என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday, 26 December 2011

நாஸ்ட்ர‌டாம‌ஸ்

நாஸ்ட்ர‌டாம‌ஸ்



மார்கழிமாத‌ ஊத‌ற்காற்று,
வேக‌ங்கூடிய‌ நான்கு ச‌க்க‌ர‌
எந்திர‌க்குதிரையின்
பின்னிருக்கையில் என்னை
எழுப்பிவிட்ட‌ தாம‌த‌க்க‌ண‌ங்க‌ளில்
ஒரு துரித உணவகம்,
ஒரு துணிக்கடை,
ஒரு அடகுக்கடை,
ஒரு நகைக்கடை,
ஒரு பெட்டிக்கடை,
ஒரு மளிகைக்கடை
இவற்றினூடே அவசரமாய்க்
கடந்துபோய்விட்டிருந்தது அந்த‌ மருந்தகம்...

அடுத்த‌ நாளின் விடுமுறையில்
மூடிய‌ ம‌ருந்த‌க‌த்தின் க‌த‌வுக‌ளில்
வ‌லுத்துவிடக்கூடிய‌ ஜ‌ல‌தோஷ‌த்தின்
சாத்திய‌ங்க‌ளை நான் முனுமுனுக்கையில்
கேட்கிற‌து அந்த‌க் குர‌ல்
'ஆமா, இவ‌ரு பெரிய‌
நாஸ்ட்ர‌டாம‌ஸூ'....


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
உயிர்மை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5138)

Wednesday, 14 December 2011

காலி தேனீர் கோப்பை

காலி தேனீர் கோப்பை



மேஜையிலிருக்கும் காலி
தேனீர்க் கோப்பை
புதிதாக ஒரு பானத்தை
நிரப்ப மட்டும் நினைவூட்டவில்லை...

காலத்தே பருகப்படாத,
எஞ்சிய தேனீரை
சுத்தம் செய்யவும்
நினைவூட்டுகிறது...

சில மனிதர்களைப் போல‌...

- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#ந‌ன்றி
உயிர்மை க‌லை இல‌க்கிய‌ இத‌ழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5099)

Monday, 12 December 2011

எங்கென்றே தெரியாமல்

எங்கென்றே தெரியாமல்



முக்கோண உலோகச்சுவர்களுக்குள்
சிறையிருக்கின்றன மணித்துளிகள்...

அவைகளின் இதயத்துடிப்பு
காற்றில் கரையும் எல்லைக்கப்பால்,
என் செவிகள் ,
ஒலிகளுக்காய் காத்திருக்கின்றன...

கைக்கெட்டும் எனக்கான கனவோ,
தேட விரும்பும் எனக்கான காதலோ,
விரும்பித்துவங்கும் எனக்கான நட்போ,
கடந்துபோகும் எனக்கான பிரயாணமோ,

இப்படி எத்தனையோ கூட
கைக்கடிகாரத்தை நீட்டியெடுத்து
காதோடு பொறுத்திக்கொள்ளும்
ஒற்றை இயக்கத்திற்காய் காத்திருக்கும்
கடிகார இதயத்துடிப்பொலிகளின்
இருப்பைப்போல
இன்னமும் எங்கென்றே தெரியாமல்...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#ந‌ன்றி
உயிர்மை க‌லை இல‌க்கிய‌ இத‌ழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5099)

Friday, 9 December 2011

பிழைகளின் முகம் - கவிதை

'பிழைகளின் முகம்' என்ற தலைப்பிலான என் கவிதை, கணையாழி கலை இலக்கியத் திங்களிதழ் டிசம்பர் 2011 இதழில் 66ம் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.



பிழைகளின் முகம் - கவிதை

தூரத்துக் காட்டுக்குயிலின்
மெல்லிசையில்
மயங்கிக்கிடந்தது அந்த‌
அடர்ந்த கானகமும்,
கவிந்த இருளும்...


இயற்கையின் மெல்லிசையில்
பிழை சேர்க்கும்
முயற்சிகளின்றிப்போதலில்
எத்தனை யதார்த்தம்...


கரிய பிசாசென ஆங்கொருவன்
உள் நுழைந்து தன் போக்கில்
மூங்கில் துளையிட்டூதி
முறையாகச்சேர்ந்த பிழைகளை
இசையென கூவிச்சென்றான்...


கானகம் முழுமைக்கும்
அதிர்ந்து ஒடுங்கியது
இயற்கை...


இந்த இயற்கை எத்தனை
மென்மையானது...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
கணையாழி கலை இலக்கியத் திங்களிதழ் (டிசம்பர் 2011)

Monday, 28 November 2011

பிழைச்சமூக‌ம்


பிழைச்சமூக‌ம்


மண்ணைப் பிழிந்து
நீரை உரிஞ்சுகின்றன
ஆலமரத்தின் வேர்கள்...


தனக்கான நீரின்றி
துவள்கிறது அருகிலேயே
செவ்வாழையொன்று...


குடியோன் பசிக்கு
நிழலை அள்ளியள்ளித்
தந்துவிட்டு கைபிசைந்து
நிற்கிறது ஆலமரம்...

- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
திண்ணை இணைய இதழ் (http://puthu.thinnai.com/?p=6403)

Monday, 24 October 2011

பிம்பங்களை மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

பிம்பங்களை மொழிபெயர்க்கும் வார்த்தைகள்


பிம்பங்களை மொழிபெயர்க்கும்
அசாத்திய வார்த்தைகளைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்...

பாதைகளில் இடரும் கற்களையொத்து
வார்த்தைக‌ளுக்க‌மையும்
க‌டிவாள‌ங்க‌ள் பிம்ப‌ங்க‌ளுக்கின்றிப்
போத‌லில் மீந்துவிடும் அந்த‌
ஏதோவொன்றை என்ன‌வென்று சொல்ல‌...

வார்த்தைக‌ளைப் பிசைந்து,
ஓர‌மாய் ந‌றுக்கி,
ந‌டுவே குழைத்து,
முதுகில் த‌ட்டி,
க‌ன்ன‌த்தில் கிள்ளி,

ஒருவ‌ழியாய் மொழிபெய‌ர்த்துவிட்டேன்
ஒரு பிம்ப‌த்தை...

சிந்திச்சித‌றி சேதாரமான
வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்
ஏதேதோ பிம்ப‌ங்க‌ள்
எட்டிப்பார்க்கின்ற‌ன‌....


#நன்றி
உயிர்மை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4917)

Monday, 19 September 2011

பிழைகளின் முகம்


பிழைகளின் முகம்

தூரத்துக் காட்டுக்குயிலின்
மெல்லிசையில்
மயங்கிக்கிடந்தது அந்த‌
அடர்ந்த கானகமும்,
கவிந்த இருளும்...

இயற்கையின் மெல்லிசையில்
பிழை சேர்க்கும்
முயற்சிகளின்றிப்போதலில்
எத்தனை யதார்த்தம்...

கரிய பிசாசென ஆங்கொருவன்
உள் நுழைந்து தன் போக்கில்
மூங்கில் துளையிட்டூதி
முறையாகச்சேர்ந்த பிழைகளை
இசையென கூவிச்சென்றான்...

கானகம் முழுமைக்கும்
அதிர்ந்து ஒடுங்கியது
இயற்கை...

இந்த இயற்கை எத்தனை
மென்மையானது...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4799)

Wednesday, 14 September 2011

செத்துமடியும் ஒளி

செத்துமடியும் ஒளி


அன்னியப்பட்டிருக்கும் வராந்தையின்
அத்துவானப்பக்கமிருந்து குரூரக்கோபத்துடன்
எட்டிப்பார்க்கிறது விளக்கொளி...

இருளுக்கும் விளக்கொளிக்குமான
மெளனப்போரின் உச்சத்தில்
செத்துமடியும் விளக்கொளிப்பிண்டங்களை
கொத்தித்தின்ன வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன
கழுகாய் சில விட்டில்பூச்சிகள்...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Tuesday, 13 September 2011

உதிரும் மின்மினிகள்


உதிரும் மின்மினிகள்


ஆலமரத்தினடியில்
மழைக்குச் சில
ரயில் நிலையங்களும்
ஒதுங்கிவிடுகின்றன...

இரவு வானத்தைத் துளைத்துப்
புகும் பால்வெளிகளை
மின்மினியென‌ நினைத்து
கவர்ந்துவிடுகின்றன
ஆலம் இலைகள்...

இலைகளினின்றும் சொட்டுசொட்டாய்
உதிரும் மின்மினிகளை
கவனமாய்ச்சேகரிக்கிறது
தெளிந்த குட்டையொன்று...





- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

யாருமற்ற தண்டவாளம்


யாருமற்ற தண்டவாளம்


கவனிப்பார் யாருமின்றி
தனித்திருந்தது தண்டவாளம்...


இர‌வு வான‌த்தை துளையிட்டு
பால் வெள்ளை வ‌ண்ண‌த்தில்
திருட்டுத்த‌ன‌மாய் நுழைந்த‌ ஒளி
த‌ண்ட‌வாள‌த்தின் குறுக்கே விழுந்துகிட‌ந்தது
தற்கொலை செய்ய‌ இருக்கலாம்...

அதன் காரணங்களைப் பற்றி
யாதொரு அசூயையுமின்றி
மெளனித்திருந்தது இரவு...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

கவனிப்பாரின்றி



கவனிப்பாரின்றி


சுற்றிலும் இருளாய்
மத்தியில் வட்டவொளியென‌
இரவைப் போலவே
அரிதாரம் பூசியிருந்தது
அந்த ரயில் நிலையம்...


அனாதையாய் ரயில் நிலையத்திற்கு
காவலாய் நிற்கின்றன சில‌
மின் கம்பங்கள் அருகருகே...


மின் கம்பங்களின் தலையில்
வட்ட ஒளியைச்சுற்றிச்சுற்றி
விட்டில் பூச்சிகள் ரீங்கரிக்க‌
கீழே குட்டைத்தண்ணீரில்
குவிந்துகிடக்கிறது பாலொளி
கவனிப்பாரின்றி...


- ‍ ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

Monday, 4 July 2011

ஒரே ஒரு துளி - துப்பறியும் சிறுகதை


ஒரே ஒரு துளி - துப்பறியும் சிறுகதை





'சார், வேதம் பேசறேன் சார். ஆமா சார். ஸ்பாட்க்கு இப்பதான் சார் வந்தேன். அந்த லேடியோட
ஹஸ்பெண்ட் தான் கால் பண்ணினாரு. அவர்ட்ட நான் இன்னும் நேர்ல பேசல‌ சார். அவரு ரொம்ப நேரமா கால் பண்ணினாராம். அந்தம்மா எடுக்கலன்னு வந்திருக்காரு. ஒரு மூணு மணி நேரமா வீடு உள்பக்கமா பூட்டியே இருக்காம் சார். நான் ஃபர்ஸ்ட் அவர்கிட்ட டீடெய்ல்ட் ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட் வாங்கிடறேன் சார். ஐ வில் அப்டேட் யூ சார். ஓகே சார்'

காதிலிருந்து ஃபோனை எடுத்து பாண்ட் பாக்கேட்டில் நுழைத்தார் இன்ஸ்பெக்டர் வேதம். இடது கை மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்துக்கொண்டார். இரவு பத்து மணி. நேரமாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை வேறு. அடாப்ஸிக்கு விடிந்ததும் தான் தகவல் சொல்ல முடியுமென்று தோன்றியது.
வேதம் ஆறடி உயரம். வயது நாற்பது இருக்கும். நல்ல கருப்பு நிறம். ஆனாலும் உடல் முழுவதும் பரவிய சீரான கறுப்பு. ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நிறம். அவருக்கு எந்த கேஸையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பார்க்க வராது. சரியான கோணத்தை முதலில் அடையாளம் கண்டுவிடுவார். நூல் பிடித்தார்ப் போல் விசாரணை செய்வார். சில கேஸ்கள் உடனடியாக முடிந்துவிடும். சில கேஸ்கள் இழுத்தடிக்கும். ஆனால், வேதம் கைவைத்தால் நிச்சயம் முடிந்துவிடும். முடித்துவிடுவார். அதுவும் கனகச்சிதமாக. அந்த இரவிலும் காக்கிச்சட்டையில் விரைப்பாகத்தான் இருந்தார். அவரின் இடுப்பில் ஒரு லட்டி தடிமனான கயிற்றால் கட்டப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது.


'பாரு, எப்போ போனான்டி அவன்? இல்ல இல்ல. நான் இங்க ஒரு கேஸ்க்கு வந்திருக்கேன். சரி சரி. நான் பிஸியா இருக்கேன். அப்புறம் கால் பண்றேன். ஓ அதுவா.... ' சப்‍இன்ஸ்பெக்டர் கந்தசாமி அவர் மனைவி பார்வதியுடன் பேசிக்கொண்டிருந்தது வேதத்தின் காதில் விழுந்தது. அதைக் கவனிக்க தன் ஆர்வத்தை செலவிட விரும்பாதவராய் வேதம் திரும்பி அந்த ஏரியாவை கவனமாக அவதானிக்கத்துவங்கினார்.

நுங்கம்பாக்கத்தில் எப்போதும் அமைதியாக இருக்கும் அந்தத் தெரு அன்று, அந்த இரவில் தன் அமைதியை தொலைத்துவிட்டு அழுதுகொண்டிருந்த‌து. தெரு முழுவதும் ஆடம்பரமாய் வீடுகள். ஒன்று அபார்ட்மென்டுகளாக இருந்தன அல்லது ஆடம்பர வீடுகளாக இருந்தன. பல வீடுகளில் ஒன்றிரண்டு பேர்தான் இருப்பார்கள் போலத் தோன்றியது. ஆங்காங்கே மாடிகளிலும், பால்கனிகளிலும் யாரெனும் நின்று எட்டியெட்டிப் பார்த்தபடி நின்றிருந்தனர். விஷயம் தெரிந்துவிட்டது போலும் என்று நினைத்துக்கொண்டார். வேடிக்கை பார்ப்பதில் தான் எத்தனை ஆர்வம். கிட்டே போய், சாட்சி சொல்லக்கூப்பிட்டால் வீட்டுக்குள் அடைந்து கதவு சாத்திக்கொள்ளும் சாமான்யத்தனம் தெரிந்தது.

வேதம் வந்த ஜீப் சற்றுத் தள்ளி நிறுத்தியிருக்க, வேதத்தின் அஸிஸ்டென்ட் கந்தசாமி தன்னை நோக்கி வருவதை கவனித்துவிட்டு அபார்ட்மென்ட் வாசலை நெருங்க, வேதத்தை வாசலில் பார்த்துவிட்டு ஒருவர் நடையில் வேகங்கூட்டியவராய் நெருங்கினார். அவருக்கு வயது அறுபதைக் கடந்திருக்கலாமென்று தோன்றியது. அந்த இரவு நேரத்திலும் அவர் பாண்டும், சட்டையும் அணிந்திருந்தது அவர் தன்னை எதிர்பார்த்திருப்பாரோ என்று நினைக்கத்தோன்றியது.



'சார், நான் சம்பந்தம் சார். சம்பந்தமூர்த்தி. அபார்ட்மென்ட் செக்ரட்டெரி சார்' அவர் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டதை அவதானித்துக்கொண்டிருந்தார் வேதம். அவர் அறிமுகப்படுத்திக்கொண்ட தோரணையை பார்த்தபோது, "இந்த அபார்ட்மென்ட் பற்றி எதுவானாலும் நாந்தான்" என்று அவர் தன் அதிகாரத்தை நிலைநாட்ட வந்தது போலவே இருந்தது.

'ஹ்ம் ஐ ஆம் இன்சார்ஜ் ஆஃப் திஸ் கேஸ். ஸ்பாட் எங்க? மேல தானே' என்று கேட்டுக்கொண்டே அபார்ட்மென்டுக்கு மத்தியில் அமைந்த மாடிப்படியில் ஏற, 'ஆமா சார், ஃபர்ஸ்ட் ஃப்லோர்' என்றபடியே பின் தொடர்ந்தார் சம்பந்தம்.

முதல் தளம் சற்று குறுகலாகவே இருந்தது. இடது மற்றும் வலது புறத்தில் என இரண்டே இரண்டு ஃப்ளாட்கள். இரண்டும் எதிரெதிரே. இடது பக்க ஃப்ளாட் கதவு மூடியே இருக்க, வலது பக்க ஃப்ளாட் கதவு ஒருக்கலித்துத் திறந்திருந்தது. வேதம் அவதானித்துக்கொண்டிருக்கையிலேயே சம்பந்தம் வேதத்துக்கு வலது பக்கவாட்டில் வந்து நின்று கொண்டார்.

'இந்த ஃப்ளாட்தான் சார்' என்று இடதுபக்க ஃப்ளாட்டை கைகாட்டினார் சம்பந்தம். சந்தன மரத்தாலான கதவு என்பது பார்த்தவுடனேயே தெரிந்தது. மரச்சட்டத்தில் நேர்த்தியாக பொருந்தியிருந்தது. ஐந்தடி உயரத்தில் ஒரு ஃபிஷ் ஐ துவாரம் தெரிந்தது. வேதம் அந்தக் கதவுக்கறுகில் சென்று அந்தத் துவாரம் வழியே பார்த்தார். ஒரு பெண், கத்தியால் குத்தப்பட்டு மல்லாந்துகிடந்தாள். சரியாக கூர்ந்து கவனித்ததில் அவளின் இடது கை வயிற்றின்மேலும் வலது கை அந்தக் கத்தியின் கைப்பிடியின் மேலும் இருந்தது. அந்தக் கோணத்தில் பார்க்கையில் யாருக்கும் அவள் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு செத்துப்போயிருக்கிறாள் என்று தோன்றும் வகைக்கு தெளிவாகத் தெரிந்தது. வேதம் அந்தக் கதவின் கைப்பிடியில் கைவைத்துத் தள்ளிப்பார்த்தார். உள்பக்கம் தாளிடப்பட்டிருப்பதைத் தெளிவாக உணர முடிந்தது.


தனக்குப் பின்னால் யாரோ நகரும் அரவம் கேட்டு அவர் திரும்ப, எதிர்பட்டான் ஒருவன் ஜீன்ஸ் பாண்டும், டி சர்டும் அணிந்திருந்தான். வயது 33 இருக்கலாம். அவன் அருகே வந்து நின்ற தோரணையையும், உள்ளே மல்லாந்து கிடந்த அந்தப் பெண்ணின் வயதையும் அனுமானித்ததில் இவந்தான் அவளின் கணவனாக இருக்குமென்று தோன்றியது. அவனுக்குப் பின்னால் அரைவழுக்கையாய் அந்த வீட்டின் கதவருகே ஒருவர் லுங்கியும் சட்டையும் அணிந்து நின்றிருந்தார். அவர்தான் எதிர்வீட்டுக்காரராக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார் வேதம்.

'நீங்க...'

'சார் நான் ராகவன். நாந்தான் உங்க கிட்ட ஃபோன்ல...'

'ஓ நீங்கதானா அது. சோ, அந்தப் பொண்ணொட ஹஸ்பென்ட் நீங்கதான் இல்லயா?.. ஓகே.. இப்படி வாங்க' என்றுவிட்டு மாடிப்படியை நோக்கி இரண்டடி முன்னேற பிந்தொடர்ந்தான் ராகவன். அந்த லுங்கிக்காரரும், சம்பந்தமும் இப்போது ஒன்றாய் நின்றுகொண்டே தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டனர்.

'ம்ம்.. சொல்லுங்க ..என்னதான் நடந்தது?' வேதம் பணிக்க, கந்தசாமி கையிலிருந்த ஃபைலைத் திறந்து, பாக்கேட்டிலிருந்த பேனாவை உருவிக் குறிப்பெடுக்க ஆயத்தமானார்.

'சார், ஸ்வேதா என் வைஃப் சார். அரேன்ஜ்ட் மேரேஜ் சார். இந்த மாசத்தோட இரண்டு வருஷம் ஆகுது சார். நான் எப்பவுமே ஞாயித்துக்கிழமை 6 மணிக்கு பக்கத்துல இருக்குற மாலதி தியேட்டர்ல 7 மணி ஷோவுக்கு படம் பாக்க போவேன் சார். என் வைஃப் ஸ்வேதா சில நேரம் வருவா. சில நேரம் வரமாட்டா. இன்னிக்கு நான் போலாம்னு சொன்னப்போ, தூங்கறேன்னு சொன்னா. சரின்னு நானும் அவள வீட்டுலயே விட்டுட்டு போயிட்டேன் சார். இப்படி பண்ணிக்குவான்னு நினைக்கல சார்' என்றுவிட்டு குலுங்கிகுலுங்கி அழத்துவங்கினார் ராகவன்.

'ராகவன், ப்ளீஸ் கம்போஸ் யுவர்செல்ஃப்' ராகவனின் தோளில் கைவைத்து அழுத்தியபடி ஆற்றினார் வேதம். இதைப் போல் அனேகம் தரம் நடந்திருக்கிறது எத்தனையோ கேஸ்களில். ஆதலால் அவருக்கு இது அந்தத் தருணத்தில் சற்று நேரவிரயமாக ஆயாசமாகப் பட்டது. இன்னும் பாடியைப் பார்க்கவில்லை. அதற்கு நேரமாகும்போல் தோன்றியது. அதன் பிறகோ, அல்லது அதற்குள்ளோ விஷயம் தெரிந்து ராகவனின் உறவினர்களோ, நண்பர்களோ வந்துவிட்டால் ராகவனை அண்டி விசாரணைகள் மேற்கொள்வது கடினமென்று தோன்றியது. கேட்க வேண்டிய கேள்விகளை இப்போதே கேட்டுவிட்டால் உத்தமம் என்று தோன்றியது. ராகவன் தன் அழுகையை துடைத்துக்கொள்ள அவகாசம் தந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.


'ராகவன், நீங்க தப்பா நினைக்கலன்னா உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?'.

'ம்ம்ம்ம்'.

'கல்யாணத்துக்கு முன்னாடி உங்க வைஃபுக்கு ஏதாவது காதல் கீதல்ன்னு...'

'இ..இல்ல சார். நான் கேட்டப்போ அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லன்னுதான் சார் சொல்லியிருக்கா'.

'ம்ம்... சினிமாவுக்கு போனேன்னு சொன்னீங்களே. டிக்கட் வச்சிருக்கீங்களா?'.

'இருக்கு சார், இதோ' என்றுவிட்டு பாண்டு பாக்கேட்டில் கைவிட்டு டிக்கேட்டை உருவி வேதத்திடம் தந்தார் ராகவன். வேதம் வாங்கிப் பார்த்துவிட்டு தன்னுடைய பாக்கேட்டில் வைத்துக்கொண்டார்.

'சரி ராகவன். நீங்க இங்கயே இருங்க' என்றுவிட்டுத் திரும்பி 'கந்தசாமி, சம்பந்தம் நீங்க ரெண்டு பேரும் என் கூட வாங்க' குறிப்பெடுத்துக்கொண்டிருந்த கந்தசாமியையும், லுங்கிக்காரருடன் கிசுகிசுத்துக்கொண்டிருந்த சம்பந்தத்தையும் பணித்துவிட்டு படியிறங்கி வேதம் நடக்க, கந்தசாமியும், சம்பந்தமும் வேதத்தை தொடர்ந்தனர்.


இறங்கி வருகையிலேயே, மீண்டும் கந்தசாமியின் செல்ஃபோன் சிணுங்க, உடனே எடுத்தார் கந்தசாமி.

'ஹலோ... ஆங் பாரு, வந்துட்டானா? இன்னிக்கே பாத்தாகனுமாமா? ஹ்ம்ம்.. நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல. இதுல காமிக்கிற ஆர்வத்தை கொஞ்சம் படிப்பிலயும் காமிக்க சொல்லு. சரி சரி. நான் வேலையா இருக்கேன். அப்புறம் பேசுறேன். வை' என்றுவிட்டு ஃபோனை அணைத்தார். வழக்கமான குடும்ப சச்சரவுகள் இத்தியாதி என்று நினைத்துக்கொண்டார் வேதம். கந்தசாமிக்கு கல்லூரி செல்லும் வயதில் ஒரு பையன் இருப்பதாகத் தெரியும் அவருக்கு. வரட்டுப் பிடிவாதக்காரனாம். கந்தசாமி சொல்லக் கேட்டிருக்கிறார். இந்த காலத்துப் பையன்கள் யாரைத்தான் மதித்தார்கள் என்று தோன்றியது அவருக்கு.

வேதம் அபார்ட்மென்ட் வாசலை அடைந்து காம்பவுண்ட் சுவருக்குள்ளாக வலதுபக்கம் திரும்பி, ராகவனின் ஃபளாட்டை அண்ணாந்து பார்த்தபடியே நடக்க, கந்தசாமியும் பின்னாலேயே தொடர்ந்தார். பின்னாலேயே வால் போல சம்பந்தமும். ராகவன் வீட்டின் எல்லா ஜன்னல்களும் மூடியே இருந்தன. கண்ணாடி ஜன்னல்கள் மரச்சட்டத்தில் பொறுத்தப்பட்டதான கதவுகளைக் கொண்டிருந்தன‌. பின்பக்கமாய் இருந்த பால்கனிக் கதவும் அதை ஒட்டிய ஜன்னலும் கூட இறுக்கமாய் மூடப்பட்டிருந்தன.

'சம்பந்தம், உங்கள ஒண்ணு கேக்கலாமா?'

'கேளுங்க சார்'.

'ராகவனும் அவர் மனைவி ஸ்வேதாவும் இங்க எத்தனை வருஷமா இருக்காங்க?'.

'சார் கல்யாணமான புதுசுலேர்ந்தே இங்கதான் சார் இருக்காங்க'.

'ம்ம்.. அவுங்களுக்குள்ள உறவு எப்படி? அடிக்கடி சண்ட போட்டுப்பாங்களா?'.

'சண்டை... , அது யார் வீட்ல தான் சார் இல்ல? அவுங்களுக்குள்ள அப்பப்ப வாக்குவாதம் வரும் சார். அப்புறம் சேர்ந்துக்குவாங்க சார். பெரிசா வேற எந்த பிரச்சனையும் வந்ததில்லை சார்'.

'ராகவன் வீட்டுக்கு வேற யாராவது வந்துட்டு போவாங்களா?'.

'அதிகமா யாரும் வரமாட்டாங்க சார். வந்தா, அவுங்கள பெத்தவங்க, தம்பி, தங்கச்சி இப்படித்தான் சார் வருவாங்க'.

'ஹ்ம்ம் சரி ..சம்பந்தம், மேல இருக்குற ராகவன் வீடும் உங்களுடைய வீடும் ஓரே மாதிரி தானே?'.

'ஆமா, சார்'.

'சரி, ராகவன் வீட்ல அவர் வைஃபோட பாடி கிடந்தத பாத்தீங்கல. சொல்லுங்க. இந்த பால்கனி ஜன்னல் எந்தப் பக்கம் வரும்?'.

'சார், இந்த பால்கனி, வீட்டுக்கு பின்னால சார். முதல்ல ஹால், பக்கவாட்டுல ஒரு ரூம், ஹால் கதவுக்கு நேரெதிரே பால்கனியும், பால்கனி ஜன்னலும் சார்'.


'ஓ.. சரி ஒரு ஏணியும், கண்ணாடியும் கொண்டுவாங்க. அப்படியே அந்த ஃபோட்டோக்ராஃபரையும் வரச்சொல்லுங்க‌' என்றுவிட்டு வேதம் அந்த பால்கனி ஜன்னலையே பார்த்துக்கொண்டிருந்தார். சம்பந்தம் ஏணி எடுக்க விரைய, கந்தசாமி வேதத்தை நெருங்கினார்.

'சார், இது கொலையா இருக்குமா சார்?'.

'ஹ்ம்ம்.. உங்களுக்கு என்ன தோணுது?'.

'வீடு உள்பக்கமா பூட்டியிருக்கு. கொலையா இருந்திருந்தா கொலைகாரன், கொலை பண்ணதுக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே போயிருக்கணுமே சார். எல்லா கதவையும் உள்பக்கமா பூட்டிட்டு ஒருத்தன் எப்படி சார் வெளில போயிருக்கமுடியும். சூசைடா இருக்கும்னு தோணுது சார்'.

வேதம் 'ஹ்ம்ம்ம்... ' எனவும், சம்பந்தமும் ஒரு டீனேஜ் பையனுமாக ஒரு ஏணியைக் கொண்டுவரவும் சரியாக இருந்தது. பின்னாடியே அந்த ஃபோட்டோக்ராஃபர் முத்து, தன் கையிலிருந்த காமிராவை நோண்டியபடியே வந்தார்.

'தம்பி யாரு?'.

'சார் என் பையன் தான் சார். ரஞ்சித். என்ஜினியரிங் படிக்கிறான் சார்' என்று சம்பந்தம் சொல்ல, பயமா அல்லது ஆச்சர்யமா என்று குழப்பும் வகைக்கு ஒரு முகபாவனையுடன் அந்தப்பையன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் ஸ்னேகமாய்ச் சிரிக்காதது அவருக்கு வித்தியாசமாகப் பட்டது.

'கந்தசாமி, ஏணிய அந்த பால்கனிக்கு புடிங்க. நான் முதல்ல ஏறிபோய் அந்த கண்ணாடிய உடைச்சி உள்ள போயிட்டு ஹால் கதவ திறக்கறேன். நீங்கள்லாம் முன்வாசல் வழியா வாங்க. முத்து, நீங்க மட்டும் என்ன ஃபாலோ பண்ணிக்கிட்டே கூட வாங்க‌ ' என்றுவிட்டு கந்தசாமியும் அந்தப் பையனும் அந்த ஏணியை ராகவனின் வீட்டு பால்கனிக்கு சாய்த்துவிட்டு நிற்க வேதம் சம்பந்ததிடம் கண்ணாடியை வாங்கிக்கொண்டு ஏணியின் மீது ஏறத்துவங்கினார். பால்கனியை அடைந்து இடுப்பில் இணைந்திருந்த துப்பாக்கியை உருவி ஓங்கி அந்த ஜன்னலில் அடிக்க தெரிந்து உடைந்து நொருங்கி விழுந்து சிதறியது அந்தக் கண்ணாடி. உருவிய துப்பாக்கியை மீண்டும் உரையில் போட்டு மூடிவிட்டு இடதுகையில் சம்பந்தத்திடம் வாங்கிய கண்ணாடியை பிடித்தபடி அதில் தெரிந்த பால்கனிக் கதவின் உள்பக்கத்தை பார்த்தபடி இடுப்பிலிருந்த லட்டியால் பால்கனிக்கதவின் தாழ்ப்பாளை நெம்ப கதவு திறந்துகொண்டது. அவரைத் தொடர்ந்து முத்துவும் அதே பாணியில் மேலே ஏறினார்.

வேத‌ம் பால்க‌னிக்கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார். அந்த‌ப் பெண் ஸ்வேதா, ஹாலில் குறுக்காக‌ வ‌யிற்றில் க‌த்தி பாய்ந்த‌வாக்கில் ம‌ல்லாந்து கிடந்திருந்தாள். அந்த உடலை நெருங்க நெருங்க‌ லேசாக‌ ர‌த்த‌ வாடை அடிப்ப‌தை அவ‌ரால் உண‌ர முடிந்த‌து. ஹாலில் இருந்த‌ அத்த‌னை ஜ‌ன்ன‌ல்க‌ளும் நிதானமாய் ஆர அமர உள்ப‌க்க‌மாய் மூடப்பட்டதாகத் தோற்றமளித்தது‌. ஒரு ம‌னித‌ன் த‌ற்கொலை செய்யும் நோக்க‌த்துட‌ன், மிக‌ மிக‌ நிதான‌மாக‌ ஒரு வீட்டை த‌யார் செய்தால் இப்ப‌டித்தான் இருக்குமென்று தெளிவாக‌த் தெரியும்ப‌டி இருந்த‌து. ஃபோடோக்ராஃப‌ர் முத்து வீட்டின் ஒவ்வொரு இன்ச்சையும் புகைப்ப‌ட‌மெடுத்தார்.

வேத‌ம் வாச‌ற்க‌த‌வை நெருங்கினார். க‌த‌வு தாழ்ப்பாள் போட‌ப்ப‌ட்டிருந்த‌து. சாதார‌ண‌மான‌ தாழ்ப்பாள். குறுக‌லான‌ இரும்பு உருளையில் இரும்பாலான‌ முனையில் வ‌ளைந்த‌ தாழ்ப்பாள். ப‌க்க‌த்திலேயே இக்கால‌க்க‌த‌வுக‌ளில் போட‌ப்ப‌டும் ந‌வீன‌ ஈரோப்பா வ‌கை லாக். ஆனால், அது ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட‌வில்லை. அந்த ஃபோட்டோக்ராஃபர் அந்தக் கதவையும், அதனை ஒட்டிய சுவர், டிவி, சோபா, டீபாய் முதலானவற்றை ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும்வரை நிதானித்துவிட்டு வேத‌ம் அந்த‌த் தாழ்பாளை இட‌து புற‌ம் இழுத்து, கைப்பிடியைப் ப‌ற்றி இழுத்தார். திற‌ந்துகொண்ட‌து.

கந்தசாமி, சம்பந்தம் மற்றும் ராகவன் கதவருகே நின்று எட்டிப்பார்க்க, ராகவன் இப்போது ஸ்வேதாவின் உடலைப் பார்த்துவிட்டு மீண்டும் அழத்துவங்க, சம்பந்தம் ஆறுதலாய் ராகவனை அணைத்துக்கொண்டு தள்ளிப்போனார்.அவ்வப்போது சில பேர் வந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். கந்தசாமி இப்போது ஹாலிற்குள் சில கைரேகை நிபுணர்களுடன் நுழைந்தார். ஃபோடோக்ராபரை அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையையும் படம் பிடிக்க பணித்துக்கொண்டிருந்தார். கைரேகை நிபுணர்கள் ஹாலின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் கைரேகைகளை பதிவு செய்துகொண்டிருந்தார்கள்.


எல்லாமே தெளிவாகவே இருந்தது. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அந்தப் பெண்ணுக்கு முன் வாழ்க்கையில் காதல்கள் இல்லையென ராகவன் சொல்கிறான். கல்யாணத்திற்குப் பிறகு இவர்களுக்குள் வாக்குவாதங்களோ, மனஸ்தாபங்களோ பெரிய அளவில் இருக்கவில்லை. ஆனால் அவள் இறந்திருக்கிறாள். அதுவும் கத்தியால் குத்தப்பட்டு. அவளே குத்திக்கொண்டாளா? அனைத்துக் கதவுகளும், ஜன்னல்களும் உட்புறமாக தாழிடப்பட்டிருக்கிறது. நிச்சயமாக வேறொருவன் உள்ளே வந்து கொலை செய்திருக்க முடியாது. செய்திருந்தால் உட்புறமாக எப்படி தாழிட்டிருக்கமுடியும்? அப்படியானால், ஒரு திருமணமான இளம்பெண் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன? உயிரிழப்புக்கான மோட்டிவ் என்னாவாக இருக்கும்? இந்தக் கேஸை எப்படி முடிப்பது அல்லது முடிந்திருக்கும்? வேதத்துக்கு யோஜனையாகவே இருந்தது.


கைரேகை நிபுணர்கள் ஹாலில் ஒரு இன்ச் விடாமல் எல்லா இடங்களிலிருந்து கைரேகைகளை சேகரித்துவிட்டு உள் ரூம்களுக்குள் நுழைய, வேதம் தன் கைகளில் க்ளவுஸ் மாட்டிக்கொண்டார். சோபாவில் தொடங்கி, அலமாறி, சோபாவுக்குக் கீழே, டீபாய், டெலிஃபோன், புத்தக அலமாறி, டிவி, பவர் ஹவுஸ் என ஒன்றுவிடாமல் அவரின் கவனத்தில் பதிந்துகொண்டிருந்தன. டீவியின் மேல் சில ஃபாஷன் புத்தகங்கள் இருந்தது வித்தியாசமாக இருந்தது. முகப்பு அட்டைக்கு அடுத்த அட்டையில் ரஞ்சித் என்று எழுதியிருந்தது. ரஞ்சித், இது அந்த சம்பத்தின் மகன் பெயர் என்பது நினைவுக்கு வந்தது. அந்தப் புத்தகத்தை எடுத்து மடித்து கையில் வைத்துக்கொண்டு தொடர்ந்தார்.


கதவு சீராக இருந்தது. அழகாகவும் கூட. எந்தவிதக் கீரலும் எங்கும் இல்லை. வேதம் அங்குளம் அங்குளமாக கீழிறுந்து மேலாக பார்த்துக்கொண்டே வந்தார். தேக்கு மரத்தினாலான கதவு. கதவின் சட்டத்தை தொட்டபடியான மேலிருந்து கீழாக நடுப்பகுதியில் ஈரோப்பா லாக்கர் போட்டிருந்தது. ஆனால் அது பயன்படுத்தப்படவில்லை என்பதை முதலிலேயே கவனித்தாகிவிட்டது. அதற்கு மேல் ஒரு சிறிய தாழ்ப்பாள் இருந்தது. அது அவரது கவனத்தை ஈர்த்தது. சாதாரண நடுத்தர வர்க்கத்து வீடுகளில் இந்தத் தாழ்ப்பாள் அனேகம். சட்டத்திலும், கதவிலுமாக உருளை வடிவிலான இரும்பாலான தாழ்ப்பாள். அதனுள் இரும்பாலான முனையில் வளைந்த உருண்ட ராட் ஒன்றைச் செருகினால் அந்த பக்கமிருந்து தள்ளித் திறக்க முடியாது. கதவை திறந்தமேனிக்கு வைத்துவிட்டு அந்தத் தாழ்ப்பாளைக் கூர்ந்து கவனித்ததில் அந்த இரும்பாலான ராடில் சட்டத்தை நோக்கிய முனையில் குறுக்கால் கோடு கிழித்தது போலிருந்தது அவருக்கு வித்தியாசமாய் இருந்தது.

ஒரு கணம் அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். கதவு உள்பக்கமாய்ப் பூட்டியிருந்ததே அது தற்கொலை என்ற யூகத்துக்கு காரணமாகியிருக்கிறது. இந்தத் தாழ்ப்பாளில் ஒரு தவறான கணிப்பு இருந்திருந்தால், அது கொலையாகவும் இருக்கலாம். வேதம் உடனடியாக கந்தசாமியை பணித்து ஒரு கார்ப்பென்டரை வரவழைக்கச் சொல்ல, கந்தசாமி சம்பந்தத்தைப் பணிக்க, இருபது நிமிட காத்திருப்பிற்கு பிறகு ஒரு கார்பென்டரை அழைத்து வந்தார் சம்பந்தம்.

'சார், இவன் கதிரு சார். இந்த ஏரியால எல்லா கார்பென்டிங் வேலையும் இவந்தான் சார் பண்றான்' என்றுவிட்டு சம்பந்தம் பின்னால் நின்று கொண்டார். கதிர், இளந்தாரியாக இருந்தான். கருப்பான, ஒல்லியான தேகம். உயரம் ஐந்தடிதான். வெடவெடவென இருந்தான்.அவன் போட்டிருந்த பாண்டும் சட்டையும் ஒரே அளவில் கசங்கியிருந்தது. கையில் ஒரு ப்ளாஸ்டிக் கூடை வைத்திருந்தான். அதில் ஸ்க்ரூ டிரைவர், ஆணிகள், ஸ்பானர்கள் இன்னும் என்னென்னவெல்லாமோ இருந்தன.

'தம்பி, இங்க வாப்பா, இந்த தாப்பாளை கழட்டி எடு. கவனமா எடு. ஸ்க்ரூ தவிர வேற எங்கயும் ஒரு கீரல் கூட இருக்கக்கூடாது' வார்த்தைகளில் சற்று கடினம் கூட்டிச் சொன்னார் வேதம். கதிர் பயபக்தியாய் தலையசைத்துவிட்டு பையிலிருந்து லாவகமாக ஒரு ஸ்க்ரூ டிரைவரை உருவி, பையை காலடியில் வைத்துவிட்டு, அந்தத் தாழ்ப்பாளை கழட்டலானான். கைதேர்ந்தவன் போல‌. பத்தே நொடிகளில் கழட்டிக் கையில் கொடுத்துவிட்டான்.

வேதம், கையில் வாங்கிக் கூர்ந்து பார்த்தார். அந்த உருளைவடிவ தடிமனான முனையில் வளைந்த கம்பியின் இன்னொரு முனையில் அரை அங்குளம் முன்பாக அது குறுக்காக வெட்டப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. வெட்டியபிறகு ஆனாபாண்ட் எனப்படும் இரும்புகளை ஒட்டும் கோந்து போட்டு ஒட்டியது போலிருந்தது. கோந்து சிந்தவுமில்லை. பிதுங்கியும் இருக்கவில்லை. ஒரே ஒரு துளி கோந்து, அளவாக, ஆனால் மிகமிகக் கவனமாக தடவப்பட்டது போலிருந்தது. சுவற்றின் மீது வைத்து இடதுகையால் இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டு, முத்துவிடம் ஸ்க்ரூ டிரைவர் வாங்கி, அதை அந்த அரை அங்குளப்பகுதியின் மேல் பலமாய்த் தட்ட, தெரித்துக் கீழே விழுந்தது.

வேதம் அவதானித்துக்கொண்டிருக்கையிலேயே செல்ஃபோன் சிணுங்கும் ஒலி கேட்டது. அந்த சப்தம் அவரின் சிந்தையைக் கலைத்தது. இந்தமுறையும் அதே கந்தசாமியினுடையதே தான்.

'ஹலோ... ஆங்.. ம்ம்.. நல்ல வேணும். அவன யாரு அங்கெல்லாம் போகச் சொன்னா?.. ரூம்ல மேல் ஷெல்ஃப்ல வச்சிறுக்கேன் பாரு. ம்ம். தொந்தரவு பண்ணாதம்மா. வேலையா இருக்கேன்.ம்ம். வை' என்றுவிட்டு அனைக்கவும், தொடர்ச்சியாக கந்தசாமிக்கு ஃபோன் வருவதும், அவர் எரிச்சலாகி பதிலளிப்பதும், தன் விசாரணையை தொந்தரவு செய்வதும் வேதத்திற்கு எரிச்சலைத் தந்திருக்கவேண்டும்.

'என்ன கந்தசாமி, என்ன ப்ராப்ளம்'.

'ஒண்ணுமில்ல சார். என் பையன் தான். பக்கத்துல இருக்குற தியேட்டர்ல படம் பாத்திருக்கான். அவன் உக்காந்திருந்த சீட்ல‌ மூட்டைப்பூச்சி கடிச்சிடிச்சாம். ஆயின்மென்ட் எங்க இருக்குன்னு கேக்குறா என் வைஃப்'.

'எங்க? காசி தியேட்டர்லயா? அங்க என் ஃபேமிலிக்கு கூட ட்ரை பண்ணினேனே. டிக்கட் கிடைக்கலயே. உங்க பையனுக்கு எப்படி கிடைச்சிதாம்?'.

'சார், அந்த தியேட்டர் மானேஜர் என் பையனுக்கு தெரிஞ்சவர் சார். அதனால, இவன் டிக்கட்டே இல்லாம பாத்திருக்கான். யாரோ படம் பாக்க வேண்டியவர் வரல போல. அந்த சீட்ல உக்காந்து பாத்திருக்கான் சார்'.

வேதத்துக்கு சட்டென பொறி தட்டியது.

'அப்படியா? ஹ்ம்ம்.. உங்க பையன் எந்த சீட்ல உக்காந்து பாத்தாராம்?'.

'இ14 சார்'.

'கந்தசாமி, கொஞ்சம் என் கூட வாங்க' என்றுவிட்டு வேதம் கந்தசாமியின் தோள்மீது கைப்போட்டவாறே ராகவனின் ஃப்ளாட்டை விட்டு வெளியேறி எதிர் ஃப்ளாட்டில் நுழைந்தனர். அங்கே ஒரு சோபாவில் அருகருகே அமர்ந்திருந்த ராகவனும், அவனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த அந்த எதிர்வீட்டுக்காரரும் வேதத்தையும் கந்தசாமியையும் பார்த்துவிட்டு எழுந்துகொண்டனர். வேதம் நேராக ராகவனின் முன் சென்று நின்றுகொண்டார்.

'ராகவன், நீங்க ஏன் உங்க மனைவியை கொன்னீங்கன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா?'.

'என்ன!! நான் கொன்னேனா? என்ன சார் உளருறீங்க. நான் ஏன் என் அன்பு மனைவியக் கொல்லனும். கதவு உள்பக்கமா தாழ்ப்பாள் போட்டிருக்கு. நான் எப்படி கொன்னிருக்க முடியும்? அவ தற்கொலை பண்ணிக்கிட்டா சார்'.

'கரெக்ட். அவ தற்கொலை பண்ணிக்கிட்டதா தான் நீங்க சீன் க்ரியேட் பண்ணியிருக்கீங்க. ஆனா, ஏன் அவுங்கள கொன்னீங்க?'.

'சார், திரும்ப திரும்ப ஆதாரம் இல்லாம அதையே சொல்லாதீங்க சார். எப்படி சார்? எப்படி நான் தான் கொன்னேன்னு அவ்ளோ ஆணித்தரமா சொல்றீங்க?'.

'எப்படியா? சொல்றேன் கேளுங்க. ஆறு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பியிருக்கீங்க. காசி தியேட்டர். உங்க சீட் இ14. 7 மணிக்கு ஷோ ஓட ஆரம்பிச்சதும் வீட்டுக்கு வந்திருக்கீங்க. சத்தமில்லாம உங்க ஃப்ளாட்டுக்கு போயிருக்கீங்க. அங்க உங்க மனைவிய கத்தியால குத்தி கொன்னிருக்கீங்க. தாழ்ப்பாள அரை அங்குளம் அறுத்து, அந்த அரை அங்குளத்துல ஆனாபாண்ட் ஒரு துளி, ஒரே ஒரு துளி போட்டு வச்சிட்டு, வெளிய வந்து திரும்ப கதவ சாத்தியிருக்கீங்க. ஆனாபாண்ட் போட்டிருந்ததுனால அது திடமா ஒட்டியிருக்கு. இது எல்லாத்துக்கும் இரண்டு மணி நேரம் ஆயிருக்கு. உங்க அதிர்ஷ்டம் அன்னிக்கு யாரும் உங்கள பாக்கல. திரும்பி தியேட்டருக்கு போயிருக்கீங்க. அங்க படம் ஏற்கனவே முடிஞ்சிறுக்கு. படம் முடிஞ்சி திரும்ப வராமாதிரி வீட்டுக்கு வந்துட்டு எனக்கு ஃபோன் பண்ணியிருக்கீங்க. இதான் நடந்தது. இப்போ சொல்லுங்க. ஏன் உங்க மனைவிய கொலை பண்ணினீங்க?'.


கேட்டுக்கொண்டிருந்த ராகவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்துவங்கியிருந்தது. எதிர்வீட்டுக்காரர் அதிர்ச்சியாய் ராகவனையும் வேதத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். இந்நேரத்திற்கு வேதத்துக்கு பின்பக்கமாய் வந்து ஒண்டிவிட்டிருந்த சம்பந்தம் நடந்ததையெல்லாம் பார்த்துவிட்டு வெலவெலத்துப் போய்விட்டிருந்தார். ஆனால் ராகவன் முகத்தில் ஆட்டைத் திருட வந்து அகப்பட்டுக்கொண்ட நரியின் முகபாவனை. கரிசனமும், அனுதாபத்தையும் எதிர்னோக்கும் முகத்தை எதிர்பார்த்தவர்களுக்கு அவன் முகம் அகோரமாயிருந்தது. வேதத்தின் முகத்தில் தெளிவு பிரகாசமாயிருந்தது. அவரின் அனுபவம் தந்த அறிவு அவரை நிதானத்தில் ஆழ்த்தியிருந்தது. அவருக்குத் தெரியும். இன்னும் சற்று நேரத்தில் ராகவன் வெடித்தழுவான் அல்லது குமுறித்தீர்ப்பான், இரண்டில் ஏதோ ஒன்று நிச்சயம் நடக்குமென்று.

வேதம் ராகவனை நெருங்கினார். அவனின் கைபிடித்து ஒரு தகப்பனைப் போல் பரிவு காட்டி அவனை அங்கிருந்த சோபாவில் அமர் வைத்தார். எதிர்வீட்டுக்காரன் வழிவிட்டு இரண்டடி தள்ளிப்போனார். நிதானம் மிக்க தாய் அடிபட்டுக்கொண்ட குட்டியை தடவித்தருவது போல் வேதம் ராகவனை வருடித்தர, நெடு நேர அமைதிக்குப்பின் மெல்ல வாய்திறந்தான் ராகவன்.


'ஆமா சார். நாந்தான் கொன்னேன் அவள. பாதகத்தி சார் அவ. பசப்பி. என் வாழ்க்கையை, எதிர்பார்ப்ப, ஆசையை எல்லாத்தையும் குழி தோண்டிப் பொதைச்சிட்டா சார் அவ. இருபத்தையஞ்சு வயசு வரைக்கும் ஆம்பளைக்கு சொந்தக் கால்ல நிக்கறதுதான் சார் குறிக்கோள். மத்தவனுக்கு எப்படியோ சார். ஆனா நான் அப்படிதான் இருந்தேன் சார். விடிகாலைல எழுந்து படிப்பு, டேர்ம் எக்ஸாம், மாத்ஸ், கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பயாலஜி, ட்யூஷன் க்ளாஸ், ஒரு வாரத்துல ஒரு நாளைக்கு 4 பேப்பர்னு 28 எக்ஸாம், எல்லாத்துக்கும் ப்ரிபாரேஷன், மார்க்ஸ், 10த் 12த், மெரிட் ஸ்காலர்ஷிப், அப்புறம் காலேஜ், செமஸ்டர் எக்ஸாம், லேப், பர்சென்டேஜ், காம்பஸ், வேலை அது இதுன்னு திரும்பிக்கூட பாக்கமுடியாம ஒரு வாழ்க்கை. எல்லாம் எதுக்கு சார். எனக்குன்னு ஒரு நல்ல எதிர்காலம், குடும்பம், மனைவி, குழந்தைங்கன்னு சந்தோஷமான வாழ்க்கைக்குதானே சார். ஆம்பளைக்கு நூறு பொண்ணுகிட்ட பேசினாலும் எவளும் கிடைக்காம போகலாம். பொட்டச்சி லேசா கண்ணசைச்சா போதும் சார். நூறு பேர் வருவாங்க சார். அழக ஆண்டவன் பொம்பளைக்கு தான் வச்சிருக்கான். உத்தியோகம் புருஷலட்சனம். அவ அழகு சார். அழகான பொண்ண எல்லாரும் விரும்புவாங்கதான் சார். அவளையும் ஒருத்தன் விரும்பியிருக்கலாம். விரும்பியிருக்கான் சார். இது நடக்கறது தானே. என்கிட்ட சொல்லியிருக்கலாம் சார். என்கிட்ட முன்னமே சொல்லியிருந்தா, மன்னிப்போம் மறப்போம்ன்னு விட்டிருப்பேன் சார். அவளே திகட்ட திகட்ட அவளை லவ் பண்ணியிருப்பேன் சார். ஃபர்ஸ்ட் நைட்லயே கேட்டேன் சார். இல்லன்னு சொன்னா சார். பொய் சார். பசப்பி. பொய் சொல்லிருக்கா சார். அவனோட ஊர சுத்தியிருக்கா. தியேட்டர்ல..... சொல்ல வாய் கூசுது சார். எல்லாத்தையும் பண்ணிட்டு நானா அவளோட பழைய வாழ்க்கைய அந்தப் பையன் மூலமா தெரிஞ்சதுக்கப்புறம், அவன் வேற ஜாதி அதனால் கல்யாணம் பண்ணிக்க முடியலன்னு சொல்றா சார். சேர்ந்து சுத்தும்போது தெரியாதா சார் வேற ஜாதின்னு. அதெல்லாம் இல்ல சார். கொழுப்பெடுத்த‌ கழுத. என்ன ஏமாத்த நினைச்சால்ல.அதான் சார் கொன்னேன். ஆத்திரம் தீருர வரை கொன்னேன் சார். திருப்தியா இருக்கு சார். நல்லவேளை எனக்கு குழந்தைன்னு ஒண்ணும் இல்ல. எப்படியெப்படியோ இருக்கணும்னு நினைச்சேன் சார்.....


தரையையே வெறித்துப்பார்த்துக்கொண்டே உறுமியபடி அமர்ந்திருந்தான் ராகவன். அங்கு மயான அமைதி நிலவியது. வேதம் நீண்டதொரு பெருமூச்சி விட்டார். எதிர்வீட்டுக்காரர் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தார். வாசலில் நின்றிருந்த சம்பந்தம் கண்களில் பரிதாபம் தெரிந்தது. வேதம் கந்தசாமியிடம் திரும்பி, கண்ணசைக்க, கந்தசாமி பாண்ட் பாக்கேட்டில் கைவிட்டு கைவிலங்கை எடுத்துக்கொண்டு, முன்னே நடந்து லேசாக குனிந்துவிட்டு ராகவனைப் பார்க்க, ராகவன் கந்தசாமியை பார்த்துவிட்டு கைகளை முன்னே நீட்டினான். அவன் கண்கள் பனித்திருந்ததை பார்க்க இயலாமல் குனிந்துகொண்டார் கந்தசாமி.


முற்றும்.



- ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)


#நன்றி
உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4542)

Wednesday, 29 June 2011

தண்டனை - சிறுகதை


தண்டனை - சிறுகதை


ஒரு கைதேர்ந்த கொலைகாரன், நாடி, நரம்பு, பேச்சு, மூச்சு, சுவாசம் என சகலமும் கொலை வெறியால் நிறைந்து, அடங்காத கொலைப்பசியில் எதிரியைக் கைக்கெட்டும் தூரத்தில் கண்டம் துண்டமாய்க் கிழித்துப்போடும் வன்மத்தில் அவன் மீது அரிவாளுடன் பாய‌ அவதானிக்கும் நிலையில் அவனின் மனநிலை எப்படி இருக்குமென்று தெரியுமா உங்களுக்கு? எதிரியை மூர்க்கமாய்த் தாக்க வேண்டி, உள்ளங்கைகள் இறுக்கிப் பிடித்த உருட்டுக்கட்டையைச் சுற்றி தசை நார்கள் இருகி கட்டையின் தின்மையை எதிர்க்கும் நிலையில் அவன் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்குமென்று தெரியுமா உங்களுக்கு? சட்டென ஒரு மூர்க்கம் உடலெங்கும் இறங்கி திக்குத் தெரியாமல் அங்குமிங்கும் ஓடி, ஒரு வன்மம் இன்னும் இன்னும் அதிகரிக்கும் நிலையில் அவன் மன நிலை எப்படி இருக்குமென்று தெரியுமா உங்களுக்கு?

தெரியாதா! எனக்கும் இதற்கு முன் தெரியாது தான். ஆனால் இப்போது நானிருக்கும் நிலை அப்படி ஒன்றாக இருக்கலாமென்று தோன்றியது. என் ஒரு கஸ்டமரின் காரை சர்வீஸ் செய்ய பழுதுபட்ட ரேடியேட்டருக்கான ஸ்பேர் பார்ட் வாங்கலாமென்று போட்டிருந்த சட்டை பாண்டுடன் பைக்கில் வந்தவன் நான். ஆனால் இப்போது என் கையில் ஒரு உருட்டுக்கட்டை. இதோ இந்த ஒதுக்குப்புறமாக உள்ளடங்கி வேலை பாதியில் நின்று போன ஒரு கட்டடத்தில் மறைவாய் நின்றபடி காத்துக்கொண்டிருக்கிறேன் நான். இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு. இங்கு இருளாய் இருந்தது. யாருமில்லை. இன்று சனிக்கிழமை. என் கணிப்பு சரியாக இருந்தால் நாளையும் யாரும் வேலைக்கு வரமாட்டர். இன்றே ரத்தம் வர அடித்துப்போட்டு, சத்தம் போடாமலிருக்க வாயை உடைத்து, ரணமான இடங்களில் மண்ணடித்து, நகராமல் இருக்க கை கால்களை உடைத்துப்போட்டால், இரண்டு நாட்களுக்கு யாரும் வரமாட்டர். கிருமி அண்டி ரணப்பட்ட இடங்களில் நோய் பீடிக்கும். சீழ் பிடிக்கும். கொலையாக இல்லாவிட்டாலும் ஆறாத காயங்கள் பல உண்டாகக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகும். அதற்கு இந்த இடம் தான் சரி.

என் பைக் பக்கத்து தெருவில் ஒரு மர நிழலில் நிறுத்தப்பட்டிருக்கிறது. நான் அவனுக்காக காத்திருக்கிறேன். இந்த வழியாகத்தான் ஒரு டிவிஎஸ் ஃபிஃப்டியில் போனான். அவன் போய் ஒரு மணி நேரம் இருக்கும். இதே வழியில்தான் வந்தாக வேண்டும். ஒரு மணி நேரம் முன் போனதால், இன்னேரம் திரும்பி வரலாமென்று எனக்கு தோன்றுகையிலேயே தூரத்தில் யாரோ ஒரு டிவிஎஸ் ஃபிஃப்டியில் வருவது தெரிந்தது. அவனா என்று கண்களைச் சுருக்கிப் பார்த்தேன் நான். அவனேதான். அதே அரக்கு நிற கட்டம்போட்ட சட்டை. பச்சை நிறத்தில் லுங்கி.

சுதாரித்துக்கொண்டேன். என் வ‌ல‌துகையில் அந்த‌ உருட்டுக்க‌ட்டை இறுக்கிப் பிடித்தேன். என் கையில் அது திட‌மாக‌ பொறுந்திற்று. சரியான உருட்டுக்கட்டை இந்தத் தாக்குதலுக்காகத் தானாகவே அமைந்துவிட்டதாய்த் தோன்றியது. சுற்றிலும் யாரும் இல்லை. நான் ம‌றைந்திருக்கும் இட‌த்திலிருந்து அவ‌ன் வ‌ந்துகொண்டிருந்த‌ ம‌ண் சாலை அருகாமைதான். அத‌னால் க‌ண்ணிமைக்கும் நேர‌த்தில் அவ‌ன் அருகே வ‌ருகையில் அவ‌ன் முன்னே பாய்ந்து, அவ‌ன் முக‌த்தை நோக்கி வேக‌மாக‌ க‌ட்டையை வீசினால், முக‌ம் குலைந்து போகும். மூக்கு சில்லு உடைந்து ர‌த்த‌ம் கொட்டும். தாக்க‌ம் அதிக‌மாக‌ இருந்தால் க‌ழுத்தெலும்பு உடைந்து மூச்சுக்குழ‌ல் அடைத்து உயிர் போகும். அத‌னால் அத்த‌னை வேக‌ம் வேண்டாம். அவ‌ன் உயிரோடு இருக்க‌வேண்டும். ஆனால் ந‌டைப்பிண‌மாக‌ இருக்க‌ வேண்டும். அதனால் வேகம் குறைத்து வீச வேண்டும். மூர்ச்சையாகும் அளவு வீசினால் போதும். நிலைகுலைந்து விழும் அவனை உடனே அந்தக் கட்டிடத்தில் இருட்டான பகுதிக்கு இழுத்து வந்தவிட வேண்டும். அவனின் மொபெட் சாலையில் கிடக்குமே. யாராவது பார்த்துவிட்டால்?

மணி மதியம் 2. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை. அதனால் அவன் சுயநினைவிழக்கும்வரை அவனை அடிக்கும் வரைக்கும் சற்று நேரம் அது ரோட்டில் கிடந்தாலும் பெரிதாக பிரச்சனை வராது என்றே தோன்றியது. அவன் நெருங்கிக்கொண்டிருந்தான். அந்த உருட்டுக்கட்டையை நான் இறுக்கியபடி அவன் மேல் பாய ஆயத்தமானேன்.

அவனின் மொபெட் மிக அருகில் நெருங்க, உருட்டுக்கட்டையை ஓங்கியபடி மறைவிலிருந்து திடீரென்று அவன் மேல் பாய்ந்து உருட்டுக்கட்டை வேகமாய் பக்கவாட்டிலிருந்து அவன் முகத்தை நோக்கி இறக்கினேன். அது அவன் மூக்கையும் வாயையும் அதகமாக தாக்கியிருக்கவேண்டும்.

'அ ஆஆஆஆ ம்மா' என்றபடி அவன் கீழே விழுந்தான். நிலைகுலைந்த மொபெட்டின் பின் சக்கரம் சறுக்கியபடி என் கால்களில் இடித்ததில் நானும் அவன் மேல் விழுந்தேன். என் கையிலிருந்த உருட்டுக்கட்டை சற்று தொலைவில் போய் விழுந்தது. நான் சுதாரித்துக்கொண்டு உருட்டுக்கட்டையை நோக்கி ஓட அவன் திடீரென்று நடந்த தாக்குதலில் சுதாரித்து வலியில் முனகிக்கொண்டே மூக்கிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட எழ முயற்சிசெய்வது தெரிந்தது. அப்போது தான் கவனித்தேன். அவனின் இடது கால், முட்டிக்கு கீழே இருக்கும் பகுதி அவனுக்கு இல்லை. ஊனமுற்றவனா இவன்!! என் கோபம் அப்போதுதான் தலைக்கேறியிருக்கவேண்டும். வேகமாக அந்த உருட்டுக்கட்டையை எடுத்துக்கொண்டு மீண்டும் அவன் தலையில் அடித்தேன். எழ முயற்சித்து என் இரண்டாவது தாக்குதலில் அவன் மீண்டும் விழுந்தான்.


இப்போதுதான் அவனுக்கு மயக்கம் வந்திருக்க வேண்டும். தள்ளாடி விழுந்தான் அவன். இப்போது ரத்தம் மண்ணில் ஆங்காங்கே திட்டுதிட்டாய் விழுந்தது. யாரெனும் பார்த்துவிடுவார்களோ என்று தோன்றியது. அவனின் அரக்கு நிற சட்டையுடன் அவனை அந்தக் கட்டிடத்தின் இருட்டான பகுதிக்கு இழுத்துச்சென்றேன். அங்கே நெடுஞ்சாலையில் வாகனத்தில் சிக்கி காலுடைந்த நாயைப் போலக் கிடந்தான் அவன். என் ஆத்திரம் தீரும் வரை அவனை அடித்தேன். அவனை குப்புறப் படுக்க வைத்து கைகளை நீட்டி, கட்டையால் அடித்து உடைத்தேன். பக்கவாட்டில் சரிந்து கிடந்த ரத்தம் தோய்ந்த அவன் முகத்தில் ஓங்கி ஓங்கி தாடை உடையும் வரை அடித்தேன். அத்தனை தடவை அடித்தது என் பயிற்சியின்மையைக் காட்டியது. அவன் இப்போது அடங்கியிருந்தான். உயிர் இருந்தது. ஆனால் நினைவு இல்லை. அவன் கால்களை உடைக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் ஏற்கனவே அது உடைந்து இருந்ததால் அதை உடைப்பது இந்த ஒட்டுமொத்த தாக்குதலுக்கே இழுக்கு என்று தோன்றியது.

அவனை அப்படியே போட்டுவிட்டு வாசலுக்கு விரைந்து சுற்றும்முற்றும் பார்த்தேன். சாலையில் யாருமில்லை. அவசர அவசரமாக அவனின் மொபெட்டை இழுத்து கட்டிடத்தின் ஓரத்தில் ஒதுங்கப் போட்டேன். அதன் மீது அங்கு கிடந்த பெயிண்ட் கொட்டிக்கிடந்த சாக்கை போட்டு மூடினேன். முழுவதும் மறையவில்லை. எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. சாலையிலிருந்து மண்ணை வாரி அவன் உடலில் ரத்தம் வரும் இடங்களிலெல்லாம் கொட்டினேன். கைகளைத் தட்டிவிட்டு விறுவிறுவென வெளியில் வந்தேன்.

ஏதும் நடவாதது போல் சாலையில் இறங்கி என் பைக் நிறுத்தியிருந்த அடுத்த தெருவை நோக்கி நடக்கத்தொடங்கினேன். நாளை ஞாயிற்றுக்கிழமை. யாரும் வேலைக்கு வரமாட்டர். நடு நிசியில் இவனுக்கு நினைவு திரும்பினாலும் இவனால் கத்தவோ, நகர்ந்து மற்றவர் பார்வையில் விழும் வகைக்கு அசையவோ முடியாது. அசைக்க உதவக்கூடிய எல்லா உறுப்புக்களையும் அடித்து உடைத்தாயிற்று. நாளை ஒரு நாள் முழுவதிலும் காயங்கள் ரணப்பட்டு, வலி கொடுத்து, சீழ் பிடித்து உடல் கெடும். அவனுக்கு கெட்ட நேரமானால், நாளடைவில் அதுவே அவனை இறக்கவும் செய்யும்.

அவன் மேல் ஏன் இவனுக்கு இத்தனை வன்மம் என்றுதானே யோசிக்கிறீர்கள்? இவன் என்ன செய்தான் தெரியுமா? கல்பனாவிடம் தவறாக நடக்க முயற்சித்திருக்கிறான். அவளின் கைப் பிடித்து இழுத்திருக்கிறான். தன்னுடன் படுக்கச்சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறான். இப்படி ஒரு விதவையை பலவந்தப்படுத்துகையில் இவன் ஊனமுற்றவனாக இருந்திருக்கிறான். எத்தனை கொடூரம் நிறைந்தவனாயிருந்திருக்கிறான் பார்த்தீர்களா? கல்பனா யார் தெரியுமா? அவள் ஒரு இளம் விதவை. வயது 25 தான். அவள் கதையை கேட்கும் யாருக்கும் பரிதாபம் வரும். அவளுடையது காதல் திருமணம். ஆசை ஆசையாய் காதலித்தவனை திருமணமான மூன்றே வருடத்தில் ஒரு விபத்தில் பரிகொடுத்துவிட்டு மூலியானவள் அவள். அவளுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். காதல் திருமணத்தால் பெற்றவர்களின் துணையில்லை. தனியொருத்தியாய் அந்த இளம் வயதில் தன் பெண் பிள்ளைக்காக வாழத்தலைபட்டிருக்கிறாள். அவளிடம் இப்படி நடந்திருக்கிறான் இந்த மனசாட்சியில்லாதவன்.

சரி, உனக்கேன் இத்தனை அக்கறை என்று தானே கேட்கிறீர்கள்? என்னைப்போல் நீங்களும் அக்கறைப்படாததால் தான் ஒரு மாதம் முன்பு சீரழிக்கப்பட்டாள் அந்தப் பேதை. அப்போதுதான் அவள் விதவை ஆகியிருந்தாள். இருந்த வீட்டில் இறந்துபோன கணவனின் நினைவுகள் அதிகம் வந்ததால், வேறு வீட்டிற்கு மாறச்சொல்லி சுற்றுப்பட்டவர்களால் அறிவுறுத்தப்பட்டிருககிறாள். அவள் வீடு மாற்றிச் சென்ற புதிய வாடகை வீட்டில்தான் அந்தக் கொடுமை நடந்தது. சில அப்பாக்களின் கடின உழைப்பு அவர்தம் மகன்களிடம் விரயமாகும். அப்படித்தான் விரயமானது என் அப்பா சம்பாதித்து கட்டிய வீடு. என் சோம்பேரித்தனத்துக்கும், முட்டாள்தனத்துக்கும், கையாளாகாத தனத்துக்கும் அந்த ஒரு வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைத்த பணம் என் வயிற்றை வளர்த்தது. அதே வீடுதான் அவளை கெடவும் வைத்தது.

சிற்றின்பங்களையே சுவைத்து பழக்கப்பட்ட என் சிற்றறிவுக்கு அவளின் வனப்பான உடலையும், எடுப்பான முலைகளையும் பிருஷ்டங்களையும் அன்றி வேறெதுவும் தெரியவில்லை. புதிதாக வந்த வீட்டில் அவளுக்கு தொலைபேசி வசதி இருக்கவில்லை. அவளின் கையிலிருந்த மொபைலை அவளின் குழந்தை தண்ணீரில் போட்டு பாழடித்திருந்தது. அதனால் தகவல் தொடர்புக்கு அடுத்தவர்களை அண்டியிருக்க வேண்டிய சூழ் நிலை. என் மனைவி ஊருக்குச் சென்றிருந்த ஒரு கரிய நாளில், அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது என் வீட்டு தொலைப்பேசியில். நான் துள்ளிக் குதித்தேன், பின்னாளில் நானே அதற்கு வருத்தப்பட்டு வேறொருவனைக் கொலை கூட செய்யத் துணிவேன் என்றறியாமல். விரைந்தவளை வரவழைத்தேன். ஓநாயையும் நம்பி வந்தது அந்தப் புள்ளிமான். அன்று அந்த வீட்டில் அது நடந்தது. முதலில் திமிறினாள். ஆனால் சத்தம் போடவில்லை. நேரம் செல்லச்செல்ல அடங்கிப் போனாள். அவளுக்கும் அதில் விருப்பமோ!!! நான் குதூகளித்தேன். எனக்கொரு இரை சிக்கிவிட்ட மகிழ்வு. பலவீனமாக அவள், என் படுக்கையில் , அவள் மேல் நான் பலவந்தமாய் முயங்கிக்கொண்டிருந்தபோது அவள் கண்கள் கரைந்து கண்ணீரானது ஏனென்று அப்போது புரியவில்லை. அன்றிரவு நான் ஆனந்தமாய் உறங்கினேன், அதுதான் என் நிம்மதியான இரவுகளில் எஞ்சிப்போன கடைசி இரவு என்று விளங்காமல். மறுநாள் அவள் என் வீட்டில் இல்லை. எங்கு தேடியும் அவள் இல்லை. அக்கம்பக்கத்தில் யாரிடமும் அவள் ஏதும் சொல்லவில்லை. என் நெஞ்சை ஈட்டியால் நிதமும் கிழித்தெடுக்க‌ அவளின் மெளனத்தை மட்டும் விட்டுச் சென்றிருந்தாள், யாரோ ஒரு பண்பட்ட தாயால் வளர்க்கப்பட்டவள்.


அவளின் மானம் கப்பலேறிவிடக்கூடாதென்றுதான் அவள் சத்தம் போடாமலிருந்திருக்கிறாள். அவளுக்கு அதில் துளியும் விருப்பமில்லையென்றுதான் திமிறியிருக்கிறாள். இழப்புகளால் சிதிலமடைந்து உடலாலும் உள்ளத்தாலும் பலவீனமாய்த்தான் எதிர்க்க சக்தியின்றி அடங்கிப் போயிருக்கிறாள். அவளின் இருத்தல் தொலைந்து போன அந்த நொடிகள், சம்மட்டியால் என் புத்தியை அறைந்து சொல்லிக்கொண்டிருந்தன அவள் இல்லாத அந்த வீட்டில்.


நினைவு தெரிந்து அன்று தான் நான் அத்தனை அதிகமாய் பலவீனமாய் உணர்ந்தேன். என்னை நானே வெறுத்தேன். ஊருக்கு முன் என் முகத்திரை கிழித்திருக்கலாம். யாருமில்லாத அந்த இரவில் கத்தியால் என் அந்தரங்கம் கிழித்து என்னைக் கொன்றிருக்கலாம். என் முகத்தில் ஆசிட் வீசியிருக்கலாம். போதையில் மயங்கி கிடந்த நேரத்தில் ஆள் வைத்து என்னை அடித்துப் போட்டிருக்கலாம் அல்லது கொன்றே இருக்கலாம். அப்படி ஏதேனும் நடந்திருந்தால் நான் திமிருடன் எதிர்த்திருக்கலாம், என்னை படுக்கக் கூப்பிட்டதாக அவள் மேல் சேற்றை வாரி இரைத்திக்கலாம், அவளின் ஃபோன் நம்பரை எல்லா தியேட்டர் பாத்ரூமிலும் விபசாரியென பெயரிட்டு கிறுக்கியிருக்கலாம், நடு இரவில் அவள் வீட்டு முன் அசிங்கம் செய்துவிட்டு கதவு தட்டிவிட்டு ஓடிப்போயிருக்கலாம், அவள் கையால் கொல்லப்பட்டிருந்தால் ஆவியாகி, அவள் மகளை கெடுத்திருக்கலாம்.


ஆனால், அவ‌ள் ஒரேயொரு மெளனத்தால் என்னை நடைப்பிணமாக்கியிருந்தாள். அதை மெளனம் என்று சொல்லிட முடியாதுதான். இயலாமை. ஆணாதிக்க உலகில் ஒரு கைம்பெண்ணாய் என்ன செய்துவிட முடியும் என்று அவள் நினைத்திருக்கலாம். பாலின சமத்துவத்தில் காணாமல் போய்விட்ட பெண்மையின் வெளிகளை தன்னால் மட்டும் தேடிட இயலுமாவென நம்பிக்கை இழந்திருக்கலாம். அத்தனை வருடங்களில் என்னைப் பெற்ற தாயால் கூட கழுவ முடியாத என் ரத்தத்தை பரிசுத்தமாக்கியிருந்தாள். ஒரே நொடியில் என் ஆண்மையின்மேல் நரகலை ஊற்றியிருந்தாள். இனி உயிர் உள்ளமட்டும் என் முகத்தை என்னாலேயே பார்க்க முடியாமல் செய்துவிட்டிருந்தாள். அன்று தொடங்கியது இந்த தண்டனை. இனி அவளுக்கு நான் காவல். எதுவரை காவல்? உங்களில் யாரோ என்னை அடையாளம் கண்டு, இதே போல் ஒரு பாதி கட்டப்பட்ட கட்டிடத்திலோ அல்லது நாற்றமடிக்கும் சாக்கடையிலோ என்னை அடித்து போடும்வரை காவல்.

அவளுக்கே தெரியாமல் அவளைத் தேடினேன். கண்டுபிடித்தேன். எனக்குப் பயந்து நான்கு ஊர் தள்ளிப் போயிருந்தாள் அவ‌ள். அவளுக்கே தெரியாமல் தினமும் அவளை பின்தொடர்கிறேன். அவளிடம் யாராவது தவறாக நடப்பதாக கேள்வியும் பட்டாலே போதும், அவனை இது போல் யாருமில்லாத சமயம் பார்த்து கையை காலை உடைத்து போடுவதென முடிவு செய்தேன். இந்தத் தண்டனைதான் எனக்குத் தரப்பட்டிருக்க வேண்டும். ஆறடி, தொண்ணூறு கிலோ எடை, பருத்த தொப்பை, உடல் முழுவதும் கருப்பாய் அடர்த்தியாய் ரோமம், அதிகமாய் குடித்ததால் வீங்கிப்போன தாடை, மிதமிஞ்சிய மைதுனங்களால் விழுந்துவிட்ட முன் தலை வழுக்கை என‌ காட்டுமிராண்டி போல் வளர்ந்திருந்ததால் எனக்கு அந்த தண்டனை தரப் பயந்து சிலர் கண்டும் காணாமல் போயிருக்கலாம். உண்மையில், அப்படி யாராவது என்னை அடித்திருந்தால், எலும்பு நொறுக்கியிருந்தால், குடல் கிழித்திருந்தால், மண்டை உடைத்திருந்தால், அந்தரங்கத்தை சிதைத்திருந்தால் கூட இத்தனை பலவீனப்பட்டிருக்க மாட்டேன். நான் அவளுக்கிழைத்தது என்னை பலவீனப்படுத்தியது. ஆறடிக்கு நின்றபடி, யாரும் பார்க்காத வகைக்கு மறைவாக நின்று அழவைத்தது. தினம் தினம் உள்ளுக்குள்ளேயே புழுங்கி சாக வைத்தது. என்னை ஊனமாக்கியது.

காலத்தை பின்னோக்கிப் பயணிக்க எல்லோருக்கும் ஆசை. எல்லோருக்கும் திருத்திக்கொள்ள கடந்த காலத்தில் ஒரு பிழை நிச்சயம் இருக்கிறது. ஆனால், காலம் பின்னோக்கி நகராது. நடந்தது நடந்ததுதான். அதை மாற்ற முடியாது. ஆனால், இனி நடவாமல் பார்த்துக்கொள்ளலாம். அதைத்தான் செய்ய நினைக்கிறேன். செய்துகொண்டும் இருக்கிறேன். இக்கதையிலும் காலத்தை பின்னோக்கி செல்லக்கூடிய வகையில் ஒன்று நிகழ்ந்திருக்கலாம். ஆனால் இதை நான் எழுதும் இக்கணம் வரை அது நிகழவில்லை. அது, காலம் கடந்த பின்னும் நீங்கள் இன்னும் என்னை கண்டுகொள்ளவில்லை. தண்டனைக்கு இன்னும் ஏங்குகிறேன் நான். யாராவது என் கையை காலை அடித்து உடையுங்களேன். என் முகத்தில் அப்பிக்கிடக்கும் நரகலைத் துடைக்க ஒரு காயம் தாருங்களேன்.



- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)


#நன்றி
உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4513)

Friday, 10 June 2011

கனடா ஏ9 வானொலியில் என் சிறுகதை

அன்பின் நண்பர்களுக்கு,

வணக்கம்.

கனடாவைச் சேர்ந்த ஏ9 செய்தி வானொலியில் நான் எழுதிய ' நெடுஞ்சாலைக் காதல்' என்ற தலைப்பிலான ஹாஸ்யக்காதல் கதை, ஒலிப்பதிவு செய்யப்பட்டு சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (03/06/2011) ஒலிபரப்பப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெளியான ஒலிநாடாவின் ஒரு பகுதியை மட்டும் இங்கே இணைத்திருக்கிறேன்.



http://www.youtube.com/watch?v=lIJmNrCLd80


வாய்ப்பளித்த ஏ9 வானொலிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்
 

அந்தக் கதை இங்கே:

நெடுஞ்சாலைக் காதல் - சிறுகதை



திண்டிவனம் ‍- பண்ருட்டி நெடுஞ்சாலையில் நிச்சலனமாய் வெறிச்சோடிக்கிடந்த அந்தப் புற நகர் பேருந்து நிலைய ஹோட்டல் அவரது கவனத்தை கல்மிஷமாய்க் கிளர ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது மாதவன் நம்பிக்கு. அது, சற்று நேரம் முன்பு, குடும்பப்பாங்கான சுடிதார்ப் பெண்ணொருத்தி முதலில் உள்ளே நுழைய,  திருட்டுத்தனமாய் அங்குமிங்கும் பார்த்துவிட்டு அவளையே வெறித்துப் பார்த்தபடி பின்னாலேயே ஒரு இளைஞனும் உள்ளே நுழைந்தது தான். பார்க்க நெடுஞ்சாலைத் திருடம் போலிருந்தான். ஹோட்டல் கதவு வெகு இயல்பாய் ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்தது அவரது சந்தேகத்தை மேலும் கிளர, அவர் அந்தக் கதவருகே மெல்ல பதுங்கினார். உள்ளே பார்க்க முடியவில்லையே தவிர அந்த ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வது தெளிவாகக் கேட்டது.


'ஹலோ மிஸ்டர், தனியா நிக்கிற பொண்ண அப்படி மொறச்சி மொறச்சி பாக்கிறீங்களே. மேனர்ஸ் தெரியாதா?'.

'என்னங்க காமெடி பண்றீங்க. உங்களையே பார்த்தா மேனர்ஸ் எப்படிங்க கண்ணுக்கு தெரியும்? நான் என்ன மேனர்ஸயா பாத்தேன்?'

'என்ன கொழுப்பா?'.

'ஆமா, 67 கிலோ மொத்தம்'

'க்ர்ர்ர்ர்ர்....'.

'கூல். மேனர்ஸ் நல்லாவே தெரியும், ஆனா நான் உங்கள பாக்கலியே, என் கல்யாணத்துக்கு ஒரு அழகான பொண்ணா பாத்துக்கிட்டுருந்தேன்'.

'ஓ, தெரியுமே, கேள்வி கேட்டுட்டா உடனே நான் பாக்கல, நீ பாக்கலன்னு பதுங்கிடுவீங்களே. வேற யார பாத்தீங்களாம்?'.

'உங்கள விட அழகா ஒரு பொண்ணு உங்களுக்கு பின்னால போனா. அவளத்தான் பாத்தேன்'.

'அப்ப அவ பின்னாடியே போக வேண்டியதுதானே?'.

'யூஸ்லெஸ், அவ ரெண்டு மாசம் முன்னாடிதான் பொறந்திருப்பா போல. ரெண்டு மாசக் குழந்தை. அவ பின்னாடி போனா எனக்கு அறுபதாங்கல்யாணம்தான் நடக்கும்'.

'ஓ, அப்புறம் இங்க என்ன பண்றீங்களாம்?'.

'அவள விட‌ நீங்க அழகு இல்லன்னாலும், அவளுக்கு அடுத்தபடி நீங்கதான் அழகு. உங்ககூட கல்யாணம்னா நான் அறுபது வரைக்கு வெயிட் பண்ண வேண்டியது இல்ல'.

'அதானே பார்த்தேன், என்னடா இன்னும் ஆரம்பிக்கலியேன்னு. உங்களுக்கெல்லாம் இதே வேலையா, எவடா கிடைப்பா, நூல் விடலாம்னு அலைவீங்களோ?'

'ச்சே சே, நூல் விட்டு எனக்கு பழக்கமே இல்லங்க. அப்படி விட்டிருந்தா இத்தன்னேரம் எனக்கு கல்யாணமாகி ரெண்டு புள்ள பொறந்திருக்கும். ஒண்ணு உங்கள மாதிரி, இன்னொன்னு என்னை மாதிரி'.

'ம்ம்ம்ம்... சாருக்கு இன்னிக்கு நேரம் சரி இல்லன்னு நினைக்கிறேன்.. அர்த்த ராத்திரில என்னை தொல்லை பண்றான்னு ஈவ் டீசிங் கேஸுல உள்ள போகணுமா?'.

'தயவு செஞ்சி அத பண்ணிடுங்க. போலீஸ்ல சொன்னா போஸ்டர் அடிச்சி ஒட்டினா மாதிரி. அப்பறம் உங்கள யாரும் கட்டிக்கமாட்டாங்க. அப்புறம் நான் தான் உங்களுக்கு. பரவால்லயா'.

'ஓ காட்!!'.

'கரெக்ட், அவர்கிட்டதான் வேண்டிக்கிட்டேன். நீங்க எனக்கே கிடைக்கணும்னு'.

'ஆனா, அது நடக்கவே நடக்காது'.

'ஏங்க?'.

'ஏன்னா, எனக்கு ஏற்கனவே மேரேஜ் ஆயிடிச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல ஹஸ்பெண்ட் வந்துடுவார்'.

'அப்டியா, ஐ..சும்மா கத விடாதீங்க.. கழுத்துல தாலி இல்ல, கால்ல மெட்டி இல்ல'.

'ஆனா, கை விரல்ல ரிங் இருக்கே'.

'அப்டின்னா?'.

'மரமண்டை, நான் க்ரிஸ்டியன்'

'ஓ..அய்யோ, உங்கள என் ஆளுன்னு என் மனசுல ஃபிக்ஸ் பண்ணிட்டேனே'.

'அதனால?'.

'அதனால, நாம ரெண்டு பேரும் ஊர விட்டு ஓடிப்போயிடலாமே'.

'செருப்பு பிஞ்சிடும்'.

'பரவால்ல, உங்கள அழகா என் கைல தூக்கிட்டு நானே ஓடுறேங்க. நீங்க வந்தா மட்டும் போதும்'

'அய்யோ, கடவுளே'

'அவரு ஏங்க பூஜை வேலைல கரடி மாதிரி'

'அடப்பாவி'

அவன் அத்துமீறுகிறான். நிச்சயமாக தனியே இருக்கும் பெண்ணிடம் வம்பு வளர்க்கிறான் தான். பொறுத்தது போதும். ராகவன் நம்பி ஒரு முடிவு செய்தவராய், திடீரென்று உள்ளே பாய்ந்து அவனைப் பிடித்து ரத்தகளரியாக்கிவிடும் நோக்கில் நுழைய...

"சன் செய்திகள். வழங்குவோர் சூர்யா டி.எம்.டி ராட், ஷிரி குமரன் தங்க மாளிகை...."

உள்ளே கல்லாவுக்கு அருகில் பக்கவாட்டில் கலர் டிவியில் சன் டிவி நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்க‌
சற்றுத் தள்ளி, ஒரு டேபிளில் அவன் அமர்ந்து கையில் இருந்த மொபைலில் எதையோ நோண்டிக்கொண்டிருக்க, அந்தப் பெண் சற்றுத்தள்ளி இன்னொரு டேபிளில் அமர்ந்து ஒரு டீயை உறிஞ்சிச்சுவைத்தபடியே திடுமென உள்ளே நுழைந்த ராகவன் நம்பியைப் பார்க்க, அவளைத்தொடர்ந்து அவனும் அவரை திரும்பிப் பார்த்தான். அவர்களுக்கு அந்தப் பக்கம் ஹோட்டலில் அடுத்த மூலையில் ஒரு பெண், இது எதையும் கவனியாதவளாய் கையில் இரண்டு மாதக் குழந்தையுடன் எதையோ வாயிலடைத்துக்கொண்டிருந்தாள். அவள் எதிரில் அறுபது வயதில் ஒரு கிழவி, வாழை இலையில் பரவிக்கிடந்த சாம்பாரை வலக்கையால் துழாவிக்கொண்டிருந்தாள்.

ராகவன் நம்பி, சட்டென வேகங்குறைத்து, இயற்கையாய்ப் பொங்கிய ஆவேசத்தை செயர்க்கையாய் மட்டுப்படுத்தி இரண்டடி எட்டி வைத்து ஒரு டேபிளில் அமர்ந்து, உயர்த்திய முண்டாவை மெல்ல சீராக்கியவாறே அவர்கள் முகத்தை பார்க்காத வகைக்கு தலைகுனிந்து கொண்டார்.

இப்போது அரைக் கால்சட்டையும், நைந்து போன பனியனும் போட்டிருந்த, அரும்பு மீசை முளைத்திருந்த பையனொருவன் ராகவன் நம்பியை நெருங்கினான்.

'சார், இட்லி, வடை, பூரி, உப்புமா, ஊத்தப்பம், டீ, காபி. உங்களுக்கு என்ன வேணும்?'.

'கொஞ்சம் மூளை'

'!?!...'

முற்றும்.


 - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4046)

Monday, 16 May 2011

ரகசிய பேச்சுக்கள்

ரகசிய பேச்சுக்கள்


சுவாரஸ்யமான நம் ரகசியப் பேச்சுக்களை
காற்றில் அலைபாய்ந்து
விளையாடுவதாய் நடித்து
ஒட்டுக்கேட்கின்றன தேனீர்
கோப்பைக்குள்ளிருந்து வெளிப்படும்
வெண்ணிற மேகங்கள்...

நாம் கவனிப்பதை உணர்ந்து
அவைகள் ஓடி ஒளிந்துவிடுகையில்
ரகசியங்களை மீண்டும் நிரப்பிக்கொள்ள‌
இருக்கைக்கு திரும்பிவிடுகிறோம் நாம்...

- ராம்ப்ரசாத் சென்னை ( ramprasath.ram@googlemail.com )

#நன்றி
கீற்று இலக்கிய இதழ்(http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14633:2011-05-16-01-31-03&catid=2:poems&Itemid=265)

Sunday, 8 May 2011

அறை இருள்

அறை இருள்


வெளிச்சங்களை விரட்டிவிட்டு
இருள் ஆக்ரோஷமாய்
மூலை முடுக்கெல்லாம்
எதையோ தேடிக்கொண்டிருந்தது...

அது தேடிக்கொண்டிருந்தது
என் மெளனத்தைத்தானென்று
அறியாமல் இருளையே
வெறித்திருந்தேன் நான்...

- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
திண்ணை இணைய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=311050816&format=html)

Tuesday, 22 March 2011

விதை - சிறுகதை

இச்சிறுகதை, மதுரையைச் சேர்ந்த அதிதி தொண்டு நிறுவனம் 2011 குடியரசு தினத்தையொட்டி நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான 'இறைவன் கொடுப்பது ஒரு வாழ்வு , மனிதன் கொடுப்பது மறுவாழ்வு' என்ற கருத்தை வலியுறுத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசை வென்றுள்ளதை என் வலைப்பூவில் முன்பே தெரிவித்திருந்தேன். அந்தச் சிறுகதை இதோ:


விதை - சிறுகதை


வானம் பிரகாசமாக இருந்தது. அத்தனை வெயில். வெம்மை அதிகமாயிருந்ததாலோ என்னவோ ஒட்டுமொத்த சனமும் கிடைத்த நிழல்களில் பதுங்கிக் கொள்ள, அதையும் தாண்டி சிலர் வேகமாக பைக்குகளிலும், கார்களிலும் இடமும் வலமுமாக கடந்து போய்க்கொண்டிருந்தனர். கார்களில் சொல்வோர் பாடு பரவாயில்லை. ஏசி இருக்கும். பாவம், நடைராஜாக்கள் பாடி திண்டாட்டம்தான் என்று நினைத்துக்கொண்டே அன்னை பொறியியல் கல்லூரிக்கெதிரே இருந்த நிழற்குடையில் நின்றிருந்தார் வேதம்.

அவரைப் பற்றிய மேல்விவரங்கள் கொஞ்சம். அவர் ஒரு போலீஸ் அதிகாரி. வயது 42. உயரம் ஐந்தரை அடிக்கும் மேல். வாட்டசாட்டமான உடல்வாகு. கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் சப் ‍இன்ஸ்பெக்டர். அவர் அப்போது நின்றிருந்த இடத்துக்கு பக்கத்தில் தான் அவருக்கு வீடு. மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுத்தான் ஆபீஸ் செல்வார். சாப்பிடும் நேரம் வரை, டிரைவர் ஜீப்பை பெட்ரோல் போல எடுத்துசெல்வார். சாப்பிட்டவுடன், வேதம் மெயின் ரோட்டிலுள்ள அந்த பேருந்து நிலைய நிழற்குடையில் காத்திருக்க, ஜீப் வந்ததும் ஏறிக்கொள்வார். இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு. அப்படி அவர் அன்று காத்திருக்கையில் தான் அதை கவனித்தார்.

அவள் அழகாக இருந்தாள். உயரம் ஐந்தரை அடி. சுண்டினால் ரத்தம் வரும் நிறம். அவள் அந்தப் பொறியியல் கல்லூரி வாசலைத்தாண்டி வெளியே வருவதைப் பார்க்கையில் அவளுக்கு ஒரு பதினெட்டு வயதிருக்கலாமென்று தோன்றியது. அதற்கு காரணங்கள் இல்லாமலில்லை. அவள் கையில் இருந்தது ஒரு டிராஃப்டர். இது பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் இன்ஜினியரிங் டிராயிங் பாடத்துக்குப் பயன்படுத்துவது. பொதுவாக முலாமாண்டு மாணவர்கள் பதினெட்டு வயதானவர்களாகத்தான் இருப்பார்கள். கிட்டத்தட்ட அவரின் மகள் வயதுதான். ஆனால், இறுக்கமாய் கறுப்பு நிறத்தில் ஒரு டி & ஜி டிசர்ட், டெனிம் ப்ளூ நிறத்தில் அதைவிட இறுக்கமாய் ஒரு ஜீன்ஸ் பாண்ட் அவளின் அவயங்களை மிக மிக சத்தமாகக் கூவிக் காட்சிப்பொருளாக்கிக்கொண்டிருந்தன.

அந்த பஸ்ஸ்டாண்டில் அவரைப் போல் வெகு பலர் ஓரக்கண்களால் அவளையே நோட்டம் விடுவது தெரிந்தது. அதில் சிலர் அவளை விழுங்கிவிடுவது போல் பார்ப்பதையும் அவரால் கவனிக்கமுடிந்தது. இவர் கவனித்துக்கொண்டிருக்கையிலேயே சிலர் ரோட்டைக் கடந்து அவள் நின்ற பேருந்து நிறுத்தத்திற்கு சென்று நின்றுகொண்டனர். அவள் இது எதையும் கவனியாது தன்னுடைய மொபைலை நோண்டுவதும், அவ்வப்போது அதில் எதையோ படித்துவிட்டு சிரிப்பதுவுமாக இருந்தாள். வேதத்துக்கு நடப்பது எதுவும் சரியெனப் பட்டிருக்கவில்லை. அவர் ஆயாசம் கொண்டவராய் பக்கவாட்டில் திரும்ப அவர் கண்ணில் பட்டது அந்தக் காட்சி.

அந்த பஸ் ஸ்டாப்பின் அடுத்த முனையில் கால்களில் சப்பணிக்கால் போட்டு அமர்ந்திருந்த ஒருவன் அந்தப் பெண்ணையே வெறித்துக்கொண்டிருந்தான். வயது இருபத்தியிரண்டு இருக்கும். வெளுத்துப்போன‌ சட்டை,அதில் ஆங்காங்கே நூல் வெளியே வந்திருந்தது, சில இடங்களில் பொத்தான்களே இல்லாமல் சேஃப்டி பின் போடப்பட்டிருந்ததை இங்கிருந்தே கவனிக்க முடிந்தது. புழுதிபட்ட‌ தலைமுடி, சவரம் செய்யப்படாத முகம், ஒல்லியான உருவம், அடர் காப்பி நிறத்தில் ஒரு பாண்ட், அதுவும் கசங்கி சுருங்கி படுமோசமான நிலையில், காலில் செருப்பு கூட இருக்கவில்லை. அவன் கண்களைப் பார்க்கும் திசையை அவதானிக்கையில் அது அந்தப் பெண்ணின் கழுத்துக்குக் கீழே நிலைகுத்தியிருப்பதை அவரால் உணர முடிந்தது.

சற்று தொலைவில் ட்ராஃபிக் போல. கார்களும், சரக்கு லாரிகளும் விடாமல் ஹாரன் சத்தத்தை வைத்தே கூக்குரலிட்டுக்கொன்டிருந்தன. சிலர், கார் கண்ணாடி ஜன்னலைத் திறந்து எட்டிப்பார்த்து கத்தவும் செய்தனர். தவறாக எதையும் அனுமானித்துக்கொள்ளும் முன் ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்துக்கொள்ளத்தோன்றியது. சற்றே அவர் பக்கவாட்டில் நடந்து அவனைக் கடந்து சிறிது தள்ளி நின்றுகொண்டு எதிரே பார்த்தார். அவள் இப்போதும் அவளின் மோபைலையே பார்த்தபடி நின்றிருந்தாள். அவர் திரும்பி அவனைப் பார்த்தார். அவன் பார்வை இப்போதும் அவள் மீதே. அதுவும் அவளின் கழுத்துக்கு கீழேயே. கொஞ்சம் விட்டாலும் ஓடிப்போய் அவள் கை பிடித்து இழுத்துவிடுவான் போலிருந்தது. அவருக்கு கோபம் வந்துவிட்டது. அவனை நோக்கி திரும்பி நடந்து அவன் முன்னே நின்றார். அவன் பார்வை இப்போது அவளிடமிருந்து திரும்பி அவரின் போலிஸ் பூட் ஷூவில் நிலைகுத்தி நின்றது. அவனை மிரட்டும் தோணியில் அவர் லேசான அடித்தொண்டையால் உரும, அவன் திரும்பி மேலே தலை திருப்பி அவரைப் பார்த்தான். அவன் முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தது அவர் கோபத்தை மேலும் கிளறி விட்டது.

'டேய், யார்ரா நீ?' அவனை அவர் அதட்ட, சில நொடிகள் அமைதி. பின்,

'ஸ்ஸ்.. ஸார், யாருங்க? என்னையா?' அவன் முகத்தில் இப்போதுதான் ஏதோ ஒன்றை புதியதாக கேள்விப்பட்டதான உணர்வு தெரிந்தது.

'என்னையே திருப்பி கேக்கறியா? நீ யார்ரா? இங்க என்ன பண்ற' இந்த முறை சற்று முரடாகவே கேட்டார் அவர்.

அவன் கேள்விகள் தெரிந்த காரத்தில் சற்று பயந்திருக்கவேண்டும் அல்லது வினோதமாக உணர்ந்திருக்கவேண்டும். எழுந்துகொண்டான். எழுகையில் அவன் பலவீனமாக இருப்பதாகத் தோன்றியது. அவன் உயரம் அப்போதுதான் தெளிவாகத் தெரிந்தது. ஆறு அடி இருக்கலாம். ஒல்லியாக இருந்தான். அவன் கைகள் நிதானமின்றி காற்றில் பலவீனமாக அலைவதாகத் தோன்றியது.

'ஸ்ஸ்..ஸார், நா.. நான் .. இங்க.. சும்ம்ம்மா...' என்றபடியே அவன் இழுக்க, அவர் கோபம் எல்லையை மீறியிருக்கவேண்டும். நாக்கைத் துறுத்தி பற்களுக்கிடையில் கடித்தவாறே சற்று சுளித்தபடி அவர் வலதுகையை தூக்கி அவனை அறைய ஓங்க, அவன் அப்போதும் ஏதொரு உணர்ச்சியும் அற்று நின்றிருந்தான். அவர் கையைத் தடுக்கவோ, அல்லது அடி மேலே படாமல் தவிர்க்கும் தன்னிச்சை முறுவலிப்போ கூட இல்லாமல் இருந்தது அவருக்கு வினோதமாய்ப் பட்டது.

ஓங்கிய கை அந்தரத்திலேயே நிற்க, அவர் புருவங்களைச் சுறுக்கி அவனை சந்தேகமாய் பார்க்க, அவன் குருடோ என்று முதன் முறையாகத் தோன்றியது. மெதுவாக உயர்த்திய கையை கீழிறக்கிக் கொண்டு அவனையே பார்த்தார் அவர். அவன் பார்வைக் கோணத்துக்கு நேர் எதிரே அவர் நின்றிருந்தபோதும், அவரின் கண்ணையோ, முகத்தையோ பார்க்கும் தோரணையில் இல்லாமல், எதையோ பார்த்த வகைக்கு அவன் நின்றிருந்தான்.

'ஒனக்கு கண்ணு தெரியாதா?'.

'காது தெரியும் சார்'.

'என்ன?'.

'எல்லாருக்கும் கண்ணுல குடுக்குற பார்வைய ஆண்டவன் எனக்கு காதுல குடுத்துட்டாரு சார். பெறவி குருடன் சார் நானு. சார், உங்க சூவுல லேஸு இல்லதானே சார். காலு வழுக்கும் சார் வெய்யில்ல. அதனால சீக்கிரம் லேஸூ போட்டுடுங்க சார்'. அவன் தன்னைப் பற்றி தானே அப்படிச் சொன்னது வித்தியாசமாயும், அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியாததாயும் இருந்தது. அத்தனை நேரம் அவன் தன் கண்களுக்கு பொறுக்கியாய் தெரிந்ததும், இப்போது சட்டென ஒரே நொடியில் அவன் அப்பாவியாய்த் தெரிவதும் அவரின் மேலோட்டப் பார்வைகளின் குறிப்புக்களை அவருக்கு எழுதித் தந்திருந்தன.


மேலும், அவ‌ர் காலில் இருந்த ஷூவில் லேஸூ இல்லை தான். இரண்டு நாட்களாகவே இல்லை. எங்காவது பாட்டா ஷூகடை இருந்தால் வாங்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால் வேலை பலுவில் மறந்து போவார். லேஸூ இல்லாமல் நடந்து இந்த இரண்டு நாட்கள் பழகியும் விட்டது தான். லேஸூ இல்லாதது தெரியக்கூடாது என்றுதான் பாண்டால் மூடி கவர் செய்திருந்தார். பிறவிக்குருடன். ஷூ என்ன நிறம், எப்படி இருக்குமென்று கூடத்தெரியாது. அப்படியிருக்கையில் எப்படிக் கண்டுபிடித்தான். அந்த பேரிரைச்சலிலும் லேஸூ இல்லாத ஷூவை அதன் சப்தங்களை வைத்தே கண்டுகொண்டது ஆச்சர்யத்தை அளித்தது.


'நீ பிறவியிலேயே குருடு தானே. என் கால் ஷூ லேஸ் இல்லன்னு எப்படி கண்டுபுடிச்ச?'.

'சார், உங்களுக்கு கண்ணு இருக்கு. அதனால காதுக்கு கேக்குற சத்தங்கள நீங்கலாம் அதிகம் கவனிக்க மாட்டீங்க. என் பாட்டி விறகு வெட்றப்போ பாத்துக்கிட்டு நிக்கிற எனக்கு கால்ல சிலாம்பு குத்தக்கூடாதுன்னு பக்கத்து வீட்டு மிலிட்டரி மாமா குடுத்த ஷூ ரெண்ட என் காலுல மாட்டிவிட்டுச்சு. அதுல லேஸூ இருக்காதுசார். அத போட்டுக்கிட்டு இழுத்து இழுத்து நடப்பேன் நான். அந்த ஷூவையோ, இல்ல இப்போ நான் போட்டுக்கிட்டு இருக்குற டிரஸ்ஸையோ நான் என் காதால்தான் பாத்திருக்கேன். எனக்கு தெரியும் சார் அந்த சத்தம்' என்றான் அவன். அவன் பார்வை அவரின் கண்களை முட்டாமல், அவரின் பேச்சில் சத்தங்கள் பிறக்கும் திசையை குத்துமதிப்பாகத் தேடி நொடிக்கு நொடி அலைந்துகொண்டிருந்தது.

'ஹ்ம்ம் சரி.. உன் பேரன்ன?'

'பாண்டி சார்'.

'இங்க என்ன பண்றபா?'.

'தெரியல சார். எங்க போறதுன்னு தெரியல'. அவன் தலைகுனிந்துகொண்டான். வாழ்க்கையில் ஒரு மனிதன் செல்ல வேண்டிய திசை தெரியாமல் அல்லாடுகையில் அவன் இயலாமை அந்தத் தலைகுனிவில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

'ஏன், உனக்கு வீடு இல்லை?. அப்பா அம்மா?'.

'இல்ல சார், நான் பொறக்குறதுக்கு முன்னாடியே அப்பா செத்துட்டார். அம்மா என்னை பெத்துபோட்டுட்டு போய் சேர்ந்துட்டா சார்'.

'ஓஹ்... அப்ப சொந்த ஊரு? இவ்ளோ நாள் யாரோட இருந்த? உனக்கு வீடு எங்க?'.

'சொந்த ஊரு மாயாரம் பக்கம் பேரளம் சார். பாட்டி தான் வளத்துச்சு. வெறகு வெட்டும் சார். நான் தூக்கிட்டு வருவேன். வித்தா சில நேரம் சோறு பொங்குற அளவுக்கு காசு கிடைக்கும், சில நேரம் க‌டலமுட்டாய்க்குதான் மிஞ்சும். விக்கிலனா பட்டினிதான் சார். பட்டினி கெடந்தாலும் ஒறவுன்னு சொல்லிக்க அது இருந்துச்சி. போன வாரம் அதும் செத்துபோச்சி சார். ஒத்த ஆளால வாடகை குடுக்க முடியல. வீடுன்னு ஒண்ணும் இல்ல. குருட்டுப்பயன்னு யாரும் வேலையும் குடுக்கல சார். அக்கம்பக்கம் என்னை பிச்சக்காரனாக்க பாத்தானுவ‌. அங்க இருக்க புடிக்கல. இருக்குற பணத்தை வச்சு மெட்ராஸ் போய் பொழைக்கலாம்னு வந்தேன் சார். நான் குருடுன்னு யாரும் வேலை தரல சார். பிச்சையடுத்து பொழைக்கிறதுக்கு போய் சேர்ந்துடலாம்னு இங்கயே உக்காந்துட்டேன் சார்.'

கேட்டுக்கொண்டிருந்த‌ வேத‌த்துக்கு அதிர்ச்சியாக‌ இருந்த‌து. குருட‌ன். அதுவும் பிற‌வியிலிருந்தே. இறைவ‌னாய்ப் பார்த்து த‌ரும் வாழ்க்கை. அதை அப்ப‌டியே ஏற்க‌த்தான் வேண்டும். அத‌ற்கு ம‌றுப்பு சொல்ல‌ யாராலும் முடியாது. ஆனால், அந்த‌ வாழ்க்கையை எப்ப‌டி வாழ‌வேண்டுமென்று அவ‌ன் தான் முடிவுசெய்ய‌வேண்டும். சொல்வ‌து எளிது. செய்வ‌து க‌டின‌ம். அவ‌ர் த‌ன் க‌ண் பார்க்க‌ ப‌ல‌ பேர் ப‌ல‌வ‌ற்றை சொல்லியிருக்கிறார்க‌ள். ஆனால் செய்த‌தில்லை. இவ‌ன் சொல்ல‌வேயில்லை. ஆனால் சாக‌வும் துணிந்துவிட்டான்.

அடுத்த வேளை உணவுக்குக் கூட வக்கில்லாமல் , ஆனால் நெஞ்சு நிறைய வைராக்கியத்துடன், வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும் துணியும் ஒரு உலகம். அவர் அதுவரை பார்த்ததேயில்லை. சிக்னல்களிலும், கோயில்களிலும் குருட்டு மனிதர்கள் எத்தனையோ பேருக்கு ஐம்பது காசு, ஒரு ரூபாய் நாணயங்களை பிச்சை போடும்போது வராத கழிவிரக்கம், சிந்தனை, அனுசரனை, மரியாதை இப்போது இவனிடம் வந்தது அவருக்கு. அவன் ஒரு பரிசுத்தத்தை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டு நிற்பது போன்ற‌தான‌ உண‌ர்வு அவ‌னைப் பார்க்கையில்.

'எப்போ கடைசியா சாப்பிட்ட?'.

'நாலஞ்சு நாளாவுது சார். அதும் கூட பாதி பச்சத்தண்ணி தான் சார்'.

'ஹ்ம்ம்... ' என்றுவிட்டு பாக்கேட்டில் கைவிட்டு ஒரு சின்ன ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை எடுத்து நீட்டினார் 'இந்தா இத சாப்பிடு'.

'சும்மா ஏதும் வேணாம்'. அவ‌ன் த‌லையை இட‌மும் வ‌ல‌முமாக‌ ஆட்டிய‌ப‌டி ஆணித்த‌ர‌மாய்ச் சொன்னான். அவ‌ன் ம‌றுப்பில், செய‌ற்கை தெரிய‌வில்லை. அத‌ற்கான‌ தேவையும் அவ‌னிட‌ம் இருக்க‌வில்லை என்ப‌தாக‌த் தோன்றிய‌து.

ஸ்திரமாக அவன் வேண்டாம் என்றது பாதையில் போக எத்தனித்து, கண்ணாடிக் கதவில் முட்டியது போன்றதான உணர்வைத்தந்தது. அவன் அத்தனை ஸ்திரமாக இருந்தது, அவனைப் பற்றிய அவரின் கணிப்பைத் தவறாக்கியிருந்தது. ஒன்றுமேயில்லாத இவனிடமும் இத்தனை வைராக்கியமா என்று நினைத்துக்கொண்டார். ஏன் கூடாது என‌வும் தோன்றிய‌து.

'சரிப்பா, இந்தா இத புடி..' என்றுவிட்டு கையிலிருந்த ஃபைலை அவனிடம் தந்துவிட்டு 'இத தூக்கிக்கிட்டு என் கூட வா. இந்த வேலைக்கு சம்பளமா இத வச்சிக்க' என்றார். ஆமோதிப்பாய் சரி என்றுவிட்டு இரண்டு கைகளையும் நீட்டினான் அவன். இடது கையில் ஃபைலையும் வலது கையில் அந்தச் சாக்லேட்டையும் வைத்தார் வேதம். ஃபைலை கக்கத்தில் வைத்து இடுக்கிக்கொண்டு, வலதுகையிலிருந்த சாக்லேட்டை வேகமாக உரித்து உண்ணத்துவங்கினான் அவன். அவன் உணடு முடிக்கக் காத்திருந்தார் வேதம்.

'என்னோட வரியா, வேலை தரேன், மாசம் ஆயிரம் ரூபாய் சம்பளம் தரேன், பண்றியா?'. அவன் சாக்லேட் கவரைக் கசக்கி உள்ளங்கையில் வைத்து அழுத்திக்கொண்டு கக்கத்தில் வைத்திருந்த ஃபைலை கைகளில் இறக்கிக் கொள்கையில் கேட்டார் அவர்.

'ஐயா....' என்று இழுத்தபடியே கண்ணீர் மல்க அவன் கீழே அவர் காலடியில் குனிந்து வலது கையால் துழாவ, அவசரமாய் தூக்கி நிறுத்தினார் வேதம்.

அவருக்குப் பின்னால், ஒரு போலீஸ் ஜீப் கிறீச்சிட்டு வந்து நின்றது.

'வா என்னோட' என்றுவிட்டு அவன் கையைப் பிடித்து ஜீப்புக்கு அழைத்துச்சென்று பின்னால் கான்ஸ்டபுள் கனகு என்கிற கனகராஜ் அருகில் அமரவைத்துவிட்டு, முன்னால் ஏறிக்கொண்டார்.

'செல்வம், ஜீப்ப வேளச்சேரி ஆபிஸுக்கு விடு'. டிரைவர் ஜீப்பை விரட்டத்துவங்க ஜீப் அவரின் ஆபிஸை நோக்கி விரையத் துவங்கியது.

வழியெங்கும் அவருக்கு சிந்தனையாகவே இருந்தது. கடவுள் கொடுத்த வாழ்க்கை. குருட்டு வாழ்க்கை. அது பாதி தூரத்திலேயே அஸ்தமனத்தில். ஆனால், நெஞ்சில் அவனுக்கு இருக்கும் வைராக்கியம் இருக்கிறதே. கொலைப் பசிக்குக் கூட விட்டுக்கொடுக்க முடியாத வைராக்கியம். தன் கண்ணில் இவன் இன்றைக்குப் பட்டிருக்கவில்லையெனில் ரோட்டோரமாய் அனாதைப் பிணம் என்று தனக்கு வாக்கிடாக்கியில் மெசேஜாகியிருப்பான் இவன். ஆனால் அதைப் பற்றி இவன் துளியும் கவலைப்படவில்லை. சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் உழைப்பின் ஊதியமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன். இரண்டு கை, இரண்டு கால், கண், காது, மூக்கு என இருந்தும் ஊனமில்லாத உடல்கள், ரயில் நிலையங்களிலும், பேருந்துகளிலும் பிக்பாக்கேட் என ஊரை அடித்து உலையில் போடுவது இருக்க, இப்படியும் சில ஆத்மாக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஊனமுற்ற யாருக்கும் மனம் ஊனமாயிருப்பதில்லை. ஆனால், உடலில் ஊனமில்லாத அனேகம் பேருக்கு மனம் ஊனமுற்றுத்தானிருக்கிறது. விந்தை உலகம்.

ஜீப் கிறீச்சிட்டு ஒரு வீட்டின் வாசலில் நின்றது. அது ஒரு இரண்டடுக்கு வீடு. வாசலில் பெரிய போர்டு. வேதம் சிஸ்டம்ஸ். வேதம் இறங்கிக்கொண்டு பின்னால் சென்று கான்ஸ்டபிளை விட்டு அவனை இறங்கச் சொல்லி இருவரையும் வீட்டிலுள்ளே அழைத்துப்போனார்.

ஒற்றை அறைதான் இருந்தது. வெளியே பார்த்த வீட்டின் ஒரு பகுதியை நிரந்தரமாகத் தடுத்து ஒரு கடைக்கு வாடகைக்கு விடும் நோக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. அது இப்போது வேதத்தின் ஆதாரங்களை அலசிஆராயும் இடமாக இருக்கிறது. அறையில் ஒரு ஓரத்தில் ஒரு பெரிய மேஜையில், கேஸட் போட்டு கேட்கும் ஆடியோ செட் ஆடையில்லாமல் எலும்புக்கூடாய் கிடந்தது. அதனருகே ஒரு கம்ப்யூட்டரும் பக்கத்தில் அனேகம் பத்திரிக்கைகளும் சில தஸ்தாவேஜ்களும் கிடக்க, அவைகளைத்தாண்டி ஒரு பெரிய ஸ்டீல் பெட்டி இழுத்தால் வெளிவரக்கூடிய பல்வேறு பெட்டிகளைக் கொண்டிருந்தது. சில பெட்டிகள் திறந்திருக்க, உள்ளே வரிசையாய் அடுக்கப்பட்ட கேஸட்களும் அவற்றின் மேல் சில பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. Local, Vizuppuram, Thindivanam இன்னும் என்னென்னவோ. அந்த மேஜைக்கும் முன்னே நீளவாக்கில் ஒரு சோபாவும், பக்கவாட்டில் இரண்டும் சேர்களும் கிடக்க, மேஜையை ஒட்டினாற்போல் ஒரு கதவு மூடப்பட்டிருந்தது. பாத்ரூமாக‌ இருந்திருக்கலாம்.

'உக்காரு கனகு. உக்காருப்பா பாண்டி' என்று சொல்லிவிட்டு அந்த நீண்ட சோபாவில் அமர்ந்துகொண்டார். பாண்டியை ஒரு சேரில் உட்கார வைத்துவிட்டு தானும் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார் கனகு என்கிற கனகராஜ்.

'பாரு பாண்டி, என்கிட்ட வர கேஸ்கள்ல சில ஆதாரங்கள் கிடைக்கும். அதுல பலது டேப். அத ஓடவிட்டு அதுல என்னென்ன குரல் பதிவாகியிருக்கோ அதையெல்லாம் நீதான் பிரிச்சி சொல்லனும். சில நேரங்கள்ல சில குத்தவாளிங்களோட குரல் அந்த டேப்புல இருக்கான்னு நீ கண்டுபுடிச்சி சொல்லனும். அதான் உன் வேலை. அதுக்கு தான் உனக்கு இங்கே சம்பளம். ரொம்ப கவனமா செய்யனும். நீ சொல்றத வச்சித்தான் ஒரு நிரபராதி குற்றவாளி ஆகுறதும், ஒரு குற்றவாளி நிரபராதி ஆகுறதும். மாசம் சம்பளம் ஆயிரம் ரூபாய். வீட்டு மொட்டை மாடில கொட்டா போட்டுத்தாரேன். நீ அங்க தங்கிக்கோ'

'சரி சார்' என்றபடியே ஆமோதிப்பாய் தலையை ஆட்டியபடி கேட்டுக்கொண்டான் பாண்டி.

கூடவே அமர்ந்திருந்த கனகு என்கிற கனகராஜ் ஏதோ சொல்ல எத்தனித்தவராய்த் தொடங்கி, பாண்டியை நினைத்து சற்று தயங்கியவராய் வேதத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவர் தன்னிடம் ஏதோ சொல்ல நினைப்பதை அவரின் பார்வையிலேயெ புரிந்துகொண்டார் அவர்.

'சரி, கனகு ..அந்த தாம்பரம் கொடவுன் திருட்டு கேஸ் என்னாச்சு?' என்றபடியே அந்த அறையை விட்டு வெளியே வந்தார். அதையே எதிர்பார்த்தவர்போல் உடனே கனகு எழுந்துகொண்டு வேதத்தை தொடர்ந்து அவரும் வெளியே வந்தார்.

'சார், என்ன சார், அவன் ப்ளைன்ட் சார், அவனப்போயி இங்க...' என்றுவிட்டு இழுத்தார் கனகு.

'கனகு, ரெண்டு நாளா என் ஷூல லேஸூ இல்ல. உங்களுக்குத் தெரியுமா?' கேட்டார் வேதம்.

'அப்படியா, தெரியாதே சார்'.

'ஆனா, இவன் கண்டுபுடிச்சிட்டான். அதுவும் ஜி.எஸ்.டி ரோட்ல இருந்த ட்ராஃபிக் சத்தத்துல‌. பொதுவா மாற்றுத்திறன் இருக்கறவங்க எல்லாருக்கும் அந்த ஊனத்த பாலன்ஸ் பண்ண வேற ஏதாவது திறமை இருக்கும் கனகு. இவனுக்கு அசாத்தியமா கேக்குற சக்தி இருக்கு. சத்தங்கள மொழிபெயர்க்கத்தெரிஞ்சிருக்கு. நமக்கெல்லாம் கண்ணு இருக்குறதுனாலயே காது சொல்றத நாம நம்ப மாட்டேங்குறோம். அதுல சில நேரம் தவறுகள் நடக்கலாம்தான். இந்த ரெண்டு நாளா நீங்க என் கால் ஷூ லேஸ கண்டுபிடிக்காம விட்டா மாதிரி. பாண்டி மாதிரி ஒரு புலன் இல்லாதவன் இன்னும் அதிகமா உண்ணிப்பா கவனிப்பான். அதனால அவன் நமக்கு நிறைய பயன்படுவான்னு தோணுது. அத ஏன் நமக்கு சாதகமா நம்ம இன்வெஸ்டிகேஷன்ஸ்க்கு யூஸ் பண்ணக் கூடாது? அவனுக்கும் அவனோட கவுரவத்தை விட்டுக்கொடுக்காம வாழ ஒரு வாழ்க்கை கிடைக்கும். நான் இன்னிக்கு இவன பாக்கலன்னா இவன் செத்தே போயிருக்கலாம். இந்த வேலை அவனுக்கு ஒரு மறுவாழ்வ நிச்சயமா தரும் கனகு'. சொல்லிக்கொண்டே இருந்தவரை வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார் கனகு. அங்கே ஒரு மறுவாழ்வுக்கான விதை ஆழமாக விதைக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

முற்றும்.

- ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

#நன்றி
திண்ணை இணைய இதழ்
கீற்று இலக்கிய இதழ்
தமிழ் ஆசிரியர்கள் இணைய இதழ்

Monday, 24 January 2011

சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு தொகுப்பில் என் சிறுகதை


அன்பின் நண்பர்களுக்கு,

உலகின் முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, இலங்கையில் கடந்த ஜனவரி 6 ம் திகதி முதல் 9 ம் திகதி வரை நடந்தேறியுள்ளது. இதன் சிறப்பம்சமாக, 'முகங்கள்' என்ற தலைப்பில் உலகம் முழுவதிலிருந்தும் 50 எழுத்தாளர்களின் 'புலம்பெயர்வு' என்ற கருத்தை முன்வைப்பதான சிறுகதைகளைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பு புத்தகம் வெளியாகியுள்ளது. இந்தத் தொகுப்பில் நான் எழுதிய 'இருத்தல் தொலைத்த தமிழ்' என்ற தலைப்பிலான சிறுகதையும் இடம்பெற்றுள்ளது என்ப‌தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




இந்த‌ப் புத்த‌க‌த்தின் ஒரு பிர‌தி கிடைத்த‌வுட‌ன் அச்சிறுக‌தையை வ‌லையேற்ற‌ம் செய்ய‌க் காத்திருக்கிறேன். வாய்ப்ப‌ளித்த‌ அனைத்து ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளுக்கும் என் நெஞ்சார்ந்த‌ ந‌ன்றிக‌ளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


ந‌ட்புட‌ன்,
ராம்ப்ர‌சாத்


புத்த‌க‌த்தின் பெய‌ர் : முகங்கள் சிறுகதை : இருத்தல் தொலைத்த தமிழ் ஆசிரிய‌ர் : ராம்ப்ரசாத் ‌ விலை : 15 டாலர் ‌

Thursday, 20 January 2011

மூன்றாம் பரிசை வென்றுள்ளது என் சிறுகதை

அன்பின் நண்பர்களுக்கு,

"அதிதி" தொண்டு நிறுவனம் சார்பில் குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட தமிழ் சிறுகதைப் போட்டியில் நான் எழுதிய 'விதை' சிறுகதை மூன்றாம் பரிசை வென்றுள்ளது. தொண்டு நிறுவனத்தின் அனுமதியுடன் அச்சிறுகதையை கூடிய விரைவில் வலையேற்றம் செய்யக் காத்திருக்கிறேன்.


வாய்ப்பளித்த அதிதி தொண்டு நிறுவனத்திற்கும், வாழ்த்தி ஊக்குவித்த நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நட்புடன்,
ராம்ப்ரசாத்