அமெரிக்க தமிழ் இலக்கியத்தில் அறிவியல் புனைவுகளுக்கான இருப்பு
அமெரிக்க தமிழ் இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், அதில் அறிவியல் மற்றும் அதிபுனைவுகள் மற்றும் கணிதப் புனைவுகளுக்கென 2017க்கு முன் வரை ஒரு பிரத்தியேக முகம் இருந்ததாக நான் அவதானிக்கவில்லை. அறிவியலைத் தெரிவு செய்தவர்களே அமெரிக்கா வருகிறார்கள். அவர்களில் பலர் எழுத்துலகிலும் இருக்கிறார்கள். ஆயினும், அமெரிக்காவில் அறிவியல் புனைவெழுத்துக்கள் 2019 வரை இல்லை. (யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும். உதிரியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியான ஆக்கங்களோ, அறிவியலை ஒரு தகவல் செறுகலாக மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் ஆக்கங்களோ, treasure hunt பாணி கதைகளில் அறிவியல் தகவல்களை க்ளூக்களாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆக்கங்களோ கணக்கில் சேராது).
தொழில் நுட்பங்களுக்கு பெயர் பெற்ற அமெரிக்காவில் குடியேறிய தமிழ்ச் சமூகத்தினிடையே 2019 வரை அறிவியல் மற்றும் அதிபுனைவுகள், கணிதப்புனைவுகள் (2017 வரை) இல்லாமல் இருந்திருப்பது ஒரு பெரும் குறை.
அதிகபட்சம், சுஜாதாவின் நூல்களே கைகாட்டப்படுகின்றன. எனக்கு சுஜாதாவின் மீது பெரிய மரியாதை உண்டு. ஆனால் அவரது அறிபுனை நூல்கள் 2000த்தின் துவக்கத்திற்க்கானவையே என்பதையும் நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது. நவீன அறிவியல் புலத்தில், Avengers, Time Trap, Endless, Martian, Annihilation போன்ற அமெரிக்க ஆக்கங்களுக்கு மத்தியில் அவற்றுக்கு நிகரான நவீன ஆக்கங்களின் தேவை அமெரிக்க தமிழ் இலக்கிய சூழலில் 2019 வரை இல்லை என்பதை யாரும் மறுக்க இயலாது.
அறிவியல் புனைவுகள் எழுத மென்மேலும் எழுத்தாளர்கள் அமெரிக்காவில் உருவாக வேண்டும் என்பது என் விழைவு. அறிபுனைவெழுத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர வேண்டும். அப்போதுதான் இது ஒரு தொடர் இயக்கமாக உருவாகும்.
அமெரிக்காவில் புத்தக வாசிப்புக் குழு என்ற ஒன்று துவங்கினால் அதில் முதலில் வாசிக்கப்படும் நூல்கள் பெரும்பாலும் பங்குபெறுபவர்களது வீடுகளில் அவரவர்களது பெற்றோர்கள் வாசித்த நூல்களாகத்தான் இருக்கும். பிள்ளைகளுக்கு வாசிப்பு என்பது பெரும்பாலும் பெற்றவர்கள் வாசிப்பதைப் பார்த்தே உருவாகிறது. பல சமயங்களில் வாசிப்புப் பழக்கத்தை பிள்ளைகள் மத்தியில் வளர்க்கவேண்டுமெனில், வெறுமனே நூல்களை வாங்கி வீட்டில் வைப்பதே போதுமானதாகத்தான் இருக்கிறது என்று தான் இதை வைத்துப் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. இல்லையா?
இந்தப் பின்னணியில் அமெரிக்கத் தமிழர்களின் வீடுகளில் உள்ள புத்தக அலமாரிகளில் இருக்க வேண்டிய நூல்களாக நவீன அறிவியல் பேசும் அறிபுனை, அதிபுனை மற்றும் கணிதப் புனைவுகள் இருப்பது தொலை நோக்குப் பார்வையில் நன்மை பயக்கும் என்றே எண்ணுகிறேன். இதுவே என் பரிந்துரையும் கூட.
'வாவ் சிக்னல்',
'புராதன ஏலியன்கள்',
'220284'
ஆகியன அமெரிக்கத் தமிழ் சூழலில் நவீன அறிவியல் இலக்கியத்தின் தடங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என்றால் அது மிகையாகாது.
அக் 9, 2022ல் பின் வரும் முகவரியில் மேற்சொன்ன நூல்களுடன் வாசகர்களிடையே நல்லாதரவைப் பெற்ற நூலான 'வதுவை' நூலும் Atlanta Tamil Library நடத்தும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு இடம் பெறும் என்பதை அமெரிக்கத் தமிழ் உறவுகளுக்கு இப்பதிவின் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
புத்தகக் கண்காட்சி வரும் அக்டோபர் 9, 2022 அன்று பிற்பகல் 2 மணி முதல், கீழ்கண்ட முகவரியில் நிகழும். அனுமதி இலவசம்.
Fowler Park, Pavilion 1,
4110, Carolene Way,
Cumming, GA - 30040.