என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday 1 April 2020

அம்மா வருவாயா - ராஜி ராமச்சந்திரன்

அம்மா வருவாயா - ராஜி ராமச்சந்திரன்

இந்த நூலை வாசித்து ஒரு மாதத்துக்கும் மேல் இருக்கும். முன்பே வாசித்துவிட்டாலும், எழுதி முடிக்க எடுத்துக்கொண்டிருந்த குறுநாவல்களும், மொழிபெயர்ப்பு முயற்சிகளும் நேரமெடுத்துக்கொண்டதில் இந்த நூல் குறித்து விமர்சனம் எழுத இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது.

கட்டுரைத்தொகுதியாக வெளியாகியிருக்கும் இந்த நூல், இதன் ஆசிரியரால் பல்வேறு காலகட்டங்களில் என்றேனும் நூலாகிவிடும் என்ற எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தற்செயலாக தன்னிச்சையாக எழுதப்பட்ட நிகழ்வுக்குறிப்புகளின் தொகுப்பாகும்.  வாசிக்க கிட்டத்தட்ட ஒரு டைரிக் குறிப்பு போலத்தான் இருக்கிறது. நூலை வாசிக்கையில் ஆங்காங்கே யாரோ ஒருவரின் டைரியை வாசிக்கும் அனுபவம் கிடைக்கிறது.

நூலைக் கையில் எடுத்தால் ஒரே மூச்சில் வாசித்துவிட்டு வைக்கக்கூடும் எளிமையான நடை. ஒரு கதையை சரளமாக, வாசிக்கும் வாசகனை தங்கு தடையின்றி, நின்று நிதானித்த விடாமல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச்செல்லும் எழுத்தை எழுதக்கூடியவராக தோன்றச்செய்கிறது இவரின் எழுத்து. முயற்சியெடுத்து எழுதினால் நல்ல சிறுகதைகளை எழுதக்கூடியவர் என்றே தோன்றச்செய்கிறது.

நூலில் மிக நீளமான பகுதி என்றால், அது ஒரு கப்பல் பயணம் குறித்தான பதிவு தான்.  நான் கப்பலில் சென்றதில்லை. ஆதலால் இந்தப் பகுதியை சற்று நேரமெடுத்துக்கொண்டே வாசித்தேன். எந்த ஒரு சிறு தகவலையும் சொல்லாமல் விட்டுவிடக்கூடாதென்கிற எண்ணத்துடன் நூல் எழுதப்பட்டிருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அமெரிக்காவில் கப்பல் பயணங்கள் எப்படியிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள நல்ல நூல்.

கட்டுரைத்தொகுதிதான் என்றாலும், சில இடங்களில், கதை சொல்லும் தொணி வந்துவிடுவதே, ஆசிரியரால், கதைகளும் சொல்ல முடியும் என்று தோன்றச்செய்கிறது.

நூலாசிரியரான ராஜி ராமச்சந்திரன் கவிதைகளும் எழுதுகிறார் என்றாலும் முதல் நூலை கட்டுரைத் தொகுதிகளாகவே, அனுபவக்கோர்வைகளாகவே தந்திருக்கிறார். இதுவே இவரது அடுத்த நூல் என்னவாக இருக்குமென்று யோசிக்க வைக்கிறது இந்த நூல்.

இந்த நூலை பாண்டிச்சேரியைச் சேர்ந்த 'ஒரு துளிக்கவிதை' இயக்கம் பதிப்பித்திருக்கிறது.

நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் raji100@gmail.com(ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா)