என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 11 February 2022

தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டாடுதல்

தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் சில காரியங்கள் தன்னாலே துவங்கி, தன்னாலே உருவம் பெற்று , நம்மை வெறும் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு நடந்து முடிந்தே விடும். வேறு சில காரியங்களை எத்தனை முக்கினாலும், எத்தனை முயற்சித்தாலும் ஒரு இன்ச் கூட நகராது. பிறப்பிலேயே தலையில் எழுதப்படவில்லை போல. மருத்துவம் படிப்பது, குறும்படம் எடுப்பது, ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலில் விழுவது ஆகியன இந்த வகையில் வரும். இது போல மொக்கையாக முடிந்த பலவற்றில் தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டாடும் முயற்சியும் ஒன்று. வாசித்த நூல்களுக்கு விமர்சனம் எழுதுவதிலிருந்து துவங்கலாம் என்று முடிவு செய்து துவங்கினேன்.. தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டுமென்று ஒரு எண்ணம் எப்போதும் இருக்கும். சுமார் நான்கைந்து எழுதியிருப்பேன். முதல் தடங்கல்: அலுவலகத்தில் வேலை வந்து விட்டது. (பின்வருவன கிடைத்த நேரத்தில் எழுதியது) செல்லம்மாள் - சிறுகதை - புதுமைப்பித்தன் http://ramprasathkavithaigal.blogspot.com/2020/05/1.html கதவு - சிறுகதை - கி.ராஜ நாராயணன் http://ramprasathkavithaigal.blogspot.com/2020/05/2.html நகரம் சிறுகதை - சுஜாதா http://ramprasathkavithaigal.blogspot.com/2020/05/3.html ஞானப்பால்- சிறுகதை - நா.பிச்சமூர்த்தி http://ramprasathkavithaigal.blogspot.com/2020/05/4.html பாற்கடல் - லா.ச.ராமாமிருதம் http://ramprasathkavithaigal.blogspot.com/2020/05/5.html எங் கதெ - இமையம் http://ramprasathkavithaigal.blogspot.com/2020/05/blog-post.html சரி அதை முடித்துவிட்டுத் தொடரலாம் என்றால் மறுபடி சிக்கல். இந்த முறை சிக்கல் என்னவென்றால், அமெரிக்காவில் இருப்பதால் நூல்களை வாசிக்க இயலவில்லை. அதனால் என்ன? நூல்களை அனுப்ப ஆயிரம் வழிகள் இருக்கின்றனவே என்று யாரேனும் சொல்லலாம். அதிலும் சிக்கல். சுமார் இரண்டாயிரம் ரூபாய்க்கு நூல்களைப் பட்டியலிட்டு வாங்கி அனுப்பச் சொல்லியிருந்தேன். அவர் அனுப்பியிருந்தார். எதிர்பார்த்த தேதிக்கும் மிக மிக தாமதமாக. அனுப்பியதைச் சொல்லியிருக்கலாம். சொல்லவே இல்லை. திடீரென்று எனக்கு ஒரு பார்சல், என் அறைக்கு வந்தது. உடன் ரூம்மேட்டாகத் தங்கியிருந்த அறைத்தோழர்கள் ஆள் ஆளுக்கு ஒரு கதை சொன்னார்கள். இங்கே திடீரென்று யார் வீட்டுக்காவது பார்சல் அனுப்பிவிடுவார்களாம். உள்ளே போதை சமாச்சாரம் அது இது என்று. பார்சலில் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. தொலைப்பேசியில் சம்பந்தப்பட்ட ஆட்களை அழைத்துக் கேட்கலாம் என்றால், அப்போது இந்தியாவில் நள்ளிரவு. அப்போது அழைத்தால், வழக்கிலிருக்கும் எல்லா கெட்டவார்த்தைகளையும் கேட்க வேண்டி வரும். ஆதலால் எதற்கு வம்பு என்று திருப்பி அனுப்பிவிட்டேன். பதிப்பகத்தை அழைத்துக் கேட்டால், 'பார்சல் தானே பாஸ்.. வாங்கிப் பார்க்க வேண்டியதுதானே' என்றார்கள். அந்த ஐடியா ஃப்ளாப். புத்தகமும் இல்லை. பணமும் அவுட். அப்படி இப்படி என்று சென்னை வரும் சமயத்தில் வாங்கி சூட்கேஸில் அடைத்தால் வீட்டில் கண்டபடி திட்டினார்கள். மளிகைப் பொருட்களாவது எடுத்துச்செல்லலாம். இப்படி பெட்டி முழுக்க நூல்களா என்று. எல்லாவற்றையும் வாங்கிக்கட்டிக்கொண்டு அமெரிக்கா வந்தால், ஆறு மாதத்தில் மூன்று அறைகள் மாற வேண்டியதாகிவிட்டது. போகிற இடமெல்லாம் நூல்களைத் தூக்கித் திரிந்து பெண்டு நிமிர்ந்துவிட்டது. இது ஏதுடா வம்பாப்போச்சு என்றெண்ணி தெரிந்த நண்பர் ஒருவரிடம் சொல்லி அவர் வீட்டில் வைத்துவிட்டு வேண்டுமென்கிறபோது எடுத்துக்கொள்ளலாம் என்று ஐடியா செய்தேன். அடுத்த முறை சென்றபோது நான் தந்த நூல்களை, garageல் வைத்திருந்தார். அவர்கள் வீட்டு நாய், அந்த நூல்களை சரமாறியாகக் கடித்துத் துப்பியதில் ஒன்றுமே மிஞ்சவில்லை. 2009ல் துவங்கிய எழுத்து. 12 ஆண்டுகளில் சுமார், 9.5 ஆண்டுகள் வெளி நாடுகளிலேயே கடத்தியிருக்கிறேன். எல்லா இடத்திலும் Room sharing தான். இதில் எங்கிருந்து நூல்களை வருவித்து வாசிக்க. ஆக, தமிழ் நூல் வாசிப்புக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது இப்படியாக வெட்டவெளிச்சமாகிவிட்டது. தமிழ் இலக்கியத்திலேயே முகம் பார்த்து, பல் விளக்கி, காபி குடித்து, டிபன் சாப்பிட்டு, அலுவல் செய்யும் பாக்கியம் கிடைத்தவர்களையெல்லாம் பார்த்தால் பொறாமையாக இருக்கும். என் அலுவலகத்தில் எங்கு திரும்பினாலும் படேல்களும், குஜராத்திகளும் தான். இவர்களுடன் என்னத்தை தமிழ் கவிதைகள், சிறுகதைகள் பேச. ஒரு சிறுகதை எழுதினால், வாசிக்கத் தந்துபார்க்கக் கூட ஆள் கிடையாது இங்கே. என்ன செய்வது? இந்த தேசத்தில் பிடித்துச் செய்கிற காரியத்தை முழு நேர வேலை ஆக்கி விட முடிகிறதா என்ன? பிடித்துச் செய்யும் வேலை ஒன்று. வயிற்றுப்பிழைப்புக்குச் செய்யும் வேலை மற்றொன்று என்று தானே இயங்க முடிகிறது. இந்த லட்சணத்தில் எங்கிருந்து கொண்டாட. தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதற்கும் ஒரு முகரை வேண்டுமோ என்னவோ.