என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 2 October 2021

ஃப்ரான்சிஸ் கிருபா இழப்பை எவ்விதம் அணுகுவது?

ஃப்ரான்சிஸ் கிருபா மற்றுமோர் இழப்பு. 


இணையத்தில் ஃப்ரான்சிஸ் கிருபாவின் இழப்பைத் தொடர்ந்து, மீண்டும் ஒருமுறை கலைஞர்களின் மது, போதைப் பழக்கங்கள் குறித்து விவாதம் எழுந்திருக்கிறது. 

ஃப்ரான்சிஸ் கிருபா போன்றவர்களால் விளிம்பு நிலை மனிதர்களின் அவலங்களை அழகான, லயிப்பில் ஆழ்த்தக்கூடிய,  ஆழ்ந்த புரிதல்களை உள்வாங்கிய வார்த்தைகளால் விவரிக்க முடியும். அசலாக என்ன நடக்கிறது என்று அவதானித்துச் சொல்ல முடியும். ஒரு துயரை, அதன் பிரபஞ்ச ஒழுங்கின் அடிப்படையில் விவாதிக்க முடியும். எல்லாவற்றுக்கும் கூகுளை ரெஃபர் செய்து அறிவு ஜீவித்தனமாகக் தன்னைத்தானே காட்டிக்கொண்டு பேசுவதற்கும், இதற்கும் மடுவுக்கும், மலைக்குமுள்ள வித்தியாசம் இருக்கிறது என்பது என் வாதம். இந்த குறிப்பிட்ட திறன் எழுத்தாளர்களின் தனிச்சிறப்பாகப் பார்க்கிறேன்.

ஒரு அரசுப் பள்ளி மாணவனிடம், "இப்படித்தான் வாழ வேண்டும் என்று எந்த நிர்பந்தமுமில்லை" என்று சொல்வதில் என்ன லாபம் இருக்க முடியும்? அது அவனை மென்மேலும் குழப்பவே செய்யும். "இப்படி இப்படி வாழ்ந்தால் இன்னின்ன நன்மைகளை அடைவாய்" என்று மீறிச் சொன்னால், "நீங்கள் ஒரு எழுத்தாளர். நீங்கள் இப்படிப் பேசலாமா?" என்பார்கள். விஷயம் அது அல்ல. உண்மையிலேயெ இப்படித்தான் வாழ வேண்டும் என்று எந்த நிர்பந்தமுமில்லை தான். ஆனால், ஒரு அரசு பள்ளியில் படிக்கும், கூலித்தொழிலாளியின் மகனுக்கு இந்த ஆலோசனை என்ன நன்மைகளை செய்துவிடும் என்றொரு கேள்வி இருக்கிறதே. 

"மருத்துவம் கிடைக்காவிட்டால் என்ன? பொறியியல் படிக்கலாமே" என்ற ஆலோசனை தந்தால், " நீங்கள் ஒரு எழுத்தாளர். நீட்டை எதிர்ப்பது குறித்துப் பேசாமல், விரும்பிய படிப்பை கைவிடச்சொல்லலாமா?" என்பார்கள். பிரச்சனை அது அல்ல. கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களிலிருந்து படிப்பின் சாரம் ரத்தத்தில் ஏறி, மேலே வருபவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டு பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கொண்டு படித்து மேலே வந்தால், கொள்கையை சொல்லி மரணத்துக்குத் துரத்த வேண்டுமா? அதற்குப் பதில் காலத்தை வீணாக்காமல் வேறொரு படிப்பு படித்து, அத்துறையில் மிளிர்ந்தால், அது கல்வியின் நிமித்தம் பின்தங்கிய ஒரு பெரும் சமூகத்துக்கு ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாகவும், ஊக்க மற்றும் உந்து சக்தியாகவும் இருக்கும் அல்லவா ?  மேலும், மாணவர்களுக்கு பெற்றவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் இருக்கிறதே.

அதுபோலத்தான் இதுவும். எல்லாவற்றிலும் ஒரு கணக்கு இருக்கிறது. பிரபஞ்சத்தின் கணக்கு. கலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கலைஞர்கள் தங்களுக்கு இறைவனின் வரமாகக் கிடைத்த கலையை மென்மேலும் பெறுக்க வேண்டுமானால், அவர்கள் முதலில் மது, போதை போன்ற வாழ்க்கையைச் சுருக்கும், சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும் பாதைகளைக் கண்டறிந்து தவிர்ப்பது தான் சரியாக மார்க்கமாக இருக்க முடியும் என்பது என் வாதம். 

இந்தப் பின்னணியில் கலைஞர்கள் தாம் முதலில் தாம் சார்ந்திருக்கும் குடும்பத்தின் சமூக இடத்தையும், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் நிலை நாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது என் வாதம். இது தரும் நிம்மதியும், ஆசுவாசமும் தான் கலைஞனின் நீண்ட வாழ்க்கைக்கு ஆதாரம். வாழ்க்கை நீள நீளத்தான், கலைஞன் கலையை மேம்படுத்தத் தேவைப்படும் கால அவகாசம் கிடைக்கும். வாழ்க்கை குறித்த தரிசனம் வெவ்வேறாகக் கிட்டும். அனுபவம் விஸ்தீரணப்படும். அதில் தானே இலக்கியத்தைக் கண்டடையும் மார்க்கமும்? சுவரை வைத்துத் தானே சித்திரம்?

டெஸ்லா, ராமானுஜன், ஐன்ஸ்டைன், ஹாக்கிங் போன்றோர் இறக்காமல் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்று நம்மில் விரும்பாதோர் யார்?

ஒரு கலைஞன் தன்னைச்சுற்றி உள்ள அத்தனைக் கற்பிதங்களையும் அடையாளம் காண முடிபவனாக இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்கிறேன். ஆனால், அதற்காக அவன் தன்னை வலிந்து ஒரு இக்கட்டில் திணித்துகொண்டு அல்லல் படவேண்டும் என்றில்லை. உதாரணமாக, ' நீங்கள் தான் எழுத்தாளர் ஆயிற்றே. நீங்கள் ஏன் வங்கி வேலையை உதறிவிட்டு முழு நேர எழுத்தாளராகக் கூடாது?' என்பவர்கள் இருக்கிறார்கள். அது அப்படி இல்லை. எழுத்தாளனாக இருப்பவன் ஒரே நேரத்தில் எழுத்து, வங்கி  ஆகிய இரண்டுக்கும் தகுதிப்பட்டவனாக இருக்கிறேன் என்பது மட்டுமே பொருள். பொருளாதாரம் என்கிற கோணத்திலிருந்து சற்று அதிகப்படியாக மனித வாழ்வியலை அவனால் அணுக முடியும் என்பது மட்டுமே பொருள். 

ஃப்ரான்சிஸ் கிருபா போன்றவர்கள் மது, போதை போன்ற பழக்கங்களிலிருந்து மட்டும் அல்ல, அவற்றுக்கு இட்டுச்செல்லும் பாதைகளையும் கவனமாகக் கண்டறிந்து தவிர்க்க வேண்டும் என்பது என் வாதம். முரணாக, இது மேல்தட்டு மக்களின் வாழ்வியலாக மட்டுமே இப்போதைக்கு இருக்கிறது. முரண் ஏன் எனில், இந்த மேல்தட்டு மக்கள் பெரும்பாலும் பொருளாதார சுதந்திரம் அடைந்தவர்களாகத்தான் இருக்கிறார்களே ஒழிய ஞானம் அடைந்தவர்களாக இல்லை.  இந்த ஏற்பாடு ஒரு சமூகத்துக்கு நன்மை பயப்பதாக இல்லை. பொருள் உள்ளவன் ஞானம் இன்மையால், மென்மேலும் பொருள் சேர்ப்பதிலேயே மனித வாழ்வியலை சிக்கலுக்குள்ளாக்குகிறான். ஞானம் உள்ளவன் பொருளின்மையால் குறைந்த வயதிலேயே இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கிவிடுவதால், ஞானம் சமூகத்தைச் சேர மறுக்கிறது.. 

இந்த barrier உடைக்கப்பட்ட வேண்டும். ஞானம் சேர்ப்பவன் பொருளையும் சேர்க்கவேண்டும். ஞானம் தன் அசலான consumerஐ சென்றடையத் தேவையான பொருளை மட்டுமே கேட்கும். ஞானமும் பொருளும் ஒருங்கே வளரும். இந்த ஏற்பாடு தான் ஒரு சமூகத்துக்கும் நன்மை பயக்கும். 

இன்னும் சொல்லப்போனால், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, முறையான உணவுப்பழக்கங்கள், அழுத்தம் அற்ற அன்றாட வாழ்க்கை, கடன்கள் அற்ற தினசரி என்று ஒரு எழுத்தாளன் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். எழுத்தாளன் என்றால் இவைகள் part and parcel ஆக வரும் என்கிற ஸ்திதி இருக்க வேண்டும். மொத்தத்தில், எழுத்தாளனுக்கு ஒரு சமூகப் பொருப்பு இருக்கிறது. அதன்படி அவன், தன் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.  பார்க்கப்போனால், இலக்கியத்துறையில் மிளிர்ந்தோர், வயிற்றுப்பிழைப்புக்கு ஒரு அரசாங்க ஊதியத்தில் ஒன்றிக்கொண்டிருந்தபடி, இலக்கியத்தை வளர்த்தவர்கள் தான். எவ்வித சமரசமும், எதற்கும் செய்துகொள்ளாமல் இலக்கியத்தை இலக்கியமாக வளர்க்க இந்த ஒப்பந்தமே உதவும் என்பது என் வாதம். 

பாரிய மற்றும் உயரிய ஒரு நோக்கத்திற்காய், ஒரு ஒழுங்கிற்குள் தகவமைத்துக்கொள்வதே நோக்கத்தை நோக்கிய  நம் பயணத்தை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், நோக்கத்தை பூரணமாக நிறைவேற்றிக்கொள்ளவும் மதி நுட்பம் வழங்கும் என்றே எண்ணுகிறேன்.

இந்தப் பின்னணியில் ஒரு சமூகம் ஒரு எழுத்தாளனிடமோ, கலைஞனிடமோ, கவிஞனிடமோ, 

"நீங்கள் எழுத்தாளராயிற்றே.. நீங்கள் ஏன் சீர்திருத்தத் திருமணம் செய்யவில்லை? ஏன் எழுத்தை முழு நேர தொழிலாக்கவில்லை? " என்பன போன்ற கேள்விகளை எழுப்புவதை முரண் என்றே வகைப்படுத்துகிறேன்.

முரண் என்னவெனில், இதையெல்லாம் அவன் செய்தால், அவனிடமுள்ள எழுத்துக்கான உந்துவிசை, கச்சாப்பொருள் அவனை விட்டு நீங்கிவிடும். அது அவனது எழுத்தை மட்டுப்படுத்தவே செய்யும். அதை ஒரு சமூகம் அனுமதிப்பது என்பது, நுனிக்கிளையில் அமர்ந்தபடி அடிக்கிளையை வெட்டுவது போன்றது.