என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday, 14 August 2023

சில கவிதைகள்

 மனைவியின் பாய் பெஸ்டி - கவிதை

தன் மனைவியின்
பாய் பெஸ்டியை
ஒரு கணவன்
தேடத்துவங்கினான்...
அவளின் வாட்ஸாப் ஹேக் ஆனது..
முகநூலில் இன்னுமொரு போலிக்கணக்கு
நட்பு வட்டத்தில் இணைந்தது...
நள்ளிரவில் குரட்டைச்சத்தங்கள் செயற்கையாயின...
மனைவியின் பள்ளிக்கால புகைப்படங்கள்
பரணிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன....
மனைவியின் நெருங்கின தோழிகளின் புகைப்படங்களுக்கு
விருப்பங்கள் தெரிவித்தவர்கள் எண்ணப்பட்டார்கள்....
திடுமென முன்னறிவிப்பின்றி
வீட்டுக்குள் நுழைந்துவிட்டு
என்ன காரணம் சொல்வதென தடுமாறினான் அவன்...
பயன்படுத்திக்கொண்டிருந்த கணிணியின்
பிரௌசர் ஹிஸ்டரி பீராயப்பட்டது....
எங்கெங்கெல்லாமோ தேடியும்
இறுதியில்,
திருமண ஆல்பத்தில் தான் சிக்கினான்
அவன் மனைவியின் பாய் பெஸ்டி....
அதில்
பட்டு வேட்டி,
பட்டு சட்டையில்,
அவளருகே
அந்த பாய் பெஸ்டி அமர்ந்திருக்க,
அவனது சடலம்
வரதட்சணை சீர்வரிசைகளில்
கிடந்தது...
- ராம்பிரசாத்
*********************************
பழி பாவங்களின் நிழல் - கவிதை

'ஷாப்பிங்' முடித்தவர்களை
விழுங்கியபடி அந்த உயர் ரக கார்
சாலையில் நழுவ எத்தனிக்கையில்
கைக்குழந்தையுடன் ஓடிவந்து
ஜன்னலோரம் கையேந்துகிறாள் பெண்ணொருத்தி...
காசு தராமல் செல்பவர்களை
கடுஞ்சொற்களால் ஏசுகிறாள்...
காதலிப்பதாய் வாக்களித்து வயிற்றை நிரப்பிவிட்டு
நழுவிச்சென்றவனை ஏசியபோது கூட
அத்தனை மோசமாக வார்த்தைகளை
அவள் பயன்படுத்தியிருக்கவில்லை...
இப்படித்தான்,
அவளுக்குள்ளிருந்த காதலியை
அவளுக்கு அறிமுகம் செய்த
ஒற்றைக் காரணத்திற்காய்
பழி பாவங்களின் நிழல் கூட விழாமல்
தப்பித்துவிடுகிறார்கள்
அனேகம் கயவாளிக் காதலன்கள்...
- ராம்பிரசாத்
*********************************

முதல் முத்தம் - கவிதை
ஆயிரம் கவிதைகள் எழுதிவிட்ட பிறகு
முதல் கவிதை எதுவென்று கேட்டார் ஒருவர்.
தனக்கு வந்து முதல் முத்தத்தை
நினைவில் வைத்திருக்கும் குழந்தையும்
உண்டா என்ன?
- ராம்பிரசாத்
All reacti