என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 16 December 2022

தமிழ் இலக்கியத்தைக் கொலை செய்யும் இயக்கங்கள்

தமிழ் இலக்கியத்தைக் கொலை செய்யும் இயக்கங்கள்


தமிழ் வளர்க்கிறேன், தமிழ் எழுத்துக்களை வளர்க்கிறேன் என்று கிளம்பும் ஒரு இயக்கம் எப்படிச் செயல்படவேண்டும் என்பது குறித்து எனக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்ந்து பேசி (வலியுறுத்தி) வந்திருக்கிறேன்.. நான் அங்கொன்றும் , இங்கொன்றுமாகச் சொன்னதை ஒட்டு மொத்தமாக சொன்னது போல் இருந்தது ஜீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருது பரிசளிப்பு விழாவில் ராம்ஜீ  நரசிம்மன் அவர்களது பேச்சு...

இன்று தமிழ் வளர்க்கிறேன், தமிழ் எழுத்துக்களை வளர்க்கிறேன் என்று கிளம்பும் பல இயக்கங்களின் இயக்கம் உண்மையில் அந்த உன்னத நோக்கத்துக்கு நேர் எதிராகத்தான் செயல்படுகிறது.. அவைகளில் பலவற்றில் சில குறிப்பிட்ட பொதுவான தன்மைகளைப் பார்க்க இயலும். அவைகள் :


1. ஒரு நல்ல எழுத்து இவர்களின் இயக்கத்தில் உறுப்பினர் ஆகவில்லை எனில், அந்த எழுத்தைப் பற்றி எங்கும், எந்த இடத்திலும் பேசமாட்டார்கள்.

2. இயக்கத்திற்கு நெருக்கமானவர்களின் எழுத்துக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

3. இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களின் எழுத்துக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

4. எழுத்து, ஒரு வணிகப் பொருளாக மட்டுமே பார்க்கப்படும்; அதன் தரம் குறித்து எவ்வித கேள்வியும் எங்கும் எழாதது போல் இயக்கம் முழுமைக்கும் பார்த்துக்கொள்ளப்படும்.

5. இவர்களின் எழுத்து வேறு எந்தத் தரமான இலக்கிய இதழ்களிலும் வெளியாகாது.

5.அ. இதன் காரணத்தினாலேயே இவர்கள் தங்களுக்கென ஒரு இதழ் துவங்கி, அதிலேயே வெளியிட்டுக்கொள்வார்கள்.

5.ஆ. இவர்களின் வசதிக்கெனவே ஒரு பதிப்பகமும் உள்ளூரில் செயல்படும்.

6. எத்தனை வருடங்கள் ஆனாலும், இது போன்ற அமைப்புகளில் இருப்பவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரவே மாட்டார்கள்.

7. தரமான எழுத்து குறித்து எதுவும் தெரியாத வெகு ஜனமே இவர்களின் இலக்கு; ஏனெனில், இவர்களைத்தான் எளிதில் ஏமாற்றி விட முடியும்.

8. இந்த அமைப்புகள் நடத்தும் இலக்கியப் போட்டிகளில் அமைப்பை நடத்துபவர்களும் சிறுகதைகள் சமர்ப்பிப்பவர்களுமே தேர்வுக்குழுவில் இருப்பார்கள்.

9. அமைப்பின் செயல்பாடுகளில் அதிகம் பங்கெடுப்பவர்களுக்கே போட்டிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.

10. அமைப்பின் வாட்ஸாப் குழுக்களில், அமைப்பின் உறுப்பினர் அல்லாதவர், தமிழுக்கு ஆற்றும் பங்களிப்புகள் எந்த அளவினதாக இருப்பினும் அவை உடனுக்குடன் பார்வையாளர்கள் பார்வையில் விழாதவாறு சாதுர்யமாக மறைக்கப்படும்; தழிழுக்கு உண்மையிலேயே தொண்டாற்றும் ஒருவர் இப்படியாக அமைப்பில் உறுப்பினர் ஆகும்படி மறைமுகமாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவார்.  

எழுத்தில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்தப் பண்புகள் எல்லாம் ஒரு அமைப்பில் தென்பட்டால், அந்த அமைப்பை விட்டு தொலை தூரம் சென்று விடவும்; அதுதான் உங்கள் எழுத்துத் திறனை தக்கவைத்துக்கொள்ளவும், கூர் தீட்டிக்கொள்ளவும் உதவும்.


Wednesday, 14 December 2022

21-12-2022 ஆனந்த விகடனில் எனது கவிதை

 21-12-2022 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் எனது கவிதை வெளியாகியிருக்கிறது. கவிதையின் தலைப்பு 'காற்றின் விளையாட்டு'.

எனது கவிதையைத் தெரிவு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.






ஜீரோ டிகிரி இலக்கிய விருது 2022 - தேர்ந்தெடுக்கட்ட சிறுகதைகள்

ஜீரோ டிகிரி இலக்கிய விருது பெற்ற சிறுகதைகளில் தொகுப்பு நூல் விற்பனைக்கான தளம் தயாராகிவிட்டது. என்னுடைய சிறுகதையான 'சோஃபியா'வும் இடம்பெற்றிருக்கிறது.

நூலை வாங்க பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும்:

http://tinyurl.com/shortstories2022zdp

நூலை அமேசான் மூலமாகவும் பெறலாம். அதற்கான சுட்டி இங்கே:

https://www.amazon.in/dp/9395511249/

Monday, 12 December 2022

விவாகரத்து குறித்து

விவாகரத்து குறித்து விவாகரத்தை மேற்கொள்ளும் எழுத்தாளரது பத்தி கண்ணில் பட்டது.  நிறைய சொல்லியிருக்கிறார். பலவற்றில் உடன் படுகிறேன். சிலவற்றில் இல்லை. 

எப்போதும் நான் வலியுறுத்துவது தான். விவாகரத்துக்கு இத்தனை அழுத்தமான பத்தி கூடத் தேவையா என்று கூடத் தோன்றுகிறது. இக்காலகட்டத்தில் திருமணம் என்பது, ஒரு ஆடை அங்காடிக்குள் நுழைந்து ஒரு ஆடையை கழற்றி மாட்டுவதாக மறுவிவிட்டது. ஏன்? அந்த ஒன்றை வைத்து எத்தனை எத்தனை பாலிடிக்ஸ்?

அவன் போக்கில் விட்டால் 'கெட்டு'விடுவான் என்று தெரிந்த அம்மாக்கள்  'கைக்கு அடக்கமான', 'குடும்பப் பாங்கான' பெண்ணாகத் தேடி தன் மகனுக்கு திருமணம் செய்துவைப்பார். மேலோட்டமாகப் பார்த்தால் இது 'தெரிந்தது தானே? இதிலென்ன?' என்பதாகத்தான் தோன்றும். ஆனால் இந்த ப்ராசஸை நீங்கள் கவனிக்கவேண்டும். நீங்கள் ஒழுக்கமாக, பொறுப்புள்ள பிள்ளையாக வளர்ந்திருக்கிறீர்கள் என்று கொள்வோம். உங்களுக்கு பெண் பார்க்க, ஒரு பெண் வீட்டை அணுகுகிறீர்கள். நீங்கள் ஒரு முறை அழைத்துப் பேசும் இடத்தில். 'கெட்டுப் போய்விடக்கூடிய'ப் பிள்ளையை பெற்றவர்கள் பத்து முறை அழைப்பார்கள். நீங்கள் பத்து முறை அழைத்தால், அவர்கள் நூறு முறை.

இந்த நூறு அழைப்பை வெகு ஜன சமூகம் எப்படியோ, 'முயற்சி' என்று புரிந்து அங்கீகரித்துவிட்டது. அது அவ்விதம் அங்கீகரிக்கப்பட்டதன் காரணத்தினால், பத்து முறை மட்டுமே அழைத்த நீங்கள் 'எல்லாவற்றிலும்' சரியாக இருந்தும் 'கோட்டை விட்டவர்' என்றாகிவிடுகிறீர்கள்.

பெண் வீட்டுக்காரர்களின் பக்கமிருந்து யோசித்தால் என்ன தோன்றும்? அவர்களின் தேர்வு எந்தப்பக்கம் சாயும்? பத்து முறை அழைக்கும் பலர் இருக்கையில் ஒரே ஒரு முறை அழைக்கும் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அவர்கள் அதிகம் யோசிக்கவில்லை என்றால், நிச்சயம் அவர்களின் முடிவு இந்த இடத்தில் உங்களுக்குப் பாதகமாகவே சாயும். இப்படி நடக்கக் காரணம்: 'குடும்பப்பாங்கான பெண் விவாகரத்துக்கெல்லாம் போக மாட்டாள்' என்கிற எண்ணம் தான்.  இந்தச் சிந்தனையைத் தகர்ப்பதிலிருந்து துவங்குகிறது விவாகரத்துகளை நியூ நார்மலாக்கும் இன்றைய சமூக இயக்கம். 'கெட்டுப் போக இருப்பவனைக் காப்பாற்றுவதற்கா நாங்கள் பிறந்தோம்?' என்பது அவர்களின் வாதம்.

ஆனால், இதில் இன்னுமொரு கோணமும் இருக்கிறது. சில பெண்கள் பொருளாதாரத்திலும், சமூக அந்தஸ்திலும் தன்னிறைவு பெற்றிருக்கிறார்கள். வீடு, கார் என்று வசதிவாய்ப்புக்களை தன் சுயத்திலேயே அடைந்துவிடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் கணவர்கள் இவர்களின் விருப்பத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் அமையாதபோது, இவர்களுக்கு திருமண பந்தம் என்பது, இவர்களை எவ்வித சமரசத்திற்குள்ளும் தள்ளாத வரையில் தான் நீடிக்கிறது அல்லது நீட்டிக்க விரும்புகிறார்கள். எப்போது அந்த கணவருக்கெனத் தன்னுடையதில் எதையேனும் சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழல் வருகிறதோ, அப்போது அப்படி ஒரு உறவே தேவையில்லை என்ற ரீதியில் விவாகரத்துக்குச் சென்றுவிடுகிறார்கள். 

நாம் வெளிப்படையாகக் காணும் 'குடும்பம், கதம்பம்' என்பதெல்லாம் பெரும்பான்மை, ஊர் வாய்க்கு அஞ்சி நடத்தும் நாடகமே. இவர்களில் பலருக்கு திருமண உறவைக் கடந்து போக, தன் சொந்த விருப்பத்திற்கென ஒரு ரகசிய உறவு (அ) கள்ள உறவு தேவைப்படுகிறது; மிகப்பல சமயங்களில் அது அவர்களுக்குக் கிடைத்தும் விடுகிறது; அவர்களின் வேலை, அதனால் கிடைக்கும் பொருளாதாரம் இரண்டுமே இதற்கு அவர்களுக்குப் பயன்படுகிறது. (இப்படித்தான் எல்லா திருமண உறவுகளும் என்று நான் சொல்லவில்லை என்பதை இந்த இடத்தில் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விழைகிறேன். இப்படிச் சில உறவுகள் என்று தான் சொல்கிறேன் என்பதைக் குறித்துக்கொள்ளவும்). 'லவ் டுடே' போன்ற படங்கள் இப்படியாக மாட்டிக்கொள்ளும் கணவர்கள், எவ்விதம் தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்ளலாம் என்கிற ரீதியில் தான் பார்வையாளர்கள் ஆதரவைப் பெற்றுவிடுகின்றன; அந்தப்படி இருபாலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவைத் தந்து அது தப்பித்தும் விடுகிறது. இந்த ஆதரவை வைத்து, சமூகத்தில் எத்தனைப் பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் புழுங்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருவகையில், இந்தச் சில பெண்களின் இந்த நடத்தையைக் குறை சொல்வதற்கில்லை என்பது என் வாதம். ஏனெனில், இவர்களை ஆதிக்கம் செய்யும் அளவிற்கு இவர்களுக்குக் கணவர்கள் வாய்க்கவில்லை என்பதே  நிதர்சனமான உண்மை. இது நிகழ்வதற்கான சாத்தியங்களில் ஒன்று தான், மேலே நான் சொன்ன 'கெட்டுப் போய்விடக்கூடிய மகனைப் பார்த்துக்கொள்ளப் பெண்  தேடும் அம்மாக்களின் முயல்வு'. ஒரு காலத்தில் இந்த லாஜிக் அருமையாக வேலை செய்திருக்க வேண்டும். அந்த மாமியார் என்ற பெண் மருமகள் என்ற இன்னொரு பெண்ணை ஏமாற்றியதன் பலனை, அவள் தன் மகனை மிக்ஸர் தின்பவனாக நடத்துவதை வேடிக்கை பார்த்து அனுபவித்துக் கொள்ளவேண்டியதுதான் இன்றைய நிலை. 

இந்தச் சில பெண்களின் இந்த நடத்தையைக் குறை சொல்வதற்கில்லை என்று சொல்வதற்கு இன்னுமொரு காரணம் : அந்த இளம் வயதில் (முப்பதுகளுக்குள்) இது போன்ற விஷயங்களில் ஆழ்ந்த புரிதலை எதிர்பார்க்க இயலாது.  'Opposite poles attracts', 'மனம் ஒரு குரங்கு', 'தப்பு யார் தான் பண்ணலை' என்று சிறு வயதிலிருந்து சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டதன் அர்த்தம் விளங்காது. ஆனால் திருமணமாகி ஒன்றிரண்டு ஆண்டுகளில் எல்லாமும் தாமதமாகப் புரிந்துகொள்ள நேர்கையில், நடந்த எல்லா தவறுகளுக்குமான ஒற்றைத் தீர்வாக அந்த ரகசிய (அ) கள்ள உறவு அமைந்துவிடுகிறது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய அம்சம். Pornography இலக்கியமாவது இந்த இடத்தில் தான்.  இங்கே நேர்மையாக, ஊர் கூடி வாழ்த்தி அமைந்த பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் தான் toxic ஆகிவிடுகிறது.  பெற்றவர்கள், தங்கள் இயலாமைகளுக்கு இளம் கன்றுகளை எந்த நேரமும் பலிகடாவாக்கிக்கொண்டிருக்க முடியாது.

இதை இருபாலருக்குமே பொருத்தலாம் என்பது என் வாதம். இந்தப் பிரச்சனைக்கெல்லாம் நியாயமான தீர்வு: தாமதமாகக் கிடைக்கும் புரிதலை, துரிதப்படுத்துவதுதான். மேலோட்டமாக இது எதையும் பார்க்காமல் செய்யும் திருமணங்கள் இறுதியில் தோல்வி அடைவதென்னவோ இந்த அடிப்படைகளை வைத்துத்தான் என்பது என் வாதம். 

 இந்தப் பின்னணியில் இன்னுமொன்றையும் சொல்லலாம். இன்றைக்கு, விவாகரத்து என்பது துணை தேர்வின் இன்னுமொரு பகுதி. பல இடங்களில் வரதட்சணைக்காக, பொருளாதார லாபங்களுக்காக, அயல் நாட்டு விசாக்களுக்காக பெண்ணையோ பையனையோ ஏமாற்றித்தான் திருமணங்கள் செய்கிறார்கள். திருமணம் வரை இவர்கள் வெளிப்படுத்துவது ஒரு குள்ள நரியின் தேர்ந்த தந்திர முகமே. திருமணம் முடிந்த பிறகே உண்மை சூழல் வெளிப்படும். ஆகையால், திருமணத்தில் தான் ஒருவர் எத்தனை தவறானவர் என்பதையே நாம் கண்டுகொள்ள முடியும். ஆக, விவாகரத்தையே 'துணை தேர்வின் இன்னுமொரு பகுதி'யாகப் பார்ப்பது தான் இக்காலத்திற்குப் பொறுத்தமாக இருக்கும் என்பது என் வாதம். 


ngl.link/ramscifiwriter

 நாம் வாழும் சமூகத்திற்குத் திருப்பித் தருதல் என்பார்கள். அந்த வகையில் எழுத்தாளராக இருப்பதில் ஒரு விதமான திருப்தி என்றால், கணிணிக்களுக்கு அறிவளிப்பது வேறொரு வகையான திருப்தி என்று தோன்றுகிறது. ஐ.பி.எஸ் ஆக முயற்சிக்கும் படி நண்பர்கள் அறிவுருத்தியிருக்கிறார்கள். மாடலிங் செய்ய வேண்டும் என விரும்பியிருக்கிறேன். ஆனால், அவ்வழியே செல்ல அயல் நாட்டுப் பணி வாய்ப்புகள் அனுமதிக்கவில்லை. இப்போது யோசித்தால் அது மற்றுமொரு கோணத்தில் திருப்தியாக இருந்திருக்குமோ என்று அவ்வப்போது தோன்றும். 

கூட்டிக்கழித்துக் கணக்குப் போட்டுப் பார்த்தால், எதில் மேலதிக திருப்தி இருந்திருக்குமென்பதை கணிக்க முடியவில்லை. எதிலும் 'காலம் கடந்துவிட்டது' என்று சொல்வதற்கில்லாமல், மூன்றையும் ஒருங்கே செய்து பார்க்க முடிவதில் இப்போதைக்கான 'திருப்தி' இருக்கிறதென்று சொல்லலாம்.


ngl.link/ramscifiwriter




Wednesday, 7 December 2022

ஜீரோ டிகிரி இலக்கிய விருது - 2022 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

 ரோ டிகிரி பதிப்பகம் 2022ல் நடத்திய சிறுகதைகளுக்கான இலக்கியப் போட்டியில் என் 'சோஃபியா' உள்பட பத்து சிறுகதைகள், சிறுகதைகளுக்கான இலக்கிய விருதை வென்றிருந்தன. 


பரிசுவென்ற சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'ஜீரோ டிகிரி இலக்கிய விருது - 2022 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்' என்ற தலைப்பில் வரும் டிசம்பர் 10ம் திகதி வெளியாக இருக்கிறது. சிறுகதைத் தொகுப்பு நூலின் முகப்பு அட்டை இங்கே. இந்த நூல் ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் இணைய தளத்தில் விற்பனைக்கு இருக்கும். ஜனவரி 2023ல் நடக்க இருக்கும் புத்தகக் கண்காட்சியிலும் இடம் பெறும்.

எழுத்தாளர் இரா.முருகன் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்,
"குளத்தங்கரை அரச மரத்தைக் கடந்து வெகுதூரம் வந்துவிட்ட" தமிழ்ச் சிறுகதைகளை வாசிக்க, இதோ இந்த நூல்....




Friday, 2 December 2022

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருது - 2022 பரிசளிப்பு விழா

 2022ல் ஸீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய சிறுகதை/குறு நாவல்/நாவல் போட்டிகளில் எனது சிறுகதை 'சோஃபியா' சிறுகதைகளுக்காக இலக்கிய விருதை வென்றது இணைய நண்பர்கள் அறிந்ததே. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவை ஸீரோ டிகிரி பதிப்பகம் டிசம்பர் திங்கள் பத்தாம் திகதி விமரிசையாகக் கொண்டாடுகிறது. வென்ற பத்து சிறுகதைகளும் தொகுப்பாக வெளியாக உள்ளன. நிகழ்வில் எழுத்தாளர் கலாப்ரியாவுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' அளிக்கப்பட இருக்கிறது.  ஆக, எழுத்தாளர் கலாப்ரியா அவர்களையும், மற்ற சக படைப்பாளிகளையும் ஒரே நேரத்தில் சந்திக்கக்கூடிய  வாய்ப்பு இது. எனக்கு எப்போதும் போல், இப்போதும் அதிர்ஷ்டம் இல்லை. இயல்பிலேயே அதிர்ஷ்டம் கெட்ட கட்டை நான்.

இந்தியாவுக்கு வரும் வருடாந்திர வருகை கடந்த ஏப்ரலிலேயே வந்துவிட்டதால், இதற்கு செல்ல முடியாத சூழல். முன்னரே தெரிந்திருந்தால், இந்தியா வருகையை டிசம்பரில் திட்டமிட்டிருக்கலாம். 

போட்டிகள் நிறைந்த உலகில், எல்லோரும் ஓடுகிறார்கள் என்று ஓடி மனதுக்கு நெருக்கமாக அமைந்துவிடக்கூடியவைகளை இழக்க நேர்ந்துவிடுகிறது. அது போலத்தான் இதுவும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். 

நிகழ்வுக்கான அழைப்பிதழ் இங்கே. விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொள்ளவும். கலாப்ரியா அவர்களுக்கும், விருது வென்ற அனைத்து சக படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். 






Sunday, 13 November 2022

கேள்வி கேட்பதில் உள்ள மடத்தனம்

"வாழ்த்துக்கள் நண்பா... ஆனால், இதுவரை உங்கள் நூல்கள் ஒன்றைக்கூட நான் வாசித்ததில்லை"...

கிட்டத்தட்ட இதே (விஷமத்தனமான) அர்த்தத்தில் ஒன்றுக்கும் மேல் என்னிடம் கேட்கப்பட்டுவிட்டதால் இந்தப் பதிவு... (உண்மையில், இப்படிக் கேட்பவர்கள் ஏதோ விஷமத்தனமாகக் கேட்பதாக நினைத்துக்கொண்டிருப்பார்கள் போல.. இப்படி கேட்பதில் உள்ள மடத்தனம் புரியவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு)

எல்லோரும் எல்லா நூல்களையும் வாசித்துவிட முடியாது... அது சாத்தியமும் இல்லை.. நானும் பலரது நூல்களை வாசித்ததில்லை... எந்த நூலையும் வாசிக்காமலே தெளிவாக இருப்பவர்களை, வெற்றியாளர்களாக இருப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்... இன்னாரது நூலை வாசிக்கிறேன் என்பதில் எந்தச் சிறுமையும் இல்லாதது போல் எந்தப் பெருமையும் இல்லை... அவரவரது தளம் அவரவர்க்கான நூல்களை வாசிக்க வைக்கிறது... அவ்வளவுதான்...

'என்ன வாசிக்கலாம்' என்று யாரிடமாவது நீங்கள் ஆலோசனை கேட்டால், அவர்கள் ஒரு பட்டியல் தருவார்கள்... நீங்கள் வாசித்து பண்படைய அல்ல? தங்களை உங்கள் முன் 'அறிவாளியாக, பண்பட்டவராக'க் காட்டிக்கொள்ளத்தான் அந்தப் பட்டியல்... உண்மையில் அந்த பட்டியலில் உள்ள நூல்கள் சொல்லும் கருத்தாக்கங்களை உள்வாங்கியவர்களாகக் கூட பட்டியலை நீட்டுபவர்கள் பெரும்பான்மைக்கு இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை... வி.சே சொன்னதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன் 'நான் புத்திசாலின்னு நினைச்ச நிறைய பேர் முட்டாளாத்தான் இருந்திருக்காங்க..' ... அவர்கள் போடும் சீன் அப்படி...

சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.. தங்களை, தாங்கள் விரும்பி அணிந்த முகமூடியை உங்களிடம் விற்க முனைகிறார்கள்... நீங்கள் அதை வாங்கினால், அவர்களும் நீங்களும் ஒரே தளத்தில் நிற்கிறீர்கள் என்று பொருள்... அவ்வளவு தான்...

நீங்கள் என்ன வாசிக்க வேண்டும் என்பது குறித்து என் எளிய பரிந்துரை இதுதான்...

உங்கள் இத்தனை ஆண்டுகால வாழ்வில் உங்களுக்கு ஒரு அனுபவம் கிட்டியிருக்கும்.. அந்த அனுபவத்தில் சில கேள்விகள், ஐயங்கள் இருக்கும்... அந்தக் கேள்விகளுக்கு பதில் தேடும் வகையில் உங்கள் வாசிப்பைத் தகவமைத்துக்கொள்ளுங்கள்... ஆக உங்கள் அனுபவமே உங்கள் வாசிப்புக்கான நூல்களை அடையாளம் காணும் லென்சாக இருத்தல் நலம்.. இப்படியாக நீங்கள் கண்டடையும் நூல்களின் பட்டியலில் என் நூல்கள் இடம் பெற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.. இன்னும் சொல்லப்போனால், எந்தக் குறிப்பிட்ட எழுத்தாளரின் எல்லா நூல்களும் இடம் பெற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை...

அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று விட்டில் பூச்சிகள் போல் போய் விழாதீர்கள்.. கண்டதையும் பரிந்துரைப்பவர்கள் உண்மையில் குழம்பிய மன நிலையில் தான் இருப்பார்கள்... சுத்தமாகத் தெளிவே இல்லாத எழுத்தாளர்களைக் கூட நான் பார்த்திருக்கிறேன்... புரியாத வார்த்தைகளில் எதையாவது சொல்லி, தனக்குத்தானே 'அறிவார்ந்த' முத்திரையைத் தருபவர்களாகத்தான் பலரைக் கடந்திருக்கிறேன்.. வாங்கும் பத்தாயிரம் சம்பளத்தில் வீட்டு வாடகைக்கு மூன்றாயிரம் தந்துவிட்டு, வீட்டுக்காரியின் கையில் மூன்றாயிரத்தைத் திணித்துவிட்டு எஞ்சிய பணத்தில் தனக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத நூல்களை வாங்கி வாசித்து, முக நூலில் சிலாகிக்கும் பிரகஸ்பதிகளைத் தெரியும்.. பாவம் அந்தப் பெண்களும், அந்தக் குடும்பமும்... எந்த வாசிப்பால் குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்தைக் கூட உங்களால் நல்ல விதத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லையோ அந்த வாசிப்பே தவறான பாதை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்...

ஒரு நல்ல வாசிப்பு என்பது ஆரோக்கியமான நேர்மையான வழிகளில் உங்கள் பொருளாதார, மற்றும் சமூக மேன்மையை நோக்கி உங்களைச் செலுத்துவதாக அமைய வேண்டும்... உடனே, அலமாறி முழுவதும் self help, how to invest போன்ற நூல்களை அடுக்க வேண்டியதில்லை... உங்களிடம் கொஞ்சம் நேரம் இருந்து, கூடுதல் ஊதியத்திற்கென எதையேனும் கற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால், உங்கள் ஊரில் தைத்த உடைகளுக்கான டிமான்ட் என்ன என்பதைச் சொல்லும் ஒரு எளிய கட்டுரை கூட மிகவும் நல்ல வாசிப்பாகும்.. 3 மாதங்கள் செலவிட்டு முறையாகத் தையல் கற்றுக்கொண்டால் போதுமானது...

இதுவே நல்ல வாசிப்பு... If your reading doesn't help you better yourself in any way, then, you must give up that reading and must unlearn whatever you learnt irrelevant to you and your life through that.

பி.கு: அமெரிக்காவில் சென்ற ஆண்டு நடந்த புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள் சுமார் 50 பிரதிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் 12 தவிர ஏனைய 38 பிரதிகளும் விற்றிருக்கின்றன. நியூ ஜெர்சியில் என் நூல் ஒன்றை வாங்கி வாசித்த யாரோ, நூல் பிறருக்கு பயன்படட்டும் என்கிற நோக்கில் Edison Public Libraryக்கு அளித்திருக்கிறார்கள் என்பதையும் இப்பதிவில் குறிப்பிட விரும்புகிறேன். ஆக சொல்ல வருவது என்னவென்றால், எந்த எழுத்தையும் வாசிக்க யாரோ நான்கு பேர் இருக்கத்தான் செய்வார்கள். அந்த எழுத்து எழுத்தாளனையும், வாசிப்பு வாசித்தவனையும் என்ன செய்தது? அதனால் சம்பந்தப்பட்டவர்கள் அடைந்த நன்மை/மேன்மை என்ன? என்பது தான் கேள்வி. இதுவெல்லாம் புரிந்தால், இந்தக் கேள்வியே எழாது..



Tuesday, 1 November 2022

குப்பை - அறிபுனைச் சிறுகதை - Youtubeல்

குப்பை - அறிபுனைச் சிறுகதை - Youtubeல்


சொல்வனம் தளத்தில் வெளியான எனது 'குப்பை' சிறுகதையை ஒலிவனத்துக்கு மாற்றியிருக்கிறார்கள் சொல்வனம் குழுவினர். தமிழ்ச் சிறுகதைகள் மக்களிடையே எளிதாகச் சென்றடைய சொல்வனம் குழுவினர் மேற்கொள்ளும் இந்த முயல்விற்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றிகளும்.

youtube தளங்களில் இச்சிறுகதையின் ஒலிவடிவம் கேட்கக்கிடைக்கிறது. Youtube தளத்தில் இச்சிறுகதையைக் கேட்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.

குப்பை - அறிபுனைச் சிறுகதை

https://youtu.be/eKhQUAKetR0

Monday, 31 October 2022

ஏழு கடல் ஏழு மலை தாண்டி - அறிபுனைச் சிறுகதை - Spotify மற்றும் Youtubeல்

 ஏழு கடல் ஏழு மலை தாண்டி - அறிபுனைச் சிறுகதை - Spotify மற்றும் Youtubeல்


சொல்வனம் தளத்தில் வெளியான எனது 'ஏழு கடல் ஏழு மலை தாண்டி' சிறுகதையை ஒலிவனத்துக்கு மாற்றியிருக்கிறார்கள் சொல்வனம் குழுவினர். தமிழ்ச் சிறுகதைகள் மக்களிடையே எளிதாகச் சென்றடைய சொல்வனம் குழுவினர் மேற்கொள்ளும் இந்த முயல்விற்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றிகளும்.

Spotify மற்றும் youtube தளங்களில் இச்சிறுகதையின் ஒலிவடிவம் கேட்கக்கிடைக்கிறது. 

Spotify தளத்தில் இச்சிறுகதையைக் கேட்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.

ஏழு கடல் ஏழு மலை தாண்டி - அறிபுனைச் சிறுகதை

https://open.spotify.com/episode/4bwgNtW2pk7jqUnZO7u2E4?si=SkzGAFtyQSCt2f7mNhfFaQ

Youtube தளத்தில் இச்சிறுகதையைக் கேட்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.


ஏழு கடல் ஏழு மலை தாண்டி - அறிபுனைச் சிறுகதை

https://youtu.be/ikDHo7ctgWs





Sunday, 30 October 2022

ஆவரேஜ் - அறிபுனைச் சிறுகதை - Spotify மற்றும் Youtubeல்

தமிழ்ச் சிறுகதைகளை ஒலி வடிவத்துக்கு மாற்றும் முயல்வின் ஒரு பகுதியாக சொல்வனம் தளத்தில் வெளியான எனது 'ஆவரேஜ்' சிறுகதையை ஒலிவனத்துக்கு மாற்றியிருக்கிறார்கள் சொல்வனம் குழுவினர். தமிழ்ச் சிறுகதைகள் மக்களிடையே எளிதாகச் சென்றடைய சொல்வனம் குழுவினர் மேற்கொள்ளும் இந்த முயல்விற்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றிகளும்.

Spotify மற்றும் youtube தளங்களில் இச்சிறுகதையின் ஒலிவடிவம் கேட்கக்கிடைக்கிறது. 

Spotify தளத்தில் இச்சிறுகதையைக் கேட்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.


ஆவரேஜ் - அறிபுனைச் சிறுகதை

https://open.spotify.com/episode/6KwkRf8UoeraQJSojE1kUt?si=ita3FmdsRcqL68afyq9Mgg

Youtube தளத்தில் இச்சிறுகதையைக் கேட்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.

ஆவரேஜ் - அறிபுனைச் சிறுகதை

https://www.youtube.com/watch?v=Ifq88S5S4Rw





Sunday, 16 October 2022

புராதான ஏலியன்கள் - விமர்சனம் - Boje Bojan

 புராதான ஏலியன்கள்  - ராம்பிரசாத் -அறிவியல் சிறுகதை தொகுப்பு -பதிப்பகம் ,நியூ லாஜிக் பப்ளிஷர்ஸ்  - பக்கங்கள் 142-  முதல் பதிப்பு ,2022

புத்தகம் பற்றி :

மொத்தம் 142 பக்கங்களும் 10 தலைப்புகளும் கொண்டு இருக்கும் இந்த சிறுகதை தொகுப்பில் எதிர் கால தொழிநுட்பங்களை  மையமாக கொண்ட கதைகளே எழுதபட்டு இருக்கிறது  அதற்காக எழுத்தாளர் எடுத்து கொண்ட உழைப்பு என்பது இந்த புத்தகம் படிக்கும் பொது நாம் தெரிந்து கொள்ள முடிகிறது . புத்தகத்தில் உள்ள எல்லா தலைப்பு கதைகளும் சிறப்பாக இருக்கிறது அதில் சில கதைகளை பற்றி பார்ப்போம்.

1) முதல் சிறுகதை தொகுப்பான சேஷம் என்னும் கதை ஒரு பெண்ணுக்கும்  பாம்பின்  மரபணு கொண்ட ஸ்டுவர்ட்  என்ற ஆணுக்கும்  நிகழும் உறவு பற்றியும் அதன் பிறகு நடக்கும் சமபவங்களே இந்த கதையின் கரு பொதுவாக மனித மரபணு  இல்லமால் விலங்கின் மரபணு கொண்டு எதிர் கால மனிதர்களை உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சி இப்போதும் ஒரு தியரி நிலையில் தான் இன்றும் இருக்கிறது ஒரு வேலை அப்படி பட்ட ஒரு சம்பவம் வெற்றிகரமாக நிகழ்ந்து அதன் மூலம் ஒரு மனிதன் பிறந்தால் இந்த சமூகம் அதை ஏற்றுக்கொளுமா கொள்ளாத என்ற கேள்விக் ஒன்றை மையமாக கொண்டு எழுத பட்டுஇருக்கிறது இந்த கதை.

2) குளம் : மூன்றாவது சிறுகதையாக இருக்கும் குளம் என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிறுகதை என்று இதற்கான காரணம் என்ன என்று பார்ப்பதற்கு முன் இதன் கதையை பார்த்து விடலாம் தஞ்சை மாவட்டம் தள்ளாகுளம் என்று கிராமத்தில் ஒரு குளத்தில் கரும்பள்ளம் தோன்றி இருக்கிறது என்ற செய்தி வருகிறது. இந்த செய்தி வந்தவுடன் அந்த ஊருக்கு ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள் அதில் இருவர் தான் தியாகு மற்றும் ராஜிவ் இவர்கள் இருவரும் இந்த மர்மத்துக்கான விடை கண்டுபிடித்தார்களா இல்லயா என்பதை வித்யாசமான முறையில் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் பொதுவாக simulation theory என்னும் ஒரு தியரி சில ஆய்வாளர்களால் முன்னிறுத்த படுகிறது அப்படி பட்ட அந்த தியரியை மையமாக வைத்தே இந்த கதையை சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

இது தவிர எப்போதும் பெண் என்ற கதையில் gene editing பற்றியும் , காதல் என்ற கதையில் கால பயணம் பற்றியும் , பிரதி என்ற கதையில் clone பத்தியும் சொல்லி இருக்கிறார் இது தவிர மற்ற கதைகளும் கவனிக்கபட வேண்டிய ஒன்று தான். கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு சிறுகதை தொகுப்பு இது.





Wednesday, 5 October 2022

அமெரிக்க தமிழ் இலக்கியத்தில் அறிவியல் புனைவுகளுக்கான இருப்பு

அமெரிக்க தமிழ் இலக்கியத்தில் அறிவியல் புனைவுகளுக்கான இருப்பு



அமெரிக்க தமிழ் இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், அதில் அறிவியல் மற்றும் அதிபுனைவுகள் மற்றும் கணிதப் புனைவுகளுக்கென 2017க்கு முன் வரை ஒரு பிரத்தியேக முகம் இருந்ததாக நான் அவதானிக்கவில்லை. அறிவியலைத் தெரிவு செய்தவர்களே அமெரிக்கா வருகிறார்கள். அவர்களில் பலர் எழுத்துலகிலும் இருக்கிறார்கள். ஆயினும், அமெரிக்காவில் அறிவியல் புனைவெழுத்துக்கள் 2019 வரை இல்லை. (யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும். உதிரியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியான ஆக்கங்களோ, அறிவியலை ஒரு தகவல் செறுகலாக மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் ஆக்கங்களோ, treasure hunt பாணி கதைகளில் அறிவியல் தகவல்களை க்ளூக்களாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆக்கங்களோ கணக்கில் சேராது). 

தொழில் நுட்பங்களுக்கு பெயர் பெற்ற அமெரிக்காவில் குடியேறிய தமிழ்ச் சமூகத்தினிடையே 2019 வரை அறிவியல் மற்றும் அதிபுனைவுகள், கணிதப்புனைவுகள் (2017 வரை) இல்லாமல் இருந்திருப்பது ஒரு பெரும் குறை. 

அதிகபட்சம், சுஜாதாவின் நூல்களே கைகாட்டப்படுகின்றன. எனக்கு சுஜாதாவின் மீது பெரிய மரியாதை உண்டு. ஆனால் அவரது அறிபுனை நூல்கள் 2000த்தின் துவக்கத்திற்க்கானவையே என்பதையும் நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது. நவீன அறிவியல் புலத்தில், Avengers, Time Trap, Endless, Martian, Annihilation போன்ற அமெரிக்க ஆக்கங்களுக்கு மத்தியில் அவற்றுக்கு நிகரான நவீன ஆக்கங்களின் தேவை அமெரிக்க தமிழ் இலக்கிய சூழலில்  2019 வரை இல்லை என்பதை யாரும் மறுக்க இயலாது.   

அறிவியல் புனைவுகள் எழுத மென்மேலும் எழுத்தாளர்கள் அமெரிக்காவில் உருவாக வேண்டும் என்பது என் விழைவு.    அறிபுனைவெழுத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர வேண்டும். அப்போதுதான் இது ஒரு தொடர் இயக்கமாக உருவாகும்.  

அமெரிக்காவில் புத்தக வாசிப்புக் குழு என்ற ஒன்று துவங்கினால் அதில் முதலில் வாசிக்கப்படும் நூல்கள் பெரும்பாலும் பங்குபெறுபவர்களது வீடுகளில் அவரவர்களது பெற்றோர்கள் வாசித்த நூல்களாகத்தான் இருக்கும். பிள்ளைகளுக்கு வாசிப்பு என்பது பெரும்பாலும் பெற்றவர்கள் வாசிப்பதைப் பார்த்தே உருவாகிறது. பல சமயங்களில் வாசிப்புப்  பழக்கத்தை பிள்ளைகள் மத்தியில் வளர்க்கவேண்டுமெனில், வெறுமனே நூல்களை வாங்கி வீட்டில் வைப்பதே போதுமானதாகத்தான் இருக்கிறது என்று தான் இதை வைத்துப் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. இல்லையா?

இந்தப் பின்னணியில் அமெரிக்கத் தமிழர்களின் வீடுகளில் உள்ள புத்தக அலமாரிகளில் இருக்க வேண்டிய நூல்களாக நவீன அறிவியல் பேசும் அறிபுனை, அதிபுனை மற்றும் கணிதப் புனைவுகள் இருப்பது  தொலை நோக்குப் பார்வையில் நன்மை பயக்கும் என்றே எண்ணுகிறேன்.  இதுவே என் பரிந்துரையும் கூட. 


'வாவ் சிக்னல்', 

'புராதன ஏலியன்கள்', 

'220284' 

ஆகியன அமெரிக்கத் தமிழ் சூழலில் நவீன அறிவியல் இலக்கியத்தின் தடங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என்றால் அது மிகையாகாது.

அக் 9, 2022ல் பின் வரும் முகவரியில் மேற்சொன்ன நூல்களுடன் வாசகர்களிடையே நல்லாதரவைப் பெற்ற நூலான 'வதுவை' நூலும் Atlanta Tamil Library நடத்தும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு இடம் பெறும் என்பதை அமெரிக்கத் தமிழ் உறவுகளுக்கு இப்பதிவின் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.  

புத்தகக் கண்காட்சி வரும் அக்டோபர் 9, 2022 அன்று பிற்பகல் 2 மணி முதல், கீழ்கண்ட முகவரியில் நிகழும். அனுமதி இலவசம்.


Fowler Park, Pavilion 1,

4110, Carolene Way,

Cumming, GA - 30040.









Friday, 16 September 2022

2022ன் ஸீரோ டிகிரி விருது பெற்ற தொகுப்பு குறித்து எழுத்தாளர் இரா.முருகன்

 



ஊரும் மனிதன் - சிறுகதை - வாசகசாலை

வாசகசாலை 56வது இதழில் எனது சிறுகதை 'ஊரும் மனிதன்' வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தேர்வு செய்த வாசகசாலை ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். 

//..இரண்டு முற்றிலும் வெவ்வேறான, அதனதனிடத்தில் முழுமையடைந்த உடல்களை உருவாக்க இந்த இயற்கைக்கு ஒரு மிகச்சிறிய வேறுபாடு மட்டுமே தேவைப்படுகிறது. காலம், அந்த வேறுபாட்டைத் தன் இயல்புக்கேற்றவாறு,  விஸ்திகரிக்கின்றன. அந்த ஒரு சன்னமான வேறுபாடு காலத்தின் போக்கில் ஒரு முழுமையான உயிராக பின்னாளில் உருப்பெருகிறது. ஆனால் இந்த இயக்கத்தில் ஒன்றை கவனிக்கிறீர்களா? பருந்துகளுக்கு உணவாவது சிட்டுக்குருவிகளுக்கு உணவாவதில்லை. இது சொல்வது என்ன? எலிகளும், பருந்துகளும் இருக்கும் உலகில் புழுக்கள் இருந்தால் சிட்டுக்குருவிகளும் நிச்சயமாக இருக்கும் என்பது தான் அல்லவா? எலிகளும், பருந்துகளும், சிட்டுக்குருவிகளும் இருப்பதே புழுக்கள் இருப்பதற்கான நிரூபணம் என்றாகிறது அல்லவா?...//

சிறுகதையை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்படி வாசக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 

https://www.vasagasalai.com/oorum-manithan-sirukathai-ramprasath/





Monday, 12 September 2022

முக நூல் அழைப்புகளும், பாதுகாப்பின்மையும்

 முக நூல் அழைப்புகளும், பாதுகாப்பின்மையும்

*************************************************************

இது குறித்து எழுதவேண்டுமா என்று நினைத்திருந்தேன். இதோடு அழைப்புகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களை எட்டிவிட்டதால் இது குறித்து ஒரு விளக்கம் தர வேண்டிய உந்துதல் வந்துவிட்டது. அவமதிப்பு செய்துவிட்டதாக யாரும் நினைத்துக்கொள்ளக் கூடாதல்லவா?

இரண்டு நாட்களுக்கு முன் வந்த அழைப்பு இது. யார் என்றே தெரியவில்லை. அவருடைய முகப்பக்கம் போனால், வெறும் forward கள். முக நூல் ஐடி பெண் பெயரில் இருக்கிறது என்பதற்காக அழைத்தவரது பாலினம் பெண் என்று எடுத்துக்கொள்ள முடியாதல்லவா? அப்படியே எடுத்துக்கொண்டாலும் அறிமுகம் இல்லாமல் நேரடி அழைப்பு சரியாக இருக்காதல்லவா?




அழைத்த அத்தனை ஐடிக்களும் பெண் பெயர்களில் தான் இருக்கிறது. சொல்லி வைத்தாற்போல் ஒரே விதமாக இருக்கிறது அவர்களது முகப்பக்கம்: இன்னாரென்று அடையாளப்படுத்த முடியாத வகைக்கு. என் வாசகர்களில் யாரும் இவ்விதமான சம்பாஷனைகளுக்கு பழகாதவர்கள் என்பது என் அவதானம். ஆயினும் அழைப்பவர் விஷமத்தனமாக அழைக்கிறார் என்றும் கணிக்க முடியவில்லை. ஏனெனில், ஒரு முறை அழைத்தவர், உள்பெட்டியில், தொடர்ந்து அறிவியல் சார்ந்த கேள்விகளையே கேட்டுக்கொண்டிருந்தார். சில நேரங்கள் கேட்கக் கடினமான கேள்விகளை வாய்ஸ் ரெக்கார்டு செய்து அனுப்புவார். அதில் அசலாக பெண் குரல் கேட்டிருப்பதால், அழைப்பவர் எல்லோரும் fake id என்றும் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

ஆனால் அப்படித் தொடர்ந்து கேட்டவர் எக்காரணத்தினாலோ, எவ்வித அடையாளமும் காட்டாமலே இருந்தார். ஆனால் கேள்விகள் தொடர்ந்தபடியே இருந்தன. ஒருகட்டத்தில் எனக்கே insecurity ஏற்பட்டு விட்டது. யாரென்றே தெரியவில்லை. நான் சொல்லும் தகவல்களை அந்தப் பக்கம் இருந்துகொண்டு யார் எவ்விதம் பயன்படுத்திக்கொள்வார் என்பது தெரியாது. ஒவ்வொரு முறை பதில் சொல்கையிலும் அந்தப் பக்கம் அமர்ந்து யாரோ ஒருவர் notes எடுத்துக்கொள்வது போலவும் தோன்றும். எதற்கு வம்பு என்று ஒரு கட்டத்துக்கு மேல் பதிலே சொல்வதை நிறுத்திவிட்டேன்.

இன்னொருவரும் பெண் தான் என்பது அவருடைய வாய்ஸ் மெஸேஜில் தெரிந்தது. தொடர்ந்து கவிதைகள் குறித்துக் கேள்விகள். ஆனால் தான் யாரென்று அடையாளப்படுத்திக்கொள்ளவே இல்லை. ஒருகட்டத்தில் எனக்கே insecurity ஏற்பட்டு அதையும் கைவிட்டுவிட்டேன். இப்போது அந்த முகப்பக்கமே இல்லை. இதை வைத்து நான் என்ன புரிந்துகொள்வது?

இப்படி அனாமதேயமாக கேள்விகள் கேட்க விரும்புகிறார்கள் என்பது புரிந்து குபூல் ஐடி உருவாக்க வேண்டி வந்தது.

என்னிடம் உள்பெட்டியில் அனேகம் பேர் அனேகம் விஷயங்களைப் பகிர்கிறார்கள். அவர்களில் பலர் பெண்களே. சிலர் தொடர்ந்து பற்பல நூலக்ள் குறித்து எழுதுகிறீர்கள். சிலர், ஓடிடி திரைப்படங்களின் லிங்க் அனுப்பி கருத்துக் கேட்கிறீர்கள். சிலர் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் கேட்கிறீர்கள். சிலர் தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து தீர்வு அல்லது ஒபினியன் கேட்கிறீர்கள். வேலை வாய்ப்பு தேடி, மேற்படிப்பு படிப்பது குறித்து, வாழ்வில் அடுத்தக் கட்டம் நகர்தல் குறித்து இப்படி பற்பல கருத்துப்பகிர்வுகள் என் உள்பெட்டியில் நடக்கிறது. அவர்களெல்லாம் இப்படி எல்லாவற்றையும் மூடி மறைத்துக் கேட்பதில்லை. சொந்த வாழ்க்கையில் எழும் பிரச்சனைகள் குறித்துக் கூட சிலர் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். (அவர்களின் தகவல்களை நானும் கர்ம சிரத்தையாக ரகசியமாகவே between the two of us என்கிற ரீதியில் அணுகுகிறேன்). இவர்களுக்கெல்லாம் இல்லாத insecurity உங்களுக்கு இருப்பதாக நீங்கள் நினைப்பது உங்கள் தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம்.

Insecurity பொதுவானது. அது எனக்கும் இருக்கிறது. முக நூலில், சமூக நலன் என்ற அனுமானத்தில் எதை எதையோ எழுதுகிறோம். எல்லாமும், வாசகர்களுக்குச் சர்க்கரையாக இனிக்குமென்று நம்புவதற்கில்லை என்பதை நான் அறிந்தே வைத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், நாம் என்ன எழுதினாலும், அதை பாதகமாக நினைப்பவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம் இருப்பார்கள் என்கிற நிதர்சனமும் அறிந்தே வைத்திருக்கிறேன். அதனாலேயே முக நூலில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கையாள வேண்டி இருக்கிறது. பல சமயங்களில் ஏதெனும் எழுதத் தோன்றினாலும், இதையெல்லாம் யோசித்து எழுதாமல் விடுவது தான் அதிகம். எழுதும் பதிவுகள் எல்லாம், இப்படி எழுதாமல் விடுவதிலிருந்து தப்பிப் பிழைத்தவைகளே.

ஆதலால், உங்களைப் போலத்தான் நானும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நேரடி அழைப்பை நீங்கள் தவிர்ப்பீர்கள் என்றால், நானும் எவ்விதத்திலும் குறைந்தவன் அல்ல. நீங்கள் தவிர்க்க நினைக்கும் ஒன்றைத் தவிர்க்க எனக்கும் உரிமை இருக்கிறது. அது யாராக இருந்தாலும் சரி, அறிமுகம் இல்லையெனில் நேரடி அழைப்பு உதவாது. அறிமுகம் செய்துகொள்ளுங்கள். முதலில் உள்பெட்டியில் எது குறித்துப் பேச வேண்டும் என்பதைத் தெரிவியுங்கள். ஏற்புடையதாக இருப்பின் பேசலாம்.

ஏதெனும் தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும். புரிதலுக்கு நன்றிகள்.

Thursday, 8 September 2022

புராதன ஏலியன்கள், 220284 - நாவல் நூல்கள் குறித்த தகவல்

 'புராதன ஏலியன்கள்' நூல் வெளியீடு குறித்த பதிவில் ஒன்றைக் குறிப்பிட மறந்துவிட்டேன்..

தொகுப்பில், வேறு எங்கும் வெளியாகாத சிறுகதையான 'ராதனும், ஆவணனும்' சிறுகதையும், கதம்பம் சிறுகதைப் போட்டியில் பரிசுக்குரிய சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்ட 'எப்போதும் பெண்' சிறுகதையும் இடம்பெற்றிருக்கின்றன.
நூல் சென்னையில், பின் வரும் முகவரியில் கிடைக்கும்.
New Book Lands
52-c, Basement, North Usman Road,
TANISHQ, T.Nagar, Chennai - 600017
அமெரிக்காவில், எதிர்வரும் October 8ல் அட்லாண்டா தமிழ் நூலகம் நடத்தும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
முகவரி:

Hightower Trail Middle School
3905, Post Oak Tritt Rd,
Marietta, GA, 30062
சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு சிறுகதையை வெள்ளோட்டமாக இங்கே தருகிறேன்.

Friday, 2 September 2022

புராதன ஏலியன்கள் - சிறுகதைத் தொகுப்பு

புராதன ஏலியன்கள் - சிறுகதைத் தொகுப்பு


இன்றைய தேதியில், அறிவியல் புனைவுகள் எழுதுவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், வாசிக்க வாசகர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கமாட்டார்கள் என்பதுதான். சுஜாதா காலத்தில் அறிவியலில் பெரிய வளர்ச்சி இருக்கவில்லை. அறிவியல் உலகமே குழந்தைமையில் இருந்த கால கட்டம் அது. ஆதலால் அப்போது எழுதப்பட்ட அறிபுனைகளை எல்லோராலும் எளிதாக வாசித்துப் புரிந்துகொள்ள முடிந்தது. 

இன்று புழக்கத்தில் இருக்கும் நவீன அறிவியல் அப்படி அல்ல. அது பெரும்பான்மைக்கு புரிந்துகொள்ள மிகவும் சிக்கலானது, சுவீகரிக்க மிகவும் கடினமான கோட்பாடுகளைக் கொண்டது. இந்தப் பின்னணியிலேயே என் ஒவ்வொரு சிறுகதைக்கும் தொடர்ந்து பின்னூட்டமிடும், கருத்துக்கள் பகிரும் வாசகர்களை நான் அணுகுகிறேன், புரிந்துகொள்கிறேன். இவர்களை சராசரி தகவல்களை வைத்தோ, சராசரி சிந்தனைகளை வைத்தோ அல்லது தர்க்கங்களை வைத்தோ பூர்த்தி செய்துவிட முடியாது; சராசரி வாசிப்பிற்கும் மேலதிகமான அம்சங்களை இவர்கள் கோருபவர்களாக இருக்கிறார்கள். வழமையைத் தாண்டிச் செல்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.  





இவர்கள் இருக்கும் தைரியத்திலேயே 2020 முதல் இப்போது வரை எழுதிய சிறுகதைகளை என்னால் எழுத முடிந்தது எனலாம். இந்தச் சிறுகதைகள் வழியிலான அறிவுத்தேடல்களுக்கும், வாத விவாதங்களுக்கும் இவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன். 

வாசகசாலை, சொல்வனம், பதாகை, கனலி போன்ற இதழ்களில் வெளியான என் சிறுகதைகளின் இரண்டாவது தொகுப்பே 'புராதன ஏலியன்கள்'. அறிவியல் புனைவுகள் என்னும் பரந்து விரிந்த வகைமையின் விளிம்புகளை விஸ்தரிப்பதில் இத்தொகுப்பிற்கும் பங்கிருக்கும் என்று நம்புகிறேன்.


நூல் சென்னையில், பின் வரும் முகவரியில் கிடைக்கும்.

New Book Lands

52-c, Basement, North Usman Road,

TANISHQ, T.Nagar, Chennai - 600017


அமெரிக்காவில், எதிர்வரும் October 8ல் அட்லாண்டா தமிழ் நூலகம் நடத்தும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

முகவரி: 

Hightower Trail Middle School
3905, Post Oak Tritt Rd,
Marietta, GA, 30062