உண்மையில் என் நாவல்களில் மிக அதிகம் பேரைச் சென்றடைந்த நாவல் 'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற நாவலாகத்தான் இருக்க முடியும். ஏனெனில், 8 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தேவியின் கண்மணி பத்திரிக்கையில் அந்த நாவல் முதன் முதலாக வெளியானது.
சம காலத்தில் ஒரு நாவல் எழுதி, அதை பெருவாரியான மக்களின் பார்வைக்கு வேறெப்படியும் கொண்டு சேர்த்துவிட முடியுமா தெரியவில்லை. ஒரு நூல் எழுதினால் ஒரு பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டால், மிஞ்சி மிஞ்சிப் போனால், ஒரு ஐம்பது பேர் வாசிப்பார்கள். அதில் 25ஐ நாம் தான் பிடிஎஃப் தந்து படிக்கவைக்க வேண்டும். இந்த 25 பேர் நல்ல விமர்சனம் எழுதினால் மேற்கொண்டு 25 பேர் வாசிப்பார்கள். அவ்வளவுதான்.
ராயல்டி என்பது வெகு சில பதிப்பகங்கள் தருவது தான். மற்ற பதிப்பகங்களில் இந்தக் கேள்வியே எழாது. ஆனால், தேவியின் கண்மணி வெளியிட்ட இந்த நாவலுக்கு 2013ல் நான்காயிரம் ரூபாய் சன்மானமாக அளித்தார்கள். இன்று ஒரு நூல் எழுதி வெளியிட்டாலும் கூட ராயல்டியாக இந்தத் தொகை வருவது என்பது நடக்காத காரியம்.
அப்போது Capgeminiல் பணியில் இருந்தேன்.
கிறுக்கிப் பார்த்தபோது "நாம் எழுதுவதெல்லாம் கவிதையா?" என்ற கேள்வி எழுந்து, எனக்கு நானே நிரூபித்துக்கொள்ள முயன்று பத்திரிக்கைகளுக்கு அனுப்ப, இலக்கிய பத்திரிக்கைகள் அத்தாட்சி வழங்கின. குறிப்பாக உயிர்மையின் உயிரோசை.
சிறுகதை எழுதிப்பார்த்தபோது " நாம் எழுதுவதெல்லாம் சிறுகதையா?" என்ற கேள்வி எழுந்து எனக்கு நானே நிரூபித்துக்கொள்ள முயன்று பத்திரிக்கைகளுக்கு அனுப்ப, இலக்கிய பத்திரிக்கைகள் அத்தாட்சி வழங்கின. கணையாழி, உயிர்மை என்று.
ஒரு கன்னி முயற்சியாக நெடுங்கதை 'எழுதிப்பார்த்த' எனக்கு, ' நீயும் ஒரு நாவலாசிரியன் தான்' என்று ஒரு பெரிய பத்திரிக்கை சான்றிதழ் வழங்கியது போலிருந்தது இந்த வெளியீடு.
தமிழ் நாட்டில் வாராந்திர, மாதாந்திர பத்திரிக்கைகள் விற்ற எல்லா பெட்டிக் கடைகளிலும் சுமார் இரண்டு வாரங்களுக்கு விற்பனைக்கு தொங்கிக்கொண்டிருந்தது ஒரு இனிய அனுபவம்.. முதல் முறையாக நான் எழுதிய 90 பக்க நெடுங்கதையை ஒரு பிரபலமான பத்திரிக்கை மொத்தமாக அங்கீகரித்து வெளியிட்ட மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல், நூல் வெளியான ஒரு வாரத்திற்கு சென்னையில் நான் செல்ல நேர்ந்த இடங்களில் இருந்த கடைகளிலெல்லாம் தேவியின் கண்மணி கேட்டு வாங்கிச் சேர்த்துக்கொண்டிருந்தேன். கடைக்காரர் புத்தகத்தை என்னிடம் தரும்போது புத்தகத்தில் இருந்த புகைப்படத்தையும் என்னையும் ஒரு கணம் மாறி மாறிப் பார்ப்பதைக் காண்பதில் ஒரு பரவசம் கிடைத்தது. இப்படி வாங்கிச் சேர்த்தது. சுமார் நாற்பது பிரதிகள் இருக்கலாம். ஒரே புத்தகத்தைப் பைத்தியம் போல் பணம் கொடுத்து வாங்கிச் சேர்த்ததற்கு வீட்டில் கடுமையாகத் திட்டு வாங்கிய நினைவும் இருக்கிறது.
நூல் களுடனான உறவை பலப்படுத்தியதில், இந்த எழுத்துக்கு நிறையவே பங்கிருக்கிறது. என் வீட்டில் யாருக்குமே நூல்களுடன் எவ்விதத்தொடர்பும் இல்லை. இருந்தும், எனக்குள் இருந்த எழுத்தாளனை வெளிப்படுத்தியது இந்த எழுத்து தான். இந்த எழுத்துக்கு ஆயுசுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.