என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 24 April 2021

போட்டிகள் சொல்வது என்ன?

போட்டிகள் சொல்வது என்ன?


தமிழில் எழுத்துக்கென நிறைய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போதும் நடத்தப்படுகின்றன. இது ஒரு பொதுவான செயல்பாடு தான். வெற்றி பெற்றவர்களுக்கென சான்றிதழ் வழங்கப்படுவதும், 'வெற்றி பெற்ற சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு' என்று விளம்பரம் செய்யப்படுவதும் எழுத்துத்துறையில் தான் என்றில்லை, கல்வித்துறையிலும் இன்னபிற திறன் வளர் துறைகளிலும் கலாச்சாரமே.

ஆனால், 2009-2010களில் நடந்த சிறுகதைப்போட்டிகளில் முதல் பரிசு பெற்றதாக அடையாளப்பட்ட பல பெயர்கள் இப்போது எங்குமே கண்ணில் படுவதில்லை. இதற்கு என்ன பொருள்? ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் யார் யாரோ புதிது புதிதாக எழுத வருகிறார்கள். முதல் பரிசுகளை வெல்கிறார்கள். அவர்களில் ஆண்டுகள் கடந்தாலும் தொடர்ந்து எழுத்தில் இயங்குபவர்கள் வெகு சிலரே. பெரும்பான்மை, போட்டிகளில் தேர்வாவதோடு சரி. ஒரு நூல் வெளியிடுவதோடு ஆர்வம் குன்றி எழுத்திலிருந்து விலகி துறையை விட்டே வெளியேறிவிடுபவர்கள் தான் அதிகம்.

இம்மாதிரியான போட்டிகளில் தேர்வாகாமல், தொடர்ந்து வருடக்கணக்கில் இயங்கி, வெற்றிகரமானவர்களாக உருவாகுபவர்களும் இருக்கிறார்கள். சுஜாதா எந்த விருதும் வாங்காதவர் தான். ஆனால் இன்றைக்கும் அவர்தான் பெஸ்ட் செல்லர்.

துவக்கத்திலிருந்து 90 விழுக்காடு மதிப்பெண்கள் வாங்கி மருத்துவர், பொறியாளர் ஆகிவிட்ட பலருக்கு, அந்த மருத்துவமும், பொறியியலும் தான் அவர்கள் வாழ்வில் அவர்கள் செய்த மாபெறும் சாதனையாக நின்றுவிடுகிறது.
"படிப்பாளியாக இருக்கிறான், நிச்சயம் இவனால் இந்த சமூகம் பயனுறும்" என்று நாம் எண்ணினால், அவன் தான், "நீட் வேண்டும், ரிசர்வேஷன் எதற்கு?, ஸ்டெர்லைட் வேலை வாய்ப்பைத் தந்தது, அவரவர் விருப்பத்திற்கேற்ப நிலத்தை பங்கிட்டுக் கொடுக்கலாம்" என்றெல்லாம் குரல் உயர்த்துபவனாக வருகிறான்.

தொடர் கல்வி, ஞானத்தை அல்லவா தரவேண்டும்? தேர்வுகளின் நோக்கம் ஞானம் அடைவதைச் சோதிப்பதாகத்தானே அமையவேண்டும்? நிஜத்தில் அப்படி எல்லாம் நடப்பதில்லை. அச்சிடப்பட்ட சான்றிதழ்களை உருவாக்க மட்டுமே இந்தத் தேர்வுகளும், போட்டிகளும் நடத்தப்படுவதாகத்தான் தோற்றம் தருகிறது. இந்த சான்றிதழ்களை வைத்து சம்பந்தப்பட்டவர்களை அணுகும் கூட்டத்தை வைத்து, இந்த சமூகமே அஞ்ஞானிகளால் உருவானதோ என்று யோசிக்க வைக்கிறது.

சரியான தளம், தவறானவர்களின் கைகளில் சிக்கி ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் போய் சீரழிந்து நான் அதிகம் கண்ணுற்றிருக்கிறேன்.

'இவர் எப்பேற்பட்ட ..................................... தெரியுமா? வேற லெவல்..." என்றெல்லாம் அடைமோழிகளுடன் பில்டப் தருவார்கள். கடைசியில் அவர் என்னடாவென்றால், எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு 'நான் அரசியலில் குதிக்கிறேன்' என்று போவார், தேர்வுகள் போட்டிகள் என்ற பெயரில் இங்கே எல்லோரையும் ஒரு மாபெறும் 'வழமை'க்குள் தள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. நான் அவதானித்தவரையில், பல அமைப்புகளில் ஒரு கட்டுதிட்டான, திறன் குறித்த தெளிவான, அசலுக்கு மிக நெருக்கமான ஒரு அளவுகோளே இல்லை எனலாம். அமைப்புகளின் இருப்புக்கு அதிகம் பங்காற்றியவர்களால் உருவாக்கப்படுவதே அளவுகோள்கள் என்கிற ரீதியில் செயல்படும் அமைப்புகளே அதிகம்.

என் வரையில் இப்போதெல்லாம் இந்த அடைமொழிகளைப் புறக்கணிக்கப் பழகிவிட்டேன்.

தேர்வு என்பது ஒரு responsibility. எதில் தேர்வாகிறீர்களோ அதில் நிபுணத்துவம் எதிர்பார்க்கப்படும். அதுகாறும் உருவாகிடாத ஓர் அர்த்தத்தை எட்டுவதற்கான பங்களிப்பை அது செய்ய வேண்டும்.

இப்படி யோசித்துப் பார்க்கலாம். போட்டிகள், தேர்வுகள் எப்படி இருக்கக்கூடாதென்றால், இன்று ஒரு போட்டி நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் A முதல் பரிசு வாங்குகிறார். D ஆறுதல் பரிசு கூட வாங்கவில்லை. ஆனால் ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கழித்து D அந்த நிபுண்த்துவமும், அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்தலையும் செய்திருக்க, A FIELD OUT ஆகியிருந்தால், அந்தப் போட்டியோ, தேர்வோ அனர்த்தமாகிவிடுகிறது. பார்க்கப்போனால், இன்று இது போன்ற அனர்த்தங்க்ள் தான் அதிகம் நிகழ்கின்றன.

எழுத்துலகில் தான் என்றில்லை, எல்லா துறைகளிலும் இதை அவதானிக்கலாம். இந்த அணுகுமுறை சரியானது என்றே தோன்றுகிறது. தேர்வுகளையும், போட்டிகளையும் நான் இவ்விதமே அணுகுகிறேன்.

என் வரையில் பாம்பின் கால் பாம்பறியும் என்றே விலகிக்கொள்கிறேன். ஞானம் உள்ளவனுக்கு ஞானத்தைக் கண்டறியும் மார்க்கம் தெரியும். ஞானியை எளிதாகக் கண்டுகொண்டுவிடுவான். அஞ்ஞானியே ஞானம் உள்ளவனைக் கண்டும் அடையாளம் காண முடியாமல், குழப்பக் கடலில் தொலைந்து போய் குழம்பி நிற்பான். இந்த வித்தியாசம் புரிந்துவிட்டால் போதும்.