😞 Justice for Sandhya 😞
அப்போது Jerusalem college of engineering ல் பொறியியல் படித்துக்கொண்டிருந்தேன். பிரிவு Computer Science and Engineering.
இரண்டாம் ஆண்டில், மூன்றாவது செமஸ்டர் வரும். அந்த செமஸ்டர் தேர்வு முடிவில் ஒரு பேப்பர் அரியர் விழுந்துவிட்டது. பாடம் Data Structures. எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால், Data Structuresம், Design and Analysis of algorithmsம் எனக்கு மிகவும் பிடித்தமான பாடங்கள். நன்றாகவும் எழுதியிருந்தேன். அந்த இரண்டு பாடங்களுக்கும் அப்போது என்னுடன் படித்தவர்கள் ட்யூஷன் எல்லாம் போய்க்கொண்டிருந்தார்கள். எனக்கு ட்யூஷன் தேவைப்படவில்லை. ஆயினும், முதல் முயல்விலேயே சென்டம் வாங்கும் அளவிற்கான பாடம் அது இல்லை என்பதுவும் தெரியும். குறைந்தபட்சம் 70 மதிப்பெண்களாவது வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்தத் தேர்வில் அரியர் விழுந்துவிட்டது. 36/100 மதிப்பெண்கள். அரியர் வாங்கிய மாணவர்களின் குழுவில் அப்போது இணைந்தேன். புதுமையாக இருந்தது.
பணம் கட்டி, சரிபார்க்கலாம் என்றால் எனக்கு அதில் நம்பிக்கையே இல்லை.
காரணம், இதுபோல் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் Physicsல் துண்டு விழுந்துவிட்டது. 156/200க்கு. எனக்கு MPCB எனப்படும் Maths, Physics, Chemistry, Biology மிகவும் பிடித்த பாடங்கள். பிஸிக்ஸில் அரையாண்டுத் தேர்வில் 196/200 மதிப்பெண் வாங்கியிருந்ததால், முழு ஆண்டுத் தேர்வில் 156 ஐ மார்க் ஷீட்டில் பார்த்து அதிர்ச்சியோ அதிர்ச்சி. re-evaluationக்கு பணம் கட்டிப் பார்த்தால், எந்த பலனும் இல்லை.
அதே போல் இப்போதும் பணம் தான் வீணாகும், எதற்குப் பணத்தை வீணடிப்பானேன், பேசாமல் மறுபடி அந்த அரியரை எழுதி க்ளியர் செய்து விடலாம் என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்.
ஆனால், விதி அதோடு விடவில்லை. எங்கள் வீட்டுக்கருகே exam centerல் வேலை பார்க்கும் ஒருவர் பழக்கமானார். அவர் விஷயத்தைக் கேள்விப்பட்டு என் தேர்வுப் பேப்பரை எடுத்துப் பார்த்ததில் 68 மதிப்பெண்கள் என்பதை, பேப்பர் திருத்தியவர் 36 என்று போட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. பிற்பாடு அந்த பேப்பர் க்ளியர் என்று அறிவிக்கப்பட்டு, திருத்திய மதிப்பெண் பட்டியல் கிடைத்ததும், வகுப்பில் எல்லோரும் என்னை வினோதமாகப் பார்த்ததும், ஒரு சிலர் என்னை அண்டி, யார் அந்த exam centerல் வேலை பார்த்தவர் என்று விசாரித்ததும் வேறு கதை.
Exam centerல் வேலை பார்த்த ஒருவரின் பரிச்சயம் இருந்ததினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. இல்லையென்றால்?
Justice for Sandhya ஹேஷ்டேக்கைப் பார்த்தால் பகீரென்று இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே மிகவும் குறிப்பிடத்தகுந்த பல்கலைக்கழகமாக அறியப்பட்ட ஒன்று. அதிலேயே இப்படித்தானா என்பது சோர்வடையச்செய்வதாய் இருக்கிறது. ஐஐடியில் படித்ததாகச் சொல்லும் மங்குனிகளையெல்லாம் பார்த்துவிட்ட பிறகு எனக்கு 'நாட்டிலேயே குறிப்பிடத்தகுந்த.......' என்று துவங்கும் வாக்கியங்களிலெல்லாம் நம்பிக்கை போய் மிகப்பல வருடங்கள் ஆகின்றன என்பது நான் பகிர விரும்பும் மிக முக்கியமான தகவல்..
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் பிரபல்யத்தில் (முன்பு எப்போதோ வழக்கில் இருந்த பிரபல்யம்) ஈர்க்கப்பட்டு விட்டில் பூச்சிகளாகப் போய் விழும் சந்தியா போன்ற மாணவர்களுக்கு, அவர்களின் அறியாமைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம்: திறமையை நிரூபிக்க, காலத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு தனி மனிதனின் தரத்தை ஒரு குறுகிய காலகட்டத்தை வைத்து தீர்மானிப்பது போல் ஒரு மடமை வேறு இல்லை.
ஒரு பக்கம் ஐடி துறையில் லட்சக்கணக்கில் பணம் புழங்கிக்கொண்டிருக்க, மறுபக்கம் வேலையே கிடைக்காமல் பொறியியல் படித்தவர்கள் ஸ்விக்கி சோமேட்டோ என்று போய்க் கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் , இந்த வேறுபாடு எங்கேனும் சமன்பட்டே ஆகவேண்டும் என்னும் போது, இது போன்ற அவலங்களை நாம் எதிர்பார்க்கக் கற்றுக்கொள்வது ஒரு நல்ல அணுகுமுறை என்றே சொல்லத்தோன்றுகிறது. இதுவெல்லாம் ஒரு சமூக இயக்கம் சமன்படும் இடங்கள்.
'மாப்ளை PWDல எஞ்சினியரா இருக்கார்... PWDல' என்று சொல்கையில் அந்த PWDந் மேல் ஒரு கூடுதல் அழுத்தம் வரும். அதுதான் சமன்படும் இடத்திற்கான அடையாளம். இப்படி Roadways, Electricity Board, examination centers, computer company, MNC என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஒருபக்கம் இதையெல்லாம் இவ்விதம் ஆதரிக்கும் முகமாய் வளர்த்துவிட்டுக்கொண்டே தானே இருக்கிறோம். எனக்கெல்லாம் பாடம் நடத்திய ஆசிரியர்கள் வகுப்பில் பாடப்புத்தகத்தை திறந்து பாரா பாராவாக வெறுமனே உரத்து படிப்பார்கள். பீரியட் முடிய ஐந்து நிமிடங்கள் இருக்கையில், போய் விடுவார்கள். எதையும் விளக்க மாட்டார்கள்.
'விளக்கம் வேண்டுமானால் என்னிடம் டியூஷன் வா' என்பதுதான் மறைமுகமாகக் கடத்தப்படும் செய்தி. அப்படியானால் என் போன்ற ஏழை மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால், எந்த பதிலும் வராது. சவால் தான்.
தற்கொலை தீர்வாகாது. இதையெல்லாம் எப்படியேனும் தாண்டித்தான் ஆக வேண்டும். இதையெல்லாம் மீறி 100க்கு 60 மதிப்பெண் எடுப்பது சென்டம் எடுப்பதற்கு சமம் தான். 'நான் எனக்கிருந்த பின் புலத்தில் இதைச் செய்ததே பெரிய விஷயம்' என்று கூட சொல்லலாகாது. தற்பெருமை பேசுவதாகப் பார்க்கப்பட்டு புறக்கணிக்கப்படும். இதற்கு என்ன அர்த்தம்?
பணம் சேரும் இடத்தில் மரியாதை சேரும். பணம் சேராத இடத்தில், புரிதலே மரியாதை. அவ்வளவு தான். புரிந்தவர்கள் நண்பர்களாகிறார்கள். புரியாதது போல் கடந்து செல்பவர்கள் நண்பர்கள், நலன் விரும்பிகள் அல்லது உறவினர்கள் இல்லை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் அணுகுமுறை. இந்த அடிப்படையில், ஜாதி ரீதியிலான ரிசர்வேஷனையும், பரியேறும் பெருமாள், கர்ணன், மண்டேலா போன்ற திரைப்படங்களையும் புரிந்துகொள்ளலாம் என்பது என் வாதம்.
இன்னொன்றையும் முக்கியமாகச் சொல்ல வேண்டும்.
ஞானம் என்பது அனுபவம் என்கிற முதலைக் கொண்டு, தீவிர ஆழமான சிந்தனையின் வாயிலாக, சரியான புள்ளிகளை மிக மிகச் சரியாக இணைப்பதன் மூலம் கண்டடைவது.
மாணவர்களை, இந்தப் புரிதலை வளர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த அணுகுமுறையைக் கைகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.