என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 29 August 2022

இரண்டு கவிதைகளும், விமர்சன பார்வைகளும்

கவிதை மீதான விமர்சன பார்வைகள்:

விமர்சனத்தை ஒலிவடிவில் கேட்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்:

https://on.soundcloud.com/Vf5z



சேர விதியற்ற சுதிகள் - கவிதை

எதிர் வீட்டு யுவதி
பயன்படுத்திய நாப்கின்னை
வீதியில் வீசினாள்...
தெரு நாய் ஒன்று நடுத்தெருவில்
அசிங்கம் செய்தது...
காய்கறி விற்பவன்
அழுகிய காய்களை
கரிய ஒழுங்கையில் வீசிச்சென்றான்....
வழிப்போக்கன் புகை பிடித்துவிட்டு
எஞ்சிய சிகரெட்டைத்
தெருவோரம் வீசினான்...
கடலை சாப்பிட்டுவிட்டு
காகிதத்தை நடுச்சாலையில்
வீசினான் வேறொருவன்...
பக்கத்துவீட்டு மணமாகாதவன்
பிரியாணியை உண்டுமுடித்துவிட்டு
பொட்டலத்தை சுருட்டி எறிந்தான்...
நாளைய இந்தியன் ஒருவன்
காரணமின்றி அணிச்சை செயலாய்க்
காரி உமிழ்ந்தான்...
இறுதியில்,
இந்த எல்லா பிழைகளும்
சுதி சேர்ந்துவிடாதவாறு
பேய் மழை ஒன்று
அடித்துப் பெய்தது....
- ராம்பிரசாத்
*****************************




திமிர் பிடித்த கவிதை - கவிதை


அந்த கவிதைக்கு
அத்தனை திமிர்...
நான் இழுத்ததற்கெல்லாம்
அது வந்துவிடவில்லை...
நானும் சளைத்தவனல்ல...
அதன் போக்கில்
நானும்
துவக்கத்தில் சென்றிருக்கவில்லை...
என்னையன்றி
அது
பிற எவரிடத்திலும்
செல்லவுமில்லை...
பாவம்!!
நானறியாத அதுவும்
அது அறியாத நானும்
ஒரு நாள் சந்தித்தோம்...
இறுதியில்,
என் இரு நூறு பக்க புத்தகத்தில்
அதனால் ஒரே ஒரு பக்கத்தை மட்டும்
நிரப்ப முடிந்ததை
என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை....
பல்லாயிரம் கோடி பேரில்
என் ஒருவன் மூலம்
உருப்பெற நேர்ந்த
அதற்கும் கிட்டத்தட்ட
அவ்விதமே தோன்றியிருக்கக்கூடும்...
- ராம்பிரசாத்