என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 25 April 2020

6174 - நாவல் விமர்சனம்

6174 - நாவல் விமர்சனம்


முதலில் இந்த நூல் எப்படி எனக்குப் பரிச்சயம் ஆனது என்பது பற்றி சில வரிகள்.

எனது 'உங்கள் எண் என்ன?' கணித நாவல் நூலை சிலரிடம் வாசிக்கத் தந்தபோது, உடனே "6174 வாசிச்சீங்களா?" என்றார்கள்.. ஒருமுறை அல்ல. கிட்டத்தட்ட ஐந்தாறு தடவைக்கும் மேல் இப்படி. ஆனால் ஐந்தாறு முறையும் அவர்களே , "6174 வாசிச்சீங்களா?" என்று மட்டுமே கேட்டார்களே ஒழிய மேலெதுவும் தகவல் இல்லை. அவர்களாக எந்த வார்த்தையையும் உதிர்க்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

அப்படித்தான் இந்த நூல் எனக்கு அறிமுகமாகியது.

ஒருவேளை...........................

ஆம். உங்களுக்குத் தோன்றிய, அவர்களுக்குத் தோன்றிய அதுவே எனக்கும் தோன்றி, "ஒரு வேளை அப்படி  இருக்குமோ, அதனால் தான் நாம் நம் நூலை நீட்டும்போது அவர்கள் அந்த நூல் குறித்து சொல்கிறார்களோ?" என்று தோன்றி 6174 நாவலை வாசித்தேன். சுதாகர் என்பவர் எழுதியிருந்தார்.

இந்நிலையில் சொல்வனம் இதழில் 6174 ஏன் ஒரு அறிவியல் புனைவு இல்லை என்பதற்கு தேவைக்கும் மேல் ராஜேஷ் சந்திரா என்பவர் நுணுக்கமாக பீராய்ந்து சொல்லியிருந்தார். அந்த விமர்சனத்தில் எனக்கும் உடன்பாடு இருந்தது. அந்த விமர்சனம் இதோ:

https://solvanam.com/2013/09/26/6174-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/


6174  நாவலில் 6174 என்கிற எண் குறித்து வருகிறது. இது ஒரு Black Hole எண். அது ஏன் என்று சொல்வனம் இதழிலேயே காட்டியும் விட்டார்கள்.
என் கணித நாவல் நூலை நீட்டுகையில், பிறரால் '6174' நாவல் குறித்து வினவப்பட்டதற்கான காரணம், இது போல் 6174 நாவலில் எண்கள் குறித்து ஆங்காங்கே வருவது தான்.

"கணிதம், படிகவியல், வானவியல் இவற்றோடு தமிழ் பாடல்களிலும் விடையை வைத்து விளையாடுகிறது. இதுபோன்ற Brain Teaser-கள் கதையை சுவாரஸ்யமாக்குகின்றன." என்கிற ராஜேஷ் சந்திராவின் விமர்சன வரிகளோடு முழுக்க உடன்படுகிறேன்.

ஆம். 6174 நாவல்,  கதையினூடே Brain Teaser வகை புதிர்களை அடுத்தடுத்து அவிழ்ப்பதன் வாயிலாக வாசகனின் கவனத்தை ஈர்க்க முயல்கிறது. அதில் 6174 அடைந்திருக்கும் வெற்றி மகத்தானது. பட்டுக்கோட்டை பிரபாகரோ, ராஜேஷ்குமாரோ இப்படி எழுதியிருக்கிறார்களா தெரியவில்லை. சுஜாதா இது போல் நிறைய முயன்றிருக்கிறார். 'அறியப்படாமல்' நிறைய நாவல்கள் இப்படி வந்திருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.

மற்றபடி லெமூரியா என்றழைக்கப்படும் ஒரு கற்பனை நிலப்பரப்பை (அல்லது கற்பனை  நிலப்பரப்பு என்று science communityயால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றை) கண்டுபிடிக்க அழைக்கப்படும் ஆனந்த், ஜானகி ஆகிய இருவரும் துப்பறியும் பயணமே இந்த நாவல்.

அகல் பதிப்பகத்தின் "எண்ணும் மனிதன்" ஒரு மொழிபெயர்ப்பு நூல் தான். மூல நூல் அல்ல‌. இதன் மூல நூல் The Man who counted. இது 1938ம் வருடம் வெளியான நூல். கிட்டத்தட்ட shakuntala devi puzzle புத்தகம் போன்றது. கதா நாயகன் தனது உலாவில் சந்திக்கும் மனிதர்களின் பிரச்சனைகளை கணித ரீதியாக தீர்ப்பதுதான் கதை. அதாவது வாசகனுக்கு கற்றுக்கொடுக்கும் நோக்கில் எழுதப்பட்ட நூல்.

6174 அந்த விதமான ஒரு நூல். கதையெங்கும் puzzles வருகின்றன. அவற்றுக்கான விடைகளை, தமிழ் இலக்கியப்பகுதிகள், எண்கள், போன்றவைகளால் விடுவிக்கிறார்கள் ஆனந்தும், ஜானகியும்.

இந்த வகை நூல்களை கணித நாவல் என்று எடுத்துக்கொள்வதில் உள்ள பிழை என்னவென்றால், பின் வரும் கேள்விகள் தான்.

1. நம்மூர் கிராமங்களில், மாலை  நேரங்களில் வயோதிகப் பெண்கள் விடுக்கும் விடுகதைகளை வைத்து கதையெழுதிவிட்டாலே போதுமா?
2. அது கணித நாவல் என்ற வகைமைக்கு தகுதி பெற்றுவிடுமா?

அப்படிப் பார்த்தால் எல்லா கிரமத்துக் கதைகளும் கணித நாவல்களே என்றாகிவிடும் அபாயம் இந்த வாதத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

Mathematical Fiction என்கிற பகுப்புக்கு தகுதி பெறுவதற்கு அந்த புனைக்கதையின் Plot எண்களால் திசை திரும்பியாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. "The Man who counted" அப்படி இல்லை. 6174 நூலும் அப்படி இல்லைதான்.

என்னைப் பொறுத்தவரை 6174, ஒரு treasure hunt வகையான கதை என்றே பார்க்கிறேன். இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லமுடியும்.

Nicolas Cage நடித்த 'National Treasure' ஐ சொல்லலாம். அதிலும் நிறைய கணக்குகள், எண்கள், விடுகதைகள் வரும்.  என்வரையில் இந்தப் படம் 6174 கதைக்களத்துக்கு மிக மிக அருகில் என்பேன்.
Indiana Jones and the kingdom of Crystal Skulls கூட இதே வகை தான். Hobbit, Tomb Raider, The Mummy போன்றவைகளும் இதே வகைமையே.

Treasure Hunt வகையான கதைகளில் 6174 தமிழுக்குப் புதிது என்றே சொல்ல வேண்டும்.
லெமூரியாவை குமரிக்கண்டம் என்று நம் தமிழ் இலக்கியங்கள் ஆங்காங்கே refer செய்திருக்கின்றன. அந்த வகையில், இந்தக் கதையில் வரும் மர்மப் பிரதேசத்தின் நிமித்தம் 6174 ன் கதைக்களம் நிச்சயம் ஈர்க்கும். பழந்தமிழர் குறித்த நம் கற்பனைகளுக்கு இந்த நாவல் தரும் வடிவம் அட்டகாசமானது.  நாவலை அந்த இடத்திலேயே வைத்துக்கொள்வது தான் உசிதம்.

மற்றபடி இந்த துப்பறியும் பயணத்தில் வாசகனை கதையுடன் ஒன்ற வைப்பதில் , ஆசிரியர் சுதாகரின் உழைப்பும், வெற்றியும் பாராட்டுக்குரியது.
என்னைக் கேட்டால், 6174 ஐ அறிவியல் புனைக்கதை என்றோ, கணித நாவல் என்றோ அடையாளப்படுத்துவதில் தான் 6174 வலுவிழக்கிறது என்பேன். அது இந்த நாவலுக்கு தேவையில்லை என்பதைவிட இந்த நாவல் அவற்றுக்கெல்லாம் பொருந்தாது என்பது தான் சரியாக இருக்க முடியும். Treasure Hunt என்று சொல்லப்பட்டாலே  நூலின் வெற்றி உறுதி. Treasure Hunt வகைமையில் இந்த நூல் ஒரு வெற்றிகரமான படைப்பு தான். பக்கத்துக்குப் பக்கம் திகில் கூட்டுகிறார் ஆசிரியர்.

ஆனால், அறிபுனை, கணிதபுனை என்று நிரூபிக்க முயல்கையில் தான் 6174 நூல் குறித்து பாதகமாக யோசிக்க வைக்கிறது.  6174 நூல் மீதான எதிர்மறை விமர்சனங்களை உருவாக்குகிறது என்று நினைக்கிறேன். இதை இனிமேலும் மனதில் கொண்டு, பொருந்தாத அடைமொழிகளைத் தவிர்த்துவிட்டு, ஒரு நூலுக்கும் அதன் ஆசிரியருக்கும், அதிலுள்ள உழைப்புக்கும் உரிய மரியாதையை அளிப்போமாக.