என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday 9 July 2024

எழுத்தாள நண்பர்களின் கவனத்திற்கு: பாகம் 1

எழுத்தாள நண்பர்களின் கவனத்திற்கு: பாகம்1

****************************************


இக்குழுவில் உள்ள எழுத்தாள நண்பர்களுடன் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.சற்று நீளமான பதிவு தான். 

வாசித்துப் பார்க்கவும்.


இக்குழுவில் எழுத்தாள நண்பர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் ஒற்றுமையாக ஒரே நோக்கில் இயங்குகிறோமா, மற்றவர் இயக்கங்கள் குறித்து நமக்குப் புரிதல் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. 


சில விளக்கங்களைக் காலத்தே தருவது பொதுவில் பயனளிக்கும் என்று கருதி இக்குழுவில் உள்ள நண்பர்களின் புரிதல்களுக்காய் இதனைப் பகிர்கிறேன்.


தமிழ் இலக்கியம் என்பது பரந்து பட்ட களத்தைக் கொண்டது. இங்கே ஒரு மூலையில் இயங்கும் ஒருவரை மற்றொரு மூலையில் இயங்கும் ஒருவருக்குத் தெரியாமல் தான் இருக்கும். 'இவரை எனக்குத் தெரியாது' என்று ஃபெட்னா அழைத்து வந்திருக்கும் ஒருவரைப் பற்றிச் சொன்னால், உடனே குழுவில் உள்ள எழுத்தாள நண்பர்கள் ஆவேசமாவது போல் தெரிகிறது. 'இவரை எனக்குத் தெரியாது' என்பது அவரை மலினப்படுத்தும் நோக்கில் சொல்லப்படும் சொற்றொடர் அல்ல என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.


(இந்த இடத்தில் இன்னுமொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். என்னையும் யாருக்குமே தெரியாது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இன்னும் சொல்லப்போனால், அதை ஒரு விதத்தில் விரும்பவும் செய்கிறேன். அந்த  anonymityல் தான் என் எழுத்துக்கான கச்சாப்பொருள் கிடைப்பதாக நான் நம்புகிறேன். ஆதலால் யாருக்கும் தெரியாதவராக இருப்பது ஒருவகையில் எனக்கும் பிடித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பொதுக்கூட்டம், தலைமை ஏற்றுப் பேசுவது, எவனாது எதிர்கருத்து சொன்னால் அவன் எதில் எதிர்கருத்து சொன்னான் என்பதை நோண்டி, அதை எங்கே மொழிய வேண்டும் என்று கணக்கிட்டு, அதைத் தொடர்ந்து சென்று, நம் பக்கத்திற்கு பேச நாலு ஆட்களை கூடவே இருத்தி பதிலடி தருவதற்கெல்லாம் நான் பொறுத்தமான ஆள் கிடையாது. என் மனமும் மூளையும் அப்படி வேலை செய்யாது. அதனாலேயே, சில பேர் போல் எழுத்தாளர்களுள் 'முதல்வன்' என்ற பட்டத்தை எல்லாம் விரும்பியவரை வெறுக்கிறேன். இந்தத் தமிழில் எழுதும் எழுத்தாளர்களை வரிசைப்படுத்தினால் யார் முதலாவதாக வருவார்கள் என்பதை யாரேனும் முடிவு செய்து கொள்ளட்டும். கடைசியாக நான் இருந்துகொள்ள விழைகிறேன். ஏனெனில் அந்த இடத்தில் தான் total anonymity கிடைக்கும். குழுத்தலைமை, பொதுக்கூட்டப்பேச்சுகள் போன்றவற்றில் என் வேகம் குறையும் என்ற எண்ணமும் ஒரு காரணம்.)


நாம் எல்லோரும் எழுத்தாளர்கள். 'எழுத்தே' நம் பேச்சு மொழியாக, குறிப்புணர்த்தும் மொழியாக, திசைகாட்டியாக இருக்க வேண்டும் என் வாதம். எப்படி? ஒரு சிறுகதை என்றால் சிறுகதைக்கான கட்டுமானம், மையக்கரு,துவக்கம், ப்ளாட், முடிவு போன்றவற்றை சரியாகக் கட்டமைக்கப் பயன்படுத்த நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்பதை அடிப்படை. ஆகையால் அதில் கேள்வியே இல்லை. (சிறுகதை என்பது உதாரணம் தான்) அந்த ஆற்றலே நம்மை எழுத்தாளராக்குகிறது. குடும்பக் கதைகள், சமூகக் கதைகள், அறிபுனைகள் என்று நாம் எத்தளத்தில் வேண்டுமானாலும் இயங்கலாம். ஆனால் இந்த அடிப்படை நம் எல்லோர் எழுத்துக்களிலும் பொதுவாக இருக்க வேண்டும். நாம் இயங்கும் தளத்திற்கு ஏற்றவாறு நாம் அதிகம் பேரைச் சென்றடைய வேண்டும் என்பதே நமது எழுத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். 


அமெரிக்காவில் உள்ள இதழ்களில் ஏன் எழுதுவதில்லை என்கிற கேள்வியை அவ்வப்போது எதிர்கொள்வதுண்டு. 'தென்றல்' இதழில் சில கதைகள் எழுதியிருக்கிறேன். அவற்றுக்கு பெரிதாக வரவேற்போ வாசிப்போ இருந்ததாக நினைவில்லை. தொடர்ந்து எழுதாததற்குக் காரணங்கள் இருக்கின்றன.


1. அமெரிக்காவில் கலை இலக்கிய இதழ்கள் இல்லை. இதனைப் பலரிடம் நேர்பேச்சில் பகிர்ந்தும் இருக்கிறேன்.

2. நமக்கெல்லாம் எழுத்து முழு நேரமல்ல, பகுதி நேரமாகத்தான் எழுதுகிறோம். இக்காரணத்தால், மாதம் ஒன்றுக்கு இரண்டு சிறுகதைகள், இரண்டு மொழிபெயர்ப்புகளுக்கு மேல் சாத்தியமில்லை. 

3. நம் ஆக்கங்கள் யாரையாவது சென்றடைந்தால் போதும் என்பதை விட, யாரைச் சென்றடைந்தால் நம் எதிர்காலத்திற்கு நல்லது என்று ஒரு கணக்கு இருக்கிறது. அதன் படி, தமிழகத்திலிருந்து செயல்படும் சொல்வனம், வாசகசாலை, போன்ற இதழ்கள் பிரதானப்பட்டுவிடுகின்றன. (இதன் பொருள், மற்ற இதழ்கள் வெட்டி என்பதல்ல. ஏற்கனவே சொன்னது போல், நம் எழுத்து யாரை, எந்தக் கூட்டத்தைச் சென்றடைவது நமக்கு அதிகபட்ச நன்மைகளைத் தரும் என்ற என் கணக்கில் இந்த இதழ்களே தேர்ந்திருக்கின்றன என்பதுதான். இது தனிப்பட்ட தேர்வு தான். அவரவர்க்கு ஒரு தேர்வு இருக்கலாம் தான்.

4. ஏற்கனவே சொன்னது போல், 'தென்றல்' இதழில் எழுதியதில் என் வளர்ச்சி என்று நான் நினைக்கும் இடத்தை அடையப் போதுமான வாசகர் பரப்பை எட்டியதாக நான் அவதானிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், தென்றலில் வெளியான அச்சிறுகதை யார் கவனத்திலும் பதியாத ஒன்றாக வீணாகிப்போனது. ஒரு மாதத்திற்கு இரண்டே ஆக்கங்கள் தான் என்னும் போது, 'அடுத்த அறிபுனைச் சிறுகதை எப்போது?' என்று கேட்கும் வாசகர்கள் இருக்கையில் ஒரு ஆக்கத்தை மிக மிகக் குறைந்த வாசகர் பரப்பிற்கென நேர்ந்துவிடுவது உள்ள செலாவணி அயர்ச்சி கொள்ள வைக்கிறது.


என்னுடைய 14 வருட இலக்கிய முன்னெடுப்புகளில் நான் சில படி நிலைகளை அவதானித்திருக்கிறேன். எப்படி கல்லூரிகளில், ஊர் பெயர் தெரியாத கல்லூரி, ஓரளவிற்கு கல்வித்தரம் வாய்ந்த கல்லூரி, முன்னணிக் கல்லூரி, தலைசிறந்த கல்லூரி என்று இருக்கிறதோ, அப்படி இலக்கிய இதழ்களிலும் படி நிலைகள் இருப்பதாக நான் நம்புகிறேன். (இது எனது நம்பிக்கையாக மட்டுமே கூட இருக்கலாம். என் வளர்ச்சி என் நான் கருதுபவைகளை அடைய இந்த 'படிநிலை புரிதல்' உதவுகிறது என்றால், அதை பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன்).


நான் கருதும் படிநிலை பின்வரும் காரணிகள் சார்ந்தவை.

1. இலக்கியம் அறிந்த வாசகர்கள்.

2. சிறுகதைகளின் நுட்பம் அறிந்த வாசகர்கள்

3. சிறுகதைகளில் புதிய பார்வை, நுட்பங்களை கண்டறியக்கூடிய வாசகர்கள்.

இப்படியான வாசகர்களைத் தான் நான் இலக்காக நிர்ணயிக்கிறேன். அதன் வழி, குறிப்பிடத்தகுந்த இதழ்கள் இருக்கின்றன. உதாரணமாக, உயிர்மை, கணையாழி, காலச்சுவடு முதலாவன. (இந்தப் பட்டியல் சற்று நீளம். அவரவர் நீட்டிக்கொள்ளலாம். அதன் உண்மைத்தன்மையையும் அவரவர் அவதானத்திற்கே விடுகிறேன்).

 

உயிர்மை சிற்றிதழுக்கு பத்தாயிரம் சந்தாதாரர்கள் இருப்பதாக ஒரு முறை மனுஷ்யப்புத்திரன் சொன்னார். (அது இப்போது கூடியிருக்கலாம், குறைந்துமிருக்கலாம்) கணையாழி, காலச்சுவடு போன்றவற்றுக்கும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கை சாத்தியப்படலாம். இத்தனை பேரும் நம் எழுத்தின் இலக்கிய மதியை கவனிப்பார்கள். விமர்சனங்கள் செய்வார்கள். இந்த 'கவனிப்பு' தான் நம் வளர்ச்சிக்கு அச்சாணி என்று எண்ணுகிறேன்.  இவையெல்லாம் அச்சிதழ்கள். இவைகளுக்கு இணைய பக்கங்கள் உள்ளன. அவற்றில் உலகெங்கிலுமிருந்தும் இலக்கியம் தெரிந்த வாசகர்கள், வாசிக்கிறார்கள். 'சொல்வனம்'  நல்ல எழுத்தை அடையாளம் காண குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்புகளைச் செய்கிறார்கள். போலவே வாசகசாலை, பதாகை, கனலி போன்ற இதழ்களும். (மற்ற இதழ்களும் இதனைச் செய்யலாம். நானறிந்த பழகும் இதழ்களை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன். அதுபோக, மாதத்திற்கு இரண்டே சிறுகதைகள் எழுத வாய்க்கும் எனக்கு இவைகளே 'மிக மிக அதிகமாக' இருக்கிறது).


இது எனக்கு மட்டுமல்ல, இலக்கிய உலகில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைப் பெற நினைக்கும் எல்லோருக்குமே  நான் மேற்சொன்ன காரணிகள் பொருந்தும் என்றே நினைக்கிறேன். 

நான் ஏற்கனவே சொன்னது போல எழுத்து தான் நம் ஆயுதம், களன், உபகரணம் எல்லாம். (எழுத்து மட்டும் தான் இவைகளாக இருக்க வேண்டும் என்பதுவும் என் பார்வை) நாம் செய்ய வேண்டியது, வாசகர்களை நம் திறமையைக் கொண்டு, நம் எழுத்தைக் கொண்டு நம் பக்கம் ஈர்ப்பது மட்டுமே. 


இந்தப் பின்னணியில், இந்த வட்டத்தை விட்டு வெளியில் இயங்கும் இதழ்களில் எழுதும் எழுத்தாள நண்பர்கள், தங்கள் எழுத்தை மற்றவர்கள் வாசிப்பதில்லை என்று எண்ணலாம். தவறில்லை. பிரச்சனை என்னவென்றால், நம் பணிச்சுமை, எழுத்துச்சுமை போன்றவைகளே. எனக்கிருக்கும் மிக மிக சொற்பமான நேரத்தில் என் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் இதழ்களே வாசிக்காமல் நீண்டக் காத்திருப்பில் கிடக்கின்றன. இதில், இந்த வட்டத்தை விட்டு வெளி இதழ்களில் வாசிக்க எனக்கு நேரமில்லை என்பது பிரதான காரணம்.


இதில் எனக்குத் தோன்றும் கேள்வி என்னவென்றால், எழுத்து நம் திறனாக இருக்கையில், நம்மால் எழுத்தின் கட்டுமானம் அறிந்து எந்த இதழிலும் எழுத முடியும் எனும்போது, என் கணக்கில் தேரும் இதழ்களில் எழுத மற்றவர்களும் முயன்றால் அவ்வாக்கங்களை வாசிப்பதில் என் வேலை சற்று சுலபமாவது மட்டுமல்லாமல், எனக்கு 'வேலை செய்யும் கணக்கு' உங்களுக்கும் வேலை செய்ய வாய்ப்பாகும் என்பதை எழுத்தாள நண்பர்களுக்கு பரிந்துரையாக முன்வைக்க விரும்புகிறேன். (இது வெறும் பரிந்துரை தான்). 


மற்றபடி எழுத்தாள நண்பர்கள் எழுதும் இதழ்களை வாசிக்கக்கூடாது என்று எதுவும் இல்லை. அந்த இதழ்கள் என் வட்டத்தில் இல்லை என்பது மட்டும் தான் ஒரே குறை.


மற்றபடி இங்கே எழுத்தாளர்கள் புகழ்ச்சிக்கு ஏங்குவதாக நான் நினைக்கவில்லை. உதாரணமாக, நான் எழுதுவது அறிவியல் புனைவுகள். அதைப் பெரும்பாலும் யாரும் வாசிப்பதில்லை. (ஃபெட்னா போன்ற தமிழ்க் கூட்டங்களுக்கு வராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். என்னைத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கப் போவதில்லை என்பதுதான் காரணம்). மிக மிகக் குறைவான எண்ணிக்கையிலானவர்களே வாசிக்கிறார்கள். அறிபுனைகள் எழுதுவதில் உள்ள சவால்கள் எனக்கு ஏற்கப்பிடிக்கும் என்பதால் அந்த முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறேன்.  யாருமே வாசிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து அச்சிறுகதைகளை எழுதுவதாக சித்தம்.


இப்போதைக்கு இவ்வளவே எழுத்தாள நண்பர்களுடம் பகிர விரும்புகிறேன். இங்கே சொன்னவற்றில் பலவற்றை உங்களில் சிலருடன் நான் பேசியும் இருக்கிறேன் என்றாலும் எல்லோருக்கும் தெரியப்படுத்தவே இந்தக் குறிப்பு. தன்னிலை விளக்கமாகவும் பாவிக்கலாம்.