Monday, 20 December 2021
Saturday, 18 December 2021
க்ளப்ஹவுஸ் நிகழ்வு
Tuesday, 14 December 2021
💕💕 காதல் சோலை - 12 💕💕
💕💕 காதல் சோலை - 12 💕💕
நீ தந்திரக்காரி தான்..
உன்னைக் குறித்த கவிதைகளை
எங்களை வைத்தே
எழுதிக்கொள்கிறாய்....
உன்னை
எத்தனை வாசித்தாலும்
முதல் பக்கத்தைக் கூட
தாண்ட முடிவதில்லை....
உன்னால்
எல்லோருக்கும் வரும் காதல்
யாராலும்
உனக்கு வருவது போல்
தெரியவில்லை.....
உன்னை வரச்சொன்னாலும்
வரமாட்டாய்...
நீ தரும் காதல்
போகச் சொன்னாலும்
போக மாட்டேன் என்கிறது...
எல்லோருக்கும் எட்டும்
உயரத்தில் நீ நின்றாலும்
உன் அழகு
ஏணி வைத்தாலும்
எட்ட மாட்டேன் என்கிறது....
- ராம்பிரசாத்
Sunday, 5 December 2021
வாவ் சிக்னல் - விஞ்ஞானச்சிறுகதைகள் தொகுப்பு 11வது நூல் வெளியீடு
வாவ் சிக்னல் - விஞ்ஞானச்சிறுகதைகள் தொகுப்பு நூல் வெளியீடு வரும் சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இது என் 11வது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, 3 December 2021
Thursday, 25 November 2021
BILINGUAL
Saturday, 13 November 2021
கோவை மாணவி தற்கொலை விவகாரம்
கோவை மாணவி தற்கொலை விவகாரம்
கோவை மாணவி விவகாரத்தில்,
"ஆறு மாசமா எங்கிட்ட கூட எதையுமே சொல்லை" என்று அழுகிறார் மாணவியின் தாயார்.
"...இப்படியெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே சொல்லியிருப்பேன்.." என்று மாணவியின் தோழன் கண்ணீர் விட்டார்.
இன்னொரு சலனப்படத்தில், பெண்ணின் தகப்பனார் மெளனமாய் கைகட்டி நின்றிருக்கிறார். சுற்றி உள்ளவர்கள் போலீஸைக் கேள்வி கேட்கிறார்கள். தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிய வேண்டும் என்று கூச்சலிட்டார்கள்.
மற்றுமொரு சலனப்படத்தில் "...அந்தப் பொண்ணோட அம்மா வீட்டு வேலை செஞ்சி பொழைக்கிறாங்க.. வடை போட்டு வேலை செஞ்சவரோட பொண்ணு 480 மதிப்பெண் வாங்குறது எவ்ளோ கஷ்டம்ன்னு எனக்குத் தெரியும் சார்...நல்லா படிக்கிற பொண்ணு.. . அவளை உங்களால திருப்பித்தர முடியுமா? தண்டனைகள் கடுமையா ஆனா தான் சார் இதுக்கெல்லாம் தீர்வு..." என்று ஒரு பெண் தர்னா செய்துகொண்டிருந்தார்.
இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தைத் தவிர ஏனைய எல்லோரும் விவரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். குறைந்தபட்சம், குரல் உசத்துபவர்களாகவாவது இருக்கிறார்கள்.
அந்தக் குடும்பம் குரல் உயர்த்தும் சக்தி அற்று இருப்பது தான், இது போன்ற நிகழ்வுகளுக்கு அவர்களை இலக்காக்குறதோ என்று தோன்றுகிறது. இந்தத் துன்பியல் நிகழ்வு நடந்தேறும் வரை, அப்படியொன்று நடப்பதற்கான சாத்தியங்களுள் பத்து பொருத்தமும் தங்கள் குடும்பத்திற்கு பக்காவாக இருக்கிறது என்பதையே உணராமல் இருந்த குடும்பம் போலத்தான் தோற்றமளிக்கிறது மாணவியின் குடும்பம்.
பார்க்கப்போனால் இப்படித்தான் இருக்கிறது பெரும்பாலான குடும்பங்கள். நமக்கு மகனோ, மகளோ, பாடப்புத்தகம் தவிர வேறு எதையும் படித்து விடவே கூடாது. படித்தால் 'கெட்டு' விடுவார்கள். இப்படியே பாடப்புத்தகத்தை மட்டுமே படித்து வளர்பவர்கள் பின்னாளில் தங்களுக்கென குடும்பங்களை உருவாக்குகையில் பிள்ளைகள் கேள்வி கேட்பது பிடிக்காமல் போகிறது. ஏனெனில், பதில் தெரியாதே? கேள்விகளை எதிர்கொள்ள பயந்தே, தங்கள் பிள்ளைகளையும் பாடப்புத்தகங்கள் மட்டுமே படிக்க நிர்பந்திக்கிறார்கள். இந்த நடத்தையின் கூட்டு விளைவாக, கேள்விகேட்க திராணி அற்ற ஒரு தலைமுறைகளைத் தொடர்ந்து உருவாக்கி வைத்திருக்கிறோம். அதுவே பின்னாளில் இவர்களை பல சமூக அவலங்களுக்கு இலக்காக்குறது என்றே கணிக்கிறேன்.
தண்டனைகள் கடுமையாவது ஒரு தீர்வென்று நாம் எடுத்துக்கொள்ளவே செய்தாலும், எல்லா பிரச்சனைகளையும் எல்லா கோணங்களிலிருந்தும் தீர்க்கும் திறன் அந்த ஒற்றைத் தண்டனைக்கும் அதன் மீதான பயத்திற்கும் இருக்குமென்று நம்மில் யாரும் கணிப்பதற்கில்லை. விவரம் எல்லோருக்கும் தெரியவேண்டும். பொருளாதாரம் இல்லாத இடத்திலும், எல்லோரையும் கேள்வி கேட்க வைக்கக்கூடிய ஒரு ஆயுதம் உண்டு என்றால், அது விவரம் தெரிந்துகொள்வது தான். கோவை மாணவியின் பெற்றோர் சமூகப் போராளிகளாக, சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் எழுப்புவர்களாக இருந்திருந்தால், வீட்டுக்குள்ளேயே பரஸ்பரம் வாத விவாதம் செய்பவர்களாக இருந்திருந்தால் இப்படி ஒன்று அந்தப் பிள்ளைக்கு நடந்திருக்குமா?
தமிழகத்தில் அது எளிதாகத்தான் இருக்கிறது. எழுத்தாளர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். எழுதப்பட்டவைகள் மிக மிக சொற்பமான விலைக்கே விற்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் வாங்குவதற்குத்தான் ஆட்கள் இல்லை. புத்தக் கண்காட்சிகள் பெரும்பாலும் நஷ்டத்தில் தான் முடிகின்றன.
சாமான்யர்களின் வேலை, திரையரங்குகளில் பாப்கார்னுக்கு செலவிடும் இரு நூறு ரூபாயில் நான்கு புதிய நூல்கள் வாங்கிப் படிப்பது மட்டும் தான். அதைச் செய்தாலே எந்த சாமான்யனாலும் எந்த அதிகார அமைப்பையும் எதிர்த்துக் கேள்வி கேட்டுவிட முடியும்.
ஆசிரியர் ஒரு ஆண் தானே. அவனைக் கேள்வி கேட்க வேண்டாமா என்பது ஒரு தட்டையான கேள்வி. இந்த உலகில் நல்லவன் என்று நால்வர் இருந்தால் கெட்டவன் என்று ஒரு பத்து பேர் இருக்கத்தான் செய்வார்கள். எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால், இந்த உலகம் இயங்குவதற்கான அச்சாணி இல்லாமலாகிவிடும். அது நடக்க இயலாதே? குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன. அத்துமீறல்களுக்கான அடிப்படை என்ன?
எளியவன் என்று ஒருவன் இருப்பதுதான்.
அந்த எளியவனை வலுவானவனாக ஆக்கிவிட்டால்? எட்டு கோடி பேர் உள்ள மாநிலத்தில் எத்தனை குற்றங்களை, போலீஸ், கேஸ், சட்டம் என்று தீர்த்துவிட முடியும்? அது சாத்தியமா? அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. விவரமில்லாமல், தெரியாமல் போட்ட ஒரு கையெழுத்திற்காய், வருடக்கணக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் போன்றோர் வாழ்வதும் இதே நிலத்தில் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒவ்வொரு தனி மனிதரும் தங்கள் தரத்தை, வலுவை உயர்த்திக்கொள்வதின் மூலமே கணிசமான சமூக பிரச்சனைகளை நாமே எதிர்கொள்வதுதான் ஜனத்தோகை பெருத்த ஒரு நாட்டின் தேவையாக எப்போதுமே இருக்கும்.
அதைத்தான் உரத்துச் சொல்ல விழைகிறேன். நூல்களை எல்லோருமே படியுங்கள். விவரம் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் உரிமை என்ன, உங்கள் சுதந்திரம் என்ன, நீங்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது, என எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள். சரியான இடத்தில் சரியான கேள்விகளை எழுப்புதன் மூலமாகவே உங்கள் பிரச்சனைகளில் பலவற்றை நீங்கள் தீர்த்துவிட முடியும்.
அதற்காக உங்கள் வாழ்க்கைக்குத் துளியும் தொடர்பில்லாத நூல்களைப் படித்து காலத்தை வீணடிக்காதீர்கள். அப்படி வீணடிப்பதால், "வாசிப்பு எனக்கு உதவவில்லை" என்ற உங்கள் கூப்பாடு, வாசிக்கக் கிளம்பும் நால்வரின் ஊக்கத்தைக் கொன்றுவிடக்கூடும்..
திருமண வயதில் பெண்ணோ, பையனோ இருக்கிறார்களா? திருமணங்கள் சார்ந்து, திருமண தளங்கள் சார்ந்து எழுதப்பட்ட நூல்களை முதலில் வாசிக்கத் துவங்கலாம். பதிப்பகங்களை அணுகி இந்தத் தலைப்பில் நூல்கள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வாங்கி வாசிக்கலாம்.
இருபாலார் படிக்கும் பள்ளி கல்லூரியில் முதல் முறையாகப் படிக்க நுழைகிறீர்களா? ஆண் பெண் உறவு குறித்து எழுதப்பட்ட நூல்களிலிருந்து துவங்கலாம். எதிர்பாலினத்தை புரிந்துகொள்ளும் உங்கள் முயற்சிகள் உங்களுக்கும், நாளை உங்கள் பிள்ளைகளுக்கும் பயன்படும். இப்படியெல்லாம் வாசிக்காத தலைமுறையைச் சேர்ந்தவனால் தான் ஒரு பெண்ணை இப்படி பாதிக்க வைக்க முடியும் என்பது என் வாதம்.
ஐஏஎஸ். ஐபிஎஸ் எழுதும் எண்ணமிருக்கிறதா? சரித்திரம், பூகோளம், நிலவியல் சார்ந்த நூல்களிலிருந்து துவங்கலாம்.
இப்படி கண்டதையும் ஒரு ஒழுங்கு இன்றி படிக்காமல், தொடர்புடைய நூல்கள், அதிலும் அண்மைக்காலத் தேவைகள், தொலை நோக்குத் தேவைகள் குறித்த தெளிவான புரிதல்களுடன் படிப்படியான புரிதல்களை தரக்கூடிய நூல்களைத் தேர்வு செய்து வாசிக்கத் துவங்கலாம்.
இந்த தேசம் நம்முடையது. இதில் வாழும் மக்கள் நம்மவர்கள். யாரோ எப்படியோ போகட்டும் நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணம் ஒரு மடத்தனமான புரிதலற்ற எண்ணம். நாம் செய்யும் ஒவ்வொன்றும் இந்த சமூகத்தை சலனப்படுத்தும். நாம் ஒவ்வொருவரும் மற்றவரோடு தொடர்புடையவர்கள். எல்லோரும் நன்றாக இருந்தால் தான் நாமும் நன்றாக இருக்க முடியும். அதற்கு நமக்குத் தேவைப்படுவதில், மிக மிக எளிமையானது வாசிப்பு மட்டும் தான். வாசியுங்கள், மற்றவர்களையும் வாசிக்க வலியுறுத்துங்கள்.
பெண்களுக்கு எதிரான இறுதி வழக்காக கோவை மாணவியின் வழக்கு இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
Friday, 12 November 2021
குழந்தைகளைக் கொண்டாடும் திருவிழா 2021 - சிறப்பு அழைப்பாளர்
குழந்தைகளைக் கொண்டாடும் திருவிழா 2021 நிகழ்வின் வெற்றியாளர் அறிமுக விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன். அழைத்த S2S நிறுவனம் திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். விளையும் பயிர்களைத் தொடர்ந்து அடையாளம் காட்டும் இவரது முயல்வுகளுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்.
Thursday, 4 November 2021
வாவ் சிக்னல் - விமர்சனம் - Boje Bhojan
எனது 'வாவ் சிக்னல்-அறிபுனை தொகுதி' நூலுக்கு வரும் முதல் விமர்சனம் இது... இதற்கு முன் உதிரியாக அவ்வப்போது வெளியாகும் சிறுகதைகளுக்கு பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன.. முழு நூலுக்கென வந்த முதல் விமர்சனம் இதுதான்... நண்பர் Boje Bhojan க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
Wednesday, 27 October 2021
பார்வையாளர்களை வரவேற்கிறேன்...
வலைப்பூவை தொடர்ந்து பார்த்துவரும் பார்வையாளர்களின் நிலப்பரப்பு பட்டியல் இது...
Russia
Sri Lanka
United Kingdom
Germany
France
Romania
United Arab Emirates
Sweden
Portugal
Singapore
Russia, Germany, France, Romania, Sweden, Portugal, Singapore, UAE, Srilanka இங்கெல்லாம் எனக்கு முகம் தெரிந்த, பரிச்சயப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை. ஆனால் யாரோ இங்கிருந்தெல்லாம் கவனிக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
என் வலைப்பூவை தொடர்ந்து வாசிப்பதால், உங்களை 'ஒருமித்த கருத்துடையவர்' என்றே கொள்கிறேன். நீங்கள் யாராகவும் இருக்கலாம். என்னுடன் பள்ளியிலோ, கல்லூரியிலோ, அல்லது பணியிடங்களிலோ உடன் பயணித்த ஆனால், பயணித்த காலத்தில் அறிமுகம் ஏற்பட்டிருக்காத, அல்லது அறிமுகம் இருந்தும் தவறான புரிதலில் காலம் கடத்த நேர்ந்த ஒருவராகவும் கூட இருக்கலாம் என்பதை நான் புரிந்திருக்கிறேன். ஒருமித்த கருத்துடைய உங்களை, ஒரு சின்னஞ்சிறிய அறிமுகமின்மைக்காய் அல்லது குறை பார்வையில் நேர்ந்த தவறான புரிதலுக்காய் அன்னியமாய் வைத்திருக்க விரும்பவில்லை. Lets get together. வாங்க பழகலாம்...
இந்த நாடுகளிலிருந்து தொடர்ந்து என் வலைப்பூவைப் பார்த்துவருபவர்கள் யார் என்று தெரிந்தால் மகிழ்வேன்... நட்புறவு உருவாக்கிக்கொள்ளவும் விழைகிறேன்...
இந்த நாடுகளிலிருந்து என் வலைப்பூவை அவதானிப்பவர்கள் என் உள்பெட்டிக்கு வரவேற்கிறேன்..
ramprasath.ram@gmail.com
Looking forward to hearing from you guyz.
Tuesday, 26 October 2021
சேஷம், குளம் - சிறுகதைகள் - பார்வைகள்
சேஷம் – ராம்பிரசாத்
https://www.vasagasalai.com/sesham-short-story-ramprasath/
குளம் – ராம்ப்ரசாத்
https://www.vasagasalai.com/kulam-short-story-ramprasath/
Sunday, 24 October 2021
💕💕 காதல் சோலை - 11 💕💕
💕💕 காதல் சோலை - 11 💕💕
உன்னைப் பூந்தளிர்
என நினைத்துத்தான்
வானம்
மழையென இறங்கி
நீரூற்றிச்செல்கிறது.....
எல்லா இதயங்களையும்
திறந்துவிடும்
ஒற்றைக் கள்ளச்சாவி நீ....
எங்களுக்கெல்லாம்
கடலை மிகப் பிடிப்பது
உன் காலடித்தடங்களை
ஒன்றுவிடாமல் வாரிச்சென்று
சேர்த்துவைப்பதால் தான்...
உன்னைக் குறித்து
எழுதப்பட்டவைகளைத் தொகுத்தால்
நூலகமாகிவிடுகிறது....
எந்தத் தேர்தலானாலும்
நீ வசிக்கும் தெருவில் மட்டும்
எல்லாரது ஓட்டுக்களும்
உனக்குத்தான் விழுகிறது...
- ராம்பிரசாத்
Sunday, 17 October 2021
கோப்ரா - வாசகசாலை
வாசகசாலையின் இந்த வார இதழில் 'கோப்ரா' என்ற என் சிறுகதை வெளியாகியிருக்கிறது.
Saturday, 16 October 2021
💕💕 காதல் சோலை - 10 💕💕
💕💕 காதல் சோலை - 10 💕💕
Tuesday, 5 October 2021
Saturday, 2 October 2021
ஃப்ரான்சிஸ் கிருபா இழப்பை எவ்விதம் அணுகுவது?
ஃப்ரான்சிஸ் கிருபா மற்றுமோர் இழப்பு.
இணையத்தில் ஃப்ரான்சிஸ் கிருபாவின் இழப்பைத் தொடர்ந்து, மீண்டும் ஒருமுறை கலைஞர்களின் மது, போதைப் பழக்கங்கள் குறித்து விவாதம் எழுந்திருக்கிறது.
ஃப்ரான்சிஸ் கிருபா போன்றவர்களால் விளிம்பு நிலை மனிதர்களின் அவலங்களை அழகான, லயிப்பில் ஆழ்த்தக்கூடிய, ஆழ்ந்த புரிதல்களை உள்வாங்கிய வார்த்தைகளால் விவரிக்க முடியும். அசலாக என்ன நடக்கிறது என்று அவதானித்துச் சொல்ல முடியும். ஒரு துயரை, அதன் பிரபஞ்ச ஒழுங்கின் அடிப்படையில் விவாதிக்க முடியும். எல்லாவற்றுக்கும் கூகுளை ரெஃபர் செய்து அறிவு ஜீவித்தனமாகக் தன்னைத்தானே காட்டிக்கொண்டு பேசுவதற்கும், இதற்கும் மடுவுக்கும், மலைக்குமுள்ள வித்தியாசம் இருக்கிறது என்பது என் வாதம். இந்த குறிப்பிட்ட திறன் எழுத்தாளர்களின் தனிச்சிறப்பாகப் பார்க்கிறேன்.
ஒரு அரசுப் பள்ளி மாணவனிடம், "இப்படித்தான் வாழ வேண்டும் என்று எந்த நிர்பந்தமுமில்லை" என்று சொல்வதில் என்ன லாபம் இருக்க முடியும்? அது அவனை மென்மேலும் குழப்பவே செய்யும். "இப்படி இப்படி வாழ்ந்தால் இன்னின்ன நன்மைகளை அடைவாய்" என்று மீறிச் சொன்னால், "நீங்கள் ஒரு எழுத்தாளர். நீங்கள் இப்படிப் பேசலாமா?" என்பார்கள். விஷயம் அது அல்ல. உண்மையிலேயெ இப்படித்தான் வாழ வேண்டும் என்று எந்த நிர்பந்தமுமில்லை தான். ஆனால், ஒரு அரசு பள்ளியில் படிக்கும், கூலித்தொழிலாளியின் மகனுக்கு இந்த ஆலோசனை என்ன நன்மைகளை செய்துவிடும் என்றொரு கேள்வி இருக்கிறதே.
"மருத்துவம் கிடைக்காவிட்டால் என்ன? பொறியியல் படிக்கலாமே" என்ற ஆலோசனை தந்தால், " நீங்கள் ஒரு எழுத்தாளர். நீட்டை எதிர்ப்பது குறித்துப் பேசாமல், விரும்பிய படிப்பை கைவிடச்சொல்லலாமா?" என்பார்கள். பிரச்சனை அது அல்ல. கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களிலிருந்து படிப்பின் சாரம் ரத்தத்தில் ஏறி, மேலே வருபவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டு பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கொண்டு படித்து மேலே வந்தால், கொள்கையை சொல்லி மரணத்துக்குத் துரத்த வேண்டுமா? அதற்குப் பதில் காலத்தை வீணாக்காமல் வேறொரு படிப்பு படித்து, அத்துறையில் மிளிர்ந்தால், அது கல்வியின் நிமித்தம் பின்தங்கிய ஒரு பெரும் சமூகத்துக்கு ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாகவும், ஊக்க மற்றும் உந்து சக்தியாகவும் இருக்கும் அல்லவா ? மேலும், மாணவர்களுக்கு பெற்றவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் இருக்கிறதே.
அதுபோலத்தான் இதுவும். எல்லாவற்றிலும் ஒரு கணக்கு இருக்கிறது. பிரபஞ்சத்தின் கணக்கு. கலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கலைஞர்கள் தங்களுக்கு இறைவனின் வரமாகக் கிடைத்த கலையை மென்மேலும் பெறுக்க வேண்டுமானால், அவர்கள் முதலில் மது, போதை போன்ற வாழ்க்கையைச் சுருக்கும், சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும் பாதைகளைக் கண்டறிந்து தவிர்ப்பது தான் சரியாக மார்க்கமாக இருக்க முடியும் என்பது என் வாதம்.
இந்தப் பின்னணியில் கலைஞர்கள் தாம் முதலில் தாம் சார்ந்திருக்கும் குடும்பத்தின் சமூக இடத்தையும், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் நிலை நாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது என் வாதம். இது தரும் நிம்மதியும், ஆசுவாசமும் தான் கலைஞனின் நீண்ட வாழ்க்கைக்கு ஆதாரம். வாழ்க்கை நீள நீளத்தான், கலைஞன் கலையை மேம்படுத்தத் தேவைப்படும் கால அவகாசம் கிடைக்கும். வாழ்க்கை குறித்த தரிசனம் வெவ்வேறாகக் கிட்டும். அனுபவம் விஸ்தீரணப்படும். அதில் தானே இலக்கியத்தைக் கண்டடையும் மார்க்கமும்? சுவரை வைத்துத் தானே சித்திரம்?
டெஸ்லா, ராமானுஜன், ஐன்ஸ்டைன், ஹாக்கிங் போன்றோர் இறக்காமல் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்று நம்மில் விரும்பாதோர் யார்?
ஒரு கலைஞன் தன்னைச்சுற்றி உள்ள அத்தனைக் கற்பிதங்களையும் அடையாளம் காண முடிபவனாக இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்கிறேன். ஆனால், அதற்காக அவன் தன்னை வலிந்து ஒரு இக்கட்டில் திணித்துகொண்டு அல்லல் படவேண்டும் என்றில்லை. உதாரணமாக, ' நீங்கள் தான் எழுத்தாளர் ஆயிற்றே. நீங்கள் ஏன் வங்கி வேலையை உதறிவிட்டு முழு நேர எழுத்தாளராகக் கூடாது?' என்பவர்கள் இருக்கிறார்கள். அது அப்படி இல்லை. எழுத்தாளனாக இருப்பவன் ஒரே நேரத்தில் எழுத்து, வங்கி ஆகிய இரண்டுக்கும் தகுதிப்பட்டவனாக இருக்கிறேன் என்பது மட்டுமே பொருள். பொருளாதாரம் என்கிற கோணத்திலிருந்து சற்று அதிகப்படியாக மனித வாழ்வியலை அவனால் அணுக முடியும் என்பது மட்டுமே பொருள்.
ஃப்ரான்சிஸ் கிருபா போன்றவர்கள் மது, போதை போன்ற பழக்கங்களிலிருந்து மட்டும் அல்ல, அவற்றுக்கு இட்டுச்செல்லும் பாதைகளையும் கவனமாகக் கண்டறிந்து தவிர்க்க வேண்டும் என்பது என் வாதம். முரணாக, இது மேல்தட்டு மக்களின் வாழ்வியலாக மட்டுமே இப்போதைக்கு இருக்கிறது. முரண் ஏன் எனில், இந்த மேல்தட்டு மக்கள் பெரும்பாலும் பொருளாதார சுதந்திரம் அடைந்தவர்களாகத்தான் இருக்கிறார்களே ஒழிய ஞானம் அடைந்தவர்களாக இல்லை. இந்த ஏற்பாடு ஒரு சமூகத்துக்கு நன்மை பயப்பதாக இல்லை. பொருள் உள்ளவன் ஞானம் இன்மையால், மென்மேலும் பொருள் சேர்ப்பதிலேயே மனித வாழ்வியலை சிக்கலுக்குள்ளாக்குகிறான். ஞானம் உள்ளவன் பொருளின்மையால் குறைந்த வயதிலேயே இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கிவிடுவதால், ஞானம் சமூகத்தைச் சேர மறுக்கிறது..
இந்த barrier உடைக்கப்பட்ட வேண்டும். ஞானம் சேர்ப்பவன் பொருளையும் சேர்க்கவேண்டும். ஞானம் தன் அசலான consumerஐ சென்றடையத் தேவையான பொருளை மட்டுமே கேட்கும். ஞானமும் பொருளும் ஒருங்கே வளரும். இந்த ஏற்பாடு தான் ஒரு சமூகத்துக்கும் நன்மை பயக்கும்.
இன்னும் சொல்லப்போனால், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, முறையான உணவுப்பழக்கங்கள், அழுத்தம் அற்ற அன்றாட வாழ்க்கை, கடன்கள் அற்ற தினசரி என்று ஒரு எழுத்தாளன் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். எழுத்தாளன் என்றால் இவைகள் part and parcel ஆக வரும் என்கிற ஸ்திதி இருக்க வேண்டும். மொத்தத்தில், எழுத்தாளனுக்கு ஒரு சமூகப் பொருப்பு இருக்கிறது. அதன்படி அவன், தன் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். பார்க்கப்போனால், இலக்கியத்துறையில் மிளிர்ந்தோர், வயிற்றுப்பிழைப்புக்கு ஒரு அரசாங்க ஊதியத்தில் ஒன்றிக்கொண்டிருந்தபடி, இலக்கியத்தை வளர்த்தவர்கள் தான். எவ்வித சமரசமும், எதற்கும் செய்துகொள்ளாமல் இலக்கியத்தை இலக்கியமாக வளர்க்க இந்த ஒப்பந்தமே உதவும் என்பது என் வாதம்.
பாரிய மற்றும் உயரிய ஒரு நோக்கத்திற்காய், ஒரு ஒழுங்கிற்குள் தகவமைத்துக்கொள்வதே நோக்கத்தை நோக்கிய நம் பயணத்தை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், நோக்கத்தை பூரணமாக நிறைவேற்றிக்கொள்ளவும் மதி நுட்பம் வழங்கும் என்றே எண்ணுகிறேன்.
இந்தப் பின்னணியில் ஒரு சமூகம் ஒரு எழுத்தாளனிடமோ, கலைஞனிடமோ, கவிஞனிடமோ,
"நீங்கள் எழுத்தாளராயிற்றே.. நீங்கள் ஏன் சீர்திருத்தத் திருமணம் செய்யவில்லை? ஏன் எழுத்தை முழு நேர தொழிலாக்கவில்லை? " என்பன போன்ற கேள்விகளை எழுப்புவதை முரண் என்றே வகைப்படுத்துகிறேன்.
முரண் என்னவெனில், இதையெல்லாம் அவன் செய்தால், அவனிடமுள்ள எழுத்துக்கான உந்துவிசை, கச்சாப்பொருள் அவனை விட்டு நீங்கிவிடும். அது அவனது எழுத்தை மட்டுப்படுத்தவே செய்யும். அதை ஒரு சமூகம் அனுமதிப்பது என்பது, நுனிக்கிளையில் அமர்ந்தபடி அடிக்கிளையை வெட்டுவது போன்றது.
Sunday, 26 September 2021
💕💕 காதல் சோலை - 9 💕💕
💕💕 காதல் சோலை - 9 💕💕