம்யூனிசமும் சொல்லாது. அப்படிச் சொல்கிறதென்றால் அது போலி கம்யூனிசம், வெறுப்புக் கம்யூனிசம் என்பதை அறிக. விடுதலை-2 அப்படி ஒன்றைக் காட்சிப்படுத்தவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
விடுதலை-2 திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளில் வாத்தியார் கதாபாத்திரத்தின் வசனங்கள் வாயிலாக, கம்யூனிசத்தைத் தமிழகத்தில் ஏற்றுக்கொண்டவர்கள் அதைச் செயல்படுத்திய விதம், அது போன போக்கு, உருவாக்கிய இழப்புகள், ஆகிய, கம்யூனிச சித்தாந்தத்தை, அதை ஏற்றுக்கொண்ட அப்போதைய வாத்தியார் முதலானவர்கள், எக்காரணத்துக்காக, எதைச் செயல்படுத்த ஏற்றுக்கொண்டார்களோ அது நடக்கவில்லை என்பதை "நம் பாதையை மாற்ற வேண்டும்" என்று சொல்வதம் மூலம் உணர்த்துவதாக அமைகிறது. அதை, திரைப்படத்தின் முக்கியமான பகுதியாகப் பார்க்கிறேன். இருபது ஆண்டுகளாக மேற்கொண்ட கம்யூனிச முயல்வுகள் சென்றடைந்த இடம் உவப்பானதாக இருக்கவில்லை என்ற விமர்சனம் வாத்தியார் வாயிலாக வெளிப்படுகிறது. அதைத்தான் மக்கள் மனதில் திரைப்படம் விதைப்பதாகவும், அந்தப் புள்ளியிலிருந்து மேற்கொண்டு மக்கள் எல்லோரின் நலனுக்கும் என்ன வேண்டுமோ அதை நோக்கி அடுத்தடுத்த கட்ட நகர்வை எல்லோருமாகச் சேர்ந்து மேற்கொள்ளவும் என்ற மறைமுக வேண்டுதலோடு திரைப்படம் முடிந்ததாக நான் பார்க்கிறேன். அந்த வகையில் திரைப்படம் எனக்கு, சம காலத்தின் மிக மிக முக்கியமான படமாகத் தோன்றுகிறது. இக்காரணத்திற்காகவே, இத்திரைப்படத்தை எல்லோரும் ஒருமுறையேனும் பார்க்குமாறு இணைய நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மற்றபடி, ஏற்கனவே சொன்னது போல, ஒரு கையாலாகாதவனைப் பார்த்தால், கோபமும், எரிச்சலும் வரும். ஆனால், அதிகாரம் என்னும் படிநிலை அடிப்படையிலான இயக்கத்தில், அந்தக் கையாலாகாதத்தன்மை எப்படியெல்லாம் மிக மிக கவனமாக வார்த்தெடுக்கப்படுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டும் விதத்தில் படத்தில் எல்லா காட்சிகளையும் தேவையான காட்சிகள் என்றே கொள்ள வைக்கிறது. பிறக்கையிலேயே விதி கோரமாகத் தீர்மானிக்கப்பட்டுவிடும் மக்களுக்கு நடக்கும் அட்டூழியங்களை ஆவணப்படுத்தும் வகையில் விடுதலை-2 ஒரு சர்வதேச தரத்திலான படம் என்று தைரியமாகச் சொல்லலாம். பார்க்கவே முடியவில்லை என்றால் அனுபவித்தவர்கள் வலி? அந்த வேதனை? அதற்கு அவர்களின் எதிர்வினை? அது எப்படி நியாயமற்றதாகும்?
பரவலாக தமிழ்ச் சமூகத்தை ஆதி இனம் என்பார்கள். ஒரு ஆதிச் சமூகத்தின் இயல்பு என்ன? மற்ற சமூகங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல வளர்ந்த சமூகத்தின் அடையாளமாக, வளர்ந்தவன் சமூகத்தின் கடை நிலையில் இருப்பவனின் வாழ்வை எளிமையானதாக ஆக்கவேண்டும். அது நம் சமூகத்தில் எங்கே நடந்திருக்கிறது? பெரும்பாலும், சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களைச் சுரண்டும் சமூகமாகத்தான் வளர்ந்த சமூகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. விடுதலை-2 அதை விமர்சனம் செய்யும் விதமாக, அதை உணர்த்தும் விதமாக சரியான நேரத்தில் வெளியாகியிருக்கிறது என்று சொல்லலாம்.