என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday 7 April 2020

அட்சயபாத்திரா - வாசிப்பு அனுபவம் - அருணா சுப்ரமணியம்

அட்சயபாத்திரா - வாசிப்பு அனுபவம் 


ஒரு நாவல் வாசகனை ஆரம்பம் முதல் இறுதி வரை வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தன்னிடத்தே கையகப்படுத்தி ஒரே மூச்சில் படித்து முடிக்க வைக்குமானால் என்னை பொறுத்த வரை அது மிகச் சிறந்த நாவல்.. அட்சயப்பாத்திரா அந்த விதத்தில் நூறு சதவிகிதம் மிகச் சிறந்தவோர் நாவல். நாவலில் சொல்லப்பட்ட கதை இவ்வுலகில் நடக்கக் கூடிய சாத்தியம் உள்ளது. எனினும் , இது வரை எங்கும் சொல்லப்படாத ஒரு கோணம் என்றே கருதுகிறேன்..
கதையின் மையக்கரு வங்கி கொள்ளையாக இருப்பினும் என்னை மேலும் கவர்ந்த சில விஷயங்கள் உண்டு.



 நவீன கால காதல் கதையை போன்று தொடங்கும் இக்கதை மெல்ல வேறொரு பரிமாணம் எடுக்கிறது. இப்போதைய தலைமுறையின் மனப்போக்கை உறவுகளின் பால் அவர்களின் அணுகுமுறையை படம்பிடித்துக் காட்டுகின்றது.  உறவுகள் பொருள்சார் நன்மைகளை நோக்கி வழிநடத்தப்பட்ட ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இதில் பங்கு உண்டு. உண்மையான அன்பும் அர்த்தமுள்ள உறவுகளும் இன்று மலிந்து போயின. பணமே பிரதானமாய் இந்த மில்லினியத்தில் எந்தவொரு உறவின் போக்கையும் வழிநடத்துகிறது. இந்த உண்மையை நாவல் நன்றாக சித்தரிக்கின்றது.  

நவீனத்துவம் என்னும் போர்வையில் சிதறுண்டு போகும் இன்றைய காதலை படம் பிடித்து  காட்டுகிறது. பொருண்மை உலகில் தொலைந்து கொண்டிருக்கும் உன்னதங்களை மறைமுகமாக மேற்கோள் காட்டிவிடுகிறது.   வர்ஷா, விமல் மற்றும் அரவிந்த் இடையில் உருவாகும் ஒரு விநோத ஒப்பந்தத்திற்கு மூலமாய் "அட்சயபாத்திரம்"  கண்டெடுத்த அரவிந்தின் மூளை இருக்கிறது. அள்ள அள்ளக்  குறையாத செல்வத்தை தன்னகப்படுத்திக் கொள்ள இவர்களில் ஒருவர் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்று நாவலை தொடர்ந்து வாசிக்க நம்மை இருத்தி வைக்கின்றது. எதிர்பாராதொரு  முடிவோடு இக்கதை மனதில் குடிகொண்டுவிடுகிறது. 



ஒரு முழு நீள திரைப்படத்திற்கான அனைத்து சாராம்சங்களையும் பெற்றுள்ளது இந்நாவல். இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு படைப்பு!!


- அருணா சுப்ரமணியன்