என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday, 25 November 2021

BILINGUAL

BILINGUAL
**************


பல்வேறு ஆங்கில இணைய இதழ்களில் வெளியாகும் என் ஆங்கிலச் சிறுகதைகளை முக நூலில் பகிர்கையிலெல்லாம் பின்னூட்டங்களையும் விருப்பக்குறிகளையும் அவதானிப்பதுண்டு... பெரும்பாலும் ஏதும் இருக்காது அல்லது மிக மிக சொற்பமாகவே இருக்கும்... நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் அறிவார்கள் Bilingual ஆக இருப்பதன் முக்கியத்துவம் குறித்த விவாதங்களுக்கு அவ்வப்போது நான் முயற்சிப்பதையும், எதிர் தரப்பிலிருந்து எவ்வித ஆதரவும் இன்றிப் போவதை உணர்ந்து அந்த முயல்வைக் கைவிடுவதையும்... அந்த நெருங்கிய நட்பு வட்டத்திலும் கூட என் தமிழ் நூல்களையே கேட்டு வாங்கியிருக்கிறார்கள்.. ஆங்கிலப் பகிர்வுகளுக்கு பெரிதாக பின்னூட்டங்களோ, வாத விவாதங்களோ கூட இருக்காது...

சரி.. தமிழ் சமூகம் பிற மொழி ஆக்கங்களை வரவேற்பதில்லை போலும் என்று நானாக நினைத்துக்கொண்டு அமைந்துவிடுவதுண்டு...

நேற்று அமெரிக்க தமிழ் எழுத்தாளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு ஓரு இணைய சந்திப்பாக நடந்தேறியது...
அதில் 'தமிழ் எழுத்தாளர்கள் Bilingual ஆக இருக்க முயற்சிக்க வேண்டும்' என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கேட்டுக்கொண்டார்...

ஆச்சர்யமாக இருந்தது... 2012ல் நான் செய்யத்துவங்கியதன் முக்கியத்துவம் சுமார் பத்தாண்டுகள் கழித்து இப்போது 2022ன் துவக்கத்தில் தமிழ் எழுத்துச் சமூகத்தில் பரவலாக உணரப்பட்டிருப்பதும், பேசப்படத்துவங்கியிருப்பதும்...

முதன் முதலாக என் ஆங்கில சிறுகதை, கவிதைகளை வெளியிட்டு ஊக்குவித்தது Static Movement என்ற சிற்றிதழ்...Chris Barthelme என்பவர் அதன் எடிட்டராக இருந்தார்.. இது நடந்தது 2012ல்.. துரதிருஷ்டவசமாக 2014 வாக்கில் அந்த சிற்றிதழ் நிறுத்தப்பட்டதால் இப்போது அதன் தடயங்கள் இல்லை... அதிர்ஷ்டவசமாக, வெளியீட்டின் போது எடுக்கப்பட்ட screenshot ஐ வலைப்பூவிலிருந்து எடுக்க முடிந்தது...




எனது ஆங்கில முயற்சிகளுக்கு இடமளித்து ஊக்குவித்த இதழ்களில் இப்போதும் வெளியாகிக்கொண்டிருப்பது Texas லிருந்து வெளியாகும் Madswirl. இந்த இதழ் இன்னமும் வெளியாகிக்கொண்டிருப்பது மகிழ்ச்சி. முதல் ஆக்கம் வெளியான 2012க்கான சுட்டியும் எடுக்க முடிவது அதிர்ஷ்டவசம்.

Saturday, 13 November 2021

கோவை மாணவி தற்கொலை விவகாரம்

கோவை மாணவி தற்கொலை விவகாரம்


கோவை மாணவி விவகாரத்தில்,


"ஆறு மாசமா எங்கிட்ட கூட எதையுமே சொல்லை" என்று அழுகிறார் மாணவியின் தாயார்.

"...இப்படியெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே சொல்லியிருப்பேன்.." என்று மாணவியின் தோழன் கண்ணீர் விட்டார்.


இன்னொரு சலனப்படத்தில், பெண்ணின் தகப்பனார் மெளனமாய் கைகட்டி நின்றிருக்கிறார். சுற்றி உள்ளவர்கள் போலீஸைக் கேள்வி கேட்கிறார்கள். தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிய வேண்டும் என்று கூச்சலிட்டார்கள்.


மற்றுமொரு சலனப்படத்தில் "...அந்தப் பொண்ணோட அம்மா வீட்டு வேலை செஞ்சி பொழைக்கிறாங்க.. வடை போட்டு வேலை செஞ்சவரோட பொண்ணு 480 மதிப்பெண் வாங்குறது எவ்ளோ கஷ்டம்ன்னு எனக்குத் தெரியும் சார்...நல்லா படிக்கிற பொண்ணு.. . அவளை உங்களால திருப்பித்தர முடியுமா? தண்டனைகள் கடுமையா ஆனா தான் சார் இதுக்கெல்லாம் தீர்வு..." என்று ஒரு பெண் தர்னா செய்துகொண்டிருந்தார்.


இதிலிருந்து ஒரு விஷயம்  தெளிவாகத் தெரிகிறது.


பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தைத் தவிர ஏனைய எல்லோரும் விவரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். குறைந்தபட்சம், குரல் உசத்துபவர்களாகவாவது இருக்கிறார்கள். 


அந்தக் குடும்பம் குரல் உயர்த்தும் சக்தி அற்று இருப்பது தான், இது போன்ற நிகழ்வுகளுக்கு அவர்களை இலக்காக்குறதோ என்று தோன்றுகிறது. இந்தத் துன்பியல் நிகழ்வு நடந்தேறும் வரை, அப்படியொன்று நடப்பதற்கான சாத்தியங்களுள் பத்து பொருத்தமும் தங்கள் குடும்பத்திற்கு பக்காவாக இருக்கிறது என்பதையே உணராமல் இருந்த குடும்பம் போலத்தான் தோற்றமளிக்கிறது மாணவியின் குடும்பம்.


பார்க்கப்போனால் இப்படித்தான் இருக்கிறது பெரும்பாலான குடும்பங்கள். நமக்கு மகனோ, மகளோ, பாடப்புத்தகம் தவிர வேறு எதையும் படித்து விடவே கூடாது. படித்தால் 'கெட்டு' விடுவார்கள். இப்படியே பாடப்புத்தகத்தை மட்டுமே படித்து வளர்பவர்கள் பின்னாளில் தங்களுக்கென குடும்பங்களை உருவாக்குகையில் பிள்ளைகள் கேள்வி கேட்பது பிடிக்காமல் போகிறது. ஏனெனில், பதில் தெரியாதே? கேள்விகளை எதிர்கொள்ள பயந்தே, தங்கள் பிள்ளைகளையும் பாடப்புத்தகங்கள் மட்டுமே படிக்க நிர்பந்திக்கிறார்கள். இந்த நடத்தையின் கூட்டு விளைவாக, கேள்விகேட்க திராணி அற்ற ஒரு தலைமுறைகளைத் தொடர்ந்து உருவாக்கி வைத்திருக்கிறோம். அதுவே பின்னாளில் இவர்களை பல சமூக அவலங்களுக்கு இலக்காக்குறது என்றே கணிக்கிறேன். 


தண்டனைகள் கடுமையாவது ஒரு தீர்வென்று நாம் எடுத்துக்கொள்ளவே செய்தாலும், எல்லா பிரச்சனைகளையும் எல்லா கோணங்களிலிருந்தும் தீர்க்கும் திறன் அந்த ஒற்றைத் தண்டனைக்கும் அதன் மீதான பயத்திற்கும் இருக்குமென்று நம்மில் யாரும் கணிப்பதற்கில்லை. விவரம் எல்லோருக்கும் தெரியவேண்டும்.  பொருளாதாரம் இல்லாத இடத்திலும், எல்லோரையும் கேள்வி கேட்க வைக்கக்கூடிய ஒரு ஆயுதம் உண்டு என்றால்,  அது விவரம் தெரிந்துகொள்வது தான். கோவை மாணவியின் பெற்றோர் சமூகப் போராளிகளாக, சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் எழுப்புவர்களாக இருந்திருந்தால், வீட்டுக்குள்ளேயே பரஸ்பரம் வாத விவாதம் செய்பவர்களாக இருந்திருந்தால் இப்படி ஒன்று அந்தப் பிள்ளைக்கு நடந்திருக்குமா? 


தமிழகத்தில் அது எளிதாகத்தான் இருக்கிறது. எழுத்தாளர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். எழுதப்பட்டவைகள் மிக மிக சொற்பமான விலைக்கே விற்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் வாங்குவதற்குத்தான் ஆட்கள் இல்லை. புத்தக் கண்காட்சிகள் பெரும்பாலும் நஷ்டத்தில் தான் முடிகின்றன.  


சாமான்யர்களின் வேலை, திரையரங்குகளில் பாப்கார்னுக்கு செலவிடும் இரு நூறு ரூபாயில் நான்கு புதிய நூல்கள் வாங்கிப் படிப்பது மட்டும் தான். அதைச் செய்தாலே எந்த சாமான்யனாலும் எந்த அதிகார அமைப்பையும் எதிர்த்துக் கேள்வி கேட்டுவிட முடியும். 


ஆசிரியர் ஒரு ஆண் தானே. அவனைக் கேள்வி கேட்க வேண்டாமா என்பது ஒரு தட்டையான கேள்வி. இந்த உலகில் நல்லவன் என்று நால்வர் இருந்தால் கெட்டவன் என்று ஒரு பத்து பேர் இருக்கத்தான் செய்வார்கள். எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால், இந்த உலகம் இயங்குவதற்கான அச்சாணி இல்லாமலாகிவிடும். அது நடக்க இயலாதே? குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன. அத்துமீறல்களுக்கான அடிப்படை என்ன? 


எளியவன் என்று ஒருவன் இருப்பதுதான்.


அந்த எளியவனை வலுவானவனாக ஆக்கிவிட்டால்?  எட்டு கோடி பேர் உள்ள மாநிலத்தில் எத்தனை குற்றங்களை, போலீஸ், கேஸ், சட்டம் என்று தீர்த்துவிட முடியும்? அது சாத்தியமா? அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. விவரமில்லாமல், தெரியாமல் போட்ட ஒரு கையெழுத்திற்காய், வருடக்கணக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் போன்றோர் வாழ்வதும் இதே நிலத்தில் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  ஒவ்வொரு தனி மனிதரும் தங்கள் தரத்தை, வலுவை உயர்த்திக்கொள்வதின் மூலமே கணிசமான சமூக பிரச்சனைகளை நாமே எதிர்கொள்வதுதான் ஜனத்தோகை பெருத்த ஒரு நாட்டின் தேவையாக எப்போதுமே இருக்கும். 


அதைத்தான் உரத்துச் சொல்ல விழைகிறேன்.  நூல்களை எல்லோருமே படியுங்கள். விவரம் தெரிந்துகொள்ளுங்கள்.  உங்கள் உரிமை என்ன, உங்கள் சுதந்திரம் என்ன, நீங்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது, என எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள். சரியான இடத்தில் சரியான கேள்விகளை எழுப்புதன் மூலமாகவே உங்கள் பிரச்சனைகளில் பலவற்றை நீங்கள் தீர்த்துவிட முடியும். 


அதற்காக உங்கள் வாழ்க்கைக்குத் துளியும் தொடர்பில்லாத நூல்களைப் படித்து காலத்தை வீணடிக்காதீர்கள். அப்படி வீணடிப்பதால், "வாசிப்பு எனக்கு உதவவில்லை" என்ற உங்கள் கூப்பாடு, வாசிக்கக் கிளம்பும் நால்வரின் ஊக்கத்தைக் கொன்றுவிடக்கூடும்..


திருமண வயதில் பெண்ணோ, பையனோ இருக்கிறார்களா? திருமணங்கள் சார்ந்து, திருமண தளங்கள் சார்ந்து எழுதப்பட்ட நூல்களை முதலில் வாசிக்கத் துவங்கலாம். பதிப்பகங்களை அணுகி இந்தத் தலைப்பில் நூல்கள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வாங்கி வாசிக்கலாம். 


இருபாலார் படிக்கும் பள்ளி கல்லூரியில் முதல் முறையாகப் படிக்க நுழைகிறீர்களா? ஆண் பெண் உறவு குறித்து எழுதப்பட்ட நூல்களிலிருந்து துவங்கலாம். எதிர்பாலினத்தை புரிந்துகொள்ளும் உங்கள் முயற்சிகள் உங்களுக்கும், நாளை உங்கள் பிள்ளைகளுக்கும் பயன்படும். இப்படியெல்லாம் வாசிக்காத தலைமுறையைச் சேர்ந்தவனால் தான் ஒரு பெண்ணை இப்படி பாதிக்க வைக்க முடியும் என்பது என் வாதம்.


ஐஏஎஸ். ஐபிஎஸ் எழுதும் எண்ணமிருக்கிறதா? சரித்திரம், பூகோளம், நிலவியல் சார்ந்த நூல்களிலிருந்து துவங்கலாம். 


இப்படி கண்டதையும் ஒரு ஒழுங்கு இன்றி படிக்காமல், தொடர்புடைய நூல்கள், அதிலும் அண்மைக்காலத் தேவைகள், தொலை நோக்குத் தேவைகள் குறித்த தெளிவான புரிதல்களுடன் படிப்படியான புரிதல்களை தரக்கூடிய நூல்களைத் தேர்வு செய்து வாசிக்கத் துவங்கலாம்.


இந்த தேசம் நம்முடையது. இதில் வாழும் மக்கள் நம்மவர்கள். யாரோ எப்படியோ போகட்டும் நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணம் ஒரு மடத்தனமான புரிதலற்ற எண்ணம். நாம் செய்யும் ஒவ்வொன்றும் இந்த சமூகத்தை சலனப்படுத்தும். நாம் ஒவ்வொருவரும் மற்றவரோடு தொடர்புடையவர்கள். எல்லோரும் நன்றாக இருந்தால் தான் நாமும் நன்றாக இருக்க முடியும். அதற்கு நமக்குத் தேவைப்படுவதில், மிக மிக எளிமையானது வாசிப்பு மட்டும் தான். வாசியுங்கள், மற்றவர்களையும் வாசிக்க வலியுறுத்துங்கள்.  


பெண்களுக்கு எதிரான இறுதி வழக்காக கோவை மாணவியின் வழக்கு இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. 

Friday, 12 November 2021

குழந்தைகளைக் கொண்டாடும் திருவிழா 2021 - சிறப்பு அழைப்பாளர்

 குழந்தைகளைக் கொண்டாடும் திருவிழா 2021 நிகழ்வின் வெற்றியாளர் அறிமுக விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன். அழைத்த S2S நிறுவனம் திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். விளையும் பயிர்களைத் தொடர்ந்து அடையாளம் காட்டும் இவரது முயல்வுகளுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்.

நிகழ்வில் முளையிலேயே தெரியும் விளையும் பயிர்களை வாழ்த்துவது நோக்கம். விருப்பமுள்ள நண்பர்கள் இணையவழியில் கலந்து கொள்ளலாம்.
May be an image of 10 people, people standing and text that says 'வலைத்தமிழ்.. தனர் கா ஞ்சி டிஜிட்டல் மமின், கல்வி40, S2S டிரஸ்ட் மற்றும் வலைத்தமிழ் டிவி குழந்தைகளை கொண்டாடும் திருவிழா 2021 வெற்றியாளர்கள் அறிமுக விழா அரசுப்பள்ளி /அரசு பெறும் பள்ளி மாணவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் க்டட் 2021 நவம்பர் 14 திரு. பிரே ம்குமார் கல்வி40 செயலி BumblB Trust, செ ன்னை திரு ரவிசொக்கலிங்கம் S2Sநிறுவனர்.துபாய் திரு. சிகரம் சதிஷ் நிறுவனர் கல்வியாள சங்கமம் முனைவர்பிருந்தாநடராஜன் திருமதி. பொன்னி PMJFLion. FLion. புவ னேவ் ஊக்கமளிக்கும் பேச்சாளர் கோவை சமூக சேவகர், சக்தி ரோட்ட கிளப், Second Vice District Governor- 324 தென்காசி நன் றியு ுரை திரு .ராம்பிரசாத் மென்பொருள் பொறியாளர், எழுத்தாளர், அமெரிக்கா திரு.மணிமாறன் பழகன் ஒருங்கினணைய்பாளர். டிஜிட்டல் ஆசிரியர்,காஞ்சிபுரம் Live தொழில்நுட்பம்,சிட் ஆஸ்திரேலியா நாள் 14.11.2021 ஞாயிறு இணைய நேரம்: காலை 10மணி www.ValaiTamil.TV www.YouTube.com/ValaiTamil orwww.FB.com/ValaiTamil'

Thursday, 4 November 2021

வாவ் சிக்னல் - விமர்சனம் - Boje Bhojan

எனது 'வாவ் சிக்னல்-அறிபுனை தொகுதி' நூலுக்கு வரும் முதல் விமர்சனம் இது... இதற்கு முன் உதிரியாக அவ்வப்போது வெளியாகும் சிறுகதைகளுக்கு பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன.. முழு நூலுக்கென வந்த முதல் விமர்சனம் இதுதான்... நண்பர் Boje Bhojan க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...




வாவ் சிக்னல்- ராம் பிரசாத் - அறிவியல் சிறுகதைத்தொகுப்பு- பதிப்பகம்- படைப்பு- முதல் பதிப்பு, 2020- பக்கங்கள்- 148
வாவ் சிக்னல்- ஒரு அற்புத அறிவியல் சிறுகதைத்தொகுப்பு
எழுத்தாளர் பற்றி:
இந்த நூலை எழுதிய எழுத்தாளர் திரு ராம் பிரசாத் அவர்கள் மயிலாடுதுறையை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி கணினி மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் தமிழில் 7 நூல்களும். ஆங்கிலத்தில் மூன்று நூல்களும் வெளியிட்டு இருக்கிறார்.
புத்தகம் பற்றி:
மொத்தம் 12 தலைப்புகளும் 148 பக்கங்கள் கொண்ட இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள அனைத்து அனைத்து சிறுகதைகளும் மிகவும் அருமையாக அமைந்துள்ளது .
முதல் தலைப்பான கண்காட்சி என்னும் சிறுகதையில் போன்சாய் மனிதர்கள் பற்றிய கதை என்று சொல்லலாம். உண்மையில் நிகழ்காலத்தில் போன்சாய் மனிதர்கள் என்று இருக்கிறார்களா அல்லது போன்சாய் மனிதர்கள் என்றால் என்ன என்று இணையத்தில் தேடியபோது தான் சில தகவல்கள் கிடைத்தன உண்மையில் போன்சாய் தாவரம் போல நிகழ்காலத்தில் போன்சாய் மனிதர்கள் என்று உருவானால் எப்படி இருக்கும் என்பதே கதை.
அடுத்த தலைப்பான பேய் என்கிற சிறுகதை மிகவும் ஒரு சுவாரசியமான சிறுகதை காரணம் இந்த சிறுகதையில் மின்னலை வைத்துதான் மொத்த கதையும் நகர்கிறது. ஒரு மலைப் பிரதேசத்திற்கு செல்லும் தம்பதிகளில் ஒருவர் காணாமல் போக. அதன்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி கதை
அடுத்த கதையான அவன் என்கிற கதை ஏலியன் எனப்படும் வேற்றுகிரக வாசி பற்றிய கதை இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் மருத்துவமனைக்கு போனவுடன் உயிரோடு இருப்பதாக தகவல் வருகிறது. அதன்பின் நடக்கும் சில சம்பவங்களுக்கு பிறகு அவர் காணாமல் போகிறார் என்ன நடக்கிறது அவர் எப்படி உயிரோடு வந்தார். மீண்டும் எங்கே சென்றார் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் எழுத்தாளர்
அடுத்த கதையான பொறி என்கிற கதை . டைம் லூப் என்று சொல்லப்படும் கருத்தை மையமாக வைத்து புனையப்பட்ட கதை
அதுபோல அதிர்ஷ்டம் என்கிற சிறுகதை இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த சிறுகதை என்று சொல்வேன் காரணம் இது ஒரு விபத்து . அதன் பின்னால் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை மையப்படுத்தி செய்யப்பட்டிருக்கும் ஒரு கதை.
அதுபோல் அடுத்த கதையான ஆதாம் ஏவாள் என்ற சிறுகதையும். விண்வெளியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.
இது மட்டுமில்லாமல் அடுத்த தலைப்பான பூமி, கடவுளைத் தேடி, அவரேஜ், அனாதை போன்ற சிறுகதைகளும் விண்வெளியை மையமாக வைத்து எழுதிய கதை
என்னுடைய பார்வை:
கிட்டத்தட்ட இந்த புத்தகம் படிக்க ஆரம்பிக்கும் போது என்ன சுவாரசியம் இருந்தது அதே சுவாரசியம் கடைசி தலைப்பை படித்து முடிக்கும் வரையிலும் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஏகப்பட்ட அறிவியல் தகவல்கள் அதுவும் வரும் காலத்தில் சாத்தியம் என்று நம்பப்படும் தொழில்நுட்பங்கள் இந்த புத்தகத்தில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய ஒரு சிறுகதைத் தொகுப்பு இது. — with எழுத்தாளர் ராம்பிரசாத்.