எஞ்ஜாயி எஞ்ஜாமி விவகாரம்
செய்த வேலைக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரம் பல சமயங்களில் கிடைக்காமல் போய்விடும். மிக மிகக் குறைந்த பேருக்கே அது நேரத்துக்குக் கிடைத்து கைகொடுத்திருக்கிறது.
அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது எத்தனை பெரிய மனஉளைச்சல் என்பதை நான் பற்பல தருணங்களில் உளப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இன்றிருக்கும் பொருண்மை உலகில், உங்கள் அங்கீகாரம் என்பது நீங்கள் சார்ந்திருக்கும் குழுவையும், அதன் சமூக இடத்தையும், அதற்குக் கிடைக்கும் ஆதரவையும் பொருத்தே அமைகிறது என்பது சோகமான உண்மை. பலருக்கு, அவர்கள் சார்ந்திருக்கும் குழுக்களால், அவற்றின் சமூக இடத்தால், அங்கீகாரம் வெகு விரைவிலேயே கூடக் கிடைத்தும் விடுகிறது.
'கடமையைச்செய், வெளிச்சம் நிச்சயம்' என்பதையெல்லாம் சொல்ல தந்திரம் போதும். உற்சாகமூட்டுகிறேன் பேர்வழி என்று கதையளக்க விரும்பவில்லை.
உண்மை என்னவென்றால், அங்கீகாரம் பலருக்குக் கடைசி வரையிலும் கூடக் கிடைக்காது என்பதுதான். இதைச் சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இதுதான் உண்மை. இன்றைக்குப் புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்களை விடவும் பல மடங்கு திறன் படைத்தோர், இருளிலேயே முங்கி மறைந்திருக்கிறார்கள் என்பதே நிஜம்.