என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 12 July 2024

எழுத்தாள நண்பர்களின் கவனத்திற்கு: பாகம்2

எழுத்தாள நண்பர்களின் கவனத்திற்கு: பாகம் 2


ஆங்கில இதழ்களிலும் எழுதுவதால் சில நண்பர்கள் நான் ஏதோ ஆங்கிலத்துக்கு முன்னுரிமை தருவதைப் போலத் சித்தரிப்பதாகத் தெரிகிறது. வரிகளின் உள்நோக்கம் அதுவாக இருக்காது என்று நம்புகிறேன். ஆயினும், கேள்வி என்று வந்துவிட்டபிறகு தெளிவு படுத்துவதுதான் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.


1. புழங்கும் இடத்தில் நம் மரியாதை, நம்மை மற்றவர்கள் எப்படிப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதில் இருக்கிறது.. ஆங்கிலேயர்கள், தமிழ் தெரியாத ஆங்கிலம் தெரிந்தவர்கள் புழங்கும் இடத்தில் அவர்கள் மொழியில் நம் ஆக்கங்கள் இருந்தால், நம் திறன் என்ன என்பது அவர்களுக்கும் புரியும் என்பது ஒரு காரணம்.


2. நாம் எழுதும் எழுத்து சர்வதேச தரத்திலானது என்பதை எப்படி நிரூபிப்பது? அது உண்மையென்றால், அது சமகால ஆங்கில அறிபுனை இதழ்களில் வெளியாக வேண்டும். அல்லவா?


3. தமிழ் எழுத்துலகமும், தமிழ் வாசகர்களும் தமிழ் எழுத்தாளர்களை சிருமைப் படுத்தவே செய்கின்றன. அவனது ஆக்கத்தை, சிந்தனையைத் திருடுகின்றன. உரிய மதிப்பளிப்பதில்லை. தமிழ் எழுத்தை செல்லாக்காசாகத்தான் வைத்திருக்கின்றன. எந்த ஒரு முயல்வையும் அதற்கேற்ற மதிப்பும் வெகுமதியும் நியாயப்படுத்த வேண்டும், ஒரு தரமான வீடு கட்ட இருபது லட்சம் செலவாகும் எனும்போது இரண்டே லட்சத்தில் அதே வீடு கட்ட முடியும் என்று ஒருவர் செய்தால், அந்தக் கட்டுமானத்தின் தரம் குறித்து நாம் சந்தேகப்படவேண்டும் என்ற அடிப்படையிலிருந்து வரும் எனக்கு, தமிழ் எழுத்துச்சூழல் ஏமாற்றத்தையும், குழப்பத்தையும், சந்தேகத்தையுமே தருகிறது.


இக்குழப்பத்திலிருந்து தெளிவு பெற எனக்கு ஆங்கில ஊடகங்களே உதவுகின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. இப்போது நான் ஒரு paid writer.  நான் எழுதும் ஆங்கில ஆக்கங்களுக்கு டாலரில் ஊதியம் வழங்கப்படுகிறது. 


வடிவேலு ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு அடியாள் வந்து ஓரிடத்துக்குக் கூப்பிடுவார். அதற்கு வடிவேலு,

'இவ்ளோ தூரம் வந்தது போதாதா? இனி அங்குட்டு வேற வரணுமா?' என்பார். அதையே தான் நானும் சொல்ல விழைகிறேன். தமிழ் எழுத்துலகில் இதுகாறும் எழுதிய எல்லோரது ஆக்கங்களையும் வாசித்துவிட்ட பிறகு தான் ஒருவர் எழுத வரவேண்டும் என்றால், அதற்கு ஆயுள் போதாது. அதே போல, இதுகாறுமுள்ள எழுத்துத் தளங்கள், சிறப்பிதழ்கள், சிறப்புரைகள் எல்லாவற்றிலும் பங்குபெற்றுவிட்ட பிறகு தான் நம் எழுத்தை எழுத வேண்டும் என்றால் அதற்கும் ஆயுள் போதாது. 


ஏற்கனவே சொன்னது போல, எல்லா ஆரோக்கியமான தளங்களும் படி நிலைகள் இருக்கும். 

உள்ளூர் பதிப்பகங்கள் மற்றும் இதழ்கள், 

இவைகளை விட ஒரு படி மேலே வணிக இதழ்களில் இலக்கிய பக்கங்கள், 

அதனையும் விட ஒரு படி மேலே இலக்கிய இதழ்கள், 

அதனையும் விட ஒரு படி மேலே சிற்றிதழ்கள், 

அதனையும் விட ஒரு படி மேலே முன்னணி இலக்கிய இதழ்கள் இப்படி. 


நான் எழுதுவது அறிவியல் புனைவுகள். அதற்கு நாம் முன்னுதாரணங்களாக நிறுத்துவது Asimov,Analog,clarkesworld போன்ற ஆங்கில இதழ்களைத்தான். ஆக, மேற்சொன்ன வரிசையில் உச்சத்தில் ஆங்கில இதழ்களை வைக்க வேண்டி இருக்கிறது.  


சீர்கெட்ட துறைகளில் காணப்படும் லாபிக்கள், அரசியல்கள், 'வேண்டியவனா-வேண்டாதவனா' என்று பார்த்து அதனடிப்படையில் திறமை இருப்பது தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பது, உரிய வாய்ப்பை அளிக்காமல் மறுப்பது, கட்டம் கட்டுவது, ஒதுக்குவது ஆகியன தமிழ் எழுத்துலகுக்குள்ளும் இருப்பது மறுக்க முடியாத உண்மை.


சாதி மற்றும் அரசியல் நம்பிக்கைகள் வழி, திறமைசாலிகள் பின்னுக்கு தள்ளப்படுவது-திறமையற்றவர்கள் மேடையை அலங்கரிப்பதும் (நாங்களாக அழைக்க மாட்டோம். நீயாக மேடைக்குள் வம்படியாக நுழைந்து உனக்கான முக்கியத்துவத்தை நிலை நாட்டு என்பதும் ஒரு வகையில் இது தான்), திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர் போன்ற எழுத்துக்கடவுள்களை மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக்கொள்ளும் நம் தமிழ் சமூகத்திலும் நடந்துகொண்டு தானே இருக்கிறது. 


IT வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம் என்று ஓன்று இருக்கிறது. 

'சிறிய நிறுவனங்கள்',

அதற்கு மேல் 'பெரிய ஆனால், அறியப்படாத நிறுவனங்கள்',

அதற்கும் மேல் 'நன்கு அறியப்பட்ட நிறுவனங்கள்',

அதற்கும் மேல் 'FAANG  நிறுவனங்கள்' என்கிற படி நிலைகளில்

இருக்கும் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்க விடாமல், டீம் மேட்கள் சதி செய்தால், இதை விடப் பெரிய நிறுவனத்தில், தகுதியான ஊதிய மற்றும் பதவி உயர்வுடன் தாவி தன் திறமையை நிரூபித்தல் என்றொரு வழி இருக்கிறதே? அதைத்தான் இங்கேயும் கடைபிடிக்கிறேன்.


நான் மேற்சொன்ன படி நிலைகளில், நமக்கான மதிப்போ அங்கீகாரமோ கிடைக்காத பட்சத்தில் அதற்கடுத்த படிக்கு கடந்து போதல். அப்படி வந்து நின்ற இடமும் ஆங்கிலமாகத்தான் இருக்கிறது. 


என்ன செய்ய? 


தமிழில் தொடர்ந்து இயங்க, தமிழ்ச்சமூகம் உரியது செய்ய வேண்டும். இல்லையெனில், திறமை உள்ளவர்கள் 'கடந்து போய்க்கொண்டேதான்' இருக்க வேண்டி வரும். இதற்கு அர்த்தம், 'ஆங்கில முன்னுரிமை' இல்லை. சொந்த மொழியில், சொந்த இனத்தில், சொந்த இடத்தில், சொந்த மக்களால்  நேரும் திட்டமிட்ட கள்ளமெளனம், புறக்கணிப்பு, அப்புறக்கணிப்புக்கு எதிரான அஹிம்சா வழிப் போராட்டம், அப்புறக்கணிப்பைக் கடந்து போதல்....




பாகம் - 3, 4 கிற்கு தேவை எழுந்தால், நீட்டித்து எழுதுகிறேன்.